உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்ப் பழமொழிகள் 1/ஊ

விக்கிமூலம் இலிருந்து

ஊ என்றாளாம் காமாட்சி; ஒட்டிக் கொண்டளாம் மீனாட்சி.

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு.

ஊக்கமது கைவிடேல்.

(ஆத்தி சூடி.)

ஊசல் ஆடித் தன் நிலையில் நிற்கும். 4560

ஊசி ஒரு முழத் துணியையாவது கொடுக்கும்; உற்றார் என்ன கொடுப்பார்.

(உற்றார் அதுதானும் கொடார்.)

ஊசிக் கண்ணிலே ஆகாயம் பார்த்தது போல.

(பார்க்கிறதா?)

ஊசிக் கணக்குப் பார்க்கிறான்.

ஊசிக்கு அடிப்புறம் கனமா? தலைப்புறம் கனமா?

ஊசிக்கு ஊசி எதிர் ஏறிப் பாயுமா? 4565

(எதிர் ஊசி பாயாது.)

ஊசிக்குக் கள்ளன் உடனே வருவான்.

ஊசிக் குத்தின்மேல் உரல் விழுந்த கதை.

ஊசி குத்திக் கொண்டவன் அழாமல் இருக்கப் பார்த்தவன் அழுவானேன்?

ஊசி கொண்டு கடலாழம் பார்ப்பது போல,

ஊசி கொள்ளப் போய்த் துலாக் கணக்குப் பார்க்கிறதா? 4570

ஊசி கோக்கிறதற்கு ஊரில் உழவாரம் ஏன்?

ஊசித் தொண்டையும் தாழி வயிறும்.

(கலப்பட்ட வயிறும்.)

ஊசி நூலால் இறுகத் தைத்தாலும் தேங்காய்க்கு மஞ்சள் இல்லை என்றாளாம்.

ஊசி பொன்னானால் என்ன விலை பெறும்.

ஊசி போகிறது கணக்குப் பார்ப்பான்; பூசணிக்காய் போகிறது தெரியாது. 4575

ஊசி போலத் தொண்டை; கோணி போல வயிறு.

ஊசி போலத் தொண்டையும் சால் போல வயிறும்.

(உஷ்டேரி போல வயிறும்.)

ஊசி போல மிடறும் தாழி போல வயிறும்.

ஊசி மலராமல் சரடு ஏறுமா?

ஊசி மலிவு என்று சீமைக்குப் போகலாமா? 4580

ஊசி முனையில் தவம் செய்தாலும் உள்ளதுதான் கிடைக்கும்.

ஊசி முனையிலே நிற்கிறான்.

ஊசி மூஞ்சியை ஊதை என்ன செய்யும்.

(ஊசி மூஞ்சி-தூக்கணங்குருவி.)

ஊசியின் காதில் ஒட்டகம் நுழையுமா?

ஊசியும் அல்லவோ ஒரு சரட்டைக் கோத்துக் கொண்டிருக்கிறது. 4585

ஊசியும் கருமானும் உருண்டு ஓடிப் போனான்.

ஊசியும் சரடும் போல.

ஊசியை ஊசிக் காந்தம் இழுக்கும்; உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.

(நட்பு.)

ஊசியைத் தொட்டு உரலை விழுங்குவது போல.

ஊசி விழுந்தால் ஒலி கேட்கும். 4590

ஊட்டி வளர்த்த பிள்ளை உருப்படாது.

ஊடும் பாவும் போல.

ஊடைக்குப் பாவு இருந்தால் அல்லவோ ஓடி ஓடி நெய்வான்?

ஊண் அருந்தக் கருமம் இழப்பர்.

ஊண் அற்ற போதே உடல் அற்றுப் போம். 4595

ஊண் அற்ற போதே உளம் அற்றது போல.

ஊண் அற்ற போதே உறவு அற்றது.

(அற்றாரோடு.)

ஊண் அற உயிர் அறும்.

ஊண் ஒடுங்க வீண் ஒடுங்கும்.

ஊண் பாக்கு ஒழிய வீண் பாக்கு ஆகாது. 4600

ஊன் மிச்சம் உலகாளலாம்.

ஊண் மிச்சம் உழவிலும் இல்லை.

