சங்க கால வள்ளல்கள்/திருமுடிக் காரி
திருமுடிக்காரி என்பவன் ஒரு சிற்றரசன் இவன் மலையமான் திருமுடிக்காரி எனவும், மலையமான் எனவும் அழைக்கப்படுபவன். இவன் சான்றோருடைத்துத் தொண்டை நாடு எனச் சாற்றப்பெறும் பெருமை பெற்ற தொண்டை நாட்டிற்கும், சோழவளநாடு சோறுடைத்து என்று சொல்லப்படும் சோழ வளநாட்டிற்கும் இடைப்பட்ட நடு நாட்டில் மலாடு என்னும் நாட்டின் அரசன் ஆவான் இம்மலாடு பெண்ணையாற்றங்கரையில் உள்ளது இவன் மலயமா நாட்டிற்கு மன்னனாக இருந்து திருக்கோவலூரைத் தன் நாட்டுத் தலைநகராகக்கொண்டு செங்கோல் செலுத்திவந்தான். இவனுக்குரிய மலை முள்ளூர் மலையாகும். இவன் சிற்றரசனேயாயினும் போர்முகத்தில் நின்று புறமுதுகுகாட்டாது போரிடும் ஆற்றல் மிகப் படைத்தவன். போர் என்ன வீங்கும் பொலங்கொள் தோளுடைய மறவர் பலரைக் கொண்டவன். இவ்வாறு படைபலமும், தோள்வன்மையும் இவன் கொண்டிருந்த காரணத்தால், இவனது துணையைப் பெரிதும் முடியுடைமூவேந்தர்களும் விரும்பியுள்ளனர். அவ்வேந்தர்கள் தம் ஒன்னார் மீது அமர்தொடுத்த காலத்தில் இவன் பெரிதும் துணை புரிந்துள்ளான். இதற்குச் சான்று சேரமான் மாந்தரலம் சேரல் இரும்பொறையும், சோழன் இராசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் பொருதவழி சோழற்குத் துப்பாகிய தேர்வண் மலையனைப் பாடிய பாட்டும் புறநானூற்றில் உள்ளது. அதனை வட வண்ணக்கன் பெருஞ்சித்திரனார் பாடியுள்ளார். இப்போரிற் சோழனே வென்றான்.
இவனை யார் துணையாகக் கொள்கின்றனரோ, அவர்கள் வெற்றி பெறுதல் திண்ணம். அதில் யாதோர் ஐயமும் இன்று. இதன் பொருட்டே மூவேந்தர்களும், சமயம் வந்தபோதெல்லாம் இவன் துணை வேண்டி நின்றனர். இதனைக் கபிலர் அழகு படக் கூறுகையில், “ வீயாத் திருவின் விறல்கெழு தானை மூவருள் ஒருவன் துப்பாகியன்,” என்றும் “முரண் கொள் துப்பின் மலையன்," என்றும் புகழ்ந்தனர். இவன் வன்மையுடையவன் என்னும் பொருளில் தான் துப்பின் மலையன், துப்பாகியன் எனவும் சிறப்பிக்கப்பட்டனன்.
இவனது வீரத்திற்கு அஞ்சி ஓடிய வீரரும் உளர். ஒருமுறை ஆசிரியர் இவனது முள்ளூர் மலையை நெருங்கிப் போரிட்டபோது, அவர்களுக்கு இடையில் புல்வாய்கட்கிடையே புலிக்குட்டி புகுவது போலப் புகுந்து இவன் தன் வாளினை உறை கழித்து வீசி நின்றபோது, அவர்கள் இரிந்து ஓடினர் என்பதை நற்றிணை, “ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர்ப் பலருடன் கழித்த ஒள்வாள் மலையனது ஒரு வேற்கு ஓடியது” எனக் கூறுகிறது.
