சிலம்பு பிறந்த கதை/இருபெரும் புலவர்கள்
வஞ்சிமா நகருக்கு மேற்கே கடல். வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் பெரிய கோட்டை வாயில்கள் இருந்தன. கிழக்குப் பக்கத்தில் ஒரு கோயில் இருந்தது. அதைக் குணவாயிற் கோட்டம் என்று யாவரும் சொல்வார்கள். பெருநம்பி இளங்கோவாக இருந்தவர் தம் பட்டத்தையும் அரண்மனை வாழ்வையும் உதறிவிட்டு அந்தக் கோட்டத்தில் துறவியாக இருந்தார். அரண்மனையை விட்டு வெளியேறினவர் வஞ்சி நகரை விட்டுச் சென்று யாரோ ஒரு துறவியிடம் துறவு பெற்றுச் சில காலம் அவருடன் இருந்தார். தம்முடைய அழகிய தலைமுடியை மழித்துவிட்டார். துறவிக்குரிய எளிய உணவை உண்டார்; எளிய உடையை உடுத்தார். உறக்கத்தையும் குறைத்தார். அடிக்கடி தியானத்தில் இருந்தார். தம்முடைய குருநாதருக்குத் தொண்டு செய்தார்.
அரண்மனையில் பலர் ஏவல் செய்ய, இனிதாக வளர்ந்து வந்த அந்த அரச குமரர். இப்போது தம் குருவுக்கு ஏவல் செய்தார். அறுசுவை உண்டி வேண்டும் போதெல்லாம் உண்டவர், இப்போது ஒரு வேளை சுருங்கிய உணவை உண்டார். நன்றாகக் கொழுகொழு வென்று வளர்ந்திருந்த அவர் திருமேனி மெலிந்தது. ஆனால் அதில் தவத்தேசு மிகுந்தது. அவர் முகத்தில் ஒளி பரவியது. கண்கள் சுடர்விட்டு ஒளிர்ந்தன. அவரை யார் கண்டாலும், “இவர் உண்மைத் துறவி” என்ற எண்ணம் உண்டாகும்படி இருந்தது அவர் தோற்றம்.சிலகாலம் குருநாதரோடு இருந்த இளங்கோத் துறவி இப்போது குணவாயிற் கோட்டத்துக்கு வந்து விட்டார். முனிவராகிவிட்ட அவரை மக்கள் யாவரும் இளங்கோ அடிகள் என்று அழைத்தார்கள். வஞ்சிமா நகரிலுள்ளவர்களும் மற்ற ஊர்க்காரர்களும் அவரை வந்து கண்டு அவருடைய நல்லுரைகளைக் கேட்டுச் செல்வார்கள்.
முதுமையினாலும் தன் இளைய புதல்வர் துறவு பெற்றதைக் கண்டு மனம் உடைந்து போனமையாலும் நெடுஞ்சேரலாதன் நெடுநாட்கள் வாழவில்லை. அந்த ஒரு திறத்தில்மட்டும் சோதிடர் சொன்னது பலித்தது. நெடுஞ்சேரலாதன் உலக வாழ்வை நீத்தான். செங்குட்டுவன் அரியணை ஏறினான்
செங்குட்டுவன் சிவபக்தன். வீரமும் அறிவும் நிரம்பியவன். தன் ஆட்சியில் எல்லாச் சமயத்தினரையும் வேறுபாடின்றி அவரவர்களுக்குரிய உதவிகளைச் செய்துவந்தான். இளங்கோவடிகளுக்கு வேண்டியவற்றை அவர் அறியாமலே கிடைக்கும்படி செய்தான். அடிக்கடி அவரைக் கண்டு பேசினான். அவர் பிராயத்தால் இளையவரானாலும் நிலையால் உயர்ந்தவராதலின் செங்குட்டுவன் அவரிடம் பணிவாக நடந்து கொண்டான்.
இளங்கோவடிகள் பல மாணாக்கர்களுக்கு ஞான நூல்களையும் தமிழ் நூல்களையும் பாடம் சொல்லி வந்தார். சில சமயங்களில் வேறு ஊர்களுக்குப் போய் வந்தார்.
மதுரையில் இருந்த புலவர் சாத்தனார் செங்குட்டுவன் அரசனான பிறகு அடிக்கடி வஞ்சிமாநகரம் வந்து அவனுடன் அளவளாவினர். தம்முடைய முதல் நண்பராகிய இளங்கோவடிகளைக் கண்டு பணிந்து தமிழ் இலக்கியம்பற்றிப் பேசி இன்புற்றார். புலமை மிக்க இருவரும் பல பல பேசிப் பொழுது போக்கினார்கள். சாத்தனார் மதுரையில் நிகழும் சிறப்புக்களை எடுத்துச் சொல்வார். பழைய நூல்களிலுள்ள நயங்களைச் சொல்வார். தாம் பாடிய கவிகளைச் சொல்லிக் காட்டுவார். இளங்கோவடிகளும் தமிழ் இலக்கியத்தில் உள்ள அழகை எடுத்துச் சொல்வார். இவ்வாறு இருவரும் தமிழ் இன்பக் கடலில் அமிழ்ந்தனர்.