ஊணன் கருமம் இழந்தான்; உலுத்தன் பெயர் இழந்தான்.

ஊணினால் உறவு; பூணினால் அழகு.

ஊணினால் புத்தி: பூணினால் சாதி. 4605

ஊணுக்கும் உடைக்கும் என்னைக் கூப்பிடு; ஊர்க் கணக்குக்குத் தம்பியைக் கூப்பிடு.

ஊணுக்கு முந்து, படைக்குப் பிந்து.

(முந்தி, பிந்தி.)

ஊணும் இல்லை; உறக்கமும் இல்லை.

ஊணும் உறக்கமும் ஒத்தார்க்கு ஒத்த படி.

(ஊணும் உறையுளும்.)

ஊத்தை திரண்டு அச்சாணி ஆகுமா? 4610

ஊத்தை திரண்டு கழுக்காணி ஆச்சுது.

ஊத்தைப் பல்லுக்கு விளாங்காய் சேர்ந்தது போல.

ஊத்தைப் பெண் பெற்ற பிள்ளை கழுவக் கழுவத் தேயும்.

ஊத்தை போகக் குளித்தவனும் இல்லை; பசி போகத் தின்றவனும் இல்லை.

(உண்டவனும்.)

ஊத்தை போனாலும் உள்வினை போகாது. 4615

(ஊழ்வினை.)

ஊத்தை வாய்க்கும் உமிழ் நீருக்கும் கேடு.

ஊத்தை வாயன் தேடக் கர்ப்பூர வாயன் தின்ன.

ஊத்தை வாயன் தேட நாற்ற வாயன் தின்ன.

(நாறல் வாயன்.)

ஊத அறிந்தவன் வாதி, உப்பு அறிந்தவன் யோகி.

(உப்பு.)

ஊதாரிக்குப் பொன்னும் துரும்பு. 4620

ஊதி ஊதி உள்ளதெல்லாம் பாழ்.

ஊதின சங்கு ஊதினால் விடிகிற போது விடியட்டும்.

ஊதினால் போம்; உறிஞ்சினால் வரும்.

ஊமை ஊரைக் கெடுக்கும், பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும்.

(ஆமை வீட்டைக் கெடுக்கும்.)

ஊமை ஊரைக்கெடுக்கும்; வாயாடி பேரைக் கெடுக்கும். 4625

ஊமை ஊரைக் கெடுப்பான்; ஆமை ஆற்றைக் கெடுக்கும்.

(ஆமை கிணற்றைக் கெடுக்கும்.)

ஊமைக்கு உளறு வாயன் உற்பாத பிண்டம்.

ஊமைக்கு உளறு வாயன் சண்டப் பிரசண்டன்.

ஊமைக்குத் தெத்து வாயன் உயர்ந்த வாசாலகன்.

ஊமைக்கு வாய்த்தது ஒன்பதும் பிடாரி. 4630


ஊமை கண்ட கனா. (+ ஆருக்குத் தெரியும்.)

ஊமை கண்ட கனாப்போலச் சீமைப் பட்டணம் ஆகுமா?

ஊமை பிரசங்கம் பண்ணச் செவிடன் கேட்டது போல.

ஊமை போல இருந்து எருமை போலச் சாணி போட்டதாம்.

ஊமையர் சபையில் உளறு வாயன் மகாவித்துவான். 4635

(யாழ்ப்பாண வழக்கு.)

ஊமையன் கனவு கண்டது போலச் சிரிக்கிறான்.

ஊமையன் பாட, சப்பாணி ஆட, செவிடன் கேட்க, குருடன் பார்க்க.

ஊமையன் பேச்சுப் பழகின பேருக்குத் தெரியும்.

ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு.

ஊமையின் பிரசங்கத்தைச் செவிடன் கேட்டானாம். 4640

ஊமையும் அல்ல, செவிடனும் அல்ல.

(செவிடும்.)

ஊமையும் ஊமையும் மூக்கைச் சொறிந்தாற் போல்.

ஊமையை விட உளறு வாயன் மேல்.

ஊர் அருகே ஒரு வயலும் உத்தரத்தில் ஒரு புத்திரனும்.