புலவர்கட்கும் பரிசில் மாக்களுக்கும், பாணர் விறலியர்கட்கும் இல்லையென்னாது ஈயும் கடப்பாடும் கொண்டவனாய்த் திகழ்ந்தனன். அந்தணர்கட்கு நிலம் ஈந்து அகம் மகிழ்ந்தனன். ஆய் அண்டிரன் எங்ஙனம் தன்பால் வந்த இரவலர்க்கு ஆனைகள் பல ஈந்து அகம் களித்து வந்தனனோ, அது போலவே, இவனும் பரிசிலர்க்குப் பரிகள் பலவற்றை ஈந்து பரவசம் உற்றவன். இவன் குதிரைகளை ஈந்து குதூகலிப்பவன் என்பதற்காகவே போலும் சிறுபாணாற்றுப்படை “காரிக்குதிரைக் காரி” என்றே இவனைப் போற்றுகிறது. இவுளிகள் பலவற்றை ஈவது போலவே இவுளியினை இவர்ந்து போதலிலும் சிறப்படைந்தவன் என்பதைப் பெருஞ் சித்திரனார் பேசுகையில் “காரியூர்ந்துபேர் அமர்க் கடந்த மாரியீகை மறப்போர் மலையன்” என்று இவனைப் புகழ்ந்து பாடியுள்ளார். காரியென்பது இவன் இவர்ந்து நடாத்தும் குதிரையின் பெயராகும்.
காரி ஈர நெஞ்சினன் என்பதை “மாரியீகை” என இவனது ஈகைக்குக் கைம்மாறு வேண்டாத மாரியை உவமை கூறியிருத்தலினின்றே உணர்கிறோம். ஈரத்திற்கு ஏற்ற வீரம் உடையவன் என்பது மறப்போர் மலையன் என்று அந்நூலே சிறப்பிப்பதிலிருந்து தெளியலாம். இவனைப் போலக் கொடை வள்ளலாகத் திகழ்ந்த வல்வில் ஓரியுடன் மலைந்தவன் என்பது, ஓரியைப் புகழ வந்த பெருஞ்சித்திரனார் “காரிக் குதிரைக் காரியோடு மலைந்த ஓரிக்குதிரை ஓரியும்" என்று குறிப்பிட்டிருப்பதனால் உணரலாம்.
மலையமான் திருமுடிக்காரி இசையால் திசை போயவன் என்ற காரணத்தால் இவனை நேர்முகமாக நின்று புகழ்வதோடு இன்றி, இவனையும் இவன் ஊரையும் உவமையாகக் காட்டிப் புகழ்ந்துள்ளனர் புலவர்கள், அம்மூவனார் என்னும் புலவர் ஒரு பெண்ணணங்கின் கூந்தலைப் புகழ்கையில் அக்கூந்தற்குப் பெண்ணையாற்றின் நுண் மணலை உவமை கூறினர். அப்படிக் கூறுகையில், இம்மலையமான் திருமுடிக்காரியைக் குறிப்பிட்டு, “துஞ்சா முழவின் கோவல் கோமான் நெடுந்தேர்க்காரி கொடுங்கா முன்றுறைப் பெண்ணையம் பேரியாற்று நுண்ணறல் கடுக்கும் நெறியிருங்கதுப்பு” என்று சிறப்பித்துப் பாடினர். ஈண்டு கொடுங்கால் என்பது காரியின் ஆட்சிக்குட்பட்ட ஊரினைக் குறிப்பதாகும். இக்கருத்து அகநானூற்றில் காணப்படுவது. இவ்வாறே குறுந்தொகை யென்னும் நூலில் கபிலர் இவனது முள்ளூர்க்கானம் நறுமணம் நிறைந்த இடம் என்பதைப் பாடினர்.
கபிலர் காரியின் புகழைப் பலபடப் புறநானூற்றில் பாராட்டிப் பேசியுள்ளார். இவன் முள்ளூர் மலைக்கு உரியவனாய்த் திருக்கோவலூர் இருக்கை யுடையவனாய் இருந்தாலும், இவனை வந்து காணும் இரவலர்கள் பலர், நானாபக்கங்களினின்றும் வந்து பரிசில் பெற்று மீள்வர் என்றும் கபிலர் கருதுகிறார். அதனால், “ஒருதிசை ஒருவனை உள்ளி நால்திசைப் பலரும் வருவர் பரிசில் மாக்கள்,” எனப் பாடுகிறார். திருமுடிக்காரி இன்னாருக்கு இது கொடுத்தல் சாலும், என்று எண்ணி ஈபவன் அல்லன். எவர்க்கும் வரையாது எதையும் ஈபவன். இக்குணம் இவனிடம் கண்ட புலவர் கபிலர், அதனைச் சிறிது மாற்றவேண்டி, இவனை நோக்கி "மாவண் தோன்றலே, நீ வரையாது வழங்கும் வள்ளன்மையைக் குறித்து எனக்கு மகிழ்வே. என்றாலும், இரவலர்க்கும், என் போன்ற புலவர்களாகிய பரிசில்மாக்களுக்கும் சிறிது பாடு தோன்ற நீ பரிசில் ஈதல் உன் பண்பாடாகும்," என்று அறிவுறுத்துவார் போல “பொது நோக்கு ஒழிமதி புலவர் மாட்டே” என்று தெருட்டுவாராயினர்.
