சங்க கால வள்ளல்கள்/நெடுமான் அஞ்சி

விக்கிமூலம் இலிருந்து


6. நெடுமான் அஞ்சி


அஞ்சியின் பொது இயல்பு
நெடுமான் அஞ்சியும் கடையெழு வள்ளல்களில் ஒருவன். இவன் அதிகமான் நெடுமான் அஞ்சி, அதிகமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி, நெடுமான் அஞ்சி, எழினி எனவும் அழைக்கப்படுபவன். இவன் போரில் பெரு விருப்புடையவன். அவ்விருப்பத்திற்கு இணங்கச் சமர்செய்து சயத்துடன் திரும்பும் அவ்வளவு ஆண்மையாளன். இவன் பெருவீரன். அமராபரணன் என்பது சேரன், சோழன், திதியன், எருமையூரன், இருங்கோவேண்மான், பாண்டியன், பொருநன் என்னும் எழுவருடனும் பகைத்துப் போரிட்டு, அவர்கட்குரிய அடையாளச் சின்னங்களையும் அவர்களுக்குரிய நாடு நகரங்களையும் அரச உரிமையையும் கைப்பற்றினமையி லிருந்து விளங்கும். கோவலூரை வென்று அதனையும் தன் ஆட்சிக்குட்படுத்தியவன். இவன் தன்பால் கொண்டிருந்த வீரர் மழவர் என்னும் பெயரைப் பெற்றிருந்தனர். ஆகவே, இவன் மழவர் தலைவன் என்றும் கூறப்பட்டனன். இவன் ஊர் தகடூர் என்பது. இவன் மலை குதிரை மலையாகும். இவன் சூடியமாலை வெட்சி மலரும், வேங்கைப்பூவும், கூவிளங்கண்ணியும் ஆகும். இவன் சேர மன்னருக்கு உறவினன் என்ற காரணத்தால் அச்சேரரது அடையாள மாலையாகிய பனந்தாரினையும் பாங்குற அணியம் மாண்பு பெற்றவன்.

நெடுமான் அஞ்சியின் முன்னோர்கள் தேவர்களைப் போற்றிக் கரும்பினை அத்தெய்வலோகத்திலிருந்து கொணர்ந்து தமிழ் நாட்டில் பயிரிட்டவர்கள். இது நமக்கு ஒரு சிறந்த பேறு அன்றோ ? அதிகமான் நெடுமான் அஞ்சியின் முன்னோர் விண்ணுலகினின்று விண்ணவரைப் போற்றி வேழக் கரும்பினைக் கொண்டு வந்திலர் எனில், இக்குவின் இயல்பை யாம் அறிந்திருக்க இயலாதல்லவா? அத்தேவர்களும் அஞ்சியின் மூதாதையர்களின் அன்புடைமைக்குப் பெரிதும் ஈடுபட்டவர்களாய் அவர்கள் நேரே தாமே வரங்கொடுத்துச் செல்வதற்கு வந்து தங்கிய பூங்கா ஒன்று, அதிகமானது நாட்டில் இருந்ததாகவும் இலக்கியத்தில் பேசப்படுகிறது. இவன் “மங்கலம் என்ப மனைமாட்சி; மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு” என்பதற்கிணங்கப் பிள்ளைப் பேற்றினையும் சிறக்கப் பெற்றவன். அப்பிள்ளையே பொகுட்டெழினி என்னும் பெயரினன்.


