திருக்குறள் புதைபொருள் 2/004-010
4. நினைக்கப்படும்
"அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்."
என்பது திருக்குறளில் ஒரு குறள். இது ‘அழுக்காறாமை’ என்ற தலைப்பில் வந்த ஒன்று. அழுக்காறாமை என்பது ‘பொறாமை கொள்ளாமை’ என்பதாகும்.
அழுக்கு ஆறு என்பது கலங்கிய வழி, கெட்ட வழி, தீ நெறி, பொய், பொறாமை என்ற பொருள்களைப் பெற்று, நல்ல ஆறு என்பதன் எதிர்மறையாக நிற்பது.
முன்னே பொறையுடைமை என்ற தலைப்பில் பொறுமையின் பெருமையைக் கூறி, பின்னே வெஃகாமை என்ற தலைப்பில் பிறர் பொருளைத் தவறான வழியில் அடையக் கருதும் இழிநிலையைக் கூறி, இடையில் இத் தலைப்பில் அழுக்காற்றில் வாழ்கின்ற ஆற்றாமை என்னும் பொறாமையின் இழிநிலையை வள்ளுவர் எடுத்து இயம்புவது பெரிதும் நயமுடையதாகும்.
இக் குறளிலுள்ள அவ்விய, செவ்விய என்ற இரு சொற்களும் அடைமொழிகள். அவ்விய நெஞ்சம் என்பதனால், செவ்விய நெஞ்சம் என்பதும் கூறாமற் கூறியதாகக் கொள்ளப்படும்.
அவ்விய நெஞ்சத்தான் என்பவன் பொறாமை, கொண்ட உள்ளத்தினன் மட்டும் அல்ல, கோணிய நெஞ்சத்தையும் உடையவன் என்பதும்; செவ்விய நெஞ்சத்தான் என்பவன் நேர்மையான உள்ளமுடை யவன் மட்டும் அல்ல, நிமிர்ந்த நெஞ்சையும் உடையவன் என்பதும் பெறப்படும். இதிலிருந்து, பொறாமை கொண் டவனுடையவும் கொள்ளாதவனுடையவும் நெஞ்சு உறுப்புக்களே அவர்களைக் காட்டிவிடுமென்பது வள்ளுவர் கருத்தெனத் தெரிகிறது.
அவ்விய செஞ்சத்தான் என்பவன் வளைந்த நெஞ்சினன், கோணல் நெஞ்சினன், அழுக்காற்றில் மூழ்குபவன். மனக்கோட்ட முள்ளவன், தீ நெறியில் நடப்பவன் என்றுமாவான்.
செவ்விய நெஞ்சத்தான் என்பவன் நிமிர்ந்த நெஞ்சினன், பரந்த மார்பினன், நல்லாற்றில் மூழ்குபவன். நேர்மையான உள்ளத்தினன், நல்வழி நடப்பவன் என்று மாவான்.
ஆக்கம் என்பது ஆகுதல், பெருகுதல், ஊக்கம், நிறைவு. மகிழ்ச்சி, எழுச்சி, செல்வம் எனப் பொருள் தரும். கேடு என்பது அழிவு, தேய்வு, சோர்வு, குறைவு, துன்பம், வீழ்ச்சி, வறுமை எனப் பொருள்படும்.
நினைக்கப்படும் என்பது, இருசீர் கொண்டு முடியும் ஒரு சொற்றொடர். இதன் பொருள் நினைத்துப் பார்க்க வேண்டிய ஒன்று என்பது. இது இக்குறளிலிருந்து நினைத்துப் பார், ஆராய்ந்து உணர் எனக்கூறி, நம்மையெல்லாம் மேன்மேலும் சிந்திக்கத் தூண்டிக் கொண்டிருக்கின்றது.
என்பர், செய்வர், செய்யார், செயத்தக்க, கொள்ளற்க, வேண்டற்க, உண்டு, இல்லை, நன்று, அன்று, அரிது, பெரிது, சிறிது, வறிது, நல்லது, தீது என்றே முடிவு கட்டிக் கூறிவந்த வள்ளுவர், இக்குறளில் மட்டும் ஆக்கமும் கேடும் பற்றி எதுவுங் கூறாமல், நம்மையே நினைத்துப் பார்க்கும்படி விட்டுவிட்டது எதன் பொருட்டு? நினைத்தீர்களா? நினைத்துப் பாருங்கள். எந்தெந்த வகையில்தான் நினைப்பது?
அவ்விய நெஞ்சத்தானுக்கு ஆக்கமும், செவ்விய நெஞ்சத்தானுக்கு கேடும் வருமா? எப்படி வரும்? சிந்தித்துப் பார்!
அவ்விய நெஞ்சத்தானுக்கு ஆக்கமும், செவ்வியானுக்குக் கேடும் வாராதே! எவ்விதம் வரும்? சிந்தித்துப் பார்!