காரி தனக்கென எதையும் வைத்துக்கொள்ளாதவன் என்பதைக் கபிலர் கூறும் கருத்து நாம் படித்துச் சுவைத்தற்குரிய பகுதியாகும். வரையாது கொடுக்கும் வள்ளல் என்பதை அக்கருத்தில் பதிய வைத்துள்ளார் புலவர் பெருமான், காரி பிறருக்குத் துணையாகும் துப்புரவினன் என்பது முன்பே கூறப் பட்டதன்றோ! அப்படிப்பட்டவனுடைய கோவலூரையோ முள்ளூர் மலையையோ எப்பகைவரேனும் கைப்பற்ற எண்ணுவரோ? எண்ணார். அன்றி, அவன் நாடு கடலால் கொள்ளப்பட்டு அழிவுறுமோ எனில், அதுவும் இயலாதது. ஏனெனில், நல்லவருடைய நாடு அங்ஙனம் அழிதல் இல்லையன்றோ ? ஆகவே, “வீரத்தண்டை அணிந்த காரியே நின்னாடு பரவையாலும், பகைவராலும் கொள்ளப்படாதது,” என்று விதந்து கூறினார். இவன் தனக்கென அந்நாட்டினை வைத்திருந்தால்தானே பகைவர் கொள்ள எண்ணமும் கொள்வர். அவை மழை வளம் தருதற்பொருட்டு வேள்வியினைச் செய்யும் நல்ல அந்தணர்களுக்குரிய பொருளாகிவிட்டன, அதாவது தன் நாடுகளை அந்தணர்களுக்கு அளித்து வந்தவன் என்பது தெரிகிறது.
காரி அந்தணர்களுக்கு நாடுகளைக் கொடுத்து உதவியதுபோல், இரவலர்கள் வந்து கேட்டபோது அவர்கட்குக் கொடுத்தற்கு உதவியாய் இருந்த பொருள், மூவேந்தருள் எவரேனும் தமக்குத் துணையாக வேண்டும் என அழைத்தகாலத்து ஈந்த பொருளேயாகும். அவற்றைத் தானே துய்க்காமல் “தாளாற்றித் தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற்பொருட்டு,” என்னும் கருத்துக்கு இணங்கக் கொடுத்து வந்தவன். இப்படித் தன் நாட்டை அந்தணர்கட்கு ஈந்தும் தான் மூவேந்தர்பால் பெற்ற பொருளைப் பரிசில் கேட்டார்க்கு ஈந்தும், காரி வாழ்வு நடத்தினால், தனக்கென ஒன்றையும் பெற்றிலனோ எனில், அவனுக்கென உரிமையாக அமைந்தவள் அருந்ததி அனைய அவனது இல்லக் கிழத்தியே அன்றி வேறு எவரும் இலர். வேறு எதுவும் இன்று. இப்படி அன்றோ வாழ வேண்டும்! இத்தகையோனையன்றோ புலவர் உலகமும் பொது மக்கள் உலகமும் புகழும்.