அஞ்சி ஒளவையார்க்கு நெல்லிக்கனி ஈந்தது

அஞ்சியின் கொடைக்குணத்திற்குச் சிறப்புடைய செயலாகக் குறிக்கக்கூடிய ஒரு நிகழ்ச்சி ஒளவையாருக்கு நெல்லிக்கனி ஈந்த கொடையேயாகும். நெல்லிக்கனி ஈந்தது ஒரு கொடைச் சிறப்போ என்று நீங்கள் கூறவும் கூடும்; எண்ணவும் கூடும். அந் நெல்லிக்கனியினை யார் உண்ணுகின்றனரோ, அவர்கள் நீண்ட காலம் நரை திரை மூப்பு அடைதல் இன்றி வாழ்வு நடத்த வல்லவர். அதனை அஞ்சி பெற்றதும் எளிய முறையில் அன்று; அருதின் முயன்றே அதனை அடைந்தனன் அக்கனி பழைய நிலைமையினையுடைய பெரிய மலையிடத்து, இரு மலைகளின் பிளவுக்கு இடையே ஏறுதற்கரிய உச்சியில் சிறிய இலைகட்கு நடுவே, மறைந்து காய்த்த நெல்லிக்கனியாகும். அதனை அரிதின் முயன்றே அஞ்சி கொணர்ந்தனன். அதன் அருமை அவனுக்குத் தெரிந்ததே. கொணர்தல் பெருமுயற்சி என்றாலும், உண்ட அளவில் எய்தும் பேறு அளவிடற்கரியது. அஃதாவது உண்டார் இறவாது நெடுநாள் உயிருடன் இருப்பதாகும். இத்துணையும் அறிந்திருந்தும், அதனை ஒளவையாருக்கு ஈந்து அக மிக மகிழ்ந்தான். தான் நீண்ட நாள் உயிருடன் இருத்தலினும், ஒளவை மூதாட்டியார் பல காலம் இருந்தால் தமிழ்மொழி மேலும் வளம்படும் என்பது இவன் கருத்து. திருத்தமுறாதவர் பலர் இவ்வம்மையாரால் திருத்தமுறுவர் என்பது இவன் எண்ணம். இன்றேல், என்ன காரணங்களால் தாம் பெருமுயற்சியுடன் பெற்ற நெல்லிக் கனியினை ஒளவை மூதாட்டியாருக்கு அளித்தனன்? அப்படி அளிக்கும் காலத்தும் அதனை அரிதில் முயன்று பெற்ற வரலாற்றினையோ, அன்றி அதனை உண்பதால் அடையும் பேற்றினையோ, ஒளவையாருக்கு உரைக்காது அளித்துப் புசிக்குமாறு ஈந்தனன். இப்பலனைக் கூறினால் ஒரு வேளை ஒளவையார் ஏற்க மறுத்து அதிகமானே அருந்தி நாட்டுக்கும் தம் போன்ற பரிசில்மாக்களுக்கும் பயனுடையவனாய் இருக்கட்டும் என்று எண்ணிவிட்டால், என் செய்வது என்பது இவனது எண்ணம். அவ்வருங்கனியை ஒளவையாரே அருந்தவேண்டும் என்பது இவனுடைய ஆழ்ந்த கருத்து. அவ்வம்மையார் அதனை வாங்கியுண்ட பிறகு அதன் அருமை பெருமைகளை உணர்த்தினன். அதுகாலை ஒளவையார் இவனது செயல் கண்டு மனம் உவந்து வாழ்த்தினர். அவ்வாழ்த்து :

"போர்அடு திருவில் பொலந்தார் அஞ்சி !
பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீலமணி மிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயே! தொல்நிலப்
பெருமலை விடர் அகத்து அருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின் அகத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே”

என்பது. இவ்வாழ்த்தில் ஒரு நயம் தோன்றவும் ஒளவையார் வாழ்த்தினர். “நுதல்விழி நாட்டத்து இறைவனை சிவபெருமான்போல வாழ்க” என வாழ்த்தினர். அதன் கருத்து அவன் சாதற்குக் காரணமான நஞ்சினையுண்டும் சாகாது இறைமைப் பண்பு காட்டி நின்று அழியாது இருத்தல் போல, நீயும் அழியாது நிலைத்திருக்க என்பதாகும். அதிக மானின் பூத உடல் நீங்கினாலும் புண்ணிய உடலான நுண்ணுடல் இன்றும் நிலைத்திருக்கிறதன்றோ ? ஆகவே, அதிகமான் இரண்டாயிரஆண்டுகட்குமுன் இறந்தவனேனும் இறவாதவனே என உணர்க. இங்ஙனம் இறவாத இன்ப அன்பு இவன் எய்தப் பெற்றமையால்தான், ஒளவையாரே அன்றிப் பாணர், பெருஞ்சித்திரனார், பொன்முடியார் போன்ற புலமைசான்ற புலவர் பெருமக்களால் பாடும் பேறு பெற்றவனானான்.
அதிகமானது பகைவர்க்கு ஒளவையார் அறிவுறுத்தல்

