உள்ளடக்கத்துக்குச் செல்

அதிசயப் பெண்/கனி இழந்த கரும்பு

விக்கிமூலம் இலிருந்து
கனி இழந்த கரும்பு

ம்பி, கரும்புக்குப் பூ உண்டு, பார்த்திருக்கிறாயா? அது பூத்தால் உடனே வெட்டிவிடுவார்கள். பூ, காய், பழம் என்று மற்றச் செடிகளைப்போலக் கரும்பில் இல்லை. அது பூப்பதோடு நின்றுவிடும். இந்தக் காலத்தில் கரும்புக்குப் பழம் இல்லை. மிக மிகப் பழங்காலத்தில் கரும்புக்குக்கூடப் பழம் இருந்ததாம். கரும்பே இவ்வளவு இனிப்பாக இருக்கும்போது அதன் பழம் எவ்வளவு இனிப்பாக இருந்திருக்கும்! இப்போது அந்தப் பழம் எங்கே போயிற்று என்றால், அது ஒரு கதை. அதைச் சொல்லுகிறேன்; கேள்!

எத்தனையோ காலத்துக்கு முன்பு கரும்பு பூத்துக் காய்த்துப் பழமும் பழுத்ததாம். உலகத்தில் உள்ள எல்லாப் பழத்தையும்விடக் கரும்பின் பழம் அதிகமாகத் தித்திப்பாக இருந்ததாம். கரும்புப் பழத்தைத் தின்றவர்களுக்கு வேறு எந்தப் பழமும் பிடிக்காது. அதோடு கரும்பையும் தின்று மனிதர்கள் இன்பம் அடைந்தார்கள். கரும்பை வெட்டித் தின்னும்போது நடுநடுவில் கணு இருக்கிறதே, அதை வெட்டி எறிந்துவிடுவார்கள். அப்போதெல்லாம் கணு இன்னும் பெரிதாக இருக்கும். அந்தக் கணுவைக் கண்டால் மக்களுக்குப் பிடிப்பதில்லை. சோம்பேறிகள் அதற்காகப் பயந்துகொண்டு கரும்பையே தின்பதில்லை. கரும்புப் பழத்தை மாத்திரம் தின்றார்கள். சோம்பேறிகள் உலகத்தில் அதிகமாகிப் போகவே கரும்பின் பழத்தை மாத்திரம் தின்றுவிட்டுக் கணு இருப்பதனால் கருப்பங் கழியை எறிந்துவிட்டார்கள்.

வரவர ஜனங்கள் தன் பழத்தை மாத்திரம் சாப்பிடுவதையும் கழியை மதிக்காமல் போட்டுவிடுவதையும் பார்த்த கரும்புக்கு மனசில் மிகவும் வருத்தம் உண்டாயிற்று. பழையபடி எல்லோரும் கழியையும் விரும்பும்படி என்ன செய்யலாம் என்று யோசித்தது. அதற்கு ஒரு வழியும் தோன்றவில்லை. கடைசியில் அது தன்னைப் படைத்த கடவுளிடம் போயிற்று.

“கரும்பே, கரும்பே! எங்கே வந்தாய்?” என்று கடவுள் கேட்டார்.

“உங்களிடம் ஒரு வரம் கேட்க வந்தேன்!” என்று கரும்பு சொல்லியது. அப்படிச் சொல்லும்போதே அதற்குக் கண்ணில் நீர் ததும்பியது.

“ஏன் வருத்தப்படுகிறாய்? உனக்கு என்ன வருத்தம் வந்தது? உன்னுடைய வம்சம் வளர்ந்துகொண்டிருக்கிறதல்லவா?” என்று கடவுள் அன்புடன் விசாரித்தார்.

“வம்சம் வளர்ந்து என்ன பிரயோஜனம்? ஜனங்கள் மதிக்கவில்லையே!”

“ஏன்? உன் பழத்தையும் கழியையும் தின்று இனிப்பாயிருக்கின்றன என்று பாராட்டவில்லையா?” என்றார் கடவுள்.

