உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்ப் பழமொழிகள் 2/கை

விக்கிமூலம் இலிருந்து

கை அழுத்தமானவன் கரையேற மாட்டான்.

(காசைச் செலவிடான்.)

கை இல்லாதவன் கரணம் போடலாமா? கால் இல்லாதவன் ஓடலாமா? 9460


கை ஈரம் காயாமல் காட்ட வருகிறது.

கை உண்டாவது கற்றவர்க்கு ஆமே.

கை ஊன்றி அல்லவோ கரணம் போட வேண்டும்?

கைக் காசு இல்லாமல் கடைப் பக்கம் போகாதே.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்ட வில்லை. 9465


கைக்குக் கண்ணாடியா?

(கண்ணாடி போல.)

கைக் காடையைக் காட்டிக் காட்டுக் காடையைப் பிடிக்க வேண்டும்.

(காடையை விட்டு.)

கைக்கு அடங்காத விளக்குமாறும் வாய்க்கு அடங்காத மருமகளும்.

கைக்குக் கை நெய் வார்த்தாலும் கணக்குத் தப்பாது.

கைக் குருவியைக் கொண்டுதான் காட்டுக் குருவியைப் பிடிக்க வேணும். 9470


கைக்கு வாய் உபசாரமா?

கைக் கொள்ளாத சத்தியத்தைக் கற்காதிருத்தல் நலம்.

கைக்கோளறுக்குக் கால் புண்ணும் நாய்க்குத் தலைப் புண்ணும் ஆறா.

கை கண்ட பலன்.

கை கண்ட மாத்திரை, வைகுண்ட யாத்திரை. 9475


கை கண்ட வேசிக்குக் கண்ணீர் குறைச்சலா?

கை கண்ணைக் குத்தினால் கையை வெட்டி விடுகிறதா?

கை கருணைக் கிழங்கு: வாய் வேப்பங்காய்.

கை காய்த்தால் கமுகு காய்க்கும்.

(பாக்கு மரம்.)

கை கைக்குமா நெய் வார்க்க வரும்? 9480


கை கொடுத்துக் கொண்டே கடையாணி பிடுங்குகிறான்.

கைத்தது மானானாலும் கை ஏல்வை.

கைத் தாலி கழுத்தில் ஏறட்டும்.

கை தப்பிக் கண்ணில் பட்டால் கையைக் கண்டிப்பது உண்டா?

கைத் துப்பைக் கொண்டு காரியம் இல்லை; வாய்த் துப்பைக் கொண்டு வாழ வந்தேன் மாமியாரே. 9485


கை நிறைந்த பணத்தை விடக் கண் நிறைந்த புருஷன்தான் வேண்டும்.

(பொன்னிலும் விட. கணவன்தான். புருஷன்தான் மேல்.)

கைப்பண்டம் கருணைக் கிழங்கு,

கைப் பழத்தைக் கொடுத்துத் துறட்டுப் பழத்துக்கு அண்ணாந்து நிற்பானேன்?

(பழத்தை விட்டு விட்டு, துறட்டுப் பழத்துக்கு ஆசைப்பட்டானாம்.)

கைப் பழத்தை நம்பி வாய்ப் பழத்தை வழியில் விட்டான்.

கைப் பறவையைப் பறக்க விட்டுக் காட்டுப் பறவைக்குக் கண்ணி வைக்கலாமா? 9490


கைப் பிள்ளைக்கு முன் கயிற்றுப் பிள்ளை.

(வயிற்றுப் பிள்ளை.)

கைப் புண்ணுக்குக் கண்ணாடியா?

கைப் பூணுக்குக் கண்ணாடி வேண்டுமா?

கைப் பொருள் அற்றவனைக் கட்டின பெண்டாட்டியும் எட்டிப் பாராள்.

(கட்டின பெண்ணும்.)

கைப் பொருள் அற்றால் கட்டுக் கழுத்தியும் பாராள். 9495

(கட்டினவளும்.)


கைப் பொருள் இல்லாதவனைக் கள்வன் என்ன செய்வான்?

கைப் பொருள் இல்லா வழிப்போக்கனுக்குக் கள்வர் முன் படலாம்.

கைப் பொருள்தன்னிலும் மெய்ப் பொருள் கல்வி.

கைப் பொருள் போனால் கால் காசுக்கும் மதிக்கமாட்டார்கள்.

கைப் பொருள் போனாலும் கல்விப் பொருள் போகாது. 9500


கைப் பொன்னுக்குக் கண்ணாடியா?

கை பட்டால் கண்ணாடி.

கைபிடித்து இழுத்தும் அறியாதவன் சைகை அறிவானா?

கை போடாத புருஷன் இல்லை; விரல் போடாத பெண் இல்லை.

