ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்/ஆரியப் பார்ப்பானின் மொழிக் குறும்பு

விக்கிமூலம் இலிருந்து

ஆரியப் பார்ப்பானின் மொழிக் குறும்பு!

ரியப் பார்ப்பான் - அவன் சீரங்கத்தில் ‘தர்ப்பைப் புல்’ ஏந்தும் நடராச அய்யனாக இருந்தாலும் சரி, கோயங்காவின் நிழலில் வாழ்ந்து எழுதியே பிழைக்கும் ‘சிவராம’ அய்யனாக இருந்தாலும் சரி - தமிழ் மொழியின் சிறப்பைக் கெடுத்து, அம்மொழியில் ‘அவாளுக்கு’ மிக இனிப்பான ‘சமசுக்கிருத’ச் சொற்களைக் கலந்து எழுதவோ, பேசவோ செய்யவில்லையானால், வாழ்க்கையில் ஒரு நிறைவே இருக்காது! நம் வீடண, ‘பக்தவத்சல', ‘சுப்பிரமணிய', ‘கண்ணதாசன்’களுக்கும், ‘அவாளுக்கு’ப் பக்கமேளம் கொட்டிப் பேசவில்லையானால் தூக்கமே வராது!

சென்ற (சூன்) மாதம், ‘நம்’ கல்வியமைச்சர் நெடுஞ்செழியன் நாகர்கோயிலில், அனைத்திந்தியப் பல்கலைக் கழகத் தமிழ் ஆசிரியர் கழக மாநாட்டைத் தொடக்கி வைக்கையில் ஒரு கருத்தைச் சொன்னார். அஃதாவது,

“அறிவியல், தொழில்நுட்பம் போன்ற பாடங்களைப் பயிற்றுவிக்கும் பொழுது, தமிழ்மொழியில் பிறமொழிச் சொற்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்” - என்பது அவர் கூறிய செய்தி,

இச்செய்தி பூணூல் சிவராமன்களுக்கு மிக இனிக்கின்ற செய்தி. உடனே,

“தமிழ் மொழியில் அந்நியச் சொற்கள்” “தமிழ்நாட்டுக் கல்வி மந்திரி வரவேற்கிறார்” என்று தினமணியில் செய்தி வந்தது.

இதைக் கல்வியமைச்சர் நெடுஞ்செழியனார் கவனிக்க வேண்டும். அவர் பேசிய பேச்சு ஒருவகைப் பொருள் தருவதானாலும், அவர்கள் அச்செய்தியால் என்ன விளைவை ஏற்படுத்த விரும்புகின்றனர் என்பதைத்தான் அமைச்சர் கவனிக்க வேண்டும் என்று விரும்புகின்றோம்.

அந்தச் செய்தியைத் தினமணி வெளியிட்ட முறையைப் பாருங்கள்.

தமிழ் மொழியில் அந்நியச் சொற்கள்!

த.நா. கல்வி மந்திரி வரவேற்கிறார்.

நாகர்கோவில், சூன். 10 – விஞ்ஞானம், தொழில்நுட்பம் போன்ற பாடங்களை போதிக்கும்போது, தமிழ்மொழியில் அன்னிய மொழி வார்த்தைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்று த.நா. கல்வி இலாகா மந்திரி நெடுஞ்செழியன் இன்று அ,இ. பல்கலைக் கழகத் தமிழ் ஆசிரியர்கள் சங்கத்தின் மாநாட்டை ஆரம்பித்து வைத்துப் பேசுகையில் கூறினார். –

தமிழ் இலக்கணம், இலக்கியம் முதலியவைகளை மேற்கொண்டு அபிவிருத்தி செய்யவேண்டிய அவசியமில்லை. தமது மொழிகளை மேலும் வளப்படுத்துவதற்காக, ரஷியாவும், ஜப்பானும், விஞ்ஞான தொழில் நுட்பத் துறைகளில், பிற மொழி வார்த்தைகளை சேர்த்துக் கொண்டிருக்கின்றன. அந்த உதாரணத்தை நாமும் பின்பற்ற வேண்டும் என்றார். அதேசமயத்தில், விஞ்ஞானம், கணிதம் மற்றும் இதர பாடங்களைத் தாய்மொழியிலேயே கற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்தையும் அவர் வற்புறுத்தினார்.