ஊர் அறிந்த பார்ப்பான். 4645

ஊர் அறிந்த பிராமணனுக்குப் பூணூல் எதற்கு?

ஊர் ஆளுகிற ராஜாவுக்குப் பேள இடம் கிடைக்கவில்லையாம்.

(துரைக்கு.)

ஊர் ஆளுகிறவன் பெண்டு பிடித்தால் ஆருடன் சொல்லி முறையிடுகிறது?

ஊர் ஆளுகிறவன் பெண்டாட்டிக்குப் பேள இடம் இல்லையாம்.

(பேண.)

ஊர் ஆளுகிறவனுக்குப் பேளப் புறக்கடை இல்லையா? 4650

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு எளிது.

(கொண்டாட்டம், அழகு.)

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குத் தொக்கு.

(கொள்ளை.)

ஊர் இருக்கிறது; ஓடு இருக்கிறது.

ஊர் இருக்கிறது பிச்சை போட; ஓடு இருக்கிறது வாங்கிக் கொள்ள.

ஊர் இருக்கிறது; வாய் இருக்கிறது. 4655

ஊர் இளக்காரம் வண்ணானுக்குத் தெரியும்; வீட்டு இளக்காரம் மாப்பிள்ளைக்குத் தெரியும்,

ஊர் உண்டாகி அல்லவோ, கிழக்கு மேற்கு உண்டாக வேண்டும்?

ஊர் உண்டு பிச்சைக்கு; குளம் உண்டு தண்ணீருக்கு.

ஊர் ஊராய்ப் போவானுக்கு வாழ்க்கைப்பட்டு ஓட்டமே ஒழிய நடை இல்லை.

ஊர் எங்கும் சம்பை; என் பேரோ வம்பை. 4660

ஊர் எங்கும் சுற்றி உனக்கு ஏதடா புத்தி?

ஊர் எங்கும் பேறு; வீடு பட்டினி.

(பேர்.)

ஊர் எச்சம்; வீடு பட்டினி.

(யாழ்ப்பாண வழக்கு.)

ஊர் எல்லாம் உற்றார்; அந்தி பட்டால் பொதுச் சந்தியிலே.

ஊர் எல்லாம் உறவு; ஒரு வாய்ச் சோறு இல்லை. 4665

ஊர் எல்லாம் கடன்; உடம்பெல்லாம் பொத்தல்.

ஊர் எல்லாம் கல்யாணம்; மார் எல்லாம் சந்தனம்.

ஊர் எல்லாம் சதமாகுமோ? ஒரு மரம் தோப்பாகுமோ?

ஊர் எல்லாம் சுற்றி எனக்கென்ன புத்தி?

(என் பேர் முத்தி.)

ஊர் எல்லாம் வாழ்கிறது என்று வீடு எல்லாம் புரண்டு அழுதால் வருமா? 4670

ஊர் என்று இருந்தால் பறைச் சேரியும் இருக்கும்.

ஊர் எனப்படுவது உறையூர்.

(இறையனார் அகப்பொருள் உரை.)

ஊர் ஒக்க ஓட வேண்டும்.

ஊர் ஓச்சன் பட்டினி.

ஊர் ஓசை அடங்க நெய் காய்ச்சினாளாம். 4675

ஊர் ஓசை அடங்கும் வரை வெண்ணெய் காய்ச்சினாளாம்,

ஊர் ஓட உடன் ஓட.

ஊர் ஓட ஒக்க ஓடு; நாடு ஓட நடு ஓடு.

ஊர் ஓடினால் ஒத்தோடு; ஒருவன் ஓடினால் கேட்டு ஓடு.

(யாழ்ப்பாண வழக்கு.)

ஊர் ஓமல் ஆனது அல்லால் ஒன்றும் அறியேன். 4680

ஊர் ஓரத்தில் கொல்லை; உழுதவனுக்குப் பயிர் இல்லை.

ஊர் ஓரத்து உழவுக்காரனும் உண்டவுடன் பேளாதவனும் உருப்படமாட்டான்.

ஊர்க்கடனும் உள்ளங்கைச் சிரங்கும் போல.

ஊர்க் கழுதை இருக்கக் கூத்தாடிக் கழுதைக்குச் சனி பிடித்தது.