அதிகமான் போரில் தனிப்பட்ட முறையில் வீரங் தோன்றப் பொருபவன். இவன் கைப்பட்டவர் தப்புதல் அரிது. இதனை ஒளவையார் பன்முறை கண்டுள்ளார். ஆதலின், ஒரு முறை இவனோடு பொர முனைந்து நின்ற வீரர்களை நோக்கிக் கூறிய கூற்றுக்கள் எதிரிகள் வீணே பொருது இறக்க நேரிடுமே என்ற இரக்கந் தோன்ற இயம்பப்பட்டனவாகத் தோன்றும். ஒளவையார் அவ் வீரர்களைப் பார்த்து, ஓ வீரர்களே ! போர்க்களம் புகுதலை ஒழியுங்கள். எங்கள் தலைவன் அதிகமான் நெடுமான் அஞ்சி வன்மையும் அஞ்சாமையும் ஒருங்கே படைத்தவன். அவன் வன்மைக்கு உவமை கூறின், ஒரு நாளைக்கு எட்டுத் தேர்செய்யவல்ல அத்துணைத் தேர்ச்சிபெற்ற தச்சன், ஒரு திங்கள் வரை செய்த உருளை எத்துணை உறுதியும், திண்மையும் உடையதாய் இருக்குமோ, அத்திண்மையையும் உறுதியையுமே உவமையாகக் கூறலாம். நீங்கள் எப்படிப்பட்ட வீரமும், தீரமும் உடையவர்களானலும், உங்கள் போர் அணியும், தூசிப் படையும் எங்கள் அதிகமான் முன்பு காற்றிடைப்பட்ட பஞ்சேயாகும். ஆகவே, எம் தலைவன் உங்களைக் காணுதற்கு முன் களத்தைவிட்டுச் செல்லுங்கள். அவன் கூரிய வேலைத் தாங்கியவன். அவன் மார்பகம் பூணணிந்து பொலிவுடன் பரந்து விளங்குவது. அவன் தோள் முழவுபோலத் திரண்டு உருண்டு காணப்படுவது. தான் பல வெற்றிகனைக் கொண்டமைக்கு அறிகுறியாகப் பல களவேள்வியினைச் செய்தவன் எங்கள் தலைவன்.' என்று அறிவுறுத்தியுள்ளார். இங்ஙனம் பகைவரை நோக்கிக் கூறியதன் நோக்கம், அதிகமான் அத்துணை ஆண்மை படைத்தவன் என்பதை அறிவிக்கவேயாகும். இவனிடம் அமைந்த வீரர்கள் அரவம்போலும் சீறும் குணம் படைத்தவர்கள். பாம்பை அடிக்க அடிக்க அது மேலும் மேலும் கோபங்கொண்டு எழுவதுபோல, இவன்பால் இருந்த வீரர் பகைவர்கள் தம்மைத் தாக்கத் தாக்க எதிர்க்கும் ஆற்றல் படைத்தவர்கள். அதிகமானும் நாடக அரங்கினும், பாடல் அரங்கினும் முழவுகட்டித் தொங்கவிடப்பட்டிருப்பின், அம்மத்தளங்களில் காற்றின் வேகம் தாக்கியபோது எழும் ஓசையைக் கேட்டு இவ்வோசை பகைவர் எழுப்பும் போர்ப் பறையின் ஒலிபோலும் என்று உவகையுடன் வரவேற்று அவ்வோசை வழிச் சென்று எதிர்க்கும் விருப்பம் உள்ளவன்.