அவ்வியனுக்கு ஆக்கமும், செவ்வியனுக்குக் கேடும் ஏன் வந்தது? சிந்தித்துப் பார்!
அவ்வியனுடைய ஆக்கம் செவ்வியனுடைய கேட்டிலும் சிறந்ததா? சிந்தித்துப் பார்!
அவ்வியனுடைய ஆக்கமும் செவ்வியனுடைய கேடும் சமனாக இருக்குமா? சிந்தித்துப் பார்!
அவ்வியனுடைய ஆக்கம் செவ்வியனுடைய கேட்டை விடக் குறைந்ததா? சிந்தித்துப் பார்!
கெட்டவர் செல்வம் பெறுவதும், நல்லவர் வறுமை அடைவதும் ஏன்? பழவினையினால்தானா? சிந்தித்துப் பார்!
கெட்டவர் வறுமையடைவதும், நல்லவர் செல்வம் பெறுவதும்கூடப் பழவினையினால்தானா? சிந்தித்துப் பார்!
பழவினை என்று ஒன்று இருக்குமா? இருந்தாலும் அது உணர்வு, அறிவு முதலிய வேறு பலவற்றிற்கும் இருக்கலாமே தவிர, ஓயாது உருண்டு ஓடிக்கொண்டும் வந்துகொண்டும் இருக்கும் பொருளுக்கும் அதற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? சிந்தித்துப் பார்!
அவ்வியான் பெற்ற ஆக்கம் உண்மையிலேயே ஆக்கந்தானா? செவ்வியான் பெற்ற கேடும் உண்மையிலேயே கேடுதானா? சிந்தித்துப் பார்!
பொறாமைக் குணமுடைய அவ்வியன் தான் பெற்ற செல்வத்தை ஒரு செல்வமாகவே கருதமாட்டானே! கருதினால், அவன் அவ்வியனாக இருக்கமாட்டானே! அவனே தன் செல்வத்தை ஆக்கம் என்று கருதாத போது, நீ கருதுவது எப்படி? சிந்தித்துப் பார்?
பொறுமையுள்ளம் படைத்த செவ்வியன் தான் அடைந்த துன்பத்தை ஒரு துன்பமாகவே கருத மாட்டானே! கருதினால், அவன் செவ்வியனாக இருக்க மாட்டானே! அவனே அதைக் கேடு என்றும், துன்பம் என்றும் கருதாதபோது, நீ கருதுவது எப்படி? சிந்தித்துப் பார்!
ஆக்கம் அடைந்துள்ள அவன் அவ்வியன்தானா? கேடு அடைந்துள்ள அவன் செவ்வியன்தானா? அவனே அப்படிக் கருதுகின்றனா? நீ அப்படி நினைக்கிறாயா? சிந்தித்துப் பார்!
உள்ளபடியே அவ்வியரில் ஆக்கம் அடைபவரும், செவ்வியரில் கேடு அடைபவரும் எங்கேனும் ஒருவர் இருவர் இருப்பாரா? எல்லோருமே அப்படித்தானா? சிந்தித்துப் பார்!
அவ்வியனுக்கு வந்திருக்கும் ஆக்கம் அவனைக் கெடுக்க வந்திருக்குமோ? செவ்வியனுக்கு வந்திருக்கும் கேடு அவனை உயர்த்த வந்திருக்குமோ? சிந்தித்துப்பார்!
வறுமை வந்ததன் பொருட்டுத் தீ வழி நடப்பவனுக்கு வந்த செல்வம், அவனைத் திருத்த இருக்காதா? செல்வம் வந்ததன் பொருட்டுத் தவறி நடக்கும் நல்லவனுக்கு வந்த வறுமையும் அவனைத் திருத்த இருக்காதா? சிந்தித்துப் பார்!
கெட்டவனுக்கு வந்த செல்வம் கெட்ட வழியில் தானே வந்திருக்கும். இது நல்லதா? நல்லவனுக்கு வந்த வறுமை நல்ல வழியில்தானே வந்திருக்கும். இது கெட்டதா? சிந்தித்துப் பார்!
அவ்வியனுக்கு ஆக்கம் வந்தால் அது அவனுக்கும் பயன்படாது. செவ்வியனுக்குக் கேடு வந்தால், அது அவனையும் வருத்தாது. இவற்றில் எது சிறப்பு? சிந்தித்துப் பார்!
அவ்வியனுக்கு வந்த ஆக்கம் செவ்வியனிடத்து இருந்தால் என்னவாகும்? செவ்வியனுக்கு வந்த வறுமை அவ்வியனிடத்திருந்தால் என்னவாகும்? நினைத்தாலே நெஞ்சம் நடுக்குறுமே. நடுக்குறாமல், சிந்தித்துப்பார்!
அவ்வியனுடைய ஆக்கத்தையும், செவ்வியனுடைய ஆக்கத்தையும் ஒப்பு நோக்கு. இவை நச்சுமரமும் பயன் மரமும் போன்று இல்லையா? சிந்தித்துப் பார்!