– இதுதான் தினமணிச் செய்தி.

– இதில் இனி கவனிக்க வேண்டியவை இவை:

1. கல்வியமைச்சர் பேசிய கருத்து "அறிவியல் சொற்களைத் தமிழில் அப்படியே கையாளலாம்” என்பதேயாகும். ஆனால் அக் கருத்தைத் "தமிழ்மொழியில் அந்நியச் சொற்கள்” என்று தலைப்பிட்டுத் தமிழில் கலப்புச் செய்வதை அமைச்சர் வரவேற்பது போல் காட்டியது ‘பார்ப்பனக் குறும்பு’.

2. பிறமொழிச் சொற்கள் என்பதை அந்நியச் சொற்கள் என்று வேண்டுமென்றே எழுதியது ஆரியக் குறும்பு!

3. கல்வி அமைச்சர் என்று எழுதுவதை (மந்திரி என்பது

சமற்கிருதச் சொல் என்று நினைத்துக்கொண்டு), கல்வி மந்திரி என்று எழுதியது ஆரியப் பார்ப்பனக் குறும்பு! (மந்திரி என்பது தூயதமிழ்ச் சொல்லே என்னும் ஆராய்ச்சிக்கு நாம் இப்பொழுது போக விரும்பவில்லை.)

4 ‘ஜூன்’ என்பதைத் தமிழ் இலக்கணப்படி, ‘சூன்’ என்று எழுதுதல் வேண்டும். தமிழ் என்பதை ஆங்கிலத்தில் ‘TAMI–ழ்’ என்று எழுதாமல் TAMIL அம்மொழி மரபுக்கேற்ப எழுதுவது போல், ஜூன் என்பதையும் ‘சூன்’ என்றே தமிழ் மரபுக்கேற்ப எழுதுதல் வேண்டும். (ஆனால் நம் இனக் கோடரிக் காம்புகளும், வீடண முண்டங்களும் நடத்தும் இதழ்களிலேயே இவ்வாறு எழுதப் பெறும்பொழுது, சிவராம ‘அய்யர்கள்’ சும்மா விடுவார்களா? இல்லாது போனால் அவர்கள் மேனியில் புரளும் பூணூலுக்குள்ள பெருமைதான் என்ன?

5. அடுத்தது, விஞ்ஞானம் என்னும் சொல் பத்து ஆண்டுகளுக்கு முன்பே தூக்கியெறியப்பட்ட சொல். ‘அறிவியல்’ என்பதை ஐந்தாம் வகுப்பு மாணவனும் படித்து வருகிறான். அப்படியிருக்க அறிவியலை ‘விஞ்ஞானம்’ என்று வேண்டுமென்றே எழுதுவது நீரை ‘ஜலம்’ என்று விடாப் பிடியாய் எழுதிக்கொண்டிருப்பது போலும் சிவராமக் குறும்பே!

6. போதிக்கும் என்ற சொல் போய், பயிற்றுவிக்கும் என்னும் தூய தமிழ்ச்சொல் புழக்கத்திற்கு வந்து, எல்லாராலும் கையாளப் பெற்று வரும்பொழுது, இந்தச் சிவராம அய்யருக்கு மட்டும் என்ன வந்தது? (அந்த ஆளைச் சொல்லி மட்டும் குற்றம் தீர்ந்து போகாது. நம் ஆதித்தன்களும், கண்ணதாசன்களும், ‘விடுதலை’ ‘வீரமணி’களும், பொதுமக்களுக்கு விளங்கவைக்க வேண்டும் என்று அப்படித்தானே எழுதி வருகிறார்கள். அதற்கு எங்கேபோய் முட்டிக் கொள்வது. நம் தி.க.காரர்களுக்கு இனத்தில் பார்ப்பனியம் வேண்டாமாம்; மொழியில் மட்டும் அவனில்லாமல் நடக்காதாம்! அதென்ன பார்ப்பனியச் சூத்திரத் தன்மையோ நமக்கு விளங்கவில்லை)

