உள்ளடக்கத்துக்குச் செல்

கடக்கிட்டி முடக்கிட்டி/கடக்கிட்டி முடக்கிட்டி பட்டணம் பார்த்தல்

விக்கிமூலம் இலிருந்து
3

கடக்கிட்டி முடக்கிட்டி பட்டணம்
பார்த்தல்

அந்தக் கிழட்டுக் குதிரை பட்டணத்தைப் பற்றிப் புகழ்ந்து சொன்னதெல்லாம் கடக்கிட்டி முடக்கிட்டியின் மனத்தில் ஆழமாகப் பதிந்து விட்டது. அதனால் எப்படியாவது பட்டணத்தைச் சுற்றிப் பார்க்கவேண்டுமென்ற ஆசை அதற்கு உண்டாயிற்று. பட்டண வாழ்வுதான் உயர்ந்தது என்று குதிரை சொன்னதும் அதன் மனத்தை விட்டு நீங்கவே இல்லை. அதையும் பார்த்துவிடலாம் என்பது அதன் எண்ணம். பட்டண வாழ்வு நன்றாக இருந்தால் கிழவனை விட்டு அங்கேயே இருந்துவிடலாமல்லவா ?

கிழவன் விறகுச் சுமையைப் பட்டணத்திலே விற்றுவிட்டு மாலை நான்கு மணி வரையும் இளைப்பாறுவான்; நன்றாகத் தூங்கவும் செய்வான். பட்டணத்திலே ஓர் ஒதுக்கிடத்திலே இருந்த ஒரு பாழடைந்த சத்திரம் இதற்கு வசதியாக இருந்தது. அங்குதான் அவன் நாள்தோறும் சென்று ஓய்வெடுப்பது வழக்கம். அங்கு வந்ததும், விறகுச் சுமையோடு அவன் கழுதை மேல் ஏற்றி வந்திருந்த பசும் புல்லை எடுத்து அதற்குப் போடுவான். பிறகு, மேல் வேட்டியை விரித்துச் சத்திரத்தில் படுப்பான். கழுதையை அவன் கட்டி வைப்பதில்லை. ஏனென்றால், அதுவும் புல்லைத் தின்றுவிட்டு அங்கேயே தரையில் படுத்துக் கொள்ளும். எங்கும் ஓடிவிடாது என்று அவனுக்குத் தெரியும்.

மாலை நான்கு மணிக்குக் கிழவன் எழுந்தவுடன் ஒரு மண் கலயத்திலே கொண்டு வந்திருந்த பழைய சோற்றை உண்பான். கழுதைக்கும் கொஞ்சம் வைப்பான். இந்தப் பழைய சோற்றுக்காகவும் அது அங்கேயே காத்துக் கிடக்கும்.

கிழட்டுக் குதிரை வந்த போனதிலிருந்து கடக்கிட்டி முடக்கிட்டியின் மனத்தில் பட்டணத்தைச் சுற்றிப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் வளர்ந்துகொண்டே இருந்தது. மேலும், அந்தக் குதிரையை எங்காவது சந்திக்கலாம் என்ற நோக்கமும் அதற்கு உண்டாயிற்று.

அதனால் குதிரை வந்துபோனபத்து நாள்களுக்குப் பிறகு ஒரு நாள் கடக்கிட்டி முடக்கிட்டி தனது ஆசையை நிறைவேற்றிக்கொள்ளத் தீர்மானித்தது. வழக்கம்போலக் கிழவன் அன்றும் விறகை விற்றுவிட்டுச் சத்திரத்தில் வந்து படுத்துத் தூங்கலானான்.

அந்தச் சமயம் பார்த்துக் கடக்கிட்டி முடக்கிட்டி கிழவன் போட்ட பச்சைப் புல்லை வேகமாகத் தின்றுவிட்டுப் பட்டணம் பார்க்கப் புறப்பட்டது. கிழவன் பழைய சோறு தனக்குப் போடும் நேரத்திற்குள் சத்திரத்திற்கு வந்து விட வேண்டும் என்று அது ஓட்டமும் நடையுமாகப் பல வீதிகளில் சென்றது.