மலையமான் திருமுடிக்காரி பிறர்போலத் தான் கள்ளுண்டு மயங்கிய காலத்து மகிழ்ச்சியால் ஈயும் இயல்பினன் அல்லன். தான் மதுவுண்டு மயங்காது இருக்கின்ற காலத்தும் மகிழ்ந்து ஈயவல்லவன். இப்படி இவன் ஈய வாங்கிச் சென்றவர் தொகை எண்ணில் அடங்காது. இவர்களை ஓர் உவமை கூறி விளக்க வேண்டுமாயின், இவர்கள் முள்ளூர் மலையின் உச்சியில் விழுந்த மழைத் துளியினும் பலராவர். இதனால், காரியின் ஈகை இயற்கையில் இவனுடைய பிறவிக் குணத்தால் அமைந்த ஈகையே அன்றிப் பிறரைப் போலச் செயற்கையால் அமைந்த ஈகை அன்று. இவனைப் பாடிச் சென்றவர் வெறுங்கையினராய் மீளுதல் அரிது. இவனைக் காணப் புறப்பட்டவர்கட்கு நல்ல நாளாக அல்லாமற்போயினும், நிமித்தங்கள் தீயனவாகத் தோன்றித் தடைக்குறிகளைக் காட்டுவனவாக இருந்த போதிலும், பரிசில் மாக்கள் இவனைக் கண்டு பாடிய மாத்திரையில் பரிசில் பெற்றே மீள்வர்.”இனி மலையமான் திருமுடிக்காரியை வடமவண்ணக்கன் பெருஞ் சித்திரனார் எங்ஙனம் அறிந்து பாராட்டியுள்ளார் என்பதைக் சிறிது சிந்திப்போம். இப்புலவர் பாராட்டும் பாராட்டில் காரியின் கொடைக் குணமும் படை வன்மையும் தோன்றக் காணலாம். காரி பிறர்க்கு ஈந்து மிகுந்ததையே தான் உண்ணும் கடப்பாடுடையன் என்று பாராட்டியுள்ளார். அதனால், தனக்கு விஞ்சியது தருமம் என்னாது, பிறர்க்கு ஈந்து மகிழ்தல் மாண்புடையது என்று எண்ணும் கொள்கையுடையவன் என்பது தெரியவருகிறது. காரி போர்க்களத்தில் நின்று போராடுங்காலத்து இவன் சார்பாய் நின்று வென்றவர் இவனைப் புகழ்வர் என்றும், தோற்றவரும் “இவனன்றோ நம்மைத் தோல்வியுறுமாறு செய்தவன்” எனப் புகழ்ந்தே பேசுவர் என்றும் இப்புலவர் கூறுவதை நாம் உற்று நோக்கின், இவன் நட்டார் ஒட்டார் ஆகிய இரு திறத்தாராலும் பாராட்டப்படும் பெருமை சான்றவன் என்பது அறியக் கிடக்கிறது.
மாறோக்கத்து நப்பசலையார் என்னும்புலவரும் காரியின் ஈகைக் குணத்தையும் வென்றிச் சிறப்பையும் புகழ்ந்தனர். காரி புலவர் பாடும் புகழ் படைத்தவன் என்று இப்புலவர் குறிப்பிட்டிருப்பது நம் சிந்தனைக்குக் கொணர வேண்டியதாகும். இவர் இப்படிக் கூறியதன் நோக்கம், காரி வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலனால் பாடப்பட்டிருத்தலேயாகும். இதனை இவர் குறிப்பிடுகையில் “புலன் அழுக்கற்ற அந்தணாளன் பரந்திசை நிற்கப் பாடினன்” என்று குறிப்பிட்டுப் பாடியுள்ளார் இதனால் கபிலர் காரியின் புகழை அவ்வளவு பரக்கப் பாடியுள்ளார் என்பது தெரிகிறது. இப்படி இவர் பாடிவிட்டதால் இனிக் காரியிடம் வரும் புலவர்கட்கு இன்னது பாடுவது என்பது தெரியாமல் தடுமாறினர் என்பதும் நாம் அறியவேண்டி இருக்கிறது. இந்நிலையில் மாறோக்கத்து நப்பசலையார் தம்மை மிடிபிடித்து உந்த, சில சொற்களைக் கொண்டேனும் பாடிப் பரிசில் பெற்றுச் செல்லலாம் என்று வந்ததாகக் கூறிப் பரிசில் வினவுகிறார். அந்தோ ! புலவரின் வறுமை தான் என்னே ! அவர் சில சொல்லி என்? பல சொல்லி என்? காரி தன்னைப் புகழ்ந்த காலத்துத்தான் ஈய வல்லனோ? அல்லன், அல்லன். இவன் தன்னைக் கண்டவர்க்கெல்லாம் களிப்புடன் ஈயும் கடப்பாடுடையவன். மேலும், காரியின் ஈகையை இப்புலவர், “இவன் பகைவரை வென்று, அவர்களின் யானைகளைக் கைப்பற்றி முக படாத்தில் அமைந்த பொன்னைப் பாணர்களுக்கு ஈந்து மகிழ்பவன்,” என்று பாடுகிறார். ஆகவே, மலையமான் திருமுடிக்காரி ஈர நெஞ்சமும், வீர உள்ளமும் படைத்தவன் என்பதை நன்கு உணர்வோமாக.