கெடிலக் கரை நாகரிகம்/கெடில நாட்டு வளங்கள்
கெடிலக்கரை நாடு மிகமிக உயர்ந்த வளங்களை உடைய நாடு என்று சொல்ல முடியாவிடினும், வளம் அற்ற நாடு என்றும் சொல்ல முடியாது; கூடியவரையும் சராசரி வளமுள்ள நாடு என்று சொல்லலாம். மிகுந்த அளவில் இல்லாவிடினும், ஒரளவாயினும் மலை (குறிஞ்சி) வளம், காட்டு (முல்லை) வளம், வயல் (மருதம்) வளம், கடல் (நெய்தல்) வளம் என்னும் நானில வளமும் உடையது கெடில நாடு.
கல்வராயன் மலை
பொதுவாகத் தென்னார்க்காடு மாவட்டத்தில் - சிறப்பாகக் கெடிலம் ஓடும் மூன்று வட்டங்களுள் கள்ளக் குறிச்சி வட்டமே கூடுதலான மலைவளமும் காட்டுவளமும் உடையது. இங்குள்ள கல்வராயன் மலைத்தொடர் வளமுடையதாகும். இம்மலையில் தேக்கு மரங்கள், சந்தன மரங்கள், கடுக்காய் மரங்கள், மூங்கிற் காடுகள், முந்திரிக் காடுகள் முதலியவை உள்ளன. இங்கே ஏலம், இலவங்கம், காப்பி முதலியனவும் பயிரிடலாம். இன்னும் பல்வேறு காய்கறி கனிவகைகள் பயிரிடவும் ஏற்ற சூழ்நிலையுடையது இம்மலை. இம்மலையேயன்றி, இவ்வட்டத்தில் ஆங்காங்கே தனித்தனிக் குன்றுகளும் காட்டுப் பகுதிகளும் உள்ளன. கெடிலம் ஆறு தோன்றும் மையனூர் மலைக் காட்டில் பல்லாண்டுகட்குமுன் அகில், சந்தனம், தேக்கு, பாதிரி கொன்றை முதலிய மரவகைகள் நிறைந்திருந்தாக அந்த வட்டாரத்திலுள்ள பெரியவர்கள் தெரிவிக்கின்றனர். இப்போது உயர்வகை மரங்கள் அழிந்தும் - அழிக்கப்பட்டும் மறைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. கெடில ஆற்றின் வெள்ளத்தில் பலவகை உயர் மரங்களும் மணிகளும் காட்டு விலங்குகளும் அடித்துக் கொண்டுவரப் பட்டனவாகக் கெடிலக்கரை இலக்கியங்களில் பாடப்பட்டிருப்பதை உண்மையென்றே நம்பலாம்; ஏனெனில், கெடிலம் ஓரளவு மலைவளமும் காட்டு வளமும் உடைய கள்ளக்குறிச்சி வட்டத்திலிருந்து தோன்றி வருகிறதல்லவா?
முள்ளூர் மலைக்காடு
அடுத்துத் திருக்கோவலூர் வட்டத்திலும் சிறுசிறு மலைக் குன்றுகளும் சிறு சிறு காட்டுப் பகுதிகளும் உள்ளன.
தென்னார்க்காடு மாவட்டத்தில் கள்ளக்குறிச்சிக்கு அடுத்தபடியாகக் காட்டுவளம் உடையது திருக்கோவலூர் வட்டந்தான். மலையமான் மரபு மன்னர்கட்கு உரியனவாகச் சங்க இலக்கியங்களில் பலபடப் புகழப்பட்டுள்ள முள்ளுர் மலையும், முள்ளுர்க் காடும் இப்பகுதியைச் சேர்ந்தனவே. இந்த முள்ளுர் மலை பின்வருமாறு சங்க நூல்களிற் புகழ்ந்து பாடப்பட்டுள்ளது:
"ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளுர்
பலருடன் கழித்த ஒள்வாள் மலையனது
ஒருவேற்கு ஓடி யாங்கு"
- நற்றிணை -170.
"மாயிரு முள்ளுர் மன்னன் மாவூர்ந்து"
- நற்றிணை - 291 – கபிலர்.
"முரண்கொள் துப்பின் செவ்வேல் மலையன்
முள்ளுர்க் கானம் நண்ணுற வந்து"
- குறுந்தொகை - 312 - கபிலர்.
"முள்ளுர் மன்னன் கழல்தொடிக் காரி"
- அகநானூறு - 209 - கல்லாடனார்.