நல்வழி நடப்பவனுக்கு வந்த கேட்டையும், தீவழி நடப்பவனுக்கு வந்த கேட்டையும் ஒப்புக் நோக்கு. பொன்னின் குடமுடைந்தால் பொன்னாகும், மண்ணின் குடமுடைந்தால் என்னாகும்? சிந்தித்துப் பார்!
ஆக்கம் என்பது அது உண்டாக்கும் மகிழ்ச்சியையும், கேடு என்பது அது விளைவிக்கும் துன்பத்தையும் பொறுத்தது. இதில் பொறாமைக் குணமுள்ளவன் தான் பெற்ற செல்வத்தால் மகிழ்ச்சியடைகிறானா? அஃதில்லாதவன் தான் பெற்ற வறுமையால் துன்பம் அடைகிறானா? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? சிந்தித்துப் பார்!
சிறுமுள் தைத்தாலும் வாடிவருந்தும் நரியையும், உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப் பெற்றபோதும் பீடுநடை நடந்து தன் பெருமையை நிலைநிறுத்தும் யானையையும் காணும்பொழுது, செவ்வியனுடையதைக் கேடு என்று கூறுவதெப்படி? சிந்தித்துப் பார்!
“நினைக்கப்படும்” என்ற ஏழு எழுத்துக்களைக் கொண்ட ஒரு சொற்றொடர், இக் குறளிலிருந்து “நினைத்துப் பார்க்கவேண்டியவை” என்ற பொருளைத் தந்து, இத்தனை வகையாகவும் நம்மை நினைத்துப் பார்க்கச் செய்துவிட்டது. இக் குறள் தரும் பொருள் இதுதானா? இது சிந்தனையைத் தூண்டிவிடுவதோடு நின்றுவிட்டதா? “முடிவு” ஒன்றுமில்லையா? என்று கேட்கிறீர்கள்? இதோ முடிவு!
“அவ்விய நெஞ்சத்தானுக்கு ஆக்கமும், செவ்வியானுக்குக் கேடும் வராது. வந்தாலும், அவை ஆக்கமும் கேடுமாயிராது. இருந்தாலும், அவர் அவ்வியராகவும், செவ்வியராகவும் இரார். இருந்தாலும், அவர்கட்கு ஆக்கமும் கேடும் பழவினையால் வராது. ஒருக்கால் வந்தாலும் நிலைத்து நில்லாது” என்பதே. இக் குறளின் பொருள். இதனை இக் குறளிலுள்ள “நினைக்கப்படும்” என்ற இரு சொற்களும் விளக்கிக் கொண்டிருக்கின்றன. நினைக்க-நினைத்துப் பார்க்க, படும்-புலனாகும்.
அது மட்டுமல்ல. “நீ கண்ணாற் காண்கின்ற ஆக்கத் தினையும், கேட்டினையும் ஆக்கம் என்றும், கேடு என்றும் கருதிவிடாதே! இவை நினைக்க-நினைத்துப் பார்க்கக் கெடும்-இல்லாமற் போய்விடும்” என்பதும் இதன் மற்றொரு பொருளாகும்.
“இதுவா இக் குறளின் பொருள்? இதுதானா வள்ளுவரின் கருத்து” என்று ஐயப்படுவார்க்கும், இதனை அடுத்துள்ள குறள் வெளிப்படையாக விடை கூறிக் கொண்டிருக்கிறது. அது,
“அவ்வித்து அகன்றாரும் இல்லை, அஃதில்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்” என்பது. இதன் பொருள், “பொறாமை கொண்டவர் வாழ்ந்தது மில்லை; அஃதில்லாதவர் கெட்டது மில்லை” என்பதே. இதுவும் நினைக்கப்படும். நினைத்துப் பார்த்தால் விளங்கும்.
படித்தீர்களா? நினைத்துப் பார்த்தீர்களா? பொருள் நன்றாய் விளங்கிற்றா? இன்னும் ஒருமுறை படியுங்கள், இக்குறளை.
"அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்."
எப்படிக் குறள்? எத்தகையர் வள்ளுவர்? எப்படி அவரது நினைவு உள்ளம்? இந்த ஒரு குறளே உங்களின் கோணிய நெஞ்சை நிமிர்ந்த நெஞ்சாக ஆக்கப் பயன்படுமானால், பிற குறள்கள் என்னென்ன பயனைத் தரும்? எண்ணிப் பாருங்கள்! எடுங்கள் குறளை படியுங்கள் நன்றாக! மேற்போக்காக அல்ல, ஊன்றிப் படியுங்கள்; உண்மை விளங்கும். வாழ்வும் வளம் பெறும். ஏனெனில் குறள் ஒரு வாழ்வு நூல்!
வாழ்க வள்ளுவர்!
வளர்க குறள்நெறி!