உள்ளடக்கத்துக்குச் செல்

கோவூர் கிழார்/கவிச் செல்வம்

விக்கிமூலம் இலிருந்து

8
கவிச் செல்வம்

சோழ மன்னன் நலங்கிள்ளி பகைவர் யாரும் இன்றி அமைதியாக நாட்டை ஆண்டு வந்தான். அவனுடைய அவைக்களப் பெரும் புலவராகக் கோவூர் கிழார் வீற்றிருந்தார். பாணரும், பொருநரும், கூத்தரும், புலவரும் வந்து தங்கள் கலைத் திறமையைக் காட்டிப் பரிசில் பெற்றுச் சென்றனர்.

கோவூர் கிழார் பல பாக்களைப் பாடினார். அவருடைய கவிதையைக் கேட்டுச் சோழன் இன்புற்றான். ஒரு பாணனை நோக்கி மற்றொரு பாணன் பாடியதாக ஒரு பாட்டு இருக்கிறது. யாரேனும் மன்னரிடத்திலோ செல்வரிடத்திலோ பரிசு பெற்ற பாணன் ஒருவன் வழியிலே சந்தித்த மற்றொரு பாணனைக் கண்டு, “நீயும் அவனிடம் போனால் பரிசில்களைப் பெறுவாய்” என்று சொல்லி, அந்த வள்ளல் இருக்கும் இடத்திற்குப் போகும் வழி இது என்று கூறுவதாகப் பாடுவது ஒரு வகைப் பாட்டு. இத்தகைய பாடலைப் பாணாற்றுப் படை என்று சொல்வார்கள். கோவூர் கிழார் பாடியதும் பாணாற்றுப் படையாக அமைந்ததே. பாணனுடைய வறிய நிலையையும், அவன் தன்னுடைய கலையின் அருமையை அறிந்து பாராட்டுவாரைத் தேடி அலைவதையும் அதில் கூறியிருக்கிறார்.

“சுற்றத்தாரின் கடுமையான பசியைத் தீர்ப்பவரைக் காணாமல் அலைகிற பாணனே! இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்? உன் கலையை உணர்ந்து இன்புற்றுப் பரிசில்களை வழங்கும் வள்ளல் ஒருவன் இருக்கிறான். அவனிடம் செல். சோழ நாட்டில் உறையூரில் அந்த வள்ளலாகிய நலங்கிள்ளி இருக்கிறான். நீ அவனிடம் செல்வாயானால் இனியும் வேறு ஒருவருடைய வாசலை மிதிக்க வேண்டாதபடி உனக்கு நிறையப் பரிசில்களை வழங்குவான். பிறர் வாசலை நீ அடியோடு மறந்தே போய் விடுவாய்” என்ற பொருளையுடையது அந்தப் பாடல்.

பொருநன் ஒருவன் பாடியதாக ஒரு பாட்டைப் பாடினார். அதில் அந்தப் பொருநன், சோழநாட்டில் உள்ள பெருவீரனும், அசைகின்ற பிடரி மயிரை அணிந்த குதிரையையுடையவனுமாகிய நலங்கிள்ளி விரும்பிப் பாதுகாக்கும் பொருநர் நாங்கள். நாங்கள் வேறு யாரையும் பாடிப் பரிசில் பெற விரும்பமாட்டோம். அவனையே பாடுவோம். அவன் முயற்சிகள் வாழட்டும்” என்று கூறுவதாகச் சொல்லியிருக்கிறார்.

மற்றொரு பாட்டில் ஒரு பொருநன், நலங்கிள்ளி தன் வறுமையை நீக்கியதைச் சொல்லிப் புகழ்வதாகப் பாடியிருக்கிறார். ‘உலகத்திலுள்ள யாவரும் தூங்கவும் தான்மட்டும் தூங்காமல் மக்களுக்கு நன்மை செய்யும் வகைகளை எண்ணி உலகத்தைக் காக்கும் தன்மையுடையவன் நலங்கிள்ளி’ என்று அந்தப் பொருநன் சொல்கிறான்.

பலர் துஞ்சவும் தான் துஞ்சான்
உலகம் காக்கும்.

‘அவன் தனக்குப் பகையாக இருந்த வேந்தர்தளையும் பிறரையும் அழித்துப் போக்கவல்லவன். அது பெரிதன்று. அதோடு, தன்னை வந்து அண்டிய எங்களைப் போன்றவர்களுக்குத் தீராப் பகையாக வாய்த்திருக்கும் பசிப் பகையையும் ஒழிக்கும் வன்மையை உடையவன்’ என்று பாராட்டுகிறான்.

தன் பகை கடிதல் அன்றியும் சேர்ந்தோர்
பசிப்பகை கடிதலும் வல்லன் மாதோ!

நலங்கிள்ளியைப் புகழும் இந்தப் பாட்டுப் புறநானூறு என்ற நூலின் இறுதிப் பாடலாக அமைந்திருக்கிறது. அந்த நூலைப் படித்து முடிக்கின்றவர்கள் கோவூர் கிழாரையும் நலங்கிள்ளியையும் நினைத்துக்கொண்டே புத்தகத்தை மூடுவார்கள்; நானூறு பாடல்களையுடைய அத்தொகை நூலின் இறுதியில் இந்தப் பாட்டைப் பிற்காலத்தில் நூலைத் தொகுத்தவர்கள் வைத்துக் கோத்திருக்கிறார்கள்.

சோழன் நலங்கிள்ளியின் அவைக்களத்துக்கு அணியாகக் கோவூர் கிழார் விளங்கியமையால் அந்த மன்னனுடைய புகழ் எங்கும் பரவியது. பல புலவர்கள் அடிக்கடி வந்து அவனைப் பாடினார்கள். கோவூர் கிழார் வழங்கிய கவிச் செல்வத்தைத் தமிழ் நாடு பெற்றது.