ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்/பார்ப்பனர்க்கு இரட்டைக் கொம்பு

விக்கிமூலம் இலிருந்து

பார்ப்பனர்க்கு இரட்டைக் கொம்பு!

ன்றைய நிலையில் தமிழினத்தை ஒட்டுமொத்தமாக மதிப்பிட்டுக் காட்டுவதற்குக் கலைஞர் கருணாநிதி ஒருவரின் வலிவு மெலிவுச் செயல்களே அடிப்படையாகப் பார்ப்பனர்களால் எடுத்துக் கொள்ளப் பெறுகின்றன என்றால், பார்ப்பன இனத்தை ஒட்டுமொத்தமாக மதிப்பிட்டுக் காட்டுவதற்கு ‘துக்ளக்’ ஆசிரியர் சோ அய்யரையே எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். சரியாகவோ தவறாகவோ கருணாநிதி செய்யும், செயல்களே இவருடைய எழுத்துக்கும் துக்ளக் விற்பனைக்கும் அடிப்படைகளாக அமைந்திருக்கின்றன. கருணாநிதியைப் பற்றி ஒரு கட்டுரையோ பகடிப் படமோ (கார்ட்டுனோ) இல்லாமல் துக்ளக் வந்ததில்லை. அவ்வாறு வந்தாலும் அது விற்காது. எனவே இந்த உத்தியைக் கடைப் பிடித்தே, கருணாநிதியைப் பற்றி எழுதி அவர் தொண்டர்களிடத்திலேயே இதழை விற்பனை செய்து வணிகம் செய்வது ‘துக்ளக்’ சோவிற்கு இருக்கும் வேறு எந்தத் திறமையையும் விடக் கூடுதலான திறமையாகும்.

அண்மையில் தி.மு.க. நடத்திய இந்தியெதிர்ப்புப் போராட்டத்தைப் பற்றி வேறு யாரும் கவலை கொண்டதைவிட, துக்ளக் சோ அய்யர் அதிகமாகக் கவலை கொண்டார் என்பதற்கு அப் போராட்டக் காலத்தில் வெளியான துக்ளக் இதழ்களே சான்றாக நிற்கும். இந்திப் போராட்டம் எந்த வகையிலும் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்று சோ மிகமிகக் கவலைப்பட்டார்

என்பதை அவர் எழுத்துகளிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். அது எங்கு வெற்றிபெற்றுவிடுமோ, பார்ப்பனர்களுக்கு எங்குத் தோல்வி தொடங்கிவிடுமோ என்னும் அச்சமும் கவலையும் அவரை மிகுந்த பரபரப்புக்குள்ளாக்கியிருக்கின்றன. எனவே இந்தியெதிர்ப்புப் போராட்டத்தின் ஒவ்வோர் அசைவையும் திருப்பத்தையும் அவருடைய முட்டை போன்ற கண்ணாடிக் கண்களால் நன்றாக ஊன்றிக் கவனித்துக் குத்தித் தோண்டி முகர்ந்து பார்த்துக் குதறி யெடுத்திருக்கிறார். வெறுமனே படுத்திருக்கும் நாட்டு நாய்க்கு ஒர் எலும்புத் துண்டு கிடைத்துவிட்டால் எவ்வாறு அது தாடை தேயக் கடித்துக்கொண்டு கிடக்குமோ, அப்படித் துக்ளக் சோ அய்யருக்கு இந்தியெதிர்ப்பு எலும்புத் துண்டு கிடைத்தவுடன் அதை இன்னும் விடாமல் மென்றுகொண்டு கிடக்கிறார். பார்ப்பனரில் அவர் ஒரு தனிவகை. காரம் குறையாத மூல(Original) பார்ப்பனிய ஆரிய முத்திரை(Brand), அவர்.

