இளையர் அறிவியல் களஞ்சியம்/டைபாய்டு
டைபாய்டு : இது ஒருவகை நச்சுக் காய்ச்சலாகும். இது அடிக்கடி மக்களைத் தொற்றித் துன்பந்தரும் தொற்று நோயாகும். இந் நோயால் குடற் பகுதிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றது. இதனாலேயே இதைக் 'குடற் காய்ச்சல்’ என்று கூறுவதுமுண்டு. இந்நோய் ஒருவரிடமிருந்து மற்றவர்க்கு எளிதாகத் தொற்றும் இயல்புடையது.
இந்நோய் 'சால்மொனெல்லா டைபை’ எனும் பாக்டீரியா கிருமிகளால் உண்டாகிறது. இந்நோய்க் கிருமிகள் பெரும்பாலும் உண்ணும் உணவுப் பொருட்கள் மூலமே தொற்றுகின்றன. சாதாரணமாக கெட்டுப்போன உணவு வகைகள், பருகும் நீர், பால், தயிர், மோர் போன்றவற்றின் மூலம் குடற் பகுதியை அடைகிறது. பின் அங்குள்ள சுரப்பிகள் மூலம் இரத்தத்தை அடைகிறது. பின் இரத்த வோட்டத்தின் மூலம் உடற்பகுதிகள் அனைத்திற்கும் பரவித் துன்பம் தருகிறது. இந்நோய்க் கிருமிகள் உடலெங்கும் பரவி சுமார் பதினைந்து நாட்கள் கழிந்த பின்னர் காய்ச்சலும் தலைவலியும் தோன்றும். வயிற்றுப் போக்கும் உடல் பலவீனமும் ஏற்படும்; நாவறட்சியோடு நாக்கில் புண்ணும் உண்டாகும். இச்சமயத்தில் குடல் முழுவதும் பாதிக்கப்படுகிறது. சிலசமயம் குடலில் ஓட்டை, ஏற்படுவதுகூட உண்டு. இந்நோயின் உச்சமாக மண்ணிரல் வீங்கும்; வயிறு புடைக்கும். இச்சமயத்தில் இரத்தத்தில் வெள்ளணுக்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டுவரும். பதினைந்து நாட்களுக்குப்பின் இத்நோயின் கடுமை குறையத் தொடங்கும். அவ்வாறு குறையாது தொடருமேயானால் அது உயிருக்கு ஆபத்தாக முடியும்.
இந்நோய் உடலிலும் குறிப்பாக குடலிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துவதால் இந் நோய் நம்மை அண்டாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும். இந்நோய்த் தடுப்புக்கென இக்காலத்தில் ஊசி மருந்துகளும் மாத்திரைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒருமுறை ஊசி போட்டுக் கொண்டால் இரண்டு ஆண்டுகளுக்கு இந்நோய் வரவே வராது. அப்படியே வந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய மருந்துகளை உட்கொண்டால் தொடக்கத்திலிலேயே இந்நோயைப் போக்க முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக எப்போதும் சூடான உணவு வகைகளையே உண்ண வேண்டும். காய்ச்சிய நீர், பால் முதலிய பானங்களைப் பருக வேண்டும். கெட்டுப்போன உணவு வகைகளை உண்ணாது தவிர்க்க வேண்டும். இம்முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இந்நோய் என்றுமே நம்மைத் தொற்றி பாதிப்பு ஏற்படுத்தாதவாறு காத்துக்கொள்ள முடியும்.