உள்ளடக்கத்துக்குச் செல்

இளையர் அறிவியல் களஞ்சியம்/டிராக்டர்

விக்கிமூலம் இலிருந்து

டிராக்டர் : இது ஒரு எந்திரக் கலப்பையாகும். அறிவியல் வளர்ச்சியின் விளைவாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த எந்திரக் கலப்பையின் உதவிகொண்டு பலபேர் சேர்ந்து, பல மணி நேரம் உழக்கூடிய நிலத்தை ஒரே டிராக்டர் எந்திரக் கலப்பையைக் கொண்டு குறைந்த நேரத்தில் உழுதுவிட முடியும்.

டிராக்டர் எந்திரக் கலப்பை 1890லேயே அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பட்டாலும் 1920-க்குப் பிறகே சரியான வடிவில் டிராக்டர் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. தொடக்கக் காலத்தில் நீராவியால் இயக்கப்பட்ட இவ்வெந்திரம் இன்று பெட்ரோல் அல்லது டீசலைக் கொண்டு உள்ளெரி எஞ்சின் மூலம் எளிதாக இயக்கப்படுகிறது.

டிராக்டர்

டிராக்டரில் முன் இரண்டு சக்கரங்கள் சிறியதாகவும் பின் இரண்டு சக்கரங்கள் பெரியதாகவும் அமைந்திருக்கும். பெரிய சக்கரங்கள் இரண்டும் ரப்பரால் செய்யப்பட்டிருப்பினும் அதன் முகட்டுப் பகுதி சங்கிலிப் பின்னல் போல் மேடுபள்ளங்களாக அமைந்திருக்கும். டிராக்டர் இயங்கும்போது பயிர்கட்குச் சேதம் ஏற்படுவதில்லை.

உழுவதற்கென்றே முதன்முதலில் டிராக்டர் உருவாக்கப்பட்டாலும் இவை உழுவதற்கும், சேறு கலக்குவதற்கும், விதைப்பதற்கும், அறுவடை செய்வதற்கும், புல் வெட்டுவது போன்ற காரியங்களுக்கும் பயன்படுகிறது. பரம்படிப்பதற்கும் இன்று பயன்ப்ட்டு வருகிறது. நில வேலை இல்லாத காலத்தில் டிரக்குகள் போன்ற பொருள்களைக் கொண்டு செல்லவும் டிராக்டர்கள் பயன்பட்டு வருகின்றன. உழவுத் தொழிலின் இன்றியமையா அங்கமாக டிராக்டர் உலகெங்கும் அமைந்து வருகிறது.