உள்ளடக்கத்துக்குச் செல்

ஓங்குக உலகம்/006-026

விக்கிமூலம் இலிருந்து

6. மஞ்சள்


ஞ்சள் தமிழ்நாட்டில் தொன்றுதொட்டுப் பயிரிடப் பெற்ற ஒரு செடி; தமிழர் வாழ்வொடு பொருந்திய பொருள்; தமிழர்தம் உள்ளும் புறமும் நல்லமுறையில் வைத்துக்கொள்ள அமைந்த மருந்து; தமிழர் சடங்குகளில் முக்கிய இடம்பெறும் ஒன்று. ஆயினும் இன்றைய தமிழ்ச் சமுதாயம் அதைப் போற்றிக் காக்காத காரணத்தாலேயே ஊர்தொறும் மருந்தகங்கள். தேவைப்படுகின்றன.

மஞ்சள் தமிழ்நாட்டில் இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்பிருந்தே பயிரிடப்பெற்று வந்ததை அறிகிறோம். மருத நிலத்தில் சிறப்பாகவும் குறிஞ்சி போன்ற பிற நிலங்களில் பரவலாகவும் பயிரிடப்பெற்ற ஒரு கிழங்கு வகையே இது. இதன் வேறு பெயர்கள் அரிசனம், காஞ்சனி, நீசி, பீதம் என்பன. வடமொழியில் அரித்ரா (Haridra) என்பர். ஆங்கிலத்தில் ‘Turmeric’ என்பர். தாவர அறிஞர் இதற்கு இட்டபெயர் [Botanical Name]—Curceema longa என்பதாகும். இது பூமிக்குள் கிழங்காக அமைந்து விளைவதாகும்.

இந்த மஞ்சளைக் கப்பு மஞ்சள், கறி மஞ்சள் என இரண்டாகப் பிரிப்பர். கப்பு மஞ்சள் கிழங்கின் நடுவாயமைந்த பெரிய பாகத்தை அதன் சிறு கிளைகளாகிய விரல் கிழங்குகளிலிருந்து பிரித்து, உலர்த்தி நல்லெண்ணெயில் பக்குவப்படுத்தி வைப்பர். இதையே மகளிர் உடம்பில் பூசுவதற்குப் பயன்படுத்துவர். கறி மஞ்சள், நடுக் கிழங்கிலிருந்து கிளைத்த விரல் போன்றவற்றை வேறுபடுத்தி எடுத்து, சாணப்பாலில் வேகவைத்து, பதப்படுத்தி, உணவு வகைக்குப் பயன்படுத்துவதாகும். இதை விரல் மஞ்சள் என்றும் கூறுவர். இவ்வாறு மனிதனுக்குப் புற உடலின் தன்மையினைக் காப்பதற்கும் அக உடம்பின் மாசுகளை அகற்றித் தூய்மைப்படுத்துவதற்கும் மஞ்சள் தொன்றுதொட்டுப் பயன்பட்டு வருகின்றது.

சங்ககால இலக்கியங்களாகிய பத்துப்பாட்டு எட்டுத்தொகை தொடங்கி எல்லா இலக்கியங்களிலும் மஞ்சள் குறிக்கப்பெறுகின்றது. ‘சிறுபசு மஞ்சளொடு நடுவிரை தெளித்து’ (முருகு 235) முருகனை வழிபட்டதை நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் குறிக்கிறார். அப்படியே வயலில் அவை அசைந்தாடி வளரும் திறத்தினையும் அழகினையும் சிறுபாணாற்றுப்படை (44), பெரும்பாணாற்றுப் படை (354), போன்றவை குறிக்கின்றன. மதுரைக் காஞ்சியும் (289), பட்டினப்பாலையும் (17), மலைபடுகடாமும் (343), பத்துப்பாட்டில் இம் மஞ்சளின் சிறப்பினையும் அது மக்களால் காக்கப்பெறு பொருளாகப் போற்றப்படுவதையும் குறிக்கின்றன. அப்படியே எட்டுத் தொகையில் நற்றிணையும் (101-1), அகமும் (269-9) இதன் சிறப்பினை விளக்குகின்றன. ‘மஞ்சள் அழகு’ என்றே பதினெண்கீழ்க் கணக்கில் முதலாவதாய நாலடி (131-2) சுட்டுகிறது. காவிரிப் படப்பையில் இந்த மஞ்சள் விளைவதனைச் சிலம்பு சிறப்புறக் காட்டுகிறது ( 0.74-11-82). இவ்வாறு சங்ககாலத்தில் சுட்டப்பட்ட மஞ்சள் பிற்கால இலக்கியங்களிலும் மக்கள் வாழ்வியலிலும் பயின்றுவருதலை மிகுதியாகக் காணலாம். எனினும் விரிவஞ்சி இந்த அளவில் அமைந்து, அதன் தொன்மை உணர்ந்து மேலே செல்லலாம்.