திருக்கோவலுர் வெற்றி

அதிகமான் பகைவர்க்கு இன்னாதவனாகவும் புலவர்களுக்கு இனியவனுமாகவும் விளங்கினன். அதிகமான், திருக்கோவலூர் அரசனை மலையமான் திருமுடிக்காரி பல வேற்றரசர்களை வென்று சிறப்புற்றுப் பெருமிதத்துடன் விளங்கியபோது அப்பெருமிதத்தினை அடக்கத் திருக்கோவலூரை முற்றுகையிட்டனன். திருமுடிக்காரி போர் வலி படைத்தவன் ஆதலால் அவனும் வீராவேசத்துடன் எதிர்த்தனன். இரு பெரு வீரர்களும் வீரர்களின் படைகளும் மண்டிப் போர் இட்டன. அந்த நிலையில் ஒளவையார் ஆண்டு வந்தனர். மலையமான் திருமுடிக்காரி அதிகமானேடு போர்புரிதலைக் கண்ணுற்றனர். வீணே திருமுடிக்காரி அஞ்சியுடன் எதிர்த்துப் போராடித் தோற்றுப் பல உயிர்கள் அழிதற்குக் காரணமாக இருக்கின்றனனே என்று இரக்கங்கொண்டவராய், திருமுடிக்காரியையும், அவன் படை வீரர்களையும் பார்த்து, வீரர்காள் அதிகமான் எளியவன் என்று எண்ணாதீர். அவன் வாட்கள் பகைவரது யாக்கையில் படிந்து கதுவாய்போய் வடிவிழந்துள்ளன. அவனது அயில்வேல்கள் குறும்பரது அரண்களை வென்று நாட்டை அழித்து ஆணியும் காம்பும் தளர்ந்து உள்ளன. ஆனைகள் எதிரிகளின் அரண்களை அழித்துத் தம் தந்தங்களில் கட்டிய பூண்களை நிலை தளரச் செய்து நிற்கின்றன. அவனது அசுவங்கள் வைரிகளின் மார்பகத்தில் ஓடி உலவிக் குருதிபட்ட குளம்பினை யுடையன வாகவுள்ளன. அதிகமானால் கோபிக்கப்பட்டவர் உயிர் பிழைத்தல் அரிது. உங்களது நீர்வளனும் நிலவளனும் அமைந்த ஊர்கள் உங்கட்கே உரிமை யுடையனவாக இருக்க விரும்பினாலும், உங்கள் மனைவிமாரை விட்டுப் பிரியாது உடன் வாழ அவாவினீராயினும், அவனுக்குத் திறை கொடுத்துச் சந்து செய்து கொள்ளுதலே சாலவும் அறிவுடைமையாகும். நான் உள்ளதை உள்ளவாறே கூறினேன். யான் சொன்னவற்றை நன்கு சிந்தித்தபிறகு நீங்கள் போரில் இறங்குங்கள்,” என்று கூறி அறிவுறுத்தினர். என்றாலும் திருமுடிகாரி முன்வைத்த காலைப் பின்வைக்கும் இயல்பினன் அல்லன். ஆதலின், எதிர்த்தே போரிட்டான். அப்போரில் அதிகமானே வெல்ல மலையமானே தோற்று ஓட நேர்ந்தது. திருக்கோவலூர் அதிகமான் ஆட்சிக்குள்ளாக்கப்பட்டது. இத்தகைய வீராதி வீரனாக அதிகமான் விளங்கினான். இவன் தகடூர் எரிந்து வெற்றிகொண்ட சிறப்பைப் பரணர் சிறப்பித்துப் பாடியுள்ளார் என ஔவைப் பிராட்டியாரே குறிப்பிடுவராயின், இவனது வெற்றிச் சிறப்பினை என்னென விளக்குவது! அதிகமான் மிகுந்த வீரன் என்பது மற்றொரு செயலாலும் நமக்குப் புலனாகிறது. அதிகமான் தகடூரை வென்றான். வென்று மீளுகையில் தனக்கு நீண்ட நாள் மகப்பேறின்றி யிருந்து ஓர் ஆண் மகன் பிறந்தனன் என்பதைக் கேள்வியுற்றதும், போர்க்கோலம் பூண்டிருந்த நிலையிலேயே அக்கோலத்தைக் களையாமல் கையில் உள்ள வேலுடனும், காலில் கட்டிய கழலுடனும், உடம்பில் இருந்த வியர்வையுடனும், பகைவரைச் சினந்து நோக்கிய நோக்குடனும் சென்று கண்ட காலத்திலும், அச்சினத் தீ எழுந்தவண்ணம் இருந்தது என ஔவையார் கூறுவதால் அறியலாம். இத்தகைய சீற்றமறா தவனோடு சிலைப்பவர் பிழைத்துப் போதல் ஒண்ணுமோ? ஒண்ணாது.

