உள்ளடக்கத்துக்குச் செல்

இறைவர் திருமகன்/உடலும் குருதியும் உங்களுக்கே

விக்கிமூலம் இலிருந்து
14. உடலும் குருதியும் உங்களுக்கே

அன்று வியாழக்கிழமை. இயேசுநாதரின் சீடர்கள் அவரிடம் வந்து, “இன்று தாங்கள் விருந்துண்பதற்கு எந்த இடத்தில் ஏற்பாடு செய்ய வேண்டும்?" என்று கேட்டார்கள்.

“நகருக்குச் செல்லுங்கள். குடத்தில் ஒருவன் தண்ணீர் கொண்டு செல்வான். அவனைத் தொடர்ந்து செல்லுங்கள். அந்த மனிதனுடைய தலைவனை அணுகி, பெருமானார் தன் சீடர்களுடன் விருந்துண்பதற்குரிய விருந்து அறை எது? என்று கேட்டுவரச் சொன்னார் என்று கூறுங்கள். அவர் ஒரு பெரிய அறையைக் காட்டுவார். அங்கு நீங்கள் ஏற்பாடு செய்யுங்கள்” என்றார் இயேசு நாதர். பீட்டரும் ஜானும் ஜெருசலம் நகருக்கு விரைந்து சென்றார்கள். அங்கே ஒரு கிணற்றடியில் பெண்கள் தண்ணீர் பொண்டு சென்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். அந்தப் பெண்களினிடையே ஓர் ஆடவன் குடத்தில் தண்ணீர் மொண்டு செல்லும் நடைமுறையில் இல்லாத காட்சியையும் கண்டார்கள். அந்த மனிதனைத் தொடர்ந்து சென்று, அவனுடைய தலைவனைச் சந்தித்தார்கள். இயேசு நாதர் கூறியபடி அவர்கள் கெட்டவுடன் அந்த வீட்டுக்காரன் மகிழ்ச்சியுடன் தன் வீட்டின் பெரிய அறை ஒன்றை அவர்களுக்குக் காண்பித்தான்.

விருந்துண்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்த அறையில் எல்லாம் ஆயத்தமாக வைக்கப்பட்டன.

இயேசுநாதர் தம் சீடர்களுடன் அங்கு வந்து சேர்ந்தார்.

எல்லாரும் அமர்ந்து விருந்துண்ணும் போது அவர் மனவருத்தத்துடன் இருப்பது போல் காணப்பட்டார். சீடர்கள் அதைக் கவனித்தவுடன் அவர் தம் துயரத்தின் காரணத்தை வாய்திறந்து கூறினார்.

"உண்மையில் உங்களில் ஒருவன் என் பகைவர்களிடம் என்னைக் காட்டிக் கொடுத்து விடுவான் !"

இச் சொற்களைக் கேட்டு அச் சீடர்கள் திகிலடைந்தார்கள்.

“பெருமானே, நானா ? நானா?" என ஒவ்வொருவரும் கேட்டார்கள்.

“என்னோடு ஒன்றாக அமர்ந்து வட்டிலில் உண்ணும் உங்களில் ஒருவன்தான் - நான் வட்டிலில் கை வைக்கும் போது தானும் கை வைக்கும் அந்த மனிதன்தான்" என்று பதிலளித்த பெருமான் ஜூடாஸ் இஸ்காரியட் என்ற சீடனின் பக்கம் தன் பார்வையைத் திருப்பினார். "நீ செய்வதை விரைவாகச் செய்" என்று கூறினார்.

பெருமான் தன் இரகசியத்தை எப்படியோ தெரிந்து கொண்டு விட்டார் என்பதை ஜூடாஸ் இஸ்காரியட் அறிந்து கொண்டான். உடனடியாக எழுந்து அறைக்கு வெளியில் சென்று இருளில் மறைந்துவிட்டான்.

அவ்வளவு நேரமும் அவன் பெருமானைக் காட்டிக் கொடுப்பதற்கு வாங்கிய கைக் கூலியான முப்பது வெள்ளிப் பணமும் அவனிடம் இருந்தது.

இயேசுநாதர் தாம் இருந்த இடத்திலேயே எழுந்து நின்றார். ஒரு ரொட்டியைக் கையில் எடுத்தார். அதைப் பிய்த்துத் தன் சீடர்கள் ஒவ்வொருவருக்கும். ஒவ்வொரு துண்டு கொடுத்தார்.

“இதைச் சாப்பிடுங்கள், இதுதான் உங்களுக்காகக் கூறு போடப்பட்ட என் உடல், என் நினைவாக இதைச் சாப்பிடுங்கள்" என்றார்.

ஒரு கோப்பை திராட்சைச் சாற்றை எடுத்தார். இந்தக் கோப்பையில் உள்ளதை எல்லாரும் சிறிது சிறிது அருந்துங்கள். ஏனெனில் இதுதான் என் குருதி. உங்களுக்காகவும் வேறு பலர்க்காகவும் சிந்தப்படும் குருதி இது. என் நினைவாக இதைக் குடியுங்கள்."

சீடர்கள் இந்தச் சொற்களின் உட்பொருள் தெரியாமல் மயங்கினார்கள். அவர் அளித்த ரொட்டித் துண்டுகளையும் திராட்சைச் சாற்றையும் உட்கொண்டார்கள். துயரமும் அச்சமும் அவர்கள் உள்ளங்களை ஆட்கொண்டன.

“அஞ்சாதீர்கள் ! மனத்துயரம் கொள்ளாதீர்கள் ! நீங்கள் இறைவனை நம்புகிறீர்கள் ! என்னையும் நம்புகிறீர்கள் ! நான் உங்களுக்குரிய இடத்தை ஆயத்தம் செய்து வைப்பதற்காகப் போகிறேன். நான் போவது உங்கள் நன்மைக்காகவே. நான் போகா விட்டால் உங்களைக் காத்தாள்பவன் வரமாட்டான். புனித ஆவியாகிய அவன் வரும்போது நான் கூறிய அனைத்தும் உங்கள் நினைவுக்கு வரும்.

"நான் உங்களிடம் அன்பு கொண்டிருந்தது போல் நீங்கள் ஒருவரிடம் ஒருவர் அன்பு கொள்ளுங்கள். தன் நண்பர்களுக்காக உயிரைக்கொடுக்கக் கூடியவனிடம் உள்ள அன்பைக் காட்டிலும் பேரன்புடையவர் யாருமில்லை. இதுதான் என் கட்டளை. நீங்கள் என் நண்பர்கள். எனவே நான் கட்டளையிடுவதைச் செய்யுங்கள்."

விருந்து முடிந்தது. அதுதான் சீடர்கள் இயேசுநாதருடன் உண்ட கடைசி விருந்து. யாவரும் எழுத்து நின்று மாலைத்தொழுகைப் பாட்டைப் பாடினார்கள். பிறகு யாவரும் ஒன்றாக வெளிப்புறப்பட்டு வீதியில் நடந்து சென்றார்கள்.