இறைவர் திருமகன்/அரசனைத் தேடிய அறிஞர்

விக்கிமூலம் இலிருந்து
2. அரசனைத் தேடிய அறிஞர்

சில மாதங்கள் கழிந்தன. ஜெருசலம் நகரின் வீதிகளின் வழியாக மூன்று அன்னியர்கள் சென்றார்கள். அவர்கள் அழகான ஆடைகள் அணிந்திருந்தார்கள். ஒட்டகங்களில் ஏறிச் சென்றார்கள். பணியாட்கள் சிலரும் அவர்களுடன் சென்றார்கள். அந்தப் பெரிய மனிதர்கள் கீழ்த் திசையிலிருந்து வந்தார்கள். அவர்களைப் பார்த்த போதே சிறந்த அறிஞர்கள் என்று தெரிந்து கொள்ள முடிந்தது, அவர்கள் தங்கள் முன் எதிர்பட்டவர்களை யெல்லாம், "யூதர்களின் அரசனாகப் பிறந்திருக்கும் அந்தக் குழந்தை எங்கே?" என்று கேட்டார்கள். அந்தக் குழந்தையின் நட்சத்திரத்தை நாங்கள் கீழ்த்திசையிலே கண்டோம். அவனைத் தொழுது செல்வதற்காக வந்திருக்கிறோம்" என்று கூறினார்கள்.

கீழ்த் திசையிலிருந்து வந்த இந்த அறிஞர்களைப் பற்றியும், அவர்கள் மக்களிடம் கூறிய செய்திகளைப் பற்றியும் ஜெருசலத்தின் அரசன் ஹெராடு கேள்விப்பட்டான். ஹெராட் ரோமப் பேரரசின் கீழ் ஒரு சிற்றரசனாக இருந்து வந்தான். இந்தப் பெரிய மனிதர்கள் கூறிய செய்தியைக் கேட்டதும் அவனுக்குக் கோபமும் அச்சமும் உண்டாயிற்று. தனக்கு இருக்கும் சிறிய அதிகாரத்தையும் கைப்பற்றிக் கொள்ள ஓர் அரசன் முளைத்துவிட்டானா என்று எண்ணி அவன் மனங் கலங்கினான்.

ஆலயத்துக் குருமார்களையும், வேதங்களைப் படியெடுத்து எழுதி வைக்கும் எழுத்தர்களையும் கூட்டி வரும்படி ஆணையிட்டான். கிழக்கிலிருந்து வந்த அந்தப் பெரிய மனிதர்கள் கூறும் செய்திக்கு வேதத்தில் ஆதாரம் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டான். அவர்கள் பழைய வேத நூல்களை ஆராய்ந்து, யூதர்களின் அரசன் பெத்தலெம் நகரில் பிறப்பான் என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூறினார்கள். இதைக் கேட்டதும் ஹெராடு மன்னனின் திகில் மேலும் அதிகமாயிற்று.

அந்த மூன்று அறிஞர்களையும் தன் சபைக்கு அழைத்து வரும்படி ஆணையிட்டான். அவர்கள் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் கண்ட நட்சத்திரம் எங்கே எப்போது தோன்றிற்று என்றெல்லாம் விசாரித்தான்.

"அரசே, நாங்கள் நெடுநாளாக இந்த நட்சத்திரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். ஏனெனில் பழைய வேத நூல்களில் யூதர்களின் அரசன் ஒருவன் பிறப்பான் என்றும், அவன் பிறக்கும் நேரத்தில் சிறந்த நட்சத்திரம் ஒன்று வானில் தோன்றும் என்றும் குறிப்பிடப் பெற்றுள்ளது. ஆண்டுக்கணக்காக வானத்தை ஆராய்ந்து கொண்டிருந்த எங்களுக்கு சில மாதங்களுக்கு முன்தான் அந்த நடசத்திரம் தோன்றியது. உடனே நாங்கள் அந்த வருங்கால அரசனைக் கண்டு தொழுவதற்காகப் புறப்பட்டு விட்டோம்" என்று கூறினார்கள்.

“பெத்தலெம் நகருக்குச் செல்லுங்கள். அங்கே தான் அந்தக் குழந்தை பிறந்திருக்க வேண்டும். நன்றாகத் தேடிப் பாருங்கள். நீங்கள் அந்தக் குழந்தையைக் கண்டு பிடித்த பின் திரும்பி வந்து என்னிடம் செய்தியறிவியுங்கள். ஏனெனில் நானும் அந்த அரசனை வணங்க விரும்புகிறேன்" என்றான் ஹெராடு மன்னன்.

அந்த மூன்று அறிஞர்களும் சரியென்று கூறிவிட்டுச் சென்றார்கள். ஹெராடு மன்னன் அந்தத் தெய்வக் குழந்தையைக் கொல்லக் கருதித்தான் அவ்வாறு நயவஞ்சமாகப் பேசினான் என்பதை அவர்கள் அறியவில்லை.

பெத்தலெம் நகருக்கு வந்து சேர்ந்தவுடன் தங்களுக்கு வழிகாட்டிய அந்த நட்சத்திரம் அந்த நகருக்கு மேலே மின்னி நிற்பதை அவர்கள் கண்டார்கள். அந்த நட்சத்திரம் கடைசியாக அசையாமல் நின்ற இடம் தான் அவர்கள் எதிர்பார்த்து வந்த எதிர்கால அரசனின் இருப்பிடம் என்று அறிந்தார்கள்.