"பயன்கெழு முள்ளுர் மீமிசைப் பட்ட
மாரி உறையினும் பலவே"
- புறநானூறு - 123 - கபிலர்.
"கங்குல் துயில்மடிந் தன்ன தூங்கிருள் இறும்பிற்
பறையிசை அருவி முள்ளுர்ப் பொருந"
- புறநானூறு - 126 - மாறோக்கத்து நப்பசலையார்.
"பொய்யா நாவின் கபிலன் பாடிய
மையணி நெடுவரை யாங்கண் ஒய்யெனச்
செருப்புகல் மறவல் செல்புறங் கண்ட
எள்ளறு சிறப்பின் முள்ளுர் மீமிசை
அருவழி இருந்த பெருவிறல் வளவன்
மதிமருள் வெண்குடை காட்டி அக்குடை
புதுமையின் நிறுத்த புகழ் மேம்படுந"
- புறநானூறு - 174 - மா. நப்பசலையார்.
இந்தப் பாடல்களில் முள்ளுர் மலையும் காடும் மலையமான் மன்னரும் புகழப்பட்டிருத்தலைக் காண்கிறோம். முள்ளூர் மலையை ஆரியர் முற்றுகையிட்டதாகவும் அவர்களை மலையமான் திருமுடிக்காரி முறியடித்ததாகவும் நற்றிணை கூறகிறது. பெரும்புகழுடைய முள்ளூர், மிகப் பெரிய முள்ளூர் என்னும் பொருள்களில் ‘பேரிசை முள்ளுர்’ ‘மா இரு முள்ளூர்’ என நற்றிணைப் பாடல்கள் கூறுவது காண்க. ‘முள்ளூர்க் கானம்’ என முள்ளுர்க்காட்டை கபிலரது குறுந்தொகைப் பாடல் குறிக்கிறது. முள்ளூர் மலைக்காட்டில் மழை மிகுதியாகப் பெய்வதாகக் கபிலர் புறநானூற்றுப் பாடலில் கூறியுள்ளார். இரவே தூங்குவது போன்ற இருள் செறிந்த அடர்ந்த காடும், பறையொலி போல் அருவி முழங்கியிறங்கும் மலையும் முள்ளூரில் இருப்பதாகப் புறநானூற்றில் மாறோக்கத்து நப்பசலையார் கூறியுள்ளார்; அவர் மேலும் ஒரு புறப்பாடலில், கபிலர் பாடிய குறைவற்ற பெருஞ்சிறப்புடைய பெரிய முள்ளுர் மலை எனக்குறிப்பிட்டு, அம்மலைக் காட்டில் வந்து பதுங்கியிருந்த சோழ மன்னனை மலையமான் திருக்கண்ணன் காப்பாற்றி, அச்சோழனுக்கு மீண்டும் சோழநாடு கிடைக்கும்படி செய்தான் என்று ஒரு செய்தி தெரிவித்துள்ளார். இவ்வாறு பாடல் பெற்ற பழம்பெரு வரலாற்றுப் புகழுடைய முள்ளூர் மலையையும் காட்டையும் தன்னகத்தே கொண்டது திருக்கோவலூர் வட்டம்.
இவ் வட்டத்தில் திருநாவலுர் வரையும் மலைப்பாங்கைக் காணலாம். ஆங்காங்கே தனித் தனிக் கற்களாயினும் தரைக்குமேல் தலையை நீட்டிக் கொண்டிருக்கும். தோன்றும் இடத்திலிருந்து திருநாவலூருக்கு மேற்குப் பகுதி வரையும் கெடிலம் பாறைப் பாங்கிலேயே ஒடி வருகிறது என்று சொல்லலாம்; அந்தப் பகுதியில் சில இடங்களில் ஆற்றில் மணலைக் காண்பதரிது. சில இடங்களில் ஆற்றின் கரைப் பகுதிகளில் கட்டை வண்டியும் செல்ல முடியாத அளவிற்குப் பாறைகள் படர்ந்து பரவி இருக்கும். அப்பர் பெருமான் தமது தேவாரத்தில் ‘வரைகள் வந்து இழிதரும் கெடிலம்’ எனப் பாடியிருப்பது பொருத்தமே!
