தமிழர் தோற்றமும் பரவலும்/பதிப்புரை

விக்கிமூலம் இலிருந்து
பதிப்புரை

மாந்தனின் பிறப்பிடம் தொல் பழந்தமிழகமே என்ற கருத்தை அண்மைக் காலத்தில் பெரிதும் வலியுறுத்தி வந்தவர் மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் ஆவர். அவர் பெரிதும் போற்றியவர்களுள் ஒருவர் பேராசிரியர் வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர். அதிலும் குறிப்பாக, தமிழரின் தோற்றமும் பரவலும் என்ற இந்த நூலை எழுதியமைக்காகவே பாவாணர் அவரைப் பெரிதும் போற்றினார்.

தமிழர் எங்குத் தோன்றினர் என்பது பல்லாண்டுகளாக விடை காண முடியாத வினாவாகவே உள்ளது. தமிழகத்தின் தென் பகுதியில் ஆழ்ந்து போன குமரிக் கண்டத்தில் தோன்றினர் என்பர் சிலர். அவ்வாறன்றி மைய ஆசியக் கண்டத்தில் தோன்றித் தமிழகத்தில் குடிபோனவர் என்பாரும் உளர். இந்த ஆய்வுக்கு இன்னும் சரியான விடை காண இயலவில்லை. குமரிக் கண்டம் என்ற ஒன்று இருந்ததேயில்லை என்பர் சிலர். ஆனால் அண்மையில் கடலில் ஆழ்வகழ்வாய்வு செய்த சோவியத் நிலவியலறிஞர்கள் குமரிமுனையில் நிலப்பரப்பு நீரில் ஆழ்ந்ததற்குச் சான்றுகள் உள்ளன என்று கண்டறிந்துள்ளனர். தொல் ஊழிக் காலத்தில் ஆஸ்திரேலியா, இந்தியாவின் தென்பகுதி, ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் ஒன்றாக இணைந்திருந்தன என்ற கருத்து அண்மையில் ஆய்வுவழி வலுப்பெற்று வருகிறது.

எது எவ்வாறிருப்பினும் இத்தகைய ஆய்வுகளுக்குத் துண்டுகோலாகப் பேராசிரியர் இராமச்சந்திர தீட்சிதர் எழுதிய இந்நூல் அமைந்துள்ளது. எனவே இதனைத் தமிழாக்கம் செய்து வெளியிட எண்ணினோம்.

மூல நூலின் உரிமையாளரான திருமதி, ராஜம் சீனிவாசன் அவர்களை அணுகினோம். அன்புடன் இசைவளித்தார்கள். இதனைத் தமிழாக்க வல்லார் யாரென்று எண்ணிப் பார்த்ததில் ஆங்கிலமும் தமிழும் கற்று வல்லாராகிய சட்டமன்ற முன்னாள் தலைவர் புலவர் கா.கோவிந்தன் எம்.ஏ. அவர்களே தக்கார் என்பதைக் கண்டுணர்ந்து அவரையணுகி இதனை உருவாக்கினோம், இடையில் சில ஆண்டுகள் நூலெதுவும் இயற்றாமலிருந்த புலவர் அவர்கள் பி.டி. சீனிவாச அய்யங்காரின் தமிழர் வரலாற்று நூலை மொழிபெயர்த்துத் தரக் கழகம் மகிழ்வுடன் வெளியிட்டது. அதன் தொடர் பணியாகவே இந்நூல் பணியும் தொடங்கியது. இடையில் பி.டி. சீனிவாச அய்யங்காரின் 'ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப் பண்பாடு' என்ற நூலையும் (Pre-Aryan Tamil Culture) தமிழாக்கம் செய்து தந்துள்ளார்கள். அந்நூலும் விரைவில் வெளிவரும். நற்பணியைத் தொடர்ந்தாற்றி வரும் புலவர் அவர்களைக் காலனின் கொடுங்கரங்கள் நம்மிடமிருந்து பறித்துச் சென்றுவிட்டன. 75-வயது கடந்த நிலையிலும் தமிழ்ப் பணியாற்றி வந்த புலவர் அவர்கள் இந்நூல் அச்சிட்டு முடியும் நிலையில் நம்மிடமிருந்து பிரிந்து விட்டார்கள். அவர்கள் நினைவை என்றென்றும் போற்றிப் புகழும் நிலையில் இந்நூல் அமையும். இதனைத் தமிழன்பர்கள் படித்துப் பயன் பெறுவார்களாக.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்