சிலம்பு பிறந்த கதை/சேரமான் தீர்மானம்

விக்கிமூலம் இலிருந்து
5. சேரமான் தீர்மானம்

தன்முன் நின்ற மலைவாழும் மக்களைப் பார்த்து, “நீங்கள் யாதொரு குறைவும் இன்றி வாழ்கிறீர்களா?” என்று கேட்டான் அரசன்.

“மன்னர் பிரான் அருளால் எங்களுக்கு ஒரு குறைவும் இல்லை” என்று அவர்கள் ஒரே குரலாய்ச் சொன்னர்கள்.

அப்போது அந்தக் கூட்டத்தில் ஏதோ சிறு சலசலப்பு ஏற்பட்டது. சிலர் தங்களுக்குள் ஏதோ மெல்லப்பேசிக்கொண்டார்கள். எதையோ அரசனிடம் சொல்லத் தயங்குவதுபோல இருந்தது.

“வேறு ஏதாவது சொல்ல வேண்டியது உண்டா?” என்று செங்குட்டுவன் கேட்டான்.

அப்போது முதியவன் ஒருவன் முன்னே வந்து நின்று, “அரசர் பெருமானிடம் நாங்கள் கண்ட அற்புதக் காட்சி ஒன்றைச் சொல்ல வேண்டும். அதோ அங்குள்ள முருகனுக்குரிய மலையில் ஒரு வேங்கை மரத்தின் கீழே ஒரு பெண்மணி வந்து நின்றாள்” என்று சொல்லத் தொடங்கினான்.

அரசன் இடைமறித்து, “அதில் என்ன வியப்பு இருக்கிறது?” என்று கேட்டான்.

“அதைத்தான் சொல்ல வருகிறேன். அந்தப் பெண்மணி ஒற்றை மார்போடு மிக்க துயரமுடையவளாய் நின்றபோது, அவளுடைய கணவன் வானிலிருந்து வந்தான். அவனோடு அவள் வானகம் சென்று விட்டாள். தேவர்களெல்லாம் அவர்களைப் போற்றி னார்கள். இதுவரையில் இப்படி ஒரு காட்சியை நாங்கள் கண்டதில்லை” என்று அந்த முதியவன் கூறினான்.

“அந்தப் பெண்மணி எங்கிருந்து வந்தாள், தெரியுமா?” என்று அரசன் கேட்டான்.

“எந்த நாட்டுப் பெண்மணியோ? யாருடைய மகளோ? ஒன்றும் அறியோம்” என்றான் அவன்.

அப்போது அருகில் நின்று கொண்டிருந்த புலவர் சாத்தனார், “எனக்கு அந்தப் பெண்மணியின் வரலாறு தெரியும்” என்று சொல்லத் தொடங்கினர். “இந்தப் பெண்மணி மாபெரும் பத்தினி. கண்ணகி என்னும் பெயர் உடையவள். இவள் காற்சிலம்பைக் கொண்டுபோய் விற்று வரலாமென்று இவள் கணவன் மதுரைக்குச் சென்றான். பாண்டிய மன்னனுடைய தேவியின் சிலம்பு ஒன்று திருட்டுப் போயிருந்தது. இதுதான் அந்தச் சிலம்பு என்று ஒரு பொற்கொல்லன் சொல்ல, அதைக் கேட்ட பாண்டியன் அவனைக் கொல்லச் செய்தான். தன் கணவன் கொலையுண்டதைக் கேட்ட இந்தப் பத்தினி ஒற்றைச் சிலம்புடன் பாண்டிய மன்னனிடம் சென்று அவன் செய்த பிழையை எடுத்துச் சொன்னாள். பிறகு இந்த ஊரை எரித்துவிடுகிறேன் என்று சபதம் செய்து புறப்பட்டுத் தன் ஒரு மார்பைத் திருகி நகரின்மேல் வீசினுள். அதனால் மதுரை தீப்பற்றி எரிந்தது. தன்னுடைய பிழையை உணர்ந்தவுடன் பாண்டிய மன்னன் உயிரை விட்டான். அவனுடைய அரசி தன் உயிரைக் கொண்டு அவன் உயிரைத் தேடினவளைப்போல அவனுடனே மாய்ந்தாள். மதுரையைச் சுட்ட பத்தினி தன் நாடாகிய சோழநாட்டுக்குக் கணவன் இல்லாமல் தனியாகச் செல்ல விரும்பாமல் சேரநாட்டை அடைந்தாள். மன்னர் பிரானுடைய நாட்டுக்கு வந்த சிறப்பால் மீண்டும் தன் நாயகனுடன் கூடித் தேவ லோகம் அடைந்தா ளென்று இவர்கள் சொன்னதனால் தெரியவருகிறது.”