கேப்பர் மலை
அடுத்துக் கடலுர் வட்டத்திற்குள் வந்தால், கருங்கல் மலைக்குன்றுகளையும் பாறைகளையும் பார்க்க முடியாது. அதற்குப் பதிலாக இங்கே கேப்பர் மலைத் தொடர்ச்சியைக் காணலாம். இம்மலை செம்மண் கலந்த செங்கல் மலையாகும். இம்மலைத் தொடர்ச்சி கூடலூருக்கு மேற்கே உள்ளது. கடல் மட்டத்திற்கு நூறடி உயரம் உடையது இது. கடலுர் வட்டத்தின் கிழக்குப் பகுதியில் சில கி.மீ. தொலைவு இம் மலையின் அடிவாரத்தை ஒட்டிக் கெடிலம் ஆறு ஓடி வருகிறது. இம் மலை சார்ந்த பகுதியில் முந்திரி நன்றாய் விளைந்து, முந்திரிப் பயறு வாயிலாக அயல் நாட்டுச் செலாவணி பெற்றுத் தருகிறது. இம்மலையிலிருந்து உடைத்து எடுக்கப்படும் செந்நிறக்கற்கள் பாதை போடப் பயன்படுகின்றன.
இம்மலை வண்டிப் பாளையத்திற்கு அருகில் இருப்பதால் வண்டிப் பாளையம் மலை எனப் பண்டு வழங்கப்பட்டது. மற்றும் இம்மலையைச் சார்ந்து உள்ள ஊர்ப்பெயர்களாலும் அவ்வவ்வூர்ப் பக்கங்களில் அழைக்கப்பட்டு வந்தது. செம்மண் மலை - செங்கல் மலை என்றும் இதனைச் சொல்லுவதுண்டு. சில இடங்களில் இதனை மலை என்று சொல்லுவதினும் ஒரு மேட்டுநிலம் (பீடபூமி) என்று சொல்லலாம். இதன்மேல் நிலக்கடலை முதலிய பயிர்வகைகள் விளைவிக்கப்படுகின்றன. பிரான்சிஸ் கேப்பர் (Francis Capper) என்னும் ஆங்கிலேயப் படைத்தலைவர் ஒருவர் 1796 ஆம் ஆண்டு கடலூருக்கு அண்மையில் இம்மலையில் ஒரு பகுதி பெற்று அதில் மாளிகையும் கட்டிக்கொண்டார்; அதிலிருந்து இம்மலை ‘கேப்பர் மலை’ என அழைக்கப்படுகிறது. இம் மாளிகை 1815இல் அரசாங்கத்துக்கு உரியதாயிற்று. இப்போது இதில் மாவட்டச் சிறைச்சாலையும் நுரையீரல், நோய்த் தடுப்பு நிலையமும் உள்ளன. சிறைச்சாலையில் சமுக்காளம் முதலிய உருப்படிகள் நெய்யப்படுகின்றன. கூடலூருக்குத் தெற்கே இம்மலையடிவாரத்தில் கேப்பர் குவாரி என்னும் பெயரில் புகைவண்டி நிலையம் ஒன்று உள்ளது. மலைக்கற்களை ஏற்றிச் செல்வதற்கு இந்நிலையம் பெரிதும் பயன்படுகிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் நடந்த ஆங்கில பிரெஞ்சுப் போரில் இந்த மலை சிறப்பிடம் பெற்றிருந்தது. இந்த மலைக்காற்றும் நீரும் மூலிகைகளும் பைத்திய நோயைப் போக்குவதாகச் சொல்லப்படுகிறது.
வயல் வளம்
மருதம் எனப்படும் வயல் வளம் கெடில நாட்டில் போதுமான அளவு உள்ளது. கெடிலம் ஓடுமிடமெல்லாம் நிலம் வளங்கொழிக்கின்றது. வழியிலுள்ள அணைகளால் வயல்கள் பெரும்பயன் பெறுகின்றன. கெடிலக் கரைப்பகுதிகளிலுள்ள நன்செய் வயல்கள் மிக்க விலைப்பெறுமானம் உடையவை. கெடிலக்கரை நிலவளத்தைப் பற்றிக் கெடிலக்கரை இலக்கியங்களில் கூறப்பட்டிருக்கும் செய்திகள் முற்றிலும் உண்மையே. எந்தப் பகுதியில் பழம்பெருந் திருக்கோயில்களும் அரசர் தலைநகர்களும் மிக்குச்சிறந்து இருக்கின்றனவோ அல்லது இருந்தனவோ, அந்தப் பகுதியை வளம் நிறைந்த பகுதியெனக் கண்ணை மூடிக் கொண்டு சொல்லலாம். கெடிலக்கரையில் பாடல் பெற்ற பழம் பெரும்பதிகள் பல உள்ளன. மற்றும், திருக்கோவலூர், கிளியூர், ஆற்றுார், சேந்தமங்கலம், திருநாவலூர், திருவதிகை, திருமாணிகுழி. கடலூர் முதலிய ஊர்கள் பல்வேறு காலங்களில் பல்வேறு அரச மரபினர்கட்குத் தலைநகரங்களா யிருந்தமை குறிப்பிடத்தக்கது. இன்று கெடிலக்கரை நிலங்களில் சோற்றுக்கு நெல் விளைவதன்றி, கரும்பும் நிலக்கடலையும் நிறைய விளைந்து வெளிநாட்டுப் பணத்தைத் தருவிக்கின்றது என்பதை மறந்து விடுவதற்கில்லை.