ஊர்க் காக்காய் கரையிலே; வந்தட்டிக் காக்காய் வரப்பிலே. 4685

ஊர்க்குருவிமேலே ராம பாணம் தொடுக்கிறதா?

ஊர்க்கோடியில். ஒரு வீடு கட்டி ஓர்ப்படி தம்பிக்குப் பெண் கொடுத்தாற்போல்.

ஊர்க் கோழியும் நாட்டுக் கோழியும் கூடினால் உரலில் உள்ள புழுங்கல் அரிசிக்குச் சேதம்.

ஊர்கிறதென்றால் பறக்கிறது என்று சொல்லும் ஜனம்.

ஊர் கூடிச் செக்குத் தள்ளலாமா? 4690

ஊர் கூடிச் செக்குத் தள்ள, வாணியன் எண்ணெய் கொண்டு போக.

ஊர் கூடித்தானே தேர் இழுக்க வேண்டும்?

ஊர் கோப்பழிந்தால் ஓடிப் பிழை.

(கோப்பறிந்தால்.)

ஊர்ச் சக்கிலி எல்லாம் சேர்ந்து தோலைக் கெடுத்தனராம்.

ஊர்ச் சண்டை கண்ணுக்கு அழகு. 4695

ஊர் திரிந்த தேவடியாளுக்குப் பூணுால் அபூர்வமா?

(பூநூல்.)

ஊர் நடு நின்ற ஊர் மரம் போல.

ஊர் நத்தத்தில் நாய் ஊளையிட்டாற் போல.

ஊர் நல்லதோ? வாய் நல்லதோ?

ஊர் நஷ்டம் ஊரிலே; தேர் நஷ்டம் தெருவிலே. 4700

ஊர்ப் பசங்களெல்லாம் கால் பாடம்; பிச்சைக்கு வந்த பெண் அகமுடையாள்.

ஊர்ப் பிள்ளையை முத்தமிட்டால் உதட்டுக்குக் கேடு.

(உதட்டுக்குத்தான் சேதம்.)

ஊர்ப் பொருளை உப்பு இல்லாமல் கூடச் சாப்பிடுவான்.

ஊர் பேர் அறியாதவன் ஊர்வலம் வருகிற மாதிரி.

ஊர் மெச்சப் பால் குடிக்கலாமா? 4705

ஊர் மேலே போனவளுக்குத் தோள்மேலே கொண்டையாம்; அதைப் போய்க் கேட்கப் போனால் லடாபுடா சண்டையாம்.

ஊர்வலத்தைக் காண வந்தவன் அடித்துக் கொள்வது போல.

ஊர் வாயை அடக்கினாலும் உளறு வாயை அடக்க முடியாது.

ஊர் வாயைப் படல் இட்டு மூடலாமா?

ஊர் வாயை மூட உலை மூடி இல்லை. 4710

ஊர் வாயை மூடலாமா? உலை வாயை மூடலாமா?

ஊர் வாரியில் ஒரு கொல்லையும் உத்தராட நட்சத்திரத்தில் ஒரு பிள்ளையும்.

ஊர் வாழ்ந்தால் ஒக்க வாழலாம்.

ஊர் வாழ்த்தால் ஓட்டுப் பிச்சைக்கு வழி இருக்கும்.

(விளைந்தால்.)

ஊர் விஷயங்களில் ஊமை செவிடாய் இரு. 4715

ஊரார் உடைமைக்கு உலை வைக்கிறான்.

ஊரார் உடைமைக்கு ஓயாண்டி போல் திரிவான்.

ஊரார் உடைமைக்குப் பேயாய்ப் பறக்கிறான்.

(திரிகிறான்.)

ஊரார் உடைமைக்குப் பேராப் பேராசை கொள்ளாதே.

ஊரார் எருமை பால் கறக்கிறது; நீயும் ஊட்டுகிறாய்; நானும் உண்ணுகிறேன். 4720

ஊரார் கணக்கு உடையன் பிடரியிலே.

ஊரார் சிரித்தால் என்ன? நாட்டார் நகைத்தால் என்ன? நான் நடக்கிற நடை இவ்வளவுதான்.

ஊரார் சொத்துக்குப் பேயாய்ப் பறக்கிறான்.