7. இனி, செய்திக்கு வருவோம். ‘பாடங்களை போதிக்கும்’ என்று தினமணி எழுதுகிறதே. பாடங்களைப் போதிக்கும் என்பதுதானே சரி சிவராமன் இப்படி ஆங்கிலத்தைத் தப்பும் தவறுமாக எழுதுவதை விரும்புவாரா? பின் ஏன் தமிழில் மட்டும் இந்தத் தவறுகளைச் செய்கின்றார். இதுதான் அக்ரகாரக் குறும்பு!

8. பிறமொழி என்றால் நம் தமிழ்ப் ‘பாமரர்’களுக்கு விளங்காதாம். எனவே, ‘அன்னிய’ மொழி என்று எழுதுகிறதுகள்.

போகட்டும்; அந்தமட்டில் விட்டதுகளே! ‘அன்னிய பாஷை’ – என்றெழுதாமல்! அந்த அளவுக்கு நமக்கு வளர்ச்சிதான். அது சரி, நம் தி.க.காரர்களும், தி.மு.க.காரர்களும் இன்னும் ‘அவாள்’ கருத்துப்படி ‘பாமரர்கள்’ தாமோ? அப்படி நாங்கள் இல்லை’ என்று அவாள் உச்சிக் குடுமியில் உரைக்கும்படி சொன்னால் என்ன? ஓ....... ஓ....... உச்சிக் குடுமி இருந்தால்தானே!

9. இனி, சொற்கள் என்றால் நம்மவாளுக்குத் தெரியாதாம்; எனவே, வார்த்தைகள் என்று எழுதறதுகள் எல்லாம் நம்மவாளுக்குத் தானே, அவாள் தமிழ் எழுதறதும் படிக்கிறதும், அவாளுக்குத் தான் இங்கிலீசு இருக்கிறதே!

10. அவசியம் இன்னும் போகவில்லை. தேவை இன்னும் நமக்கு வரவில்லை. இஃது அம்மாமிக் குறும்பு!

11. கல்வித்துறை, பொதுப் பணித்துறை, காவல் துறை என்றெல்லாம் புழக்கத்துக்கு வந்து தண்ணிர்பட்ட பாடாகப் போன பின்னால்கூட, ‘இலாகா’ என்று எழுதுவதைப் பற்றி என்ன சொல்ல? இதுதான் அய்யராத்துக் குறும்பு!

12. ‘தமிழாசிரியர் கழகம்’ என்பதால் தம் ‘இப்பித்தனம்’ போய் விட்டால் என்ன செய்வது? எனவேதான், ‘தமிழாசிரியர்கள் சங்கம்’ என்று எழுதுகிறார்கள். இதுதான் துக்ளக் குறும்பு!

13. தொடக்கி வைத்துப் பேசினார் – என்று எழுதினால் தமிழ் வளர்ந்துவிடாதா? அதைக் கெடுத்துப் ‘பிராமணர் கருமத்தை’ நிறைவேற்ற வேண்டாவா? எனவேதான், ஆரம்பித்து வைத்துப் பேசினார் என்று அவாள் எழுதுவது. இது கல்கிக் குறும்பு!

14. முன்னேற்றம் என்று சொல்வதில் இரண்டு தடையிருக்கிறது, பார்ப்பனருக்கு! தமிழ் முன்னேறிவிடக் கூடாது என்பது ஒன்று! முன்னேற்றக் கழகத்திற்குப் பெருமை வந்துவிடக்கூடாது என்பது ஒன்று. இந்த இரண்டையும் எண்ணிக்கொண்டுதான், முன்னேற்றம் என்று ‘பூணூல்கள்’ சொல்வதைவிட ‘அபிவிருத்தி’ என்று சொல்வதில் தான் மகிழ்ச்சி அதிகம்.

