சிலம்பு பிறந்த கதை/சேரமன்னன் புறப்பாடு

விக்கிமூலம் இலிருந்து
7. சேர மன்னன் புறப்பாடு

செங்குட்டுவன் அரியணையில் வீற்றிருந்தான். இமயமலை சென்று கண்ணகியின் விக்கிரகம் செய்யக் கல்லைக் கொணர வேண்டும் என்று அவன் கருதியதை நிறைவேற்றும் வழி யாது என்பதை, யோசிக்கவே மந்திரிகளும் பிறரும் கூடியிருந்தார்கள். சேரனுடைய குலகுரு ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். நாள் நட்சத்திரம் பார்த்துச் சொல்லும் பெருங்கணியாகிய சோதிடரும் ஓரிடத்தில் இருந்தார். அமைச்சர்கள் தம் தம் இருக்கையில் இருந்தார்கள். படைத்தலைவர்களும் இந்த ஆலோசனையில் கலந்து கொள்ள வந்திருந்தார்கள். யாவரும், “மன்னர்பிரான் வாழ்க! வெல்க!” என்று சொல்லியபடி வந்து அமர்ந்தார்கள்.

அந்த அவையினரை நோக்கிச் செங்குட்டுவன் பேசலானான்; வடநாட்டுக்குச் சென்று இமயத்தை அடைந்து கல் கொணர்ந்து பத்தினித் தெய்வத்தின் திருவுருவை அமைத்து வழிபட வேண்டும் என்னும் ஆவல் நாளுக்கு நாள் என்னிடம் வளர்ந்து வருகிறது. இமயக் கல்லைக் கொணர வேண்டும் என்று நான் கருதுவதற்குச் சிறப்பான காரணம் ஒன்று உண்டு. சில நாட்களுக்கு முன் இமயத்திலிருந்து சில தவ முனிவர்கள் இங்கே வந்தார்கள். அவர்களை உபசரித்து வழிபட்டேன். தமிழ் நாடு முழுவதும் பார்த்த அவர்கள் வஞ்சிமா நகருக்கு வந்து சில நாள் தங்கினார்கள். அவர்களிடம் தமிழ் நாடு எப்படி இருக்கிறது என்று கேட்டேன். அவர்கள் இந்த நாட்டை மிகப்பாராட்டினார்கள். இங்குள்ள மக்களின் பண்பு சிறப்பாக இருப்பதைப் போற்றினார்கள். வீரர்கள் பலர் இருப்பதை அறிந்து வியந்தார்கள். நம் படைகளையும் கண்டு, ‘எல்லா வகையிலும் நிறைந்த அரசு இது’ என்று சொன்னார்கள். ‘இப்படி வீரத்திலும் பண்பிலும் சிறந்துள்ள தமிழ் நாட்டு மன்னர்களின் பெருமையை வடக்கே உள்ள சிலர் உணர்வதில்லை. அந்தப் பேதைமையை அவர்கள் பேசும் பேச்சு வெளிப்படுத்துகிறது’ என்றார்கள். எதைக்கொண்டு இப்படிச் சொல்கிறீர்கள்?’ என்று கேட்டேன்.

“வடக்கே ஒரு நாட்டில் ஒரு பெரிய திருமணம் நிகழ்ந்ததாம். அதற்கு வடநாட்டு மன்னர்கள் பலரும் வந்திருந்தார்களாம். அப்போது ஒரு மன்னன், ‘தமிழ் நாட்டிலுள்ள சேர சோழ பாண்டியர்கள் தங்களுடைய அடையாளங்களாகிய வில்லையும் புலியையும் மீனையும் இமயமலையிலே பொறித்திருக்கிறார்களாம். இமயம் வரையிலும் தங்கள் வீரப் புகழ் பரவியிருக்கிற தென்று பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்’ என்று சொன்னான். அதைக் கேட்டு அங்கே இருந்த கனகன், விசயன் என்ற இரண்டு வேந்தர்கள் எள்ளி நகையாடினர்களாம்; ‘அந்த மன்னர்கள் இங்கே வந்த போது எங்களைப் போன்ற மன்னர்கள் இங்கே இல்லை போலும்! இருந்தால் அப்படிச் செய்ய விட்டிருப்போமா?’ என்று கேட்டார்களாம். இந்தச் செய்தியை இமயத்திலிருந்து வந்தவர்கள் சொன்னார்கள்.

