ஓங்குக உலகம்/015-026

விக்கிமூலம் இலிருந்து

15. அறிஞரும் ஆவர்

மாண்புமிகு தமிழக முதல்வர் மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி. இராமச்சந்திரன், அவர்கள் இதுவரையில் எந்தத் தலைவரும் பெற்றிராத பெரும் புகழைப் பெற்றுவிட்டார். மறைந்தும் என்றும் வாழும் ஏற்றம் பெற்ற அவரை நான் நாற்பது ஆண்டுகளாக அறிவேன். யாரிடமும் நெருங்கிப் பழகும் தன்மையோ அன்றி அவ்வாறு பழகுவதை மற்றவர் தெரியப் பறை சாற்றுவதோ என் வழக்கமில்லை யாதலால் எங்கள் உறவு பற்றிப் பலருக்குத் தெரியாது. அவரை நேரில் கண்டு பேசியறியாத-நன்கு புரிந்துகொள்ளாத எத்தனையோ பேர் அவரைப் பற்றிப் பேசினார்கள். பலப்பல பண்புகளைப் பாராட்டினார்கள். அவர்கள் அனைவரும் அவர்தம் பிரிவினை எண்ணி உளமுருகிப் பேசியவை என்முன் நிழலிடுகின்றன.

1947இல் நான் எங்களூர் வாலாஜாபாத்தில் உயர் நிலைப்பிள்ளியினைத் தொடங்கத் திட்டமிட்டேன். அவ்வூர்ப் பஞ்சாயத்துக் குழுவின் தலைவரும் என்னுடன் பயின்றவருமான திரு. தேவராசன் தலைவராகவும் நான் செயலாளனாகவும் பிற உறுப்பினர்களும் கொண்ட குழு அமைக்கப்பெற்றது. எங்கள் இருவருக்கும் உற்ற நண்பரான பேரறிஞர் அண்ணா அவர்கள் அப் பள்ளிக்கென இரு நாடகங்கள் நடத்தி, அவற்றின் வருவாயினை அளித்தனர். (இது பற்றி என் இரு நூல்களிலும் கட்டுரைகளிலும் குறித்திருக்கிறேன்.) திரு தேவராசன் சென்னையில் வாணிபம் நடத்திவந்தார். நானும் பச்சையப்பரில் பணி ஏற்று அதற்குச் சற்று முன்தான் (1944) சென்னை வந்தேன். அவருடைய வீட்டில் (கோவிந்தப்ப நாயக்கன் தெரு 182 என எண்ணுகிறேன்) நாங்கள் இருவரும் அண்ணா அவர்களும் அடிக்கடி பேசிக் கொண்டிருப்போம். அதற்கு முன்பே-இளமை தொட்டே அண்ணாவும் நானும் ஒன்றிய நண்பர்களாக இருந்து வந்தோம். காஞ்சியில் எங்கள் இரு அலுவலகங்களுக்கும்-திராவிட நாடு-தமிழ்க் கலை-நெருங்கிய தொடர்பு உண்டு. அப்போது நமது மாண்புமிகு முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் அண்ணாவைக் காண அடிக்கடி கோவிந்தப்ப நாயக்கன் தெரு வீட்டிற்கு வருவார்; வந்து அவர் முன் கைகட்டியே நின்றிருப்பார். ‘உட்கார்’ என்று அண்ணா சொன்னாலும் உட்காரமாட்டார், அண்ணாவின் முன் அவர் உட்கார்ந்து நான் பார்த்ததே இல்லை.

அண்ணா அவர்களின் கட்சி வளர்ச்சிக்குப் பொருளை வாரி வழங்கியவர் இருவர், ஒருவர் எம். ஜி. ஆர்; மற்றவர் தேவராசன். ‘நாளை எனக்குக் கட்சிச் செலவுக்காக இவ்வளவு வேண்டுமே’ என்பார் அண்ணா அவர்கள். மறுநாள் ‘எம்.ஜி.ஆர்.’ பணத்துடன்தான் வருவார். இவ்வாறு அந்த நாளிலேயே அள்ளி வழங்கிய வள்ளலாகவும் அண்ணா அவர்களின் முதல் தொண்டராகவும் அண்ணாவின் நண்பர்களுக்கு உற்ற நண்பராகவும் விளங்கினார்.

