இளையர் அறிவியல் களஞ்சியம்/குளோரின்
குளோரின் : நோய் உண்டாக்கும் பாக்டீரிய கிருமிகளைக் கொல்வதற்கான ஒருவகை நச்சு வாயு குளோரின் ஆகும். இஃது குடிநீரில்உள்ள பாக்டீரியாக் கிருமிகளைக் கொல்ல சிறிய அளவில் குடிநீரில் கலக்கப்படுகிறது. இதனால் நமக்கு ஆபத்து ஏதும் இல்லை. கலக்கும் அளவு அதிகமானால் தீங்கு ஏற்படும். குளோரின் வாயுவை நீண்ட நேரம் சுவாசிக்க நேர்ந்தால் இறக்க நேரிடும்.
1774இல் சீலி (Scheele) என்பாரால் இத்தனிமம் கண்டறியப்பட்டது. இதன் பசுமை கலந்த மஞ்சள் நிறம் குளோராஸ் என்பதால் (Chloros - greenish yellow) இஃது குளோரின் என அழைக்கப்படுகிறது. இதனை தனிமம் என 1800இல் டேவி (Dewy) என்பாரால் உறுதி செய்யப்பட்டது.
குளோரின் ஒரு தனிமம் ஆகும். இது பச்சை கலந்த மஞ்சள் நிறமுடையதாகும். மற்ற தனிமங்களோடு கலந்து கிடைக்கும் இதைத் தனியே பிரித்தெடுத்துப் பயன்படுத்துவார் கள், எரிமலை கக்கும் வாயுவில் தனி குளோரின் உண்டு. காற்றினும் இரு மடங்கு கணமுள்ளது குளோரின்.
நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சோடியம் குளோரைடு எனப்படும் உப்பில் பெருமளவில் குளோரின் உள்ளது. நமக்குத் தேவையான குளோரினில் பெரும் பகுதி உப்பிலிருந்தே பிரித்தெடுக்கப்படுகிறது. உப்புக் கரைசலில் மின்சாரத்தைப் பாய்ச்சுவதன் மூலம் சோடியமும் குளோரினும் தனித்தனியே பிரித்தெடுக்கப்படுகிறது. குளோரின் வாயுவை எளிதாகத் திரவமாக்கலாம்.
துணி, காகிதம் முதலானவைகளை வெண்மையாக்குவதற்கும் குளோரின் பெரிதும் பயன்படுகிறது. குடிநீரைத் தூய்மைப்படுத்தவும் சாயப் பொருட்கள், வெடிமருந்துகள் செய்யவும் எண்ணெய் சுத்திகரிப்புக்கும் உலோக வேலைகளுக்கும் குளோரின் பயன்படுகிறது.