இராசாசி போன்ற பார்ப்பனர்தம் உளறல்களைத் தவிர, வேறு தமிழினம் சார்ந்த எவருடைய கருத்துகளையும் சிந்தனை என்று ஏற்றுக் கொள்ளாத இனத்தின் மூல உருவமாகிய துக்ளக் சோ, இந்தி யெதிர்ப்பை யொட்டிக் கருணாநிதிமேல் வீசிய கணைகளுக்குப் பெரியார் சிந்தனைகள் - மூன்றாந் தொகுதியும் பயன்பட்டிருக்கிறது என்பதை வைத்து, அவ்வினம் நம்மவரின் கைகளைக் கொண்டே நம்மவரின் கண்களைக் குத்திக் குருடாக்கும் சாணக்கியச் சூழ்ச்சிக்கு முழுக் குத்தகையெடுத்துள்ளது என்பதை முழு உண்மையாகக் கொண்டுவிடலாம்.

தி.மு.க.வின் இந்தியெதிர்ப்புப் போராட்டம் தொடக்கத்தில் அமர்க்களப்படுத்தப் பட்டதாம். இறுதியில் கோமாளித் தனத்தின் உச்சியை எட்டிப் பிடித்துவிட்டதாம். இவற்றைக் குறிப்பிட்டுவிட்டுப் போராட்டத்தின் தன்மை என்ன என்று சோ கணிக்கிறார் என்றால், “அது இரு தனி ஆள்கள் (நபர்கள்) இடையே இருக்கும் பகையின் காரணமாக நிகழும் சில்லறைச் சச்சரவுகளே என்பதைத் தமிழக மக்கள் உணரத் தொடங்கி (ஆரம்பித்து) விட்டார்கள் என்று தோன்றுகிறதாம்! (பார்க்க: துக்ளக் 15.1.1987 இதழ்) எப்படி சோ அய்யரின் சாணக்கிய மூளை மக்களின் சிந்தனைத் திறனைத் திசை திருப்புகிறது, பார்த்தீர்களா? இதுதான் பச்சைப் பார்ப்பனியம் என்பதற்குச் சிறந்த ஒர் எடுத்துக்காட்டு.

எந்த மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள்? இவரைச் சேர்ந்த அய்யர், அய்யங்கார் இன மக்களா? அவர்கள் மட்டும் இல்லை; தமிழின மக்களும் அவ்வாறு நினைக்கிறார்கள் அவ்வாறு

நினைக்கிறார்கள் என்று இவர் போய் அளந்து பார்த்துக் கண்டுபிடித்தார் என்றால், இவர் கண்களுக்குப் பட்ட அம் மக்கள் இவர் இனத்துக்குப் பிறந்த இன இரண்டர்களாகத்தான் இருப்பார்கள் என்பதில் ஐயமிருக்க முடியாது.

"கருணாநிதி இந்தியெதிர்ப்புப் போராட்டத்தை அறிவித்தவுடன் மக்களிடையே அது பெரிய தாக்கத்தை (பாதிப்பை) ஏற்படுத்தவில்லை” என்கிறார் சோ. ‘பாதிப்பு’ என்பதை உணர என்ன அடையாளம் வைத்திருக்கிறார் என்பதைத் தெரிவிப்பாரா, சோ? ஒரு வேளை இவர் மொட்டை மண்டையில் கல் ஏதும் விழவில்லையே, என்பதைக் கருதி அவ்வாறு கூறியிருக்கலாம் என்று கருத வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட நிலை வர நெடு நாள்களாகா என்பதைச் சோவுக்கும் அவரைச் சேர்ந்தவர்களுக்கும் நேரடியாகவே எச்சரித்துக் கூறக் கடமைப்பட்டிருக்கிறோம்.

மற்றும் இவரின் அந்த ஆசிரியவுரைக் கட்டுரையில் அவர் குறிப்பிட்டிருப்பவை அனைத்தும் இவர் திருகல் மூளையில் மடடுமே தோன்றுகின்ற கருத்துகள்தாம்.

‘போராட்டம் நடைபெற்ற போதும், மக்கள் மனத்தில் தி.மு.க.வின்ர் உயர்ந்துவிடவில்லை. அக் கட்சித் தலைவர்கள் தளைப்பட்ட கைதான) போதும், அவர்கள் ஈகம் (தியாகம்) செய்ததாகக் கருத்து (அபிப்ராயம்) வேரூன்றி விடவில்லை - என்கிறார் சோ. இவருடைய மொட்டை மண்டைக்கு மட்டும் எப்படித்தான் மக்களின் கருத்து ‘பளிச் பளிச்’சென்று பட்டு விடுகிறதோ, நமக்குத் தெரியவில்லை. ஒருவேளை மக்களெல்லாரும் இப்படித்தான் இருக்கவேண்டும், இருந்தால்தான் இவர் இனத்துக்கு நல்லது என்று நினைக்கிறாரோ, தெரியவில்லை.