தமிழ்நாட்டில் இந்த மஞ்சள் இல்லாத சடங்கு இல்லையே. எதற்கும் மஞ்சளை முதலாக வைத்தன்றோ சடங்கினைத் தொடங்குவர். மஞ்சள் கடவுளாக-பிள்ளையாராக அமைய அதற்கே முதற்பூசை செய்வர். வெற்றிலைப்பாக்குடன் மஞ்சள் தருவதையே மங்கலமாகக் கொள்வர். சிறப்பு நாட்களில் மஞ்சளை வாயில்தொறும் பூசி, குங்குமப் பொட்டிட்டு மாவிலை வேப்பிலை கட்டிச் சிறப்புச் செய்வர். இம் மஞ்சளை அரைத்துத்தேய்த்து அதைத் தம் உடம்பில் பூசி முழுகுவர். இவை யாவும் கப்பு மஞ்சளேயாகும். இனி, கறிமஞ்சள் அதன் உபயோகத்தைத் தன் பெயரிலேயே காட்டிவிடுகிறது. ஆம்! உணவுக்கென அமையும் கறிகளில் இம் மஞ்சளைக் கலப்பர். அது குடலிலும் பிற உறுப்புகளிலும் உள்ள பூச்சிகளை அகற்றி உடல் நலம் கெடாவகையில் மக்களைக் காப்பாற்றுகிறது. எனவே கப்பு மஞ்சளும், கறி மஞ்சளும் மக்களின் புறத்தையும் அகத்தையும் தூய்மைப்படுத்திப் புற அழகினையும் அகத் தெளிவினையும் தந்து அவர்களை நெடிது வாழவைக்க உதவுகின்றன.

மஞ்சளிலிருந்து எடுப்பதே குங்குமம். இதுவும் மகளிரின் மங்கலப் பொருளாகும். கணவனை இழந்தவர் ‘மஞ்சள் குங்குமம் போயிற்றே’ என்று கலங்கி அழுவதை நாட்டில் பலர் அறிவர். எனவே இந்த இரண்டும்-தமிழ்நாட்டு மகளிர் வாழ்வின் ஒளிவிளக்கங்களன்றோ!

இன்று குங்குமம் என்ற பெயரில் எதை எதையோ விற்கின்றனர். வெறும் கோதுமை மாவு போன்றவற்றில் பல வண்ணங்களைக் கலந்து ‘குங்குமம்’ எனப் பெயரிட்டு, பல நிறங்களில் விற்கின்றனர் அப்படியே எதை எதையோ சாந்து என விற்கின்றனர். அவற்றின் நலக்கேடு அறியாதவர்-அவற்றின் வண்ணத்தில் தம்மைப் பறிகொடுத்த நாகரிகம் தோய்ந்த பெண்கள் அவற்றை நெற்றியில் பொட்டாக இட்டு, புண் வரப்பெற்றுப் புலம்புவது அன்றாடக் காட்சியன்றோ! குங்குமம்-மஞ்சளால் ஆகிய குங்குமம்-சிவப்பு நிறமாக இருக்கும். அதைச் செம்மையாகத் தயாரித்தால் அதன் மணமும் மருந்துத் தன்மையும் கெடாமல் இருக்கும்.

இந்த மஞ்சள் குங்குமம் பெண்கள் அணிவதால் மற்றொரு சிறப்பும் உண்டு. மயக்கும் சக்தியால் (Mesmerism) பெண்களை மயக்கிக்கொண்டு செல்லும் கயவர் திறன் இக்குங்குமம் இட்ட பெண்களிடம் பலிக்காது. அவர்தம் மயக்கும் சக்தியை வெல்லும் ஆற்றல் இந்த மஞ்சள் குங்குமத்துக்கு உண்டு. அதனாலேயே மகளிர் எங்கே வெளியில் சென்றாலும் இக் குங்குமத்தை இட்டுக்கொண்டே செல்வர்.

