முடியரசன் தமிழ் வழிபாடு/042-049
பாரி மலை யருகில் - நல்ல
பண்பினர் வா ழிடமாம்
ஊரில் ஒரு பொழிலில் - உனை நான்
உற்றறி நாள் முதலே
மீறிய கா தலினால் - தமிழே
மெய்ம்மறந் தே உழல்வேன்
கூரிய நின் விழியால் - எனை நீ
கொல்வது தான் சரியோ
ஆசை மனத் திரையில் - எண்ணம்
அத்தனை யுங் கலந்து
பாச முடன் எழுதி - உருவைப்
பார்த்து மகிழ்ந் திருப்பேன்
பேச மன மிலையேல் - உயிரைப்
பிய்த்தெனைக் கொன் றுவிடு
மோசம் புரி வதென்றால் - என்றன்
மூச்சை நிறுத் திவிடு
உன்னைப் பெறு வதற்கே - இங்குநான்
ஓடித் திரி வதெல்லாம்
என்னைப் புறக் கணித்தால் - உயிரை
எப்படி நான் சுமப்பேன்
உன்னெழிற் கா தலன்றோ - என்னை
உன்மத் தனாக் குதடி
கன்னற் சுவை மொழியே - என்னைக்
கட்டி யணைத் திட்டி
செல்வம் உற வரினும் - வறுமை
சேர்ந்து துயர் தரினும்
பல்வகை இன் னலிலும் - என்மனப்
பாவையே நான் பிரியேன்
நல்வழி காட் டிடடி - உன்றன்
நட்பொன்று போ துமடி
சொல்வது சொல் லிவிட்டேன் - பிறகு
தோழியுன் சித் தமடி
நாட்டவர்க் கஞ் சுதியோ? உலகில்
நம்மைத் தடுப் பவர் யார்?
காட்டுப் புலி யடிநான் - போரில்
காத்திடு வேன் உனையே
வாட்டம் தவிர்ந் திட்டி - கொடிய
வாளுக்கும் அஞ் சுகிலேன்
கோட்டை மதி லகத்தோர் - முழக்கும்
கொட்டுக்கும் அஞ் சுகிலேன்
காதல் உல கினிலே - அகப்பொருள்
காவின் நடு வினிலே
மேதைகள் ஆக் கியதோர் - மாளிகை
மீதினில் நா மிருப்போம்
மாதுநீ யா ழெடுத்தே - இசை
மாரி பொழிந் திடுவாய்
காதற் களி யினில்நான் - பற்பல
காவியம் பா டிடுவேன்
[காவியப் பாவை]