இப்படியாக இவர் கலைஞரைப் பற்றி வெளிப்படுத்தும் கருத்து, இவர் மொழுக்கட்டை மண்டையில் தோன்றிய ஒரு கொம்பு என்றால், இதே வகையில் இதே மண்டையில் தோன்றிய இன்னொரு வகையான கொம்பையும் பாருங்களேன்.

“அவர்களைத் தளை(கைது) செய்ததை வைத்து, தமிழக முதல்வர் சட்டம், ஒழுங்கைக் காப்பதற்காக நிரம்பவும் உறுதியான நடவடிக்கை எடுத்து விட்டதாகவும் யாரும் நினைத்ததாகத் தெரியவில்லை. தளைகளை(கைதுகளை) யொட்டி ஆங்காங்கே சில வன்முறை, நிகழ்ச்சிகள் (சம்பவங்கள்) நடத்தப்பட்டபோது, அதை ‘மக்கள் கொந்தளிப்பாக’ நினைத்து யாரும் ஏமாறிவிடவும்

இல்லை. தி.மு.க. தலைவர்களுக்கு எதிராகத் தீர்ப்பளிக்கப்பட்டபோது “ஆகா சரியான தீர்ப்பு” என்று யாரும் ஏற்றுக்கொள்ளவும் (ஆமோதிக்கவும்) இல்லை; ஐயையோ, ஞாயமில்லை (அநியாயம்) என்று யாரும் குமுறவுமில்லை. பொதுமக்கள் அதில் பெரிதாக அக்கறை காட்டவில்லை!’ - என்றெழுதுகிறது. இந்தப் பார்ப்பன ‘சாகிபு’ மூளை! என்னே அந்த மூளையின் வல்லடி வழக்கு, பார்த்தீர்களா?

இந்த ஒரே ஆள் போதும், இவருடைய பார்ப்பன இனத்தைக் கட்டிக் காக்க, நம்மவரில் எவனுக்கும் இந்தச் சூடும் சுரனையும் இல்லை, எவர், எது, எக்கேடு கெட்டுப் போனால் எமக்கென்ன என்றுதானே நாம் அனைவருமே இருக்கிறோம்!

பொதுமக்கள் இப்போராட்டத்தில் பெரிதாக அக்கறை காட்டவில்லையாம்! சோ சொல்கிறது. இன்னும் மக்களை யெல்லாம் சூத்திரர்களாகவே மதிக்கும் புராண, இதிகாசக் காலத்திலேயே இருப்பதாக இது நினைக்கிறதோ, என்னவோ? இவர் கூறும் பொது மக்கள் என்பவர்களில் சிறைக் குப் போன இருபத்தையாயிரம் பேர்களும் அடங்க மாட்டார்களோ? இல்லை, இவர் மதிப்பிடும் பொதுமக்கள் சீனாவிலிருந்தோ, அமெரிக்காவிலிருந்தோ, அல்லது உருசியாவிலிருந்தோ வந்து, இங்குக் குடியேறி வாழ்ந்து கொண்டிருப்பவர்களோ, இல்லை, பொதுமக்கள் என்பவர்கள் இவரைப் போல இங்கு வந்து வாழும் ஆரிய நாடோடிக் கெள பாய்களோ? சிறைக்குப் போனவர்களைப் பார்த்தால், (அவர்கள் தி.மு.க.வைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்கட்டுமே!) அவர்கள் பொதுமக்கள் ஆகமாட்டார்களோ ? பொதுத் தேர்தல் என்பது இவர்களுக்கு இல்லையோ? இவர்களுக்கு ஒப்போலை உரிமை என்பது இல்லையோ? இவர் மொழுக்கை மண்டையில் உள்ள இரண்டு முட்டைக் கண்களுக்குத் தி.மு.க.வினரையோ, தமிழர் பிறரையோ பார்த்தால் மட்டும் ஏன் பொதுமக்களாகத் தெரிவதில்லை. இவர்கள் பூ(!) தேவர்கள் என்பதாலா?

