கெடிலக் கரை நாகரிகம்/கெடிலத்தின் தோற்றம்
தமிழ் நாட்டின் மாவட்டங்களுள் (Districts) ஒன்றாகிய தென்னார்க்காடு மாவட்டம் தன்னுள் எட்டு வட்டங்களைக் (Taluks) கொண்டது. அவை: செஞ்சி வட்டம், திண்டிவனம் வட்டம், விழுப்புரம் வட்டம், கடலூர் வட்டம், திருக்கோவலூர் வட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், விருத்தாசலம் வட்டம், சிதம்பரம் வட்டம் என்பன. தென்னார்க்காடு மாவட்டம், வங்காளக்குடாக் கடலையடுத்து, செங்கற்பட்டு மாவட்டத்திற்கும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கும் இடையில் உள்ளது. இம் மாவட்டத்தின் வடபகுதியாகச் செஞ்சி, திண்டிவனம், விழுப்புரம் ஆகிய வட்டங்களும், தென் பகுதியாக விருத்தாசலம், சிதம்பரம் ஆகிய வட்டங்களும் உள்ளன. இவற்றிற்கு இடையே மேற்கும் கிழக்குமாகக் கள்ளக்குறிச்சி, திருக்கோவலூர், கடலூர் ஆகிய வட்டங்கள் முறையே உள்ளன. இம்மூன்றனுள், மேற்கே உள்ள கள்ளக்குறிச்சிக்கும் கிழக்கே உள்ள கடலூருக்கும் நடுவே திருக்கோவலூர் வட்டம் உள்ளது. மொத்தத்தில், தென்னார்க்காடு மாவட்டத்தின் ‘நட்ட நடுவே’ திருக்கோவலூர் வட்டம் உள்ளதெனக் கூறலாம் (படம் பார்க்கவும்). இந்த அடிப்படையை நினைவில் வைத்துக் கொண்டு கெடிலம் ஆற்றுக்கு வருவோம்.
மையனூர்
கெடிலம், கள்ளக்குறிச்சி வட்டத்தில் மையனூர் என்னும் ஊருக்கு அருகில் தோன்றுகிறது. இந்த மையனூர், கள்ளக்குறிச்சிக்கு வடகிழக்கே 16 கி.மீ. தொலைவிலும், தியாக துருக்கத்திற்கு வடமேற்கே 16 கி.மீ. தொலைவிலும், ரிஷிவந்தியத்துக்கு வடமேற்கே 12 கி.மீ. தொலைவிலும், சங்கராபுரத்திற்குக் கிழக்கே 10 கி.மீ. தொலைவிலும், திருக்கோவலூருக்குத் தென்மேற்கே 20 கி.மீ. தொலைவிலும் உள்ளது. மையனூருக்குச் சாலை வசதியின்மையால், இங்கே குறிப்பிடப்பட்டுள்ள தொலைவு அளவு ஒரு தோற்றமாக தோராயமாகக் கணிக்கப்பட்டதேயாகும்.
ஓரளவு தெளிவான பாதை வழியாக மையனூரை அடையவேண்டுமெனில், திருக்கோவலூர் - சங்கராபுரம் மாவட்ட நெடும்பாதையில் போகும் பேருந்து வண்டியில் சென்று இடையேயுள்ள அரியலூர் என்னும் ஊரில் இறங்க வேண்டும். அரியலூருக்குத் தெற்கே ஒரு தோற்றம் ஐந்து அல்லது ஆறு கி.மீ. தொலைவில் மையனூர் இருக்கிறது. அரியலூரிலிருந்து மையனூருக்குச் செல்ல நல்ல சாலையின்மையால் பேருந்து வண்டி (பஸ்) வசதி கிடையாது. ஜீப் வண்டி செல்வதற்கும் வசதி போதாதென்றே சொல்ல வேண்டும். எனவே, கால்நடையாகவோ - கட்டை வண்டியின் துணைகொண்டோதான் மையனுரை அடையவேண்டும். மிதி (சைக்கிள்) வண்டியில் வேண்டுமானால் மிதித்து மிதித்துச் சென்று பார்க்கலாம். கட்டை வண்டியிலோ மிதி வண்டியிலோ மையனூர் வரையுந்தான் போகமுடியும். ஊரையடைந்த பின்னர், கெடிலம் தோன்றும் இடத்தைக் கண்டு பிடித்து வணங்க வேண்டுமென்றால் கால்கள் தெம்பாயிருக்க வேண்டும். வயலிலும் வரப்பிலும் கல்லிலும் முள்ளிலும் - பாறையிலும் புதரிலுமாக மூன்று நான்கு கி.மீ. தொலைவு சுற்றினால்தான் கெடிலத்தின் தோற்றத்தைக் காணமுடியும்.