மற்றும் இந்த மஞ்சளைப் பழுக்கப் பூசி, குங்குமத்தை அகல அணிந்து வெளியே செல்லும்போது, காணும் ஆடவர் இவர்களைத் தெய்வமாகவே போற்றுவர். ‘கற்புடைப் பெண்டிர் பிறர் நெஞ்சுபுகாரே’ என்ற தமிழ் வாக்கியத்துக்கு இவர்கள் சான்றாக நின்று, கண்டவர் தம்மைக் கடவுளராகக் கருதி ஒதுங்கும் நிலைபெறுவர். ஆனால் இன்று பல பெண்கள் இந்த வழுவா அறத்தை மறந்து, உடல் புறம் தெரியும் ஆடை அணிந்து, மாவாகிய ‘பவுடரைப்’ பூசி, எதையோ பொட்டாக இட்டுத் தெருவில் செல்ல கண்டவர் கண்வலைப்பட்டு, கையகப்பட்டு, கசங்கி அழிய விரும்புவதைக் காண்கின்றோம். இந்த அவல நிலையை மஞ்சளே மாற்றவல்லது.

இவ்வாறு உடல்நலத்தையும் கற்பின் அறத்தையும் ஒருங்கே காக்கும் மஞ்சளுக்கு உள்ள மருந்தின் ஆற்றலையும் எண்ணிப்பார்க்க வேண்டும். மகளிர் உடலில் பூசுவதால் உண்டாகும் ஒருசில பயன்பற்றி அறிந்தோம். மேலும் அவ்வாறு பூசிக் குளிப்பதால் உடல் பொன்னிறத்தைப் பெறுவதோடு, உடலில் தோன்றும் புலால் நாற்றமும் நீங்கப்பெறுவர். நல்ல பசியினை உண்டாக்கும். இதனால் வாந்தி, கோழை முதலிய குற்றங்களும் தலைவலி, நீரேற்றம், வெள்ளை, சளி ஐவகைவலி, வீக்கம், வண்டுகடி, பெரும்புண் ஆகிய நோய் முதலியனவும் இல்லாமல் நீங்கும். எனவே உடலை முற்றும் காக்கும் ஒரு பெருமருந்தாக இது அமைகின்றது.

இன்று கிராமங்களில் மஞ்சளைப் பொடியாக்கிப் புண்கள் மீது தூவுவதையும், மஞ்சளைச் சாதத்துடன் சேர்த்து அரைத்துக் கட்டிகள் மேல் வைத்துக்கட்டுவதையும் அவற்றால் அவை நீங்கப்பெறுவதையும் காண முடியும். கிராமங்களுக்கு மருத்துவ வசதிகளை விஸ்தரிக்க நினைக்கும் தமிழக அரசு இந்த வகையில் பண்டைத் தமிழ் மரபில் கருத்திருத்தினால் மிக்க பயன் விளையும் என்பது உறுதி.

அம்மை உண்டாகும்போது வேப்பிலையுடன் மஞ்சளை அரைத்து அக் கொப்புளங்களின்மீது தடவி, அதன் வேகம் தணிப்பர், மஞ்சளுடன் ஆடாதொடை இலையினைச் சேர்த்து, கோமயம் இட்டு அரைத்து, சொறி, சிரங்கு, நமைப்பு நீங்கப் பூசுவர், மஞ்சளுடன் சுண்ணாம்பு, பொட்டிலுட்பு இட்டு அரைத்து, சுட வைத்து சுளுக்கு, அடிபட்ட புண் இவற்றிற்குப் பயன்படுத்துவர். பச்சைமஞ்சளை அரைத்துச் சாறு எடுத்து, அட்டைக்கடி, நஞ்சு, புதிய காயப்புண், புண்வீக்கம் இவை நீங்கப் பூசி நலம்பெறுவர்; மஞ்சள் பொடியினை அளவாக (10 அல்லது 12 குன்றுமணி அளவு) நீரொடு உண்டு, வயிற்றுப்பொருமல், வயிற்றுவலி, மாறல் சுரம் முதலியன நீங்கப்பெற்று வன்மை பெறுவர்; அந் நீரை அருந்தின் காமாலை போம் என்பர்.