“தமிழ்நாட்டு மன்னர்களின் பெருமையைக் குறைத்துப் பேசிய அந்த இருவரும் நம் வீரத்தை உணர வேண்டாமா? அதற்கும் இந்த யாத்திரை உதவியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். கடவுள் உரு அமைப்பதற்காக இமயம் சென்று கல்லையெடுத்து, எந்த மன்னர்கள் நம்மை இகழ்ந்தார்களோ அவர்கள் தலையிலே அந்தக் கல்லை வைத்து நான் கொண்டு வராவிட்டால், குடிமக்களைத் துன்புறுத்தும் கொடுங்கோலன் என்ற பழியைப் பெறுவேனாக!” என்று கோபத்துடன் சபதம் செய்து தன் பேச்சை முடித்தான் செங்குட்டுவன்.

அருகில் இருந்த குலகுரு அவனைக் கையமர்த்தி, “உன்னுடைய உறுதி மொழிக்கு முன்னே நிற்கும் மன்னரும் இருக்கின்றனரா? அந்தப் பேதையர்கள் அறியாமையால் ஏதோ சொல்லியிருக்கிறார்கள். உன்னை இகழ்ந்ததாகக் கொள்ளக் கூடாது. நீ கோபம் ஆறுவாயாக!” என்று சமாதானப்படுத்தினார்.

அப்போது அங்கே இருந்த பெருங்கணி எழுந்து, “மன்னர் பெருமானே! இன்று வெற்றிக்கு ஏற்ற நாளாக இருக்கிறது. இன்றே புறப்பட்டால் அரசரெல்லாம் மன்னர்பிரானின் திருவடியைப் பணிந்து ஏவல் கேட்பார்கள். ஆகவே இன்றே பயணத் தைத் தொடங்குவது நல்லது” என்றான்.

அதைக் கேட்டவுடனே, “இந்த முகூர்த்தத்தில் நம்முடைய வாளையும் குடையையும் வடக்கு நோக்கி எடுத்துச் செல்லுங்கள். வடதிசைப் பயணத்தைத் தொடங்கிவிடுவோம்” என்று அரசன் உத்தரவிட்டான்.

அரசன் படையுடன் வடநாட்டுக்குப் புறப்படுகிறான் என்ற செய்தியை முரசறைந்து தெரிவித்தனர். வீரர்கள் ஊக்கத்தோடு ஆரவாரம் செய்தார்கள். படைகளின் கூட்டத்தோடு பல வகை அதிகாரிகளும் சேர்ந்துகொண்டு பயண முகூர்த்தத்தை நடத்தலானார்கள். ஐம்பெருங்குழு எண்பேராயம் என்னும் கூட்டத்தினரும், அரச கருமம் செய்யும் அதிகாரிகளும், கணக்குத் தொழில் புரிவோரும், அறங்காவல் செய்யும் பகுதியினரும், படையைச் சார்ந்த தலைவர்களும் சேர்ந்து, “அரசர் பெருமான் வாழ்க!” என்று வாழ்த்தினார்கள். பட்டத்து யானையின்மேல் அரசனது வாளையும் வெண்குடையையும் ஏற்றி, ஊருக்கு வெளியிலுள்ள மதிற்புறத்தே வடதிசையிலே போகச் செய்து நிறுத்தினார்கள்.

போர் செய்யப் புகும் அரசர்கள் பகைமன்னர் நாட்டை நோக்கிப் புறப்படுகையில் வஞ்சிமாலை சூடுவது தமிழ் நாட்டு வழக்கம். சேரன் செங்குட்டுவன் படை வீரர்களை யெல்லாம் அழைத்து யாவருக்கும் ஒருங்கே உணவு அளித்துத் தன் குலத்துக்குரிய பனை மாலையோடு வஞ்சி மாலையையும் தலையிற் சூட்டிக் கொண்டான்.

