இறைவர் திருமகன்/திருந்திய பாவிக்கு விருந்து

விக்கிமூலம் இலிருந்து
6. திருந்திய பாவிக்கு விருந்து

வரிவசூலிப்பவர்களைக் கண்டாலே யூதர்களுக்குப் பிடிக்காது. வரிவசூலிக்கும் இந்த அதிகாரிகள் ரோமானிய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டவர்கள். யூதர்களிடம் வரிவசூலித்து ரோமானியப் பேரரசர்க்கு அனுப்பிவைப்பது அவர்கள் வேலை. யூதர்கள் ரோமானியரின் அடிமை என்பதை நினைவுபடுத்தும் அவமானச் சின்னங்களாக இந்த வரி வசூலிக்கும் அதிகாரிகள் இருந்தார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த அதிகாரிகள் நாணயமும் ஒழுக்கமும் நேர்மையும் மனிதாபிமானமும் அற்ற விலங்குகளாகவும் இருந்தார்கள். எனவே யூதர்கள் இவர்களைப் பாவிகளாகவே கருதினார்கள். இந்தப் பாவிகளின் வீட்டு வாயிற் படியில் காலடி எடுத்து வைப்பதே கேவலம் என்று நினைப்பவர்கள் யூதர்கள்.

சமுதாயத்தினால் வெறுத்தொதுக்கப்பட்ட இந்த வரிவசூலிக்கும் பாவிகளிடமும் இயேசு நாதர் அன்பாகப் பழகினார். நரகத்திலே இடம்பிடிக்க வேண்டிய அந்தப் பாவிகளும் சொர்க்கத்தை அடைய மார்க்கமுண்டு என்று இயேசுநாதர் கூறியது அவர்களுக்கு மகிழ்ச்சியளித்தது. தாங்கள் செய்த பாவங்களுக்காக வருந்தி ஆண்டவனிடம் மன்னிப்புப் பெற்று நல்வாழ்க்கை வாழத் தொடங்கினால் அவர்கள் இன்ப உலகம் பெறலாம் என்று கூறிய இயேசு நாதரை அவர்கள் போற்றினார்கள். தங்கள் வீடுகளுக்கு வரவேற்று விருந்தளித்தார்கள்.

“பாவிகளுடனும் வரிவசூலிப்பவர்களுடனும் இவர் ஏன் ஒன்றாக இருந்து சாப்பிட வேண்டும்?" என்று பழைய மதவாதிகள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

"நேர்மையானவர்களை அழைப்பதற்காக நான வரவில்லை; பாவிகளைத் திருந்தி வாழச் செய்வதற்காகவே நான் வந்திருக்கிறேன். கூட்டங் கூட்டமாகவரும் நல்லவர்களைக் காட்டிலும், திருந்திவரும் ஒரு பாவியைத் தான் விண்ணுலகம் மிகுந்த களிப்புடன் வரவேற்கக் காத்திருக்கும்” என்று இயேசுநாதர் தம்மைச் சூழ்ந்திருக்கும் கூட்டத்தினரிடம் கூறுவார்.

இறைவன் மக்களிடம் எத்தகைய அன்புடையவர் என்று எடுத்துக் காட்டுவதற்காக இயேசுநாதர் ஒரு கதை சொன்னார்.

அக்கதை இதுதான்.

ஒரு மனிதனுக்கு இரண்டு மைந்தர்கள் இருந்தார்கள். அவர்களில் மூத்தவன் நல்லவன்; அடக்கமுடையவன்; தந்தையிடம் அன்பு மிக்கவன். இளையவனோ செலவாளி.

இளையவனுக்கு உலகத்தைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசையுண்டாயிற்று, ஆகவே அவன் தன் பங்கைப் பிரித்துத் தரும்படி தந்தையிடம் வம்பு செய்தான். என்றேனும் ஒரு நாள் பிரித்துக் கொடுக்க வேண்டியது தானே என்று தன் மனத்தை சமாதானப்படுத்திக் கொண்டு, தந்தை பங்கு பிரித்துக் கொடுத்தான்.

கையில் நிறையப் பணத்துடன் வேறு நாட்டுக்குக் கிளம்பினான் இளையவன், மிகத்தொலைவில் உள்ள அந்த நாட்டில் அவனுக்குப் பல நண்பர்கள் சேர்ந்தார்கள். அவன் தன் நண்பர்களுடன் கோலாகலமான வாழ்வுநடத்தினான். நாளுக்கொரு கேளிக்கையும் வேளைக்கொரு விருந்துமாக அவன் பணம் செலவழிந்தது. வெகு விரைவில் அவன் கைப்பணம் கரைந்து விட்டது.