கடல் வளம்
நெய்தல் எனப்படும் கடல் வளமும் ஒரளவு இங்கே உண்டு. கெடிலம் கடலோடு கலப்பதோடு அமைந்து விட்டிருந்தால் அவ்வளவு சிறப்பிருக்காது. கலக்குமிடத்தில் இயற்கைத் துறைமுகமும் அமைந்திருப்பதால்தான் கடல்வளம் இருப்பதாகச் சொல்ல முடிகிறது. மீன் பிடித்தல், உப்பளம் அமைத்து உப்பு எடுத்தல், படகு கட்டுதல், படகு ஒட்டுதல், ஏற்றுமதி - இறக்குமதி செய்தல், கப்பல் பயணம் செய்தல், கடல் வாணிகம் புரிதல் முதலிய நெய்தல் நிலத் தொழில்கள் பலவும், கெடிலம் கடலோடு கலக்கும் கடலூரில் நடைபெறுகின்றன. கூடலூர்த் துறைமுகம் மீன்பிடி துறைமுகமாகவும் இருந்து மீன்வளம் கிடைக்கச் செய்வது குறிப்பிடத்தக்கது.
நீர் வளம்
நீர்வளம் - நிலவளம் என்பார்கள். இதுவரையும் நானில (நான்கு நில) வளங்கள் விளக்கப்பட்டன. நானில வளங்கள் பெருகுவதற்கு நீர்வளம் இன்றியமையாதது. அதற்கு மழைவளம் வேண்டும். தென்னார்க்காடு மாவட்டத்தில் ஆண்டுக்குச் சராசரி 1270 மில்லி மீட்டர் மழை பெய்கிறது; கடற்கரையை ஒட்டியுள்ள கடலூர் வட்டத்தில் ஆண்டுக்குச் சராசரி 2000 மில்லி மீட்டர் மழை பெய்கிறது. சராசரி ஆண்டுக்கு 55 நாள்கள் மழை பெய்கிறது எனலாம். இப்பகுதியில் பெரும்பான்மை மழை வடகிழக்குப் பருவக் காற்றால் பெய்கிறது.
இவ்வட்டாரத்தில், புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மூன்று திங்கள்களும் மழைக்காலமாகும்; மார்கழி, தை, மாசி ஆகிய மூன்றும் பனிக்காலமாகும்; பங்குனி பனிக்காலத்திற்கும் கோடைக் காலத்திற்கும் இடைப்பட்ட தரத்தது; சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மூன்றும் கோடைக்காலமாகும்; ஆடி, ஆவணி ஆகிய இரண்டும் கோடைக் காலத்திற்கும் மழைக்காலத்திற்கும் இடைப்பட்ட நிலையுடையவை. கெடிலத்தைப் பொறுத்த வரையும் எந்தக் காலத்திலும் நீர் வற்றுவதில்லை. மழை பெய்யாத போதும் ஊற்று நீர் ஆற்று நீர் ஆகிறது; அதனால் கெடிலம் வற்றாத ‘உயிர் ஆறு’ (சீவநதி) எனப் புகழப் படுகிறது.