புலவர் கண்ணகியாகிய பத்தினியின் வரலாற்றைக் கூறியபோது யாவரும் ஆவலுடன் கேட்டார்கள். கேட்க கேட்க இரக்கமும் வியப்பும் உண்டாயின. செங்குட்டுவன் முகம் வாட்டம் அடைந்தது. “பாண்டிய மன்னன் செய்த பிழையால் வளைந்த கோலை அம்மன்னன் உயிர் சென்று நிமிர்த்திச் செங்கோலாக்கிவிட்டது. அவன் அறிந்து செய்த பிழை அன்று அது. மன்னர் பதவி சிறந்ததென்றும், இன்பம் தருவதென்றும் பலர் எண்ணுகிறார்கள். அதில் எத்தனை தொல்லைகள் மழை சரியாகப் பெய்யாவிட்டால், குடிமக்கள் மன்னனைக் குறை கூறுவார்கள். செங்கோல் மன்னனாக இருந்தாலல்லவா மழை பொழியும் என்பார்கள். அதனால், மழை இல்லாத போது மன்னர்கள் என்ன பழி வருமோ என்று அஞ்சுவார்கள். யாருக்காவது துயரம் வந்தால் அதற்கும் அரசன்தான் பிணை என்பார்கள். குடிகளைக் காப்பாற்றிக் கொடுங்கோல் இன்றி நேர்மையான முறையில் ஆட்சி புரிய வேண்டும். ஆகவே, மன்னர் குடியில் பிறப்பது துன்பத்துக்குக் காரணமாகுமேயன்றி இன்பம் தருவதன்று. நான் சொல்லுவது சரிதானே?” என்று அவன் சாத்தனார் நோக்கிக் கேட்டான். சாத்தனார் ஒன்றும் பேசவில்லை.

பிறகு தன் பட்டத்தரசியைப் பார்த்து, “புலவர் சொன்ன கதையைக் கேட்டாயே! தன் கணவனது உயிர் பிரிந்தது கண்டு உடனே உயிர் நீத்தாள் பாண்டியன் மனைவி. இந்தப் பத்தினியோ மதுரையை எரித்துவிட்டு வந்தாள். இந்த இருவரிலும் நீ வியப்பதற்கு உரியவள் யார்?” என்று கேட்டான்.

அதற்கு மாபெருந் தேவி, “கணவனுடைய துயரத்தைக் கண்டு பொறாமல் உயிரை நீத்தவள் வானுலகத்தில் சிறப்பை அடையட்டும். அவள் நிலையைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. ஆனால் நம்முடைய நாட்டைத் தேடி வந்த இந்தப் பத்தினிக் கடவுளை நாம் வழிபட வேண்டும்’ என்றாள்.

அது கேட்ட மன்னன் சிறிது சிந்தனையில் ஆழ்ந்தான். கண்ணகியாகிய பத்தினிக்குக் கோயில் எடுத்து வணங்கவேண்டும் என்பதையே தன் மனைவி குறிப்பித்தாள் என்று தெரிந்து கொண்டான். அருகில் இருந்த அமைச்சர் தலைவனைப் பார்த்தான். அவன் அரசனது குறிப்பை உணர்ந்துகொண்டான்; “ஆம், பத்தினிக் கடவுளைக் கொண்டாடுவது நம் கடமை“ என்றான்.

“எப்படிக் கொண்டாடுவது?” என்று அரசன் கேட்டான்.

“சிலை செய்து வழிபடலாமே!” என்று அமைச்சன் கூறவே, “எவ்வாறு சிலை செய்வது?” என்று மீட்டும் கேட்டான் மன்னன்.

“தமிழகத்தில் உள்ள பொதியில் மலையிலிருந்து கல் எடுத்து வந்து பத்தினிப் படிமத்தை வடிக்கச் சொல்லலாம்; அல்லது சேர மன்னர்கள் முன்பே தம்முடைய வில் கொடியைப் பொறித்து வைத்திருக்கும் இமயமலையிலிருந்தும் கல்லை எடுத்து வரலாம். படிமம் செய்யக்கொணரும் கல்லைச் சில காலம் தூய நீரிலே போட்டுவைக்க வேண்டும் என்பார்கள். இவ்வாறு செய்வதை நீர்ப்படை என்று பெரியோர் கூறுவர். நீர்ப்படைக்குச் சிறந்தவை கங்கையாறும் காவிரியாறும்” என்று அமைச்சன் சொன்னான்.

“அருகிலுள்ள பொதிய மலையிலிருந்து கல்லை எடுத்து வந்து காவிரி நீரில் போட்டுவைக்கும் காரியம், வீரமுடைய குலத்திற் பிறந்தவருக்குப் புகழைத் தருவதன்று. இமயமலைக்கே சென்று பத்தினித் தெய்வத்துக்கு ஏற்ற கல்லை எடுத்து வருவோம். பத்தினி உருவம் வடிப்பதற்கு ஏற்ற கல்லை இமய அரசன் தராவிட்டால், போர் செய்து வீரங்காட்டி வெற்றிமாலை சூடிக் கொண்டு வருவேன்” என்று ஊக்கத்துடன் கூறினான் அரசன்.