ஔவையாரும் தொண்டைமானும்

அதிகமான் வீர உணர்ச்சியினன் என்றாலும், அறப்போர் புரியவே எண்ணும் இயல்பினன். இவனது போர் வன்மையை முற்றிலும் உணராத காஞ்சி மா நகரை அரசிருக்கையாகக் கொண்டு அரசாண்ட தொண்டைமான், அதிகமானோடு அமர் புரிய எண்ணங்கொண்டிருப்பதை அஞ்சி அறிந்தனன். “வீணே தன்னொடு பொருது படைவலியும் துணைவலியும் இழந்து தொண்டைமான் மடிவானே; அவனுக்கு நம் ஆற்றல் இன்னது என்பதை அறிவித்தல் நலம்” என்று எண்ணி அதனை அறிவிக்கும் ஆற்றல் சான்றவர் ஔவையாரே என்பதை உணர்ந்து ஒளவை மூதாட்டியாரை அவனிடம் தூது போக்கினன்.

ஔவையாரும் தொண்டைமானுழைத் தூது போயினர். தொண்டைமான் ஔவையாரது புலமையை நன்கு உணர்ந்தவன் ஆதலின், அவ்வம்மையாரை நன் முறையில் வரவேற்று உபசரித்தனன். அடுத்த நாள் தன்படைவலி இத்தகையது என்பதைக் காட்ட எண்ணி, அவனுடைய படைக் கொட்டிலிற்கு அழைத்துச் சென்று காட்டினன். அங்குப் படைகள் யாவும் நன்கு நெய்பூசப்பெற்றுக் கைப்பிடிகள் செவ்வனே செய்யப்பட்டு மாலை அணியப்பட்டு ஒழுங்காக வைக்கப்பட்டிருந்தன. அவற்றைக் கண்ட ஔவையார் “தொண்டைமான் தன் படைப்பெருக்கைக் காட்டவே நம்மை இக்கொடிடிற்கு அழைத்து வந்து காட்டுகின்றனன். இவனுக்கு நன்முறையில் அறிவு புகட்ட வேண்டும்” என்னும் எண்ணமுடையவராய், தொண்டையர் காவல! உன் படைகள் யாவும் போர்முகத்தைக் காணாதனவாய் நல்ல முறையில், செய்தவை செய்தனபோலவே, இக்கொட்டிலில் அலங்காரத்துடன் இருக்கின்றன. ஆனால், அதிகமானிடம் இருக்கும் ஆயுதங்கள் போரில் முனைந்து நின்று பொருந்தாதாருடைய உடலில் பாய்ந்து, கூர் மழுங்கிக் காம்பு தளர்ந்து ஆணிகள் அகன்று உள்ளன. அவை மீண்டும் செம்மையுறும் வண்ணம் கொல்லனுடைய உலைக்களத்தில் சென்றுள்ளன” என்று கூறி அதிகமான் போர்ச்சிறப்பைக் கூறாதது போலக் கூறிக் காட்டினர். இதனால், தொண்டைமானைப் போர் முகம் காணாதவன் என்பதைப் புகழ்வது போல இகழ்ந்து, அதிகமானை இகழ்வது போலப் புகழ்ந்து பேசினார். இப்படிப் பேசித் தொண்டைமான் செருக்கையும் அடக்கினர்.