“பழத்தைத் தின்கிறார்கள். அதில் உள்ள விதையை முளைக்கப் போடுகிறார்கள். அதனால் என் வம்சம் வளர்கிறது. ஆனால் என் கழியைச் சீண்டுவதில்லை; விறகாகக்கூட எரிப்பதில்லை” என்று கரும்பு தன் குறையை எடுத்துச் சொல்லி முறையிட்டது.

“ஏன் கழியை விரும்புவதில்லே?”

“அதில் கணு இருக்கிறதாம்? அதற்காகக் கழியைத்தொடுவதில்லை.”

“அட, சோம்பேறி மனிதர்களா!” என்று படைத்த பெருமான் சொல்லிச் சிரித்தார். பிறகு, “இப்போது என்ன செய்யவேண்டும் என்கிறாய்?” என்று கேட்டார்.

“என்னிடமிருந்து கணுவை நீக்கிவிடுங்கள்" என்றது கரும்பு.

“அப்படியானால் நீ நிமிர்ந்து நிற்க முடியாதே!”

“வாழை நிற்கவில்லையா?” என்று கேட்டது கரும்பு.

“வாழை மரத்துக்கு உனக்குள்ள சுவை எது? உனக்குக் கணுத்தான் பூணாக உதவுகிறது” என்று சொன்னார் கடவுள். கரும்பு ஒருமுறை தன் உடம்பைப் பார்த்துக்கொண்டது. “அப்படியானால், இந்தக் கணுவை ஜனங்கள் விரும்பும்படி ஏதாவது வழி செய்யுங்கள்” என்று பணிவுடன் விண்ணப்பித்துக் கொண்டது.

கடவுள் சிறிது நேரம் யோசனை செய்தார். பிறகு திருவாய் மலர்ந்தருளினார்.

“ஏ கரும்பே! நீ இனி வருந்தாதே. உனக்குப் பகை உன்னுடைய பழமே ஒழிய, கணு அல்ல. ஆகையால், உனக்குப் பழமே வேண்டாம்” என்றார் கடவுள்.

“அப்படியானால் நான் என்ன ஆவது?” என்று படபடப்புடன் கரும்பு கேட்டது.

“பயப்படாதே. உன் கழிக்கு இன்னும் அதிகச் சுவை உண்டாகும். மனிதர்கள் உன்னை அதிகமாக விரும்புவார்கள்.”

“கணு இருக்கும் அல்லவா?”

“இருக்கும். ஆனால் இவ்வளவு பெரிதாக இராது.”

“பழம் இல்லாவிட்டால், விதை இராதே; அப்படியானால் என் வம்சம் எப்படி வளரும்?” என்று மறுபடியும், கவலைகொண்ட கரும்பு கேட்டது.

“என் கட்டிக் கரும்பே! நான் அதை மறந்து விடுவேனா? கணுவுக்குப் பெருமை உண்டாக்க வேண்டுமா? அந்தக் கணுவிலிருந்து கிளம்பும் முளையிலிருந்து உன் வம்சம் விருத்தியாகும். கழியைத் தின்பவர்கள் தின்று சுவைப்பார்கள். கணுவை வெட்டிப் புதைத்து உன்னை வளர்ப்பார்கள். இப்படியாகக் கணுவுக்கு விதையைப் போன்ற பெருமை ஏற்பட்டுவிடும். நீ வருந்தாதே!” என்று கடவுள் ஆறுதல் கூறினார்.

“தங்கள் சித்தம் என் பாக்கியம்” என்று சொல்லி விட்டு, கரும்பு இறைவரிடம் விடை பெறறுக்கொண்டு வந்தது. அதுமுதல் கரும்புக்குப் பழம் இல்லாமற் போய்விட்டது.

“எங்கள் மர நூல் வாத்தியாரைக் கேட்கட்டுமா?” என்று கேட்காதே! அவருக்கு இந்த ரகசியம் தெரியாது. இந்தக் கதையை நீ மட்டும் ரகசியமாக வைத்துக்கொள்!