மையனூர் மலை
மையனூருக்கு அண்மையில் தென்புறத்தில் ஒரு மலை உள்ளது. அது எந்த மலைத்தொடர்ச்சியையும் சேர்ந்ததன்று; தனி மலையே. மையனூர் மலை’ என்பது பெயர். ஒரு தோற்றம் 250 அடி உயரம் இருக்கலாம். அம் மலையைப் பின்வரும் படத்தில் காணலாம்:
இது, மலைக்குக் கிழக்கே நின்று எடுத்த படமாகும். இம் மலையைச் சுற்றி வடக்கும் தெற்கும் x கிழக்கும் மேற்குமாகப் பப்பத்து (10 x 10) கி.மீ. தொலைவு பரப்பளவுக்கு காடும் மலையும்
கருடன் பாறை
மையனூர் மலையின் அடிவாரத்தில் - கிழக்குப்புறத்தில் தனித்த பாறை ஒன்று உள்ளது. அது 15 அல்லது 20 அடி உயரம் இருக்கலாம். அப் பாறையின் பெயர் கருடன் பாறை’ என்பது. அப் பாறை கருடன் அலகுபோல் இருப்பதாகவும், அப் பாறையில் கருடன் அலகால் கீறிச் சுனை உண்டாக்கியதாகவும் அவ் வட்டாரத்து மக்களால் கூறப்பட்டு ஒருவகைப் பெயர்க்காரணம் கற்பிக்கப்பட்டுள்ளது. அந்தக் கருடன் பாறையை இப் படத்தில் காணலாம்.
சுனை
இந்தப் படமும் பாறையின் கிழக்குப்புறத்தில் இருந்து கொண்டு எடுத்ததுதான். பாறையில் நின்று கொண்டிருப்பவரின் வலக் காலடிக்கு அண்மையில் பாறையின் கீழ்பால் தரையை ஒட்டிக் கறுப்பாக மொத்தையாகப் படத்தில் ஒரு ப்குதி தெரிகிறதே. அங்கே ஒரு சுனை உள்ளது. சுனையைச் சுற்றிச் செடி - கொடி புதர் அடர்ந்து சூழ்ந்திருப்பதால் சுனை தனியாகத் தெளிவாகத் தெரியவில்லை. எனவே, சுனையை மட்டும் தனித்துப் பிரித்து ஒரு படம் எடுக்க வேண்டியதாயிற்று. சுனையின் தோற்றத்தைப் பின்வரும் படத்தில் காணலாம்.
கருடன் பாறையின் கீழ்பால் உள்ள சுனை
இந்தப் படமும் சுனையின் கிழக்கே இருந்தபடி எடுத்தாகும். சுனை கருடன் பாறையின் கீழ்பால் இருக்கிறது. இந்தச் சுனை மிகவும் சிறியது ஏறக்குறைய 4 அடி நீளமும் 2 அடி அகலமும் 3 அடி ஆழமும் கொண்டது; தென்புறத்திலிருந்து வடபுறம் வரவரக் குறுகிக் குவிந்துள்ளது. சுனைநீர் முழுவதும் தெரியாதபடி மேலே செடி கொடி - புதர் குவிந்து கொண்டிருப்பதைப் படத்தில் காணலாம். வறட்சி மிக்க நாளிலும் சுனையில் நீர் இருந்து கொண்டேயிருக்கும் என அங்குள்ளவர் கூறுகின்றனர். மழை நாளில் சுனையிலிருந்து ஊற்றுப்பெருக்கு வெளியேறிக் கொண்டிருக்குமாம். இந்தச் சுனைப் படம், கோடை நாளாகிய சித்திரைத் திங்களில் எடுத்தது.