இந்த அக்கரகாரத்து வாண்டு இன்னும் சொல்கிறது, கேளுங்கள்!

‘முன்பெல்லாம் இம்மாதிரி நடந்திருந்தால், தமிழகத்தில் ஒரு பெருங்கூட்டம் தி.மு.க.வினரின் ஈகத்தை(தியாகத்தை)யும், வீரத்தையும் மெச்சியிருக்கும். மற்றொரு பெரிய கூட்டம் ம.கோ. இராவின்(எம்.சி.ஆரின்) அரச (ராஜ) தந்திரத்தையும், உறுதி மிக்க

செயற்பாட்டையும் போற்றியிருக்கும். இப்படியாக இரண்டு பெருங் கூட்டங்கள் காதில் பூ வைத்துக்கொண்டு தமிழகத்தைச் சுற்றிச் சுற்றி வந்திருக்கும். இந்தத் துண்டுத்தாள் (காகித) எரிப்புப் போராட்டத்தில் (நோக்கத்தையே கொச்சைப்படுத்துகிறார்.) இப்படித் தமிழக மக்கள் ஏமாறவில்லை என்பதே ஒரு நல்ல அறிகுறி” - என்றெழுதுகிறார் சோ.

எதற்கு நல்ல அறிகுறி. இந்திரா பேராயம் வந்து தமிழகத்தில் புகுவதற்கு எதிரிகள் இரண்டுபட்டிருக்கிறார்கள் என்பது இக் கூத்தாடிக்குக் கொண்டாட்டமாக இருக்கிறது, கட்டியங்கறித் தில்லிக்குப் பாதக் கம்பளம் விரிக்கிறார், சோ. இவர்தாம் அன்று இந்திராவுக்கு எதிராக எழுதிக்கொண்டிருந்த கோமாளி. இவர்தாம் கனவு காண்கிறார், கற்பனை பண்ணி உடல் பூரிக்கிறார். இவர் கண்டு மகிழும் கனவைப் பாருங்களேன்!

"இந்த இரு கழகங்களை விட்டு அரசியல் நடத்தத் தாங்கள் அணியமாக(தயாராக) இருப்பதாகத் தேசியக் கட்சிகள். மக்களிடையே மெய்ப்பித்தால் (நிரூபித்தால்), ஆதரவு கிடைக்காமல் போகாது. மாற்றத்தை வரவேற்கத் தமிழக மக்கள் அணியமாக(தயாராக)த் தொடங்கிவிட்டார்கள்ள என்பதற்கு அறிகுறிகள் தோன்றுகின்றன” என்கிறார் இக் கட்டியங்காரக் கோமாளி !

தமிழக மக்கள் மாற்றத்துக்கு அணியமாக ஆகிவிட்டார்களாம்!! இந்த இரட்டைக் கொம்புப் பார்ப்பனர் சோ சொல்கிறார். இவருக்கு மட்டுமே இரட்டைக் கொம்பு இல்லை. எல்லாப் பார்ப்பனருக்குமே இரட்டைக் கொம்புகள் உண்டு. தமிழினம் தனக்குள் பிளவுபட்டு ஒன்றையொன்று பகைத்துக்கொண்டு கிடக்கும் வரை தங்களுக் கிருக்கும் இரட்டைக் கொம்புகளையும் பயன்படுத்தி இரு பிரிவினரையுமே அழித்தொழிக்கத்தான் பார்ப்பார்கள் என்பதில் யாருக்குமே ஐயம் வேண்டியதில்லை. இவ்வுண்மையை வேறு யாரையும்விட, கலைஞர் கருணாநிதியும், முதலமைச்சர் ம.கோ. இராமச்சந்திரனுமே எண்ணிப் பார்க்க வேண்டும். எண்ணுவார்களா? இதைக் கால முடிவுக்கே விட்டு விடுவோம்!

::ஞாலங் கருதினுங் கைகூடும் காலங்

கருதி இடத்தாற் செயின்
- தமிழ்நிலம் இதழ் எண். 81