கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/பொம்மையாட்டம்

விக்கிமூலம் இலிருந்து

29. பொம்மையாட்டம்

அமைப்பு:

இந்த ஆட்டத்திற்குரிய ஆடுகளத்திற்குக் குறிப்பிட்ட, ஓர் பரந்த எல்லை உண்டு, இருக்கின்ற இடம் முழுவதையுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

எல்லோரும் ஆங்காங்கே நின்று கொண்டிருக் கையில், கையில் ஒரு பொம்மையுடன் ஒருவர் தனியே நிற்கவேண்டும், அவரைக் காப்பதற்கு வேறு 5 பேர்களும் இருக்க வேண்டும்.

ஆடும் முறை:

ஆடுவதைத் துவங்க அறிவிப்புக் கிடைத்தவுடன், பொம்மை வைத்திருப்பவரை நோக்கி எல்லோரும் ஓடி, விரட்டி, அந்தப் பொம்மையைப் பறித்துக்கொள்ள முயற்சிப்பார்கள்.

பொம்மைக்காரர், தன்னிடமுள்ள பொம்மையைக் காப்பாற்றிக்கொள்ள முயற்சிப்பார். அந்த முயற்சிக்காக, அவர் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் ஓடலாம். ஆனால் குறிப்பிட்டுள்ள எல்லையைக் கடந்து மட்டும் வெளியே ஓடக்கூடாது.

தான் பிடிபட்டு விடுவோம் என்ற நிலை வந்தால், உடனே தனக்கு அருகாமையில் உள்ள தன் சகாக்கள் 5 பேர்களில் யாராவது ஒருவரிடம் அந்தப் பொம்மையைக் கொடுத்துவிட்டு. அவர் தப்பித்துக்கொள்ளலாம், ஓய்வும் எடுத்துக் கொள்ளலாம்.

இப்பொழுது, பொம்மை யாரிடம் இருக்கின்றதோ, அவரை மற்ற ஆட்டக்காரர்கள் விரட்டுவார்கள். அவரும் ஓடமுடியும்வரை ஓடி, மீண்டும் தான் தப்பிக்க அடுத்த தன் பாங்கரிடம் தந்து விடுவார்.

இவ்வாறு பொம்மை கைமாற மாற, விரட்டுபவர்களின் குறியும் மாறிக்கொண்டே போகும்.

பொம்மையைப் பிடிப்பவர்கள் கைப்பற்றிவிட்டால், ஆட்டம் முடிவுறும், மீண்டும் வேறு அறுவரைத் தேர்ந்தெடுத்து, ஆட்டத்தைத் தொடர வேண்டும்.

குறிப்பு:

எல்லோரும் ஓடி விரட்டிப் பிடிக்க முயற்சித்தால் தான் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும், நமக்கென்ன என்று யாரும் ஒதுங்கி நிற்கவோ ஒய்ந்து போகவோ கூடாது. பொம்மை வைத்திருப்பவர்களும் அடிக்கடி பொம்மையை மாற்றிக்கொண்டே இருப்பது நன்றாக ஆட்டம் அமைவதற்குரிய வழி வகுக்கும்.