எதிர்கால அரசனாகப் பிறந்த அந்தச் சிறு குழந்தை இருந்த இடம் எளிய சின்னஞ்சிறிய வீடாயிருந்தது. வியப்புடன் அந்தப் பெரிய மனிதர்கள் அவ்வீட்டினுள் நுழைந்தார்கள். அங்கே ஒளிமயமான அந்தத் தெய்வக் குழந்தையைக் கண்டதும் அவர்கள் உள்ளம் எல்லாம் இன்ப வெள்ளத்தில் மிதந்தது ! ஆம்! அவர்கள் தேடிவந்த அரசன், அந்த எளிய சிறு வீட்டில் இருந்த அக் குழந்தைதான்.

அந்தச் சிறு குழந்தையின் முன்னே மூன்று பெரிய மனிதர்களும் மண்டியிட்டுத் தொழுதார்கள். ஒரு கிழவர் தம்மிடமிருந்த பொன் முடியொன்றை வருங்கால அரசனுக்கு உகந்த காணிக்கையாகக் கொடுத்தார். இரண்டாமவர் ஒரு கூடை நறும் புகைத் தூளைத் தம் காணிக்கையாகக் செலுத்தினர். மூன்றாமவர் விலையுயர்ந்த கந்தரசம் அடங்கிய ஒரு ஜாடியை அளித்தார்.

புனிதக் குழந்தையைத் தொழுது எழுந்த பின் அந்த மூன்று அறிஞர்களும் அங்கிருந்து அகன்றனர்.

மேரி, வியப்புடன் தன் அருமைக் குழந்யைப் பார்த்துக் கொண்டே நெடு நேரம் நின்றாள். அவளுக்கு எல்லாம் வியப்பாக இருந்தது. பிள்ளை பிறந்த அன்று தொழுவத்தின் கதவோரத்தே சென்ற ஆட்டிடையர்களையும், பின்னர், ஆலயத்துக்குச் சென்ற பொழுது பிள்ளையைக் கையில் வாங்கிக் கொண்டு விண்ணை நோக்கி இறைவனுக்கு நன்றி கூறிய அந்தக் கிழவனையும் சற்றுமுன் எங்கிருந்தோ வந்து தன் குழந்தையை வணங்கிச் சென்ற யூதரினத்தைச் சேராத அந்தப் பெரிய மனிதர்களையும் நினைத்துப் பார்க்கப் பார்க்க அவளுக்கு அது ஒரு தெய்வக் குழந்தை என்றே தோன்றியது. பெருமையினால் அவள் மனம் பூரித்தது. யாரும் பெறாத பேறு பெற்றதை எண்ணி அவள் மனம் களித்தது.

அந்த மூன்று பெரிய மனிதர்களும் திரும்பி வருவார்கள் என்று எதிர் பார்த்துக் காத்திருந்து ஏமாந்து போனான் ஹெராடு மன்னன். இறைவன் அவர்களை வேறு பாதையாகத் தங்கள் தாயகம் செல்லும்படி கனவில் எச்சரித்து அனுப்பிவிட்டான்.

அவர்கள் குழந்தை இருக்குமிடத்தை வந்து சொன்னால், தன் ஆட்களை அனுப்பி அதைக் கொன்று விடலாம் என்று நினைத்திருந்த அவன் எண்ணம் மண்ணாயிற்று. அதனால் பெருஞ்சினம் கொண்ட அவன், தன் படை வீரர்களை அழைத்து ஒரு கொடிய கட்டளையிட்டான்.

"பெத்தலெம் நகரில் உள்ள இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் எல்லோரையும் கொன்று விடுங்கள்” என்பது தான் அந்தத் தீயவனின் கட்டளை. "எனக்குப் போட்டியாக ஓர் அரசன் இந்த மண்ணில் பிறப்பதை நான் பார்த்துக் கொண்டிருக்க முடியாது" என்று அவன் கறுவினான்.

அன்று இரவு. ஜோசப் ஒரு கனவு கண்டான். அக்கனவில் இறைவன் அவனிடம் கீழ்க்கண்ட சொற்களைக் கூறினார். “எழுந்திரு. உன் பச்சைக் குழந்தையையும் அதன் தாயையும் அழைத்துக் கொண்டு எகிப்து நாட்டுக்கு ஓடு. ஹெராடு மன்னன் இந்தக் குழந்தையைக் கொல்வதற்காகத் தேடிக் கொண்டிருக்கிறான். நான் மீண்டும் கூறும் வரை நீ எகிப்து நாட்டிலேயே இரு."

ஆண்டவனின் அறிவிப்பைக் கேட்டதும் ஜோசப் பதறிக் கொண்டு எழுந்திருந்தான். உடனே அவசர அவசரமாகத் தன் கழுதைக்கு சேணம் பூட்டினான். மேரியையும் குழந்தையையும் உட்கார வைத்துக் கழுதையை ஒட்டிக் கொண்டு தென்திசை நோக்கிப் பயணமானான். எகிப்துப் பெருநாட்டிற்குப் பத்திரமாகப் போய்ச் சேர்ந்தான்.

ஹீெராடு தன் இரண்டாவது முயற்சியிலும் ஏமாந்து போனான்.