அருகில் நின்றிருந்த வில்லவன்கோதை என்னும் அமைச்சன், “மன்னர் பெருமானுடைய வீரத்தை வட நாட்டு மன்னர் யாவரும் அறிவார்கள். ஆதலின், இமயமலையில் கடவுள் உருவைச் சமைக்கக் கல் எடுக்கும் பொருட்டு வருவதாக எல்லா அரசர்களுக்கும் ஓலை போக்க வேண்டும்” என்றான்.

அங்கே இருந்தவர்களில் அழும்பில் வேள் என்ற சிற்றரசரும் ஒருவர். அவர் மன்னனை நோக்கி, “அரசே, ஒவ்வோர் அரசனுக்கும் ஓலை போக்குவதென்பது எளிதில் நிறைவேறாத செயல். காலமும் மிகுதியாக ஆகிவிடும். ஆதலின் அது செய்வது இன்றியமையாததா என்பதை யோசிக்க வேண்டும்" என்றான்

“வேறு எப்படி அவர்களுக்கு நாம் வருவதை அறிவிப்பது?”

“வஞ்சி மாநக்ரில் நமக்குத் தெரியாமல் பல நாட்டு ஒற்றர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குச் செய்தி தெரியுமானால் தங்கள் அரசர்களிடம் போய்ச் சொல்வார்கள். ஆதலால் நாம் நகரம் சென்று அங்கே வீதிகளில் முரசறைந்து செய்தியை அறிவிக்கும்படி செய்தால் போதுமானதென்று நினைக்கிறேன்” என்று காரணத்துடன் விடை கூறினார், அழும்பில் வேள். மன்னன் அந்தக் கருத்தை ஒப்புக் கொண்டான்.

காணிக்கைகளை வைத்துத் தாம் கண்ட அதிசயத்தையும் சொல்லிவிட்டு விடை பெற்றுக்கொண்டு சென்றார்கள், மலைப்பகுதியிலிருந்தும் காட்டிலிருந்தும் வந்த மக்கள். அரசனும் தன் பரிவாரத்துடன் வஞ்சி மாநகருக்கு மீண்டான்.

நகரை அடைந்தவுடன் முதல் வேலையாக யானை மீது முரசறைந்து செய்தியை அறிவிக்கச் சொன்னான். அப்படி அறிவிக்கும் பணியைச் செய்வதற்குரியவர்கள், “சேர மன்னன் வாழ்க! எம் கோ பல்லாண்டு வாழ்ந்து உலகத்தைக் காப்பாற்றட்டும்! முன்பே சேர மன்னர்கள் தம் அடையாளச் சின்னமாகிய வில்லைப் பொறித்துள்ள இமயமலைக்குச் சென்று, எம் அரசர் பிரான் கடவுள் விக்கிரகம் அமைக்கும் பொருட்டுக் கல் எடுக்க வரப்போகிறான். வடதிசையில் உள்ள மன்னர்கள் எல்லாம் காணிக்கைகளுடன் வந்து எதிர் கொண்டு அழைப்பார்கள் என்று நம்புகிறோம். இல்லையானால் சேரமன்னனுடைய வீரத்துக்கு முன் எதிர் நிற்கமாட்டாமல் தோல்வியுற வேண்டியிருக்கும். உயிரையே இழந்துவிட நேரும்; இல்லையானால் துறவிகளாகி வீட்டையும் உறவினரையும் துறந்து வாழ வேண்டியதுதான். அரசர்பெருமான் சேனை அவனுடைய திருமேனிக்கு ஒப்பானது. அது வாழ்க!” என்று கூறி முரசை முழக்கினார்கள்.

இவ்வாறு முரசு அறையக் காரணமாக இருந்த கண்ணகியின் வரலாற்றைச் சாத்தனார் வாயிலாகக் கேட்டவர்கள், வஞ்சி மாநகர் வந்தவுடன் அந்த நகரில் உள்ளவர்களுக்கும் தனித்தனியே தெரிவித்தார்கள். அதனைக் கேட்ட நகர மாந்தர், “இப்படியும் இக்காலத்தில் நடக்குமோ? இது பெரிய அற்புதம்!” என்று கூறி வியப்படைந்தார்கள்.

“அப்படியானால், வஞ்சிமா நகரில் ஒரு பத்தினித் தெய்வத்தின் திருக்கோயில் எழப்போகிறது என்பது உறுதியாயிற்று. வெல்க நம் மன்னவன் வீரம்” என்று மக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.