இளங்கோவடிகள் துறவியாகிவிட்டாலும் தமிழை விடவில்லை; தமிழ்ப் புலவரின் நட்பைத் துறக்கவில்லை. சாத்தனாருக்கும் அவருக்கும் இடையே இருந்த நட்பானது பின்னும் இறுகியது. அதனால் சாத்தனார் வஞ்சிமா நகருக்கு அடிக்கடி வரத் தலைப்பட்டார். என்றாவது அவர் மதுரையில் நினைத்தால் வஞ்சிமா நகருக்குப் பயணம் கட்டவேண்டியதுதான். இளங்கோவடிகளும் எப்போதாவது சாத்தினாரைப் பார்க்க வேண்டுமென்று எண்ணினால் உடனே திருமுகம் போக்குவார்; அதனைக் கண்டவுடனே சிறிதும் தாமதம் இன்றி மதுரைப் புலவரும் புறப்பட்டு வந்து சேருவார்.
சிறந்த புலவர் ஒருவர் மற்றொரு சிறந்த புலவரோடு சேர்ந்து பழகும் பழக்கத்தினால் கிடைக்கும் இன்பத்துக்கு ஈடாக இந்த உலகத்தில் வேறு எந்த இன்பமும் இல்லை. ஒருவருக்கொருவர் அன்பு செய்து மனம் கலந்து பழகுவார்களானால், அவர்கள் இந்த உலகத்திலே சொர்க்க இன்பத்தைப் பெற்றுவிடு கிறர்கள் என்றுகூடச் சொல்லிவிடலாம். மற்றொரு சிறப்பும் உண்டு. இப்படி இரண்டு புலவர்கள் கூடிப் பேசும்போது அருகில் இருப்பவர்களுக்குக் கிடைக்கும் இலாபம் கணக்கில் அடங்காதது. பல நாட்கள் படித்தும் தெரிந்துகொள்ள முடியாத பல சுவையான பொருள்களை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
இளங்கோவடிகளிடம் பாடம் கேட்கும் மாணாக்கர்களுக்கு இந்தச் சுவை நன்றாகத் தெரியவந்தது. சாத்தனார் வந்து விட்டாரென்றால் அவர்களுக்குக் கட்டுக்கடங்காத ஊக்கமும் உவகையும் உண்டாகி விடும். அவரும் இளங்கோவடிகளும் கூடிப் பேசும் பேச்சிலே எத்தனை மணிகள் உதிரும்! எத்தனை தேன் துளிகள் சொட்டும் அவற்றையெல்லாம் அருகிலிருந்து நுகர்கிறவர்கள் அல்லவா அவர்கள்?
ஒரு நாள் சாத்தனார் வஞ்சிமாநகருக்கு வந்திருந்தார். குணவாயிற் கோட்டம் வந்து இளங்கோவடிகளுடன் அளவளாவினர். தாம் புதியனவாக இயற்றிய கவிகளைச் சொல்லிக் காட்டினார். இளங்கோவடிகளும் தம்முடைய பாடல்களைச் சொன்னார். சாத்தனார், “ஏதாவது பெரிய நூலாக ஒன்றை இயற்ற வேண்டுமென்று எனக்கு ஆர்வம் உண்டாகிறது. தொடர்ந்த வரலாறாக இருந்தால் சுவையாக இருக்கும். எதைப்பற்றி எழுதலாம் என்று யோசித்து யோசித்துப் பார்க்கிறேன். ஒன்றும் புலனாகவில்லை” என்றார்.
“செய்ய வேண்டியதுதான். தமிழ் நாட்டுக்கு நல்வினைப் பேறு இருந்தால் உங்கள் பெரு நூல் அதற்குக் கிடைக்கும்” என்று இளங்கோவடிகள் அவர் கருத்துக்கு ஒத்துத் தம் கருத்தைக் கூறினார்.
"எனக்கு மட்டும் சொல்லிக்கொள்வது அன்று இது தங்கள் வாக்கும் அருமையாக இருக்கிறது. துண்டு துண்டாகப் பல பாடல்களை இயற்றுவதைக் காட்டிலும் தொடர்ச்சியாகப் பொருள் அமையும்படி ஒரு பெரிய நூல் இயற்றுவது நல்லது. தாங்களும் யோசித்துப் பார்க்கவேண்டும். ஏதேனும் பொருள் தோன்றினால் பாடத் தொடங்கலாம். இன்ன பொருளை வைத்துப் பாடலாம் என்று எனக்குப் பணித்தாலும் நான் பாடுகிறேன்” என்றார் சாத்தனார்.
“பார்க்கலாம். முதலில் நீங்கள் பாடுங்கள். நீங்கள் புலவர் பெருமான். பாடும் தகுதி உடையவர்கள்” என்று இளங்கோ சொல்லவே, இடைமறித்து, “என்ன அப்படிச் சொல்கிறீர்கள்? நீங்கள் மட்டும் புலவர் அல்லர் என்று யார் சொல்லுவார்கள்? நான் ஒரு வியாபாரி. தாங்கள் துறவி. இருந்தால் என்ன? இரண்டுபேருக்கும் தமிழ் ஒருங்கே உரியது. தாங்களும் பெருநூல் ஒன்றாவது பாட முயல்வது மிக மிக அவசியம்” என்று தீர்மானமாகச் சொன்னார் சாத்தனார்.
இவ்விருவரின் உரையாடலையும் கவனித்துக் கொண்டிருந்த மாணாக்கர்கள், “இரண்டு பெருமான்களும் இரண்டு பெருநூல் இயற்றித் தமிழ் மக்களுக்கு வழங்கினார் எப்படி இருக்கும் இரண்டும் இரண்டு கண்களைப்போல, இரண்டு சுடர்களைப்போல, இரண்டு கடல்களைப்போல இருக்கும்” என்று தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.