அதிகமானின் இறுதிக் காலம்

முடிசார்ந்த மன்னரும் மற்றும் உள்ளோரும் முடிவில் ஒரு பிடி சாம்பராய் வெந்து மண்ணாவது திண்ணமல்லவா ? அதிகமானின் வாழ்நாள் குறுகி விட்டது. மலையமான் திருமுடிக்காரியும் ஒரு சிறந்த மானி. அவனுக்கோ தன் தகடூரை அதிகமான் கைப்பற்றியது குறித்து வருத்தமாகவே இருந்தது. எப்படியும் அவ்வூரைக் கைப்பற்றச் சமயம் நோக்கிக் கொண்டிருந்தனன். அதன் பொருட்டுச் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை என்பானைத் தனக்குத் துணைசெய்ய வேண்டினன். சேரனும் அவ்வேண்டு கோளுக்கிணங்கினான். அச்சேரனுக்குப் பகைவன் வல்வில் ஓரி. அவனை முதலில் வென்று பின்பு அதிகமானோடு போர்புரியலாம் எனச் சேரன் மலையமானுக்குக் கூறினான். அதற்குக் காரியும் இசைந்தனன். இதையறிந்து வல்வில் ஓரி அதிகமானைத் தனக்குத் துணையாகுமாறு வேண்டினான். அதிகமானும் துணைபுரிவதாக இசைய, பெரும்போர் மூண்டது. இப்போரில் அதிகமானுக்குத் தோல்வியே கிட்டியது. அதிகமான் தகடூர்புக்குப் போரிடாது ஒளிந்திருந்தனன். சேரனும், காரியும் தகடூரை முற்றுகையிட்டனர் ; அவ்வமயம் ஔவையார் அதிகமானிடம் சென்று அவன் ஒரு தனிப் பெரு வீரனாக இருந்து போர்புரியாது வாளா இருத்தலைக் கண்டு அவனை ஊக்கிப் போரிடச் செய்ய வேண்டுமென, “அஞ்சி! புலி சீரின் புல்வாய் எதிர் நிற்குமோ ? ஞாயிறு கீழ்த்திசை யெழின் இருள் எதிர்த்து நிற்குமோ ? இவை நடவா அல்லவோ? போய் நீ எதிர்த்து நிற்பாயாக! உன்னுடன் எதிர்த்து நிற்கும் பகைவரும் உளரோ?” என்று ஊக்கப்படுத்தினர். அதிகமான் அந்த மொழிகளைக் கேட்டதும் மிகுந்த வீரத்துடன் போர்புரிந்தனன். அப்போரில் அவன் முகத்திலும் மார்பிலும் கழுத்திலும் பட்ட புண்கள் அனந்தம். இவனால் வெட்டுண்டவரும் பலர். இறுதியில் சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை விட்ட அம்பு அதிகமானது நெஞ்சைப் பிளக்க, அதிகமான் அமரர் உலகம் புக்கனன்.

அதிகமானின் பிரிவும் புலவர்கள் ஆற்றாமையும்

அதிகமான் இறந்தனன். இவனது இறப்பு புலவர்களின் உள்ளத்தை உருக்கியது. அதிலும் ஔவையார் உற்ற துயருக்கு அளவே இல்லை. ஏனெனில், ஒளவையாரை அதிகமான் அதிகமாக நேசித்தவன்; ஔவையார் தன்னிடம் வந்து தங்கிய காலத்தில், அவ்வம்மையாரை எளிதில் பிரிய மனமற்றவனாய்ப் பரிசில் ஈந்தால் உடனே சென்று விடுவர் என்ற எண்ணத்தனாய்ப் பரிசில் கொடாது நீட்டித்தனன். இவனுடன் அப்பொழுதுதான் ஒளவையார் பழகுகின்றனர் ஆதலின், அவன் உள்ளக்கிடக்கையை உணராதவராய், “தம்மைச் சிறிதும் மதியாது பரிசில் தந்து பெருமைப் படுத்தா தொழிந்தனன்,” என்று, அதிகமானின் வாயில் காவலனை நோக்கி, “என்போன்ற பரிசில்மாக்கட்குத் தடை கூறாது வழிகாட்டும் வாயிலோயே! நின் தலைவன் நெடுமான் அஞ்சி என் தரம் அறிந்திலனோ? பரிசில் ஈய ஏன் தடைப்படுத்தினன் ? இதோ யான் புறப்படுகின்றனன். என் போன்றவர்க்கு எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறு, இதனை நின் தலைவனுக்கு அறிவிக்க,” என்ற காலத்து அவ்வாயிலோனும் தன் தலைவனுக்கு ஔவையார் கூற்றினை அறிவித்தமாத்திரத்து ஔவையார் அவா அடங்க உதவினன். அவ்வுதவி பெற்ற ஔவையார் அப்பொழுது பாடிய பாடல் அரிய கருத்துடைய பாடலாகும். ஔவையார் தம் நெஞ்சினை நோக்கி, “நெஞ்சகமே! நீ தவறாக அதிகமானை எண்ணிவிட்டனை. அதிகமான் முதல் நாள் சென்று காணும்போது எவ்வளவு அன்புடன் ஏற்று உபசரிப்பனோ அதுபோலவே பல நாள் தொடர்ந்து செல்லினும் முதல் நாள் போன்றே முகமலர்ச்சியுடன் வரவேற்கும் இயல்பினன். தனித்து யான் சென்றபோது மட்டுமே இங்ஙனம் நன்முகன் காட்டி நல்வரவேற்பு அளிப்பன் என எண்ணாதே. யான் பலரோடு சென்றாலும், அவர்களுக்கும் என்னிடம் காட்டும் அன்பினையே காட்டி அகமகிழ்ந்து உபசரிப்பவன். அதிகமான் பரிசில் ஈந்திலன் என அவனைச் சிறிது முன்பு பழித்துப் பேசிவிட்டனை. அவன் பரிசில் கொடுக்க நாட்களை நீட்டித்தனன். என்றாலும், பரிசில் கொடாது ஒரு போதும் இரான். யானையின் கோட்டிடை வைத்த கவளம் எங்ஙனம் தவறாது அதன் வாயில் செல்லுதல் உறுதியோ, அதுபோல அஞ்சியை அடைந்த நாம் அவனால் உதவி பெறுதல் திண்ணம். இஃது உண்மை. வெறும் புகழ்ச்சி அன்று. ஆகவே, அவன் தாள் வாழ்வதாக” என்று இவனது கொடுக்கும் முறையை இத்துணைப் பெருமைபடப் பேசியுள்ளார்.