நிலக்கனிவளம்
தமிழகத்திலேயே தென்னார்க்காடு மாவட்டமும் சேலம் மாவட்டமுந்தாம் நிலக்கனிவளம் (Minerals) மிக்க பகுதிகள். தென்னார்க்காடு மாவட்டத்துப் பழுப்பு நிலக்கரியும் சேலம் மாவட்டத்து இரும்புக் கனியும் சேர்ந்து கொண்டால் கேட்கவா வேண்டும்! பொதுவாகத் தென்னார்க்காடு மாவட்டத்தில் செம்பு, ஈயம், துத்த நாகம், வனேடியம், கெலேனியம், தோரியம், நிலக்கரி, நிலத்தடி எண்ணெய், சுண்ணாம்புக்கல், கெட்டி மண், பொம்மைக் களிமண் முதலிய நிலக் கனிவளங்கள் நிறைந்திருக்கின்றன; சிறப்பாகக் கடலூர் வட்டத்தில் எஃகு உண்டாக்க உதவும் வனேடியம், அணுவிலிருந்து ஆற்றலைப் பெருக்கப் பயன்படும் தோரியம், பல்முனைப் பயனுள்ள கெட்டி மண், உரம் செய்ய உதவும் வெண்காவி மண், பொம்மை செய்ய உதவும் களிமண், சிமிட்டி செய்ய உதவும் வெள்ளை மண், நிலத்தடி எண்ணெய், பல்வேறு பயனளிக்கும் பழுப்பு நிலக்கரி, சிமிட்டி முதலியவை செய்ய உதவும் சுண்ணாம்புக்கல் (சுக்கான்கல்) முதலியவை உள்ளன. நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி கண்டு பிடிக்கப்பட்டுத் தோண்டி எடுக்கப்படுவது போலவே மற்ற வளங்களும் தோண்டி எடுக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன. இப் பகுதியிலுள்ள சுண்ணாம்புக்கல் (Limestone) வளம் தோண்டியெடுக்கப்பட்டால் பெரும் பயன் விளைவும்.
நெய்வேலியில் நிலக்கரி தோண்டும்போது கிடைப்பது போன்ற வகைக் களிமண் கெடிலக்கரையிலுள்ள கடலுரில், பண்ணுருட்டி முதலிய ஊர்ப்பகுதிகளிலும் கிடைக்கிறது. நெய்வேலிக் களிமண்ணால் என்னென்னவோ செய்யப்பட விருக்கின்றன. கடலூர் - வண்டிப் பாளையம் பகுதியிலும் பண்ணுருட்டியிலும் வண்ணப் பொம்மைகள் பல செய்யப்படுகின்றன - பண்ணுருட்டிப் பொம்மைகள், மிகவும் பெயர் பெற்றனவன்றோ? பண்ணுருட்டிக்கு அடுத்த காடாம் புலியூர்ப் பகுதியில் உள்ள ஒருவகை வெள்ளை மண் சிமிட்டி செய்ய டால்மியாபுரத்திற்குக் கொண்டுபோகப் படுகிறது. அடுத்து, திருவயிந்திரபுரம் மலைப் பகுதியில் வெட்டி எடுக்கப்படும் வெண்காவிக் களிமண் குறிப்பிடத் தக்கது. கல் போல் கட்டி கட்டியாக வெட்டி எடுக்கப்படும் இம் மண், உரத்தொழிற்சாலைகட்குக் கொண்டுபோகப்பட்டு மணிலா பிண்ணாக்கு, மாட்டெலும்பு முதலியவற்றுடன் கலக்கப்பட்டு உரம் உண்டாக்க உதவுகிறது. மற்றும், வண்டிப் பாளையம் தென்னங் கீற்றுகள், நெல்லிக்குப்பம் வெற்றிலை, பண்ணுருட்டிப் பலாப்பழம் முதலியவை பெயர் பெற்றவை.
நிலக்கரி, சுண்ணாம்புக்கல், வனேடியம், கெலேனியம், தோரியம், நிலத்தடி எண்ணெய் முதலிய வளங்கள் ஒரு புறமிருக்க, - கடையெழு வள்ளல்களுள் ஒருவனாகிய மலையமான் திருமுடிக்காரி வந்தவர்க்கெல்லாம் தன் உடைமைகளையெல்லாம் வரையாது வாரி வாரி வழங்கிய கொடைவளம் மிக்கிருந்த நாடு கெடில நாடு என்பதற்கு மேல் இன்னும் என்ன கூறிக் கெடிலநாட்டு வளத்தைச் சிறப்பிக்க வேண்டும்? இங்கே பின்வரும் [1]திருக்குறள்களை நினைவு செய்து கொண்டால் போதும்:
- "இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் ::இல்லவள் மாணாக் கடை"
- "இலமென் றசைஇ யிருப்பாரைக் காணின்
- நிலமென்னும் நல்லாள் நகும்
- ↑ திருக்குறள் - 53, 1040.