ஒரு வீதியிலே அந்த கிழக்கு திரை சுவரில் ஒட்டியிருந்த சுவரொட்டிக் காகிதத்தை வாயினாலேயே கடித்துக் கிழித்து எடுத்துத் தின்றுகொண்டிருப்பதைக் கடக்கிட்டி முடக்கிட்டி பார்த்து, மிகுந்த மகிழ்ச்சியோடு அதன் அருகே சென்றது.

“அண்ணே, சுகமா வந்து சேர்ந்தியா?” என்று அது குதிரையைப் பார்த்துக் கேட்டது.

“வா, தம்பி. எப்படியோ மெல்ல மெல்லப் பட்டணமே வந்து சேர்ந்துவிட்டேன். காட்டிலே அந்தப் புலியைப் பார்த்தபோது என் உடம்பு அப்படியே நடுங்கிப் போயிற்று. நல்ல வேளை, நீ காப்பாற்றினாய். ஆனால், மறுபடியும் புலி வந்து விடுமோ என்ற பயத்தினால் உனக்கு நன்றி கூடச் சொல்லாமல் அவசரமாக வந்துவிட்டேன்," என்றது குதிரை.

"அதைப்பற்றி இப்பொழுது பேசவேண்டாம், அண்ணே . நான் பட்டணம் பார்க்க வேண்டும்" என்றது கழுதை.

"முதலில் நான் தின்னும் காகிதத்தை ருசி பார். பிறகு பட்டணம் பார்க்கலாம்" என்று குதிரை பெருமையாகத் தன் தீனியைப் பற்றிப் பேசிற்று. இந்த உணவு, காட்டில் கிடைக்குமா?

"எனக்குக் காகிதம் தின்று பழக்கமில்லை. பச்சைப்புல் தான் பிடிக்கும். இருந்தாலும் நீ ஆசையாகக் கொடுப்பதை வேண்டாம் என்று சொல்லலாமா?" என்று கூறி விட்டுக் கடக்கிட்டி முடக்கிட்டி சுவரொட்டிக் காகிதத்தை வாயில் வைத்தது.

ஏதோ ஒரு நாற்றமெடுத்த பசையை அதில் தடவிச் சுவரில் ஒட்டியிருந்தார்கள். கடக்கிட்டி முடக்கிட்டிக்கு அது கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லை. ஒரே குமட்டலாக வந்தது. "அண்ணே, இதுதானா உங்கள் பட்டணத்து விருந்து?" என்று முகத்தைச் சுளித்துக் கொண்டு அது கேட்டது.

அந்தச் சமயத்தில் சுவரொட்டி ஒட்டுகின்ற சிறுவர்கள் மூன்று பேர் அங்கு வந்து சேர்ந்தார்கள். "இந்தக் கிழட்டுக்குதிரை நாம் ஒட்டுவதையெல்லாம் தின்றுவிடுகிறது. இதைக் கல்லெடுத்து விரட்டுங்கடா" என்றான் ஒரு சிறுவன்.

பிறகு சொல்லவா வேண்டும்? ஆளுக்கு ஒரு கல்லைத் தூக்கி வீசினார்கள். கிழக் குதிரை கல்லடிக்குத் தப்புவதற்காகத் தெருவின் குறுக்கே ஓடப் பார்த்தது. எதிர்பாராத விதமாகக் குறுக்கே அது ஓடியதால் வேகமாக வந்த பஸ் ஒன்று அதன்மேல் மோதிவிட்டது. குதிரை தடால் என்று கீழே விழுந்தது மிகவும் மெலிந்து கிடந்த அந்தக் கிழட்டுக் குதிரையால் அந்த அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை. அதன் வாயிலிருந்து ரத்தம் வழிந்தது. கொஞ்ச நேரத்தில் அதன் உயிர் பிரிந்தது.

“இதுதானா உங்கள் பட்டணத்து வாழ்க்கை? மோட்டார் வண்டிச் சத்தம் காட்டில் கேட்கவில்லையே என்று இங்கு வந்தாய். அந்த மோட்டாரே உனக்கு எமனாக வந்துவிட்டது" என்று கண்ணீர் வடித்துக்கொண்டே கடக்கிட்டி முடக்கிட்டி சத்திரத்தை நோக்கி எச்சரிக்கையோடு நடந்தது. பட்டணம் பார்த்தது போதும் என்றாகிவிட்டது அதற்கு. அது சத்திரத்தை அடைவதற்கும் கிழவன் விழிப்பதற்கும் சரியாக இருந்தது.