பின் நான் திரு.வி.க. உயர்நிலைப் பள்ளியினை ஷெனாய் நகரில் தொடங்கிய காலத்து, அவரை அணுகி நின்றபோது, உடனே ஐயாயிர ரூபாய்க்கு ஒரு காசோலை தந்து வாழ்த்தி அனுப்பினார். பின் 1958ல் பள்ளிக்கு வந்து வாழ்த்தியு முள்ளார். அப்படியே நான் பச்சையப்பரில் பணியாற்றியபோது, இயல், இசை நாடகப் போட்டிகளுக்குச் சுழற் கோப்பைகளும் பரிசுகளும் நிறுவிய போது ஓரங்க நாடகப் போட்டிக்கு மிக உயரிய சுழற் கோப்பை ஒன்றையும் செலவுக்கென வைப்புநிதியினையும் அளித்ததோடு, எங்கள் வேண்டுகோளுக்கிணங்கி, முதலாண்டு விழாவில் தலைமையேற்றும் வாழ்த்தியருளினார். இப்படியே கேட்டவர்களுக்கெல்லாம் வாரி வழங்கிய வள்ளலாக அவர் வாழ்ந்தார். வாழ்கிறார்.

திரு டாக்டர் மு.வ. அவர்கள் மறைந்த நாளன்று, இவர் முன்பே வீட்டிற்கு வந்து பார்த்துவிட்டுச் சென்றாலும், பின் சுடுகாட்டிற்குத் திரும்ப வந்தார், கடைசியாக மரியாதை செலுத்துவதற்கு. எனினும் இவரைக் காணவே பெருங்கூட்டம் கூடினமையால் சிதை அருகேயும் செல்லாமல், தள்ளி இருந்த என்னைக் கட்டித் தழுவி தம் ஆறுதலைச் சொல்லி அகன்றார். தமிழ் வளர, தமிழர் நிலை உயர இவர் செய்தன பல-பலப்பல.

1977இல் இவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபிறகு இவர் செய்த தொண்டினை நாடறியும். தமிழ் அறிவும் மேலும் அறியவேண்டும் என்ற அவாவும் உடையவர் இவர். ஒருநாள் காலை இவர் வளர்ப்பு மகள் திருமதி சானகி சிவராமன் அவர்கள் என்னைத் தொலைபேசியில் அழைத்து ‘ஐயா! சேஷா உங்களோடு பேசவேண்டுமாம்,’ என்றார்கள். எதற்கோ என்ற வியப்போடும் அச்சத்தோடும் சொல்லுங்கள் என்றேன்-ஒன்றை இங்கே சொல்லவேண்டும் ‘சேஷா’ (சேச்சா) என்பது குடும்பத்தார் அவரை அழைக்கும் செல்லப் பெயர். அவர் குடும்பத்தைச் சேர்ந்தோருக்கும் என் போன்ற ஒரு சிலருக்கு மட்டுமே அது தெரியும். முதலில் அது விளங்க வில்லை. பின் நானே விளக்கினேன். அந்த ஆதிசேடன் உலகைத் தாங்குவது போன்று இன்று இவ்வுலகை இவர் தாங்குவதால் இச் சேஷா என்று கூறுவது மிகவும் பொருந்தும் என்றேன்.

தொலைபேசியில் என்னைக் கூப்பிட்ட இவர் ‘அ.மு.ப. ஐயாவா’ என விளித்து ஒரு பாட்டினைச் சொல்லி (இரண்டு அடிகள்) இது இன்னார் பாடியது தானே என்றார். நான் ‘ஆம்’ என்றேன். அதற்குப் பொருள் சொல்லிச் சரிதானே என்றார். ‘சரி! என்றேன். இதே கருத்தினையுடைய வேறு பாடல்கள் உள்ளனவா என்றார். நான் வேறு ஒருவர் பாடிய பாடலைச் சொல்லி விளக்கினேன். மிகவும் மகிழ்ந்தார். மற்றொருமுறை தொலைபேசியில் அழைத்து ஒரு பாடலைச் சொல்லி ‘இதற்கு இவ்வாறு பொருள் எழுதியிருக்கிறது. ஆனால் இவ்வாறு சொன்னால் சிறப்பாக இருக்குமல்லவா’ என்றார். நான் மலைத்தேன். உண்மையிலேயே அவர் கருத்து மிகச் சிறந்ததாக இருந்தது. மகிழ்ச்சியோடு அக்கருத்து மிகச் சிறந்தது என்றேன். அவர் தமிழ் வளர்த்த புரவலராக மட்டுமின்றித் தமிழ் உணர்த்தும் புலவராகவும் இருந்தார்.