"அதிகமான் பரிசில் பெறூஉங் காலம்
நீட்டினும் நீட்டா தாயினும் யானை தன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் ததுவது பொய்யா காதே”

என்பது இவ்வம்மையார் பாட்டு.

இப்படி ஈந்த அஞ்சி இறந்தனன் என்றால், எவர்தாம் ஏக்கம் கொள்ளார் ! அதிகமான் அருஞ் செயல்களை எண்ணி எண்ணி இறங்கினார் ஔவையார். “அதிகமான் தான் பருகப்போகும் மது சிறிய அளவினையுடைய தானாலும், ஒளவைக்கு ஈந்தே பருகுவன். மிகுதியும் பெற்ற காலத்திலும் அதனையும் ஈந்து மகிழ்வுடன் அருந்துவன், தான் தனித்து உண்ணாது விருந்தோடு உண்ணும் குணத்தினன். உணவு சிறிதாக உள்ள காலத்திலும் அவனுடன் பலர் இருந்து உண்பர். மிகுதியாக இருந்த காலத்திலும் பலர் அவனுடன் இருந்து அருந்துவர். அதிகமானும் ஔவையாரும் இணைந்து செல்லுங்காலத்துச் செல்லாறுதோறும் முன்னர் ஒளவையார்க்கு உணவுகொடுத்து உளமகிழ்ந்து செல்வன். போர்க்களத்தில் வேல் நுழையும் இடங்களில் தான் முன்னர் நிற்பன். ஒளவையாரிடத்தில் வைத்த அன்பின் காரணமாக அவ்வம்மையார் தலை, எண்ணெய் காணாது நீவுதல் உறாது, புலால் நாற்றம் வீசும் தன்மையுடையதாகக் காணப்பட்டாலும், அதனைத் தன் தூய, இனிய, மணம் நிறைந்த கையால் தடவிக்கொடுப்பன். இவையெல்லாம் போயினவே,” என்று வருந்தினர். “அதிகமான் நெடுமான் அஞ்சியின் மார்பகத்தில் தைத்த அம்பு, இவன் மார்பகம் மட்டும் ஊடுருவிச் சென்றிலது. இரப்பவர் கையைத் துளைத்தது. இரவலர் கண்களில் நீர் உகச் செய்தது. புலவர் செந்நாவிலும் தைத்து அவர்களைப் பாடாதவாறு செய்தது,” என்று ஏங்கி இரங்கினர். ஐயோ “அதிகமான் எங்கு, இருக்கின்றனனே ? என அரற்றினர். “அதிகமான் இறந்தான். இனிப் பாடுவாரும் இல்லை; பாடுவார்க்கு ஈவாரும் இல்லை. உலகில் பலர் செல்வம் படைத்தும் உயிருடன் வாழ்கின்றனர். அவர்கள் வாழ்வு பகன்றை மலர் மலர்ந்தும், அதனைச் சூடுவார் அற்றுக்கிடப்பது போன்றது. அஃதாவது அவர்கள் எழை எளியர்கட்கு உதவாமையால் புலவர்களால் பாடும் பேறு பெறாதவர் ஆவர்,” எனப் பாடி வருந்தினர்.