இதில் நீர் வெளியேற்றம் தெரியவில்லை. மழை நாளில் நீர் வெளியேற்றம் தெரிந்து கோடை நாளில் தெரியாவிடினும், எந்த நாளிலுமே சுனையிலிருந்து தண்ணீர் தரைக்குக் கீழே உள் ஊற்றாகச் சரிவை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தச் சுனைதான் கெடிலத்தின் தோற்றம் (மூலம்) ஆகும். சுனையிருக்கும் பகுதி தெய்வத் தன்மை உடையதாகப் போற்றி மதிக்கப்படுகிறது. கருடன் அலகால் கீறி உண்டாக்கிய சுனை என்று சொல்லப்படுவதிலும் ஏதோ தெய்வக் கற்பனை அடங்கியிருப்பதாகத் தெரிகிறது.
மையனூர் ஏரி
கோடை நாளில் உள் ஊற்று வழியாகவும் மழை நாளில் உள் ஊற்று மேல் ஊற்று இரண்டன் வழியாகவும் சுனையிலிருந்து தண்ணிர் வடக்குச் சரிவை நோக்கி ஓடி, அப் பகுதிக்கு வடக்கே ஒரு கி.மீ. தொலைவிலுள்ள ஓர் ஏரியில் கலக்கிறது. அந்த ஏரியிலிருந்து வாய்க்கால் வடிவத்தில் பிரிந்து செல்லும் நீரோட்டமே கெடிலம் ஆறு ஆகும்.
கெடிலத்தின் தோற்றமாகிய இவ்வேரி ‘மையனூர் ஏரி’ என ஊர்ப் பெயராலேயே அழைக்கப்படுகிறது. ஏரி மையனூர் மலையின் வடபால் உள்ளது; கிழக்கு மேற்காக ஒன்றரை கி.மீ. நீளம் இருக்கும். ஏரி நிரம்பி வழியும் கோடி கிழக்கேதான் உள்ளது. அந்தக் கிழக்குக் கோடிதான் ஆற்றின் இரண்டாவது பிறப்பிடம். இங்கிருந்து சித்திரைக் கோடையிலும் சிறு ஊறல் நீர் சுரந்து சென்று கொண்டேயிருக்கிறது. இதனால்தான் கெடிலம் ஓர் ‘உயிர் ஆறு’ (சீவநதி) என்று சொல்லப்படுகிறது.
இரு பிறப்பு
பூணூல் அணிந்து கொண்டிருக்கும் அந்தணர்களை ‘இரு பிறப்பாளர்’ என்று சொல்வது மரபு. அவர்கள் அன்னை வயிற்றிலிருந்து பிறந்தது ஒரு பிறப்பாம்; பின்னர்ச் சில்லாண்டுகள் கழித்துப் பூணுால் போட்டுக் கொள்வது மற்றொரு பிறப்பாம். அவர்கள் பூணுால் அணிந்த பின்னரே அந்தணர் என்னும் தகுதி பெறுகின்றனராம். அவர்களைப் போலவே கெடிலத்தையும் ‘இரு பிறப்பாறு’ என்று சொல்லலாம். அதன் முதல் பிறப்பு: கருடன் பாறையின் கீழ்பாலுள்ள சுனை, இரண்டாவது பிறப்பு: மையனூர் ஏரியின் கிழக்குக் கோடி. இவ்வகையில் கெடிலம் இருபிறப்பு உடையதாகிறது. இவ்வுண்மையறியாதார் சிலர் கெடிலத்தின் பிறப்பிடம் மையனுர் ஏரி என்றே சொல்லி முடிவு கட்டிவிடுகின்றனர்’ சிறு வகுப்புப் பாடநூல்கள் சிலவற்றில், ‘கெடிலம் கள்ளக் குறிச்சி வட்டத்தில் ஒர் ஏரியிலிருந்து தோன்றுகிறது’ என்றே எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். இதிலும் உண்மையிருக்கிறதல்லவா?