எங்கள் வள்ளியம்மை பள்ளிக்கு இவர் உதவிய உதவியை என்றென்றும் மறக்க முடியாது. பள்ளிக்கு வரவில்லை யாயினும் தம் கையாலேயே இரண்டு முழுப் பக்கங்கள் எழுதி வாழ்த்தனுப்பிய அவர் தம் அன்பினை எப்படி அறுதியிட முடியும்! அதைக் காண்பார் யாரும் ‘அவராதம் கையாலேயா இவ்வளவு நீண்ட வாழ்த்தினை எழுதினார்’ எனக் கண்டு கண்டு இன்றும் வியக்கின்றனர். அன்பு திரு. பரமசிவானந்தம் எனத் தொடங்கி என் அன்னையின் பெயரால் அமைந்த தொண்டினைப் பாராட்டித் ‘தங்களைப் போன்றோர் தான், தமிழகத்தையும் தமிழர்களையும் தமிழையும் வாழ வைக்கும் பணியினைச் செய்கிறீர்கள்’ என்று கோடிட்டு வாழ்த்தியுள்ள பெருமைக்கு என்னை உரியவனாக்கினார்கள் (24-2-82)

எங்கள் பள்ளிக்கென ஒதுக்கிய நிலத்தினை வேறு சிலர் பறித்து உரிமையாக்கிக் கொள்ள நினைத்தனர். அவர்கள் பெரும் செல்வமும் செல்வாக்கும் பெற்றவர்கள். உயர் பதவிகளில் இருந்தவர்கள். அவர்களுடன் நான் போட்டியிட முடியாது திகைத்தேன். எனினும் நியாயம் என்பக்கம் இருந்ததால் அரசிடம் முறையிட்டேன். மாண்புமிகு புரட்சித் தலைவர் அவர்கள், ‘காலம் கருதி இடம் கருதி செய்வினையின் மூலம் கருதி’ ஒன்றரை யாண்டுக்காலம் அமைதியாக இருந்து அதை எங்களுக்கே தந்து உதவினார்கள். நாங்கள் மகிழ்ந்ததைக் காட்டிலும் ‘அறம்வென்றது’ என்று மகிழ்ந்தார் அன்று வீட்டுவசதி வாரிய அமைச்சராக இருந்த மாண்புமிகு திரு. இராகவானந்தம் அவர்கள்.

தமிழறிஞர்களுக்கு அவர்கள் செய்த மற்றொரு உதவி மறக்கற்பாலதன்று. மருத்துவக் கல்லூரியில் (M.B.B.S. வகுப்பிற்கு) தமிழறிஞர் தம் பிள்ளைகளுக்கெனத் தனியாக இடம் ஒதுக்கிய பெருமை நம் முதல்வர் அவர்களுக்கே உண்டு. தொடக்கத்தில் மூன்று இடமாக இருந்தது; இன்று ஐந்து இடமாக உயர்ந்துள்ளது. இந்த ஒதுக்கு முறையிலே முதல் முதல் இடம் பெற்றவர் என் பெயர்த்தியே என்பதையும் பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன். இன்று பிற மாநிலங்களிலும் இம்முறை பின்பற்றப்பெறுகின்றது.

தமிழ்ப் பல்கலைக்கழகம் கண்டவர் நம் முதல்வர். தமிழின் தொன்மை மேன்மை இனிமை முதலியவற்றை வளர்க்க வழிகண்ட இவர்தம் இதயத்தை என்னென்று போற்றுவது! அத் தமிழ்ப் பல்கலைக்கழக முதலாவது ஆட்சிக்குழுவில் என்னையும் உறுப்பினனாக்கிப் பெருமைப் படுத்தினார்கள். ஒருமுறை அப் பல்கலைக்கழகக் கூட்டம் சென்னையில் நடந்தது. முதல்வர் தலைமை தாங்கினார். கல்வி அமைச்சரும் இலங்கை அமைச்சர் ஒருவரும் (திரு. தொண்டைமான் என எண்ணுகிறேன்) வந்திருந்தனர். நிகழ்ச்சிகள் முறையாக நடைபெற்றன. ஆயினும் தலைவர் பேசவில்லை. அவர் கருத்துக்கு மாறாகப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஒரு செயலைச் செய்து விட்டார். அந்த நிலையில் அவர் பேச விரும்பவில்லை போலும். எனினும் கையில் பேசுவதற்குரிய குறிப்புச் சுருள் இருந்ததைக் கண்டேன். கல்வி அமைச்சர் அவர்கள் சொல்லியும் பேசவில்லை. நான் அச்சத்தோடும் பணிவோடும் மெல்ல எழுந்து, ‘ஐயா! தாங்கள் பேசா விட்டால் எங்கள் மனம் அமைதியுறாது ஏன்? உங்களுக்குந்தான்! குறிப்பையும் கொண்டு வந்திருக்கிறீர்கள். வாழ்த்துங்கள்’ என்றேன். அவர்களும் உடனே எழுந்து பதினைந்து நிமிடம் பேசினார்கள். மற்றவர் மாறுபட்ட நிலையினையும் பிறவற்றையும் சுட்டியதோடு, பல்கலைக்கழக வளர்ச்சி பற்றிப் பல விளக்கம் தந்தார்கள். என் வேண்டுகோளை ஏற்று அவர்கள் பேசியது, எனக்கு ஓர் உயர்வையும் பெருமையும் தந்தது என்றால் மறுக்க முடியுமா?