மதுரையில் நடந்த இரண்டாவது தென்மொழிக் கொள்கை மாநாட்டைக் கூட, ‘தென்மொழி அபிவிருத்தி மாநாடு’ என்று அவர்கள் எழுதி மகிழ்ச்சியடைந்தனர். இதுதான் அவர்களின் ஆனந்த விகடக் குறும்பு!

15. ‘வார்த்தைகள்’ என்பதைச் ‘சொற்கள்’ என்று எழுதாத

தினமணியா ரஷியா, ஜப்பானை – உருசியா, சப்பான் என்றெழுதப் போகின்றது? இந்த வகையில் நம் விடுதலை, முரசொலி, தினத்தந்திகள் திருந்துவதே இத் தலைமுறையில் நடக்குமா என்பது ஐயம் தினமணி, சுதேசமித்திரன்களை எதிர்பாக்கலாமா? இதுதான் அவர்களின் பிராமணக் குறும்பு ஆயிற்றே!

16. ‘எடுத்துக்காட்டு’ என்னும் சொல் பள்ளியில் படிக்கும் இரண்டாம், மூன்றாம் வகுப்பு மாணவனுக்கெல்லாம் புழக்கத்திற்கு வந்த சொல். ஆனால், ‘உதாரணத்தை’ப் பார்ப்பனர்கள் விட மாட்டார்கள் என்பதற்கு இஃதோர் எடுத்துக்காட்டு. இது சாமிநாதய்யர் குறும்பு!

17. ‘இதர’ என்பதற்குப் பிற என்று எழுதிவிட்டால், பூனூல் அறுத்த பார்ப்பானை, அக்ராகரம் மதிக்காததுபோல், ‘தினமணியை’ அவர்கள் மதிக்கமாட்டார்கள். எனவே, இஃது அவர்களின் குலக் குறும்பு!

18. மொத்தம் இச்செய்தியில் வந்துள்ள 84 சொற்களில் 23 சொற்கள். கலப்புச் சொற்கள். ஏறத்தாழ நான்கில் ஒரு பகுதி கலப்புச் சொற்கள். ஆனால் அந்த 23 சொற்கள்தாம் முகாமையான சொற்கள்; சிறப்புச் சொற்கள். மீதியெல்லாம் பொதுச் சொற்கள்; உரி, இடைச் சொற்கள், மொத்தத்தில் தமிழின முதுகெலும்பை ஆரியமாகவும், அதன் சிற்றுறுப்புகளைத் தமிழாகவும் காட்டி, ஆரியத்தின் உதவியின்றித் தமிழ் இயங்காது என்பதை வழிவழியாக மெய்ப்பித்துக் கொண்டு வரவேண்டுமென்பதே அவர்களின் கொள்கை. இதை நம்மவர்கள் அறியாமலோ அறிந்தோ ஏமாறித் தம்மையும், தங்கள் மொழியையும் தாழ்த்திக்கொண்டு பார்ப்பனீயத்திற்கு என்றென்றும் அடிமையாகக் கிடக்கின்றார்கள்.

இறுதியாக, அந்நிலையினின்று நீங்கும் வரை நெடுஞ்செழியன் போலும் பொறுப்புள்ள அமைச்சர்கள் மிக விழிப்பாகக் கருத்தறிவிக்க வேண்டும். அவர் கூறுவதாக வெளிவந்துள்ள கருத்து. எந்த அளவில் உண்மை என்றே தெளிவாகத் தெரியவில்லை. எனவே, அதைப்பற்றி நாம் இங்கு ஆராய விரும்பவில்லை.

–தென்மொழி சுவடி : 12. ஓலை : 8, 1975