‘நதி மூலமும் ரிஷி மூலமும்’
கெடிலத்தின் பிறப்பிடம் மையனூர் ஏரி என்று சொல்பவர்கள், ஏரியுடன் நின்று விடாமல், அந்த ஏரிக்கு எங்கிருந்து தண்ணிர் வருகிறது என்பதையும் ஆராய வேண்டும். அண்மையில் சுனையுடன் கூடிய கருடன் பாறையை அடிவாரத்திலே பெற்றுள்ள மையனூர் மலைப்பகுதியில் ஊறும் நீர் இறங்கி வருவதால் உருவானதே மையனூர் ஏரி. அந்த ஏரி மழையை மட்டும் நம்பியதாயிருந்திருந்தால் அந்த ஏரியிலிருந்து கோடைக் காலத்திலும் நீர் ஊறி ஆறாக ஓடமுடியாது. எனவே, கெடிலத்தின் முதலிடம் (மூலம்) மையனூர் ஏரியன்று, மையனூர் மலைப் பாறைச் சுனைப் பகுதியே. நதிமூலமும் ரிஷிமூலமும் அறிய முடியாது’ என்னும் முதுமொழி ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது.
கெடிலமும் வையையும்
கெடிலமும் வையையும் ஒரே நாட்டில் தோன்றி ஒரே நாட்டில் முடிவதில் ஒற்றுமை உடையவை; அதாவது, கெடிலம் திருமுனைப்பாடி நாட்டில் தோன்றித் திருமுனைப்பாடி நாட்டிலேயே கடலில் கலக்கிறது; வையை பாண்டிய நாட்டிலே தோன்றிப் பாண்டிய நாட்டிலேயே கடலில் கலக்கிறது. இஃதன்றி, இவ்விரண்டிற்கும் வேற்றுமையில் ஒற்றுமையும் உண்டு; அதாவது, கெடிலம் மையனூர் மலையடிவாரத்தில் தோன்றி மையனூர் ஏரியில் புகுந்து அவ்வேரியிலிருந்து ஆறாய் உருவெடுத்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் மேற்குமலைத் தொடர்ச்சியில் ஏலக்காய் மலை சார்ந்த ‘வருடநாடு’ பள்ளத்தாக்கில் தோன்றும் வையையாறு, இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரத்திற்குத் தென்கிழக்கே 18 கி.மீ. தொலைவிலுள்ள ‘பெரிய கண்மாய்’ என்னும் ஏரியில் போய் விழுந்து, பின்னர் அவ்வேரியிலிருந்து சென்று ‘பாக்’ கடற்காலில் (பாக் சலசந்தி) கலக்கிறது. கெடிலத்தின் தோற்றமும் வையையின் முடிவும் ஒற்றுமையாயிருக்கின்றன. அதாவது, கெடிலம் ஒர் ஏரியிலிருந்து தோன்றுவது போலவும், வையை ஒர் ஏரியில் முடிவது போலவும் தெரிகிறது. கெடிலத்தின் பிறப்பிடம் மையனூர் ஏரிதான் என்று சொல்வது போலவே, வையையின் முடிவிடம் பெரிய கண்மாய் ஏரிதான் என்று சொல்வதுண்டு மையனூர் மலைப்பகுதிக்கும் மையனூர் ஏரிக்கும் இடையேயும், பெரிய கண்மாய் ஏரிக்கும் பாக் கடற்காலுக்கும் இடையேயும் மழைக்காலத்தில் மட்டும் நீர்த்தொடர்பைக் காணமுடியுமாதலின் இவ்வாறு சொல்லப்படுகிறது. இவ்வாறாக, கெடிலம் பிறப்பிடத்தில் இல்லாவிடினும் முடிவிடத்திலாவது ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற ஒருவகை முறையில் வையையை ஒத்திருப்பதையறியலாம்.