காசு இல்லை என்றவுடன் தங்கள் நேசத்தை எல்லாம் நிறுத்திக் கொண்டு நண்பர்கள் பிரிந்து சென்று விட்டார்கள்.

தொலைவில் உள்ள ஓர் அன்னிய நாட்டில், பழகியவர்களால் கைவிடப்பட்ட அந்த இளையவன் தன்னந்தனியாய்த் துன்பத்திற்காளாகித் திரிந்தான். கையில் காசில்லாமல், கடன் கொடுப்பார் யாருமில்லாமல் என்ன செய்வதென்று புரியாமல் அவன் மயங்கினான்.

ஒவ்வொரு வீடாகச் சென்று ஏதாவது வேலை கொடுக்கும்படி கெஞ்சிக் கேட்டுக் கொண்டு சென்றான். கடைசியில் ஒரு குடியானவன் அவனைப் பன்றி மேய்ப்பவனாக வேலைக்குச் சேர்த்துக் கொண்டான். அந்த வேலை பார்த்தும் அவனுக்கு வயிற்றுக்குப் போதுமான உணவு கிடைக்கவில்லை. மேலும் அந்த நாட்டில் பஞ்சம் வேறு வந்து விட்டதால், அவ்வளவு எளிய சம்பளத்தில் அவனால் தனக்கு வேண்டிய உணவைப் பெறுவதற்கே வழியற்றுப் போய்விட்டது. சிலசமயங்களில் மிகப் பசியெடுக்கும் போது, பன்றிகளுக்கு வைக்கும் உணவையே சாப்பிட எண்ணுவான்.

பன்றிகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது ஒருநாள் அவன் தன்னைப் பற்றி நினைத்துப் பார்த்தான்.

“என் தந்தையாரின் வீட்டில் வேலைக்காரர்கள் கூட மிச்சம் வைக்கும் அளவுக்கு நல்ல சாப்பாடு நிறையக் கிடைக்கிறது. நானோ இங்கே பட்டினியாய்க் கிடக்க வேண்டியிருக்கிறது”

தன்னைத் தானே நொந்து கொண்ட அந்த இளைஞன் திரும்பவும் தன் தந்தையின் இல்லத்துக்குப் போகலாமா என்று நினைத்தான். 'எவ்வளவு சண்டை போட்டுப் பணத்தைப் பிரித்து வாங்கிக் கொண்டு வந்தேன். இனிமேல் என் முகத்தில் விழிக்கக் கூட அப்பா விரும்ப மாட்டாரே' என்று தோன்றியது அவனுக்கு. நினைத்துப் பார்க்கப் பார்க்க அவனுக்குத் தன் தந்தையிடம் போவதைத் தவிர வேறு வழியில்லை என்று தோன்றியது.

“அப்பா, என்னை மன்னித்து விடுங்கள். செய்யக் கூடாத பாவத்தை நான் செய்து விட்டேன். இனித் தங்களுக்கு மகன் என்று சொல்லிக் கொள்ளக்கூட எனக்கு அருகதையில்லை. இருந்தாலும் என்னை மன்னித்து உங்கள் வேலைக்காரர்களில் ஒருவனாக வைத்துக் கொள்ளுங்கள்" என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்வதென்று அவன் தீர்மானித்தான்.

தந்தையோ, வீட்டை விட்டு அவன் வெளியேறிச் சென்றதிலிருந்து அவன் நினைவாகவே இருந்தான். உலகம் அறியாத பிள்ளை எங்கே போய் எப்படித் துன்பப் படுகிறானோ என்று துடித்துக் கொண்டிருந்தான். என்றாவது தன் இளைய மகன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையோடு அவன் காத்திருந்தான். அடிக்கடி மகன் சென்ற திசையை நோக்கிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தான்.

அவன் எதிர்பார்த்தது வீண்போகவில்லை. அந்த இளைய மகன் ஒரு நாள் திரும்பி வந்து விட்டான். எப்படி வந்தான்?