எவ்வளவு வருந்தி யாது பயன்! இறந்தவன் இறந்தவனே. விட்டுவிடப் போகு துயிர். விட்ட உடனே உடலைச் சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார். அவ்வாறே அதிகமானை ஈமத்தில் ஏற்றி எரி மூட்டினர். அப்படி எரித்த காலத்தில் இவன் உடல் அழிந்தது. புகை வானத்தைச் சூழ்ந்தது.

இதைக் கண்ணுற்ற ஒளவையார், “அதிகமான் பொய்யுடல் மாய்ந்தது. என்றாலும், புகழ் உடல் என்றும் மாயாது” என்னும் பொருளில், “திங்கள் அன்ன வெண்குடை ஒண்ஞாயிறு அன்னோன் புகழ் மாயலவே” என்று பாடினர். அதிகமான் பீடு பல எழுதி, நடுகல் அமைத்துப் பராவத் தொடங்கினர். அச்சிலை முன்னர்ப் படையல் போட்டுப் பண்டம் பல வைத்தனர். அவற்றைக் கண்டனர் ஒளவையார். “ஐயோ இவனையின்றி யான் தனித்து வாழும் நாள் இல்லாமல் போவதாக. அதிகமான் நாடு கொடுப்பினும் கொள்ளா இயல்பினன். அத்தகையோன் இப்பொழுது படையல் மூலம் கொடுக்கப்படும் பொருள்களை ஏற்பனோ? ஏற்கான்,” எனவும் பாடி வருந்தினர்.

ஒளவையார் அதிகமானின் பிரிவுக்கு ஆற்றாது அரற்றியதுபோல, அரிசில்கிழாரும் வருந்திப் பாடியுள்ளார். அவர் காலனை நோக்கிக் கடிந்து கூறுகின்றனர். “ஏ கூற்றுவனே! எங்கள் அதிகமானை அழித்தனையே! அவன் ஏழை பங்காளன் அல்லனோ? அவனுடைய பிரிவு எப்போதும் பரிசில்மாக்களுக்கும் இரவலர்களுக்கும் தாயைப் பிரிந்த சேய்கள்போல அன்றோ அமைந்தது. நீ அறக்கடவுள் என்று பெயரைப் பெற்றது இலக்கணத்தில் அமங்கலச் சொற்கள் எல்லாம் மங்கலம் என்று குறிப்பிடப்படுவது போன்றது. வாழ்நாள் முழுமைக்கும் உதவவல்ல வித்தினையே குற்றியுண்ணும் மதியிழந்த உழவன் போலப் பலர்க்கும் பயன்படும் அதிகமானைக் கொன்றனையே. இது முறையோ ? இவன் இறப்பு எங்கட்கு மட்டும் துயர் அளித்தது என்று எண்ணாதே. உனக்கும் இவனது பிரிவு துயரம் தருவதன்றோ ? இவன் ஒருவன் உயிருடன் இருப்பின், இவனது பகைவர்கள் எல்லோரையும் இவன் கொல்ல , நீ உண்டு மகிழலாம் அன்றோ ? அது போய் நீ என் செய்வாய் ?” என்று அதிகமானுடைய போர் வன்மையையும் கார் அன்ன வழங்கும் கைவண்மையையும் ஒருங்கே புகழ்ந்தார்.

அதிகமான் இறந்ததனால் பொய்மை புகலாப் புலவர் நெஞ்சங்கள் துடித்தன; வாடி வருந்தின. ஆயினும், என்? அதிகமான் நெடுமான் அஞ்சி, துஞ்சிப் போயினன். என்றாலும், இவனுடைய பரு உடல் அழிந்துபோவதே அன்றி, இவனது நுண்ணுடலான புகழுடல் போயதோ ? இன்று. அது குன்றின் மேல் இட்ட குலதீபம்போல் அணையாது விளங்கிக் கொண்டிருக்கிறது. உடல் எடுத்தாலும் இவ்வாறன்றோ எடுத்தல் வேண்டும்.