கிராமங்களில் பலர் தூய வெள்ளாடையினை மஞ்சள் நீரில் நனைத்து உலர்த்தி அதை அணிவதைக் காண்கின்றோம். அதனால் வாதநீர்ச்சுருக்கு, இருமல், நச்சுச்சுரம், மாறாத தினவு, தனிச்சுரம், மலக்கட்டு முதலியன நீங்கும் என்பர். கண்நோய் பெற்றவர் இந்த உலர்ந்த மஞ்சள் துணியினை அடிக்கடி கண்ணில் ஒற்றி அந்நோய் நீங்கப் பெறுவதைத் தமிழ்நாட்டு நகரங்களில் இன்றும் காண்கின்றோம்.

இவ்வாறு பலவகையில் மக்கள் உடலுக்குப் பயன்படுவதோடு மருந்தாக, பொலிவுதரும் பொருளாக, காப்புப் பொருளாக, கற்புப் பொருளாக அமைவதோடு, அவர்தம் வீடுகளைத் தூய்மையாக வைத்திருக்கவும் மஞ்சள் உதவுகிறது. தமிழ்நாட்டில் விழாக்களுக்குப் பஞ்சமில்லை; இதோ சரஸ்வதிபூசை, தீபாவளி, கார்த்திகை, பொங்கல் என்று மாதந்தொறும் விழாக்கள் வருகின்றன. அந்நாளிலெல்லாம் வீடுகளைத் துப்புரவு செய்து எங்கும் மஞ்சள் நீர் தெளிக்கிறோம் (நகரங்களிலும் உண்டு). வாயிற் படிகளுக்கெல்லாம் மஞ்சள்பூசி, அதன்மேற் குங்குமத்தையும் இடுகிறோம். பொங்கல் நாளில் மஞ்சள் செடியினை வைத்து, மஞ்சள் இலையில் சோறு இட்டு, நாம் சூரியனை வழிபடுகிறோம். வெள்ளிக்கிழமைதொறும் மஞ்சள்பூசி குங்குமப் பொட்டிட்டு வழிபடும் பழக்கம் உண்டு. இதென்ன, இவ்வளவு நல்ல மருந்தை வாயிற் படிக்கும் பிற மரங்களுக்கும் இட்டுப் பாழாக்குகிறார்களே என்று எண்ணத் தோன்றும், அந்த எண்ணம் தவறாகும்.

தமிழன் கலைநலம் கண்டவன் கல்லிலும் மரத்திலும் பிறவற்றிலும் நுண்ணிய வேலைப்பாடுகளைச் செய்து அதை என்றென்றும் வாழவைத்துக்கொண்டிருக்கிறான். நாட்டிலும் காட்டிலும் மலையிலும் கோயிலிலும் காட்டிய கலைநலத்தை வீட்டிலும் நிலைநாட்ட விரும்பினான். வாயிற்படிகளில் பலப்பல சித்திர வேலைப்பாடுகளைச் செய்தான். அவற்றுள் சிறுசிறு முழைகள்-உள்ளீடுகள்-புறைகள் எப்படி எப்படியோ நுணுகி அமைத்தான். அவற்றுளெல்லாம் கால இடையீட்டால் சிறுசிறு பூச்சிகள் தங்கி முட்டையிட்டு, இனப்பெருக்கம் செய்து மக்கள் வாழ்விற்கு ஊறு விளைக்கும் அல்லவா! அவற்றைப் போக்கவே இந்த மஞ்சள் பூச்சு. இது அந்த நச்சுப் புழுப்பூச்சிகளை வளரவிடாமல் அழிப்பதோடு, வாயில்களுக்கு அழகையும் நல்லமைப்பையும் தருகின்ற தல்லவா!

இன்னும் எத்தனையோ வகையில் இதன் உபயோகத்தையும் பயனையும் எழுதிக் கொண்டு போகலாம். எனினும் இந்த அளவோடு நின்று, திசைமாறி எங்கோ எதை எதையோ நாடிச்செல்லும் தமிழ் மக்களை -சிறப்பாக மகளிரை-வெற்று நாகரிக வேடிக்கை வாழ்வினை மறந்து-மஞ்சள் குங்குமத்தோடு அமைந்த நல்ல உடல்நலத்தையும் உள உரத்தையும் செம்மை வாழ்வினையும் நீண்ட ஆயுளையும் பெற்றுச் சிறக்க முயலுங்கள் என்று வேண்டி அமைகின்றேன்.

—உலகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=ஓங்குக_உலகம்/006-026&oldid=1135786" இலிருந்து மீள்விக்கப்பட்டது