எலும்புந்தோலுமாக, வற்றி மெலிந்த உடலுடனும், அந்த உடலை ஒட்டியிருந்த அழுக்குப் படிந்த கந்தையுடையுடனும், பரட்டைத் தலையுடனும் பார்க்க ஒரு பிச்சைக்காரனைப் போன்ற தோற்றத்துடன் வந்தான், உருமாறியிருந்தாலும் தந்தை தன் மகனை யடையாளங் கண்டு கொண்டான். வீட்டின் அருகில் வருமுன்னேயே அவனை வரவேற்கத் தந்தை ஓடோடிச் சென்றான்.

'அப்பா, நான் பெரும் பாவி. தங்கள் மகன் என்று சொல்லிக் கொள்ளவே அருகதை யற்றவன்" என்று கண்ணீர் வழியக் கூறினான் மகன்.

ஆனால், தந்தையோ அவன் சொன்னதை யெல்லாம் கவனிக்கவில்லை. "அன்பு மகனே, வந்துவிட்டாயா?" என்று ஆசையோடு கூறி அவனைக் கட்டித் தழுவி முத்தமிட்டான். பர பர வென்று வீட்டுக்குள் இழுத்துக் கொண்டு வந்து, "குளிப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள். சிறந்த ஆடைகளைக் கொண்டு வாருங்கள். வைர மோதிரத்தை எடுத்து வந்து கைவிரலில் போடுங்கள். வீட்டில் இன்று நல்ல விருந்து ஆக்கிப் படையுங்கள். காணாமற்போன என் மகன் இன்று திரும்பி வந்து விட்டான். இன்று நாம் நன்றாக உண்டுகளித்திருப்போம்" என்று கூறி ஆர்ப்பாட்டம் செய்தான்.

வயலுக்குச் சென்று திரும்பி வந்த பெரிய மகன், வீட்டில் ஆட்டமும் பாட்டும் ஒரே கோலாகலமாக இருப்பதைக் கவனித்தான். என்ன செய்தியென்று வேலைக்காரர்களை விசாரித்தான்.

தம்பி திரும்பி வந்த கதையைக் கேட்டுத் தெரிந்து கொண்டான். அவன் வீட்டுக்குள் நுழையவே இல்லை. தந்தையிடம் சண்டை போட்டுப் பணத்தை வாங்கி, வீட்டை விட்டு வெளியேறிச் சென்று எல்லாவற்றையும் வீணடித்து விட்டுத் திரும்பி வந்த ஒரு தீயவனை வரவேற்க அவன் விரும்பவில்லை. அவன் திரும்பி வந்ததற்காக ஏன் களிப்படைய வேண்டும் என்பது தான் பெரியவனின் கேள்வி?

பிடிவாதத்தோடு வீட்டுக்குள் நுழையாமல் அவன் திரும்பிச் செல்வதை அறிந்த தந்தை ஓடோடிச் சென்றான். வீதியில் அவனைச் சந்தித்தான்.

“இத்தனை நாளாக நான் உங்களுக்காக உழைத்தேன். உங்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்தேன். ஒரு நாளாவது நான் என் நண்பர்களோடு உல்லாசமாக விருந்துண்ண ஏற்பாடு செய்தீர்களா?" என்று வாய்க்குள்ளேயே முணுமுணுத்தான் பெரியவன்.

"என் அன்பு மகனே, எல்லாவற்றையும் ஒன்றாக அனுபவித்துக் கொண்டு என்னுடனேயே எப்போதும் இருந்து வருகிறாய் நீ. உன் தம்பியோ தீயவழியில் சென்று திருந்தி விட்டான். காணாமல் போன அவன் இப்போது அகப்பட்டுவிட்டான். இதற்காக நாம் மகிழ்ச்சியடைய வேண்டாமா? வாடா மகனே வா! “என்று அவனை அன்போடு வீட்டுக்குள் இழுத்துக் கொண்டு வந்தான்.

இயேசுநாதர் கதையை முடித்தார். பாவம் செய்த தன் மகனை மன்னித்த அன்புள்ள தந்தையைப் போல ஆண்டவன், திருந்திய பாவிகளை ஏற்றுக் கொள்வார் என்னும் கருத்தையும், பழைய மதவாதிகள், பெரிய மகனைப் போல, திருந்த முற்படும் பாவிகளை ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள் என்ற பொருளையும் இக்கதை தெளிவாக விளக்குவதை மக்கள் உணர்ந்தார்கள். இயேசு நாதரின் அன்புத் தத்துவத்தை மிக எளிதாக அவர்களுக்குப் புரியவைத்தது இக்கதை.