நான் அடிக்கடி யாரையும் சென்று பார்ப்பதில்லை; அதிலும் முதல்வர் அவர்களைக் காண்பதரிது. எங்கேனும் கூட்டங்களில் காண்பார். நான் சில சமயம் அவருக்குப் பின் இரண்டாவது வரிசையில் இருப்பேன். புறப்படும் போது பின் திரும்பி என் கையைப் பிடித்துக் குலுக்கி வாழ்த்திவிட்டுச் செல்வார். (இருமுறை நினைவில் உள்ளது, மதுரை மாநாடு, திரு.வி.க. நூற்றாண்டு விழா) பிறகு அவர்கள் ஒருமுறை சொன்னார்கள், அனைவர் முன்னிலையிலும் கைகுலுக்கித் தழுவிப் பேசினால், காணும் பலர் ‘முதல்வர் உங்களுக்குத்தெரியும், இதைச் செய்யச் சொல்லுங்கள் அதைச் செய்யச் சொல்லுங்கள்’ எனப் பின்னர் உங்களைத் தொந்தரவு செய்வார்கள். அந்தச் சங்கடத்திலிருந்து விடுவிக்கவே அப்படிச் செய்வேன் என்றார்கள். நான் அந்த வகையிலும் தொல்லைப்படக்கூடாது என்று காட்டிய அவர் பரிவினை எண்ணி எண்ணி உள்ளம் உருகினேன்.

அவர் கடமைக்காகவே வாழ்ந்தார். கடமைக்காகவே உயிர்விட்டார். மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு அவர் பெயரை வைக்க விரும்பவில்லை என்பதை நானறிவேன். வாழும் மனிதர் பெயரால் நிறுவனங்கள் கூடாதென வகை செய்தவர்-முறை செய்தவர்-இதைச் செய்வாரோ? சில நிலையங்கள் அந்த முறையில் பெயர் மாற்றம் பெற்றன. எனினும் இவர் விருப்பமின்றேனும் அது உருப்பெற்றது. ஆயினும் அவர் விரும்பவில்லை. எனவே அதுபற்றிய துணைவேந்தர் நியமனத்திலும் அவர் கையொப்பம் இடவில்லை. (முன்னாள் இரவு, செயலர் கேட்டுக்கொண்ட போதும் பார்த்துக்கொள்ளலாம் என ஒதுக்கியிருக்கிறார்.) அவர் எண்ணி எண்ணி ஓய்ந்தார். தான் செய்த முறையைத் தானே மாற்றுவது முறையாகுமா எனச் சிந்தித்தார். ஒன்று அதைவிடவேண்டும்; அல்லது உயிர் விடவேண்டும். அதை எப்படி விடுவது? சட்டமன்றம் நிறைவேற்றி, நாட்டுத்தலைவர் விழா ஆற்ற நாளை வருகிறார். எனவே அதற்குள் நாம் செல்லுதலே முறை என அவர் உள்ளம் எண்ணிற்று. எண்ண்யது முடிந்தது.

கொடுத்த வரத்தை இல்லை என்று சொல்லுவதைக் காட்டிலும் இறப்பதேமேல் என்று அன்று தசரதன் இறந்தான். அவர் மகன் பெயர்தாங்கிய, ஜானகியின் கணவனாகிய நம் புரட்சித்தலைவர் தாம் வகுத்த கொள்கையினை மீறுவதிலும் மறைவதே மேல் எனத் தன் வாழ்வைச் சுருக்கிக் கொண்டார். ஆம்! அன்று அவர் மறைவில் ஒரு பெருங் காவியம் எழுந்தது. இன்று “எம்.ஜி.ஆர்.” மறைவில் ஒரு நிலைத்த காவியம் எழும்! அவர் புகழ் வாழும்! அவர் பணிகள் வளரும்! அவர் தொட்ட பணியெல்லாம் துலங்கும்! வாழ்க எம்.ஜி.ஆரின். வற்றாத புகழ் நலம்!
— பிப்ரவரி, 1988

"https://ta.wikisource.org/w/index.php?title=ஓங்குக_உலகம்/015-026&oldid=1135827" இலிருந்து மீள்விக்கப்பட்டது