அரண்மனை வாயிலில் முரசு முழங்கியது. செங்குட்டுவன் சிவபக்தன். ஆதலின் சிவபிரானுடைய கோயிலுக்குச் சென்று வணங்கிப் பிரசாதம் பெற்றுத் தலையில் அணிந்துகொண்டு யானையின்மேல் ஏறினான். அப்போது திருமால் கோயிலிலிருந்து பிரசாதம் வந்தது. “வேந்தன் வெற்றி பெறுக!” என்று வாழ்த்தி அதை அரசனிடம் வழங்கினார்கள். சிவபெருமானுடைய நிர்மாலியப் பிரசாதத்தைத் தன் தலையில் அணிந்திருந்தமையால், திருமாலின் பிரசாத மாலையை வாங்கித் தன் தோளில் அவன் அணிந்து கொண்டான். யானை புறப்பட்டது. அங்கங்கே அரங்குகளில் இருந்த நாடக மடந்தையர் புறத்தே வந்து அரசனைக் கும்பிட்டு, “அரசர் பெருமான் வெற்றி மாலையோடு திரும்பட்டும்” என்று வாழ்த்தினார்கள். அரசவையில் ஆசனத்தில் அமர்ந்து அரசனை ஏத்துவோர் சிலர் உண்டு; அவர்களுக்கு மாகதர் என்று பெயர். அவர்களை விடச் சற்றே பதவியிற் குறைந்தவர்கள் சூதர்; அவர்கள் நின்றபடியே மன்னனைப் புகழவேண்டும். தாளம் கொட்டி மன்னன் புகழைப் பாடுவோர் சிலர் உண்டு; அவர்களுக்கு வைதாளிகர் என்று பெயர். இவர்கள் யாவரும், “மன்னர்பிரான் வெற்றி பெறுக! வாழ்க!” என்று வாழ்த்தினார்கள்.

யானை வீரர்கள் ஒருபால் வாழ்த்தினர்கள்; குதிரை வீரர்கள் ஒருபுறம் நின்று வாழ்த்துக்கூறினார்கள்; வாளேந்திய வீரர்களும் மகிழ்ச்சி பொங்க வாழ்த்தினார்கள். எங்கும் ஒரே உற்சாகம் இத்தகைய கோலாகலத்துடன் சேரன் செங்குட்டுவன் தன் பரிவாரங்களுடனும் படைகளுடனும் வஞ்சிமாநகரை விட்டுப் புறப்பட்டான்.

கடற்கரையின் வழியே வடக்கே சென்ற படை அப்பால் மேலும் சென்று நீலகிரியின் அடிவாரத்தை அடைந்தது. அங்கே பாடிவீடு அமைத்து மன்னனும் பிறரும் தங்கினர். அவன் அங்கே தங்கியிருத்தலை அறிந்து பலர் அவனைப் பார்க்க வந்தனர். இமயத்திலிருந்து பொதியமலைக்குச் செல்லும் முனிவர் சிலர் செங்குட்டுவன் இருந்த கூடாரத்தை அடைந்து அவனைக் கண்டனர். மன்னவன் அவர்களை வணங்கினான். அவர்கள் செங்குட்டுவனை நோக்கி, “அரசே, செஞ்சடைவானவனாகிய சிவபெருமானுடைய திருவருளால் பிறந்தவன் நீ. உன் குணங்களைப் பிறர் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆதலின் உன்னைப் பார்த்துப் போகலாம் என்று வந்தோம்’ என்றனர்.

“உங்களுக்கு என்னால் ஆகவேண்டியது ஏதேனும் உண்டானால் சொல்லுங்கள்; அதனை நிறைவேற்றுகிறேன்” என்றான் அரசன்.

“நீ இமயத்துக்குப் போகிறாய் என்று கேள்வியுற்றோம். நீ செல்லும் காரியம் இறைவன் அருளால் நிறைவேறுவதாக! இமயத்தில் அருமறை அந்தணர் பலர் வாழ்கின்றனர். அவர்களுக்குத் துன்பம் நேராமல் பாதுகாப்பது உன் கடமை. இது ஒன்றுதான் நாங்கள் வேண்டுவது” என்று சொல்லி விடை பெற்றுச் சென்றார்கள்.

அப்பால் மன்னனைக் காண்பதற்காகக் கொங்கணத்திலிருந்து கூத்தர்கள் வந்தார்கள். கருநட நாட்டிலிருந்தும் பலர் வந்தனர். குடகு நாட்டிலிருந்து ஆடல் பாடலில் வல்ல மகளிரோடு குடகர் வந்தனர். இப்படி வேறு பலரும் வந்து, “நாங்கள் கூத்திலே சிறந்தவர்கள்” என்றும், “நாங்கள் இசையில் வல்லவர்கள்’ என்றும், “நாங்கள் பலவகை இசைக்கருவிகளை வாசிப்பவர்கள்” என்றும் தங்கள் தங்கள் திறமையை எடுத்துச் சொன்னார்கள். அவர்களுடைய தகுதிக்கேற்றபடி அரசன் பலவகை அணிகலன்களும் ஆடைகளும் வழங்கினான். இவ்வாறு, வருபவர்களைக் கண்டும் அவர்களுக்குப் பரிசில்களை அளித்தும் செங்குட்டுவன் அந்தப் பாடி வீட்டில் தங்கியிருந்தான்.