ஊரார் சொத்துத் தூமகேது.

(பொருள்.)

ஊரார் நாய்க்குச் சோறு போட்டால் அது உடையவன் வீட்டிலே போய்த்தான் குரைக்கும். 4725

ஊரார் பண்டம் உமி போல்; தன் பண்டம் தங்கம் போல்.

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.

ஊரார் புடைவையில் தூரம் ஆவது.

ஊரார் வீட்டுக் கல்யாணமே; ஏன் அவிழ்ந்தாய் கோவணமே!

ஊரார் வீட்டுச் சோற்றைப் பார்; ஓசு பாடி வயிற்றைப் பார். 4730

ஊரார் வீட்டு நெய்யே; என் பெண்டாட்டி கையே.

ஊராருக்கெல்லாம் ஒரு வழி; இவனுக்கு ஒரு வழி.

ஊராருக்கெல்லாம் ஒரு வழி; ஓச்சனுக்கு ஒரு வழி.

ஊராரே வாருங்கள்; முதுகிலே குந்துங்கள்.

ஊராரைப் பகைத்து உயிரோடு இருந்தவர் இல்லை. 4735

ஊரான் ஆகில் உழுது விட்டுப் போகப் பண்ணைக்காரன் தண்ட வரி செலுத்த வேண்டியிருக்கிறது.

ஊரான் ஆகில் தாசன் பார்க்கிறதற்குச் சந்தேகமா?

ஊரான் ஆகில் தாசனுக்குப் பேள இடம் இல்லையா?

ஊரான் சொத்தை உப்பு இல்லாமல் தின்பான்.

ஊரான் மகன் நீரோடே போன கதை. 4740

ஊரான் வீட்டுச் சோற்றைப் பார்; சோனிப் பையன் வயிற்றைப் பார்.

ஊரில் இருக்கும் சனியனை வீட்டிலே அழைத்தாற் போல.

ஊரில் இளக்காரம் வண்ணானுக்குத் தெரியும்.

ஊரிலே எளியாரை வண்ணான் அறிவான்; சாதிப் பொன் பூண்பாரைத் தட்டான் அறிவான்.

ஊரில் ஒருத்தனே தோழன்; ஆரும் அற்றதே தாரம். 4745

ஊரில் நடக்கும் விஷயம் எல்லாம் ஊசல் குமரிக்குத் தெரியும்.

ஊரில் பஞ்சம் நாயில் தெரியும்.

ஊரில் பெண் திரண்டால் எனக்கு என்ன ஆச்சு: உனக்கு என்ன ஆச்சு.

(புரோகிதர் கூற்று.)

ஊரிலே அழகியைப் பிடிக்கப் போகிறானென்று ஆந்தையும் குரங்குமாய் ஓடிப் போச்சாம்.

ஊரிலே ஒரு குடியும் அல்ல; ஏரியிலே ஒரு பயிரும் அல்ல. 4750

ஊரிலே கல்யாணம்; மாரிலே சந்தனம்.

ஊரிலேயும் போவான்; சொன்னால் அழுவான்.

ஊருக்கு அரசன் ஆனாலும் தாய்க்குப் பிள்ளைதான்.

ஊருக்கு அரசன் காவல்; வீட்டுக்கு நாய் காவல்.

ஊருக்கு ஆகாதது உடம்புக்கும் ஆகாது. 4755

ஊருக்கு ஆகாத பிள்ளை தாய்க்கு ஆவானா?

(ஆகான்.)

ஊருக்கு இட்டு ஊதாரி ஆனான்.

ஊருக்கு இரண்டு பைத்தியக்காரன்.

ஊருக்கு இரும்பு அடிக்கிறான்; வீட்டுக்குத் தவிடு இடிக்க முடியவில்லை.

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி; அதற்கும் இளைத்தவன் மச்சினன் பெண்டாட்டி. 4760

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி; அதற்கும் இளைத்தவன் பள்ளிக்கூடத்து வாத்தியார்.

ஊருக்கு உழைக்கிற கிராமணி.

ஊருக்கு எல்லாம் ஒரு வழி; உச்சிப் பிள்ளையாருக்கு ஒரு வழி.

ஊருக்கு எல்லாம் ஒரு வழி; உனக்கு ஒரு வழியா?

