குண்டான உடம்பை குறைப்பது எப்படி/கொழுப்பும் குண்டும்
ஆமாம்! உடம்பு எப்படி குண்டாகிறது?
அனைவருக்கும் ஏற்படுகிற அதிசயமான வினாதான். ஆனால், விடையில்தான் குழப்பம்.
ஏற்படுகிற வினாவுக்குக் கிடைக்கிற விடையானது, பொதுவாகத் தான் இருக்கும். ஆனால், அவை புரிந்து கொள்ளும்படியாக வருவதில்லை.
உடம்பு குண்டாகிறது எப்போது என்றால், உடலின் எடை இருக்க வேண்டிய அளவுக்கு மேல் சேர்ந்து விடுவதால்தான். அதிக எடையில் உடம்பு அல்லாடு வதற்கே மட்டற்ற கொழுப்பு (Obesity) என்று பெயர்.
குறிப்பாகக் கூற வேண்டுமென்றால், ஒருவரது உயரத்திற்கும், வடிவத்திற்கும், ஆண் பெண் ஆகியவரின் உடல் அமைப்பிற்கும் ஏற்றவாறு, இவ்வளவுதான் உடல் எடை இருக்க வேண்டும் என்று அறிவியல் வல்லுநர்கள் குறிப்பிட்டுக் கூறியிருக்கும் எடை அளவுக்கு மேல், 20 சதவிகிதம் அல்லது அதற்கும் மேலாகக் கொண்டிருப்பதுதான் அதிக எடையுள்ள உடம்பாகிவிடுகிறது.
மட்டற்ற மகிழ்ச்சி என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் மட்டற்றக் கொழுப்பு என்கிறார்களே அது என்ன?
முதலில் கொழுப்பு என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம்.
நாம் தினமும் உண்ணுகிற உணவில், சக்தியை அளிக்கின்ற மூன்று முக்கிய உணவுப் பொருட்களில், கொழுப்பும் ஒன்று. கொழுப்பு என்பது அதிக சக்தியை அளிக்கும் வல்லமை உடையது. ஒரு கிராமுக்கு 9 கலோரிகள். ஒவ்வொரு அவுன்சு கொழுப்புக்கும் 255 கலோரிகள் உள்ளது என்பார்கள்.
புரோட்டின், மாவுச் சத்தைவிட இரண்டு மடங்கு சக்தி படைத்தது கொழுப்பு என்பர். இப்படிப்பட்ட அதிக சத்தினை அளிக்கின்ற உணவுப் பொருட்களில் மிக முக்கியமானவை வெண்ணெய், முட்டைகள், மாமிசம், தாவர எண்ணெய் வகைகள். எண்ணெய் சத்துள்ள மீன்கள். பாலேடு கலந்த பாலான வகைகள் ஆகும்.
நாம் உண்ணுகிற உணவில் உள்ள கொழுப்புச் சத்துகள் எல்லாம், உயிர்க்காற்றோடு எரிந்து. சீரணமாகி, உடல் உறுப்புகளுக்குச்சக்தியைக் கொடுக்கின்றன. அந்தச் சத்துக்கள் யாவும். உடலின் அடிப்படை ஆதாரமாய் விளங்கும் செல்களுக்கு முக்கியமான, அவசியமானதாக ஆகி விடுகிறது.
உறுப்புகளுக்கு உடனடியாக உதவும் பொழுது, கொழுப்புகள் எரிந்து கரைந்து போகின்றன. அப்படி உதவாத பொழுது, கொழுப்பும் கரையாத பொழுது, தோல் பகுதிக்குக் கீழாக அடுக்கடுக்காக அவை சேமித்து வைக்கப்படுகின்றன.
எதற்கு இந்தச் சேமிப்பு? எந்த நேரத்திலும் உடலுக்கு அதிக சக்தி தேவைப்படலாம் அல்லவா? அந்த அவசர நேரத்திற்கு உதவுகிற வகையில்தான், கொழுப்புச் சத்தானது, உடலில் அடுக்கடுக்காக (Layers) சேமித்து வைக்கப்படுகிறது.
இப்படிச் சேமிக்கப்படுகிற கொழுப்புகள் முக்கியமான உள் உறுப்புகளுக்குப் பாதுகாப்புக் கவசங்களாகவே பணிபுரிகின்றன.
உதாரணத்திற்கு, குண்டிக்காய் (Kidneys) உறுப்புக்குப் பாதுகாப்புத் தருவதுடன், உடலுக்கு ஏற்படுகிற வெப்ப இழப்பைச் சீராகப் பாதுகாக்கவும் உதவுகிறது. உடலில் ஏற்படுகிற செல் பிரிவுகளின் வளர்சிதை மாற்றத்திற்கும் (Metabolism) உடல் நலத்திற்கும் உற்றுழி உதவுகிறது.
சில வகையான கொழுப்புகள், ஈரல் பகுதியிலும் சேமித்து வைக்கப்படுகிறது. கொழுப்பானது சில சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி, விட்டமின் ஏ, பி, டி, ஈ, கே போன்றவைகள் கலந்திடும் வண்ணம் கரைந்து உதவுகிறது.
இத்தகைய ஈடற்ற சக்தி வாய்ந்த கொழுப்பானது இரண்டு வகைப்படும்.
கார்பன், நைட்ரஜன் ஆகிய அணுப் பொருட்களை உண்டு பண்ணுகிற வேதியல் மாற்ற நிலை காரணமாக, கொழுப்பு இரண்டாக வேறுபடுகிறது. கரையும் தன்மை கொண்டது. கரையாத தன்மை கொண்டது. சில மிருகங்களின் இறைச்சிகள் கரையும் தன்மை கொண்டவை. சில தாவர எண்ணெய்களும் இவ்வகையானதுதான்.
உணவுகளில் உள்ள கரையும் தன்மை கொண்ட கொழுப்புச் சக்தியானது இரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவின் அளவை அதிகப்படுத்துவதுடன், பல சிக்கலான நோய்களையும் உண்டு பண்ணுகின்றன என்று வல்லுநர்கள் ஆய்வு வழி விளக்கியிருக்கின்றார்கள்.
கொழுப்புச் சத்துள்ள உணவை உட்கொள்ளவது இப்பொழுதெல்லாம் ஒரு நாகரீகமாகவே ஆகிவிட்டது. அதனால்தான், மனித குலம், புதுப்புது நோய்களின் தாக்குதல்களுக்கு ஆளாகி, தவிடுபொடடியாகிக் கொண்டு வருகிறது. உடலுக்குக் கொழுப்பு இன்றியமையாதது தான். அதற்காக உடல் பூராவுமே கொழுப்பானால், என்ன ஆவது உடல் ? எப்படித் தாங்கும் இந்த மனித வாழ்க்கை?
பயணம் செய்கிறவர்களே! அதிக சுமையைக் கொண்டு வராதீர்கள்! தூக்கிச் சுமந்து தொல்லைப் படாதீர்கள்!
சுமை குறைந்த பயணம் சுகமாக இருக்கும். சந்தோஷத்தை அளிக்கும் என்று விளம்பரம் செய்கிறார்கள்.
நமது வாழ்க்கைப் பயணத்திற்கும் இது பொருந்துமே அதிக உடல் எடை பெரு மூச்சைக் கிளப்பும். பிரச்சினைகளை ஏற்படுத்தும். எதையும் எதிர்கொள்ள முடடியாத பிரமிப்பை உண்டு பண்ணும்!
அது தேவையா? அவசியமில்லை தானே அளவான எடையுடன் பயணத்தைத் தொடரலாமே!