ஊருக்கு எல்லாம் சாஸ்திரம் சொல்லுகிற பல்லி, கூழ்ப் பானையில் விழுந்தது போல. 4765

(காடிப் பானையில், கழுநீர்ப் பானையில்,)

ஊருக்கு ஏற்ற மாடு வாங்கினவனும் இல்லை; தாய்க்கு ஏற்ற பெண் கட்டினவனும் இல்லை.

ஊருக்கு ஏற்றுக் கெட்டான்; உள்ளதைச் சொல்லிக் கெட்டான்.

ஊருக்கு ஒடுங்கான், யாருக்கும் அடங்கான்.

ஊருக்கு ஒரு தேவடியாள் ஆருக்கென்று ஆடுவாள்?

(தாசி.)

ஊருக்கு ஒரு வழி; ஒன்றரைக் கண்ணனுக்கு ஒரு வழி. 4770

ஊருக்கு ஒருவன் துணை.

ஊருக்கு ஓமல்; வீட்டுக்கு வயிற்றெரிச்சல்.

ஊருக்குக் கடைசி உலகம்பட்டி.

(நகரத்தார் ஊர்களுக்குள் கடைசி.)

ஊருக்கு நாட்டான் பெண்டாட்டி என்றால் ஓ என்னுவாளாம்; ஓர் ஆளுக்குச் சோறு என்றால் ஹூம் என்னுவாளாம்.

ஊருக்குப் பால் வார்த்து உண்கிறாயா! உடம்புக்குப் பால் வார்த்து உண்கிறாயா? 4775

ஊருக்குப் பேரும் உறவின் முறைக்குப் பொல்லாப்பும்.

ஊருக்குப் போகிறவர் வேலை சொன்னால் ஓடி ஓடிச் செய்தாலும் தீராது.

ஊருக்கும் பேருக்கும் வடுகு இல்லை.

ஊருக்கு மாரடித்து ஒப்புக்குத் தாலி கட்டுகிறாளாம்.

ஊருக்கு முந்தி விளக்கு ஏற்றினால் உயர்ந்த குடியாக ஆகலாம். 4780

ஊருக்கு முன்னால் விளக்கு ஏற்றினால் ஒரு பிடி உயரும்.

ஊருக்கு விளைந்தால் ஓட்டுக்குப் பிச்சை.

ஊருக்கு வேலை செய்வதே மணியமாய் இருக்கிறான்.

ஊருக்குள் நடக்கிற விஷயம் யாருக்குத் தெரியும்? உள்ளே இருக்கிற குமரிக்குத் தெரியும்.

ஊருகிற அட்டைக்குக் கால் எத்தனை என்று அறிவான். 4785

ஊருடன் கூடி வாழ்.

(ஊரோடு ஒத்து வாழ்.)

ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.

ஊரூராய்ப் போகிறவனுக்கு வாழ்க்கைப்பட்டு ஓட்டமே ஒழிய நடை இல்லை.

ஊரே தாய்; வேலியே பயிர்.

ஊரை அடித்து உலையில் போடுகிறான். 4790

ஊரை ஆண்டாயோ? ஊரான் பெண்ணை ஆண்டாயோ?

ஊரை ஆள்கிற ராசாவுக்கு உட்கார இடம் இல்லையாம்!

ஊரை உழக்கால் அளக்கிறான்; நாட்டை நாழியால் அளக்கிறான்.

ஊரைக் கண்டவுடனே உடுக்கையைத் தோளில் போட்டுக் கொண்டானாம்.

ஊரைக் காட்ட ஒரு நாய் போதும். 4795

ஊரைக் கெடுத்தான் ஒற்றைக் கடைக்காரன்.

ஊரைக் கெடுத்தான் ஒற்றை மாட்டுக்காரன்.

ஊரைக் கொளுத்துகிற ராஜாவுக்கு ஊதிக் கொடுக்கிறவன் மந்திரி.

ஊரைச் சுற்றி வந்த யானை ஒற்றடம் வேணும் என்றாற்போல்.

ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லாதே. 4800

ஊரைப் பகைத்தேனோ? ஒரு நொடியில் கெட்டேனோ?

ஊரைப் பார்க்கச் சொன்னால் பறைச்சேரியைப் பார்க்கிறான்.

ஊரைப் பார்த்து ஓம்பிப் பிழை.

ஊரைப் பிடித்த சனி பிள்ளையாரையும் பிடித்தது.

ஊரைப் பிடித்த சனியனுக்கு நாயைப் பிடித்துக் சூலம் போட்டது போல். 4805

(பீடையைப் பிடித்து. )

ஊரை வளைத்தாலும் உற்ற துணை இல்லை; நாட்டை வளைத்தானும் நல்ல துணை இல்லை.

(வீட்டை.)

ஊரை விட்டுப் போகும்போது தாரை விட்டு அழுதாளாம்.

ஊரை விழுங்குகிற மாமியாருக்கு அவளையே விழுங்குகிற மருமகள் வந்தாளாம்.

ஊரை விழுங்கும் மாமனாருக்கு அவரையே விழுங்கும் மாப்பிள்ளை.

ஊரோடு ஒக்க ஓடு; ஒருவன் ஓடினால் கேட்டு ஓடு. 4810

ஊரோடு ஒக்க நட; நாட்டோடு நடுவே ஓடு.

(ஒக்க நடு.)

ஊரோடு ஒட்டி வாழ்.

(ஒன்றி வாழ்.)

ஊரோடே ஒக்கோடே.

ஊழ்வினை ஓநாய் மாதிரி இருக்கும்.

ஊழிக் காய்ச்சல் அதிகமானால் சூனியக்காரன் கொள்ளை. 4815

ஊழி பெயரினும் கலங்கார் உறவோர்.

ஊழி பேரினும் ஊக்கமது கைவிடேல்.

ஊழிற் பெருவலி ஒன்று உண்டோ?

ஊழும் உற்சாகமும் ஒத்துக்கொள்ள வேண்டும்.

ஊற்றுத் தண்ணீரில் நாய்க்குப் பால் வார்த்தது போல. 4820

ஊற்றுப் பாய்ச்சல் ஆற்றுப் பாய்ச்சல் பத்துக் குழியும், ஏரிப் பாய்ச்சல் நூறு குழியும் ஒன்று.

ஊற்றை நம்பினாலும் ஆற்றை நம்பாதே.

ஊற்றைப் பல்லுக்கு விளாங்காய் சேர்ந்தாற் போல்.

(பா-ம்.) ஊத்தை.

ஊற்றைப் பெண் பிள்ளை கழுவக் கழுவத் தேயும்.

(பா-ம்.) ஊத்தை.

ஊற்றை போகக் குளித்தவனும் இல்லை; பசி போகத் தின்றவனும் இல்லை. 4825

(பா-ம்.) ஊத்தை.

ஊற்றை மலத்தைக் கண்ட பன்றி உதட்டுக்குள்ளே சிரித்துக் கொண்டதாம்.

(பா-ம்.) ஊத்தை.

ஊறச்சே துடைக்க வேண்டும்.

ஊறல் எடுத்தவன் சொறிந்து கொள்வான்.

ஊறாக் கிணறு, உறங்காப் புளி, தீரா வழக்கு, திருக்கண்ணங் குடி.

(கண்ணங்குடி, சிக்கலுக்குப் பக்கத்தில் இருக்கிறது.)

ஊறுகாயைக் கடித்துக் கொண்டு ஒரு பானைச் சோற்றை என்னது என்பான். 4830

ஊறுகாயைக் கடித்துக் கொண்டு ஒரு பானைச் சோற்றைத் திணிப்பது போல.

ஊன்றக் கொடுத்த தடி உச்சியை உடைக்கிறது.

ஊன்றக் கொடுத்த தடி மண்டையைப் பிளந்தது போல.

ஊன்ற வைத்த கொம்பு உச்சி மோட்டை உச்சி மோட்டைப் பிளக்கிறது.

ஊனம் இல்லா உடம்புக்கு நாணம் ஏன்? 4835

ஊனம் இல்லான் மானம் இல்லான்.

ஊனுக்கு ஊன் உற்ற துணை.

"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழ்ப்_பழமொழிகள்_1/ஊ&oldid=1481912" இலிருந்து மீள்விக்கப்பட்டது