கைம்பெண்டாட்டி எருமையிலே கறவை பழகினாற் போல. 9505


கைம்பெண்டாட்டிக்கு ஒருத்தன் ஆனால் கட்டுக் கழுத்திக்கு எட்டுப் பேர்.

கைம்பெண்டாடிக்கும் காளவாய்க்கும் எங்கே என்று காத்திருக்கும்.

கைம்பெண்டாட்டி தாலியைக் கூழைக் கையன் அறுத்தானாம்.

கைம்பெண்டாட்டி பெற்ற பிள்ளை ஆனாலும் செய்யும் சடங்கு சீராய்ச் செய்ய வேண்டும்.

(பெண் ஆனாலும்.)

கைம்பெண்டாட்டி வளர்த்த கழுக்காணி. 9510


கைம்பெண் பிள்ளை ஆனாலும் செய்கிற சடங்கு செய்.

கைம்பெண் வளர்த்த கழிசடை.

(கழி சிறை.)

கைம்மேல் கண்ட பலன்.

கையது சிந்தினால் அள்ளலாம்;வாயது சிந்தினால் அள்ளமுடியாது.

கையால் ஆகாத சுப்பி. திருவாரூர்த் திப்பி. 9515


கையால் ஆகாத சிறுக்கி வர்ணப் புடைவைக்கு ஆசைப்பட்டாளாம்.

கையால் ஆகாததற்கு வாய் பெரிது.

கையால் ஆகாதவனுக்குக் கரம்பிலே பங்கு உழாதவனுக்கு ஊரிலே பங்கு.

கையால் கிழிக்கும் பனங் கிழங்குக்கு ஆப்பும் வல்லிட்டுக் குற்றியும் ஏன்?

கையால் கிள்ளி எறியும் வேலைக்குக் கனத்த கோடரி வேண்டுமோ? 9520


கையால் பிடிக்கப் பொய்யாய்ப் போச்சுது.

கையாலே தொட்டது கரி.

கையாளாத ஆயுதம் துருப் பிடிக்கும்.

கையாளுகிற இரும்பு பளபளக்கும்.

கையானைக் கொண்டு காட்டானையை பிடிக்க வேண்டும். 9525


கையில் அகப்பட்ட துட்டுக் கணக்குப் பேசுகிறது.

(பேசும்.)

கையில் அகப்பட்ட பொருளுக்கும் கணக்கு.

கையில் அரிசியும் கமண்டலத்தில் தண்ணீரும்.

கையில் அரைக் காசுக்கும் வழி இல்லாத அஷ்ட தரித்திரம், கையில் இருக்க நெய்யிலே கைவிடுவானேன்? 9530


கையில் இருக்கிற கனியை எறிந்து மரத்தில் இருக்கிற கனியைத் தாவுகிறது போல.

(கனியை விட்டு விட்டு.)

கையில் இருக்கிற குருவியை விட்டு விட்டுப் பறக்கிறதற்கு ஆசைப்பட்டாற் போல்.

கையில் இருக்கிற சோற்றைப் போட்டு விட்டு எச்சிற் சோற்றுக்குக் கை ஏந்தினது போல.

கையில் இருக்கிற பறவையை விட்டு விட்டுக் காட்டுப் பறவைக்குக் கண்ணி வைக்கலாமா?

கையில் இருந்தால் கடை கொள்ளலாம். 9535

(செல்லலாம்.)

கையில் இருந்தால் கர்ணன்.

கையில் இருந்தால் பாக்கு: கையை விட்டால் தோப்பு.

கையில் இருப்பது செபமாலை; கட்கத்தில் இருப்பது கன்னக்கோல்.

கையில் இல்லாதவன் கள்ளன்.

(இல்லா விட்டால்.)

கையில் இல்லா விட்டால் கண்டாரும் பேச மாட்டார்; கேட்டாரும் மதிக்க மாட்டார். 9540

(கண்டாரும் மதிக்க மாட்டார்கள்.)


கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.

கையில் உள்ள களப்பழம் மரத்தில் உள்ள பலாப்பழத்துக்கு மேல்.

கையில் எடுக்குமுன் கோழி மோசம் என்று அறியாது.

கையில் எடுப்பது ஜபமாலை; கட்கத்தில் வைப்பது கன்னக்கோல்.

கையில் ஒரு காசும் இல்லை; கடன் கொடுப்பார் ஆரும் இல்லை. 9545

(+ தேவடியாள் வீட்டைக் கண்டால் துக்கம் துக்கமாய் வருகிறது.)


கையில் காசு இருக்கக் கறிக்கு அலைவானேன்?

கையில் காசு இருந்தால் அசப்பில் ஒரு வார்த்தை வரும்.

கையில் காசும் இல்லை; முகத்தில் பொலிவும் இல்லை.

கையில் காசு, வாயில் தோசை.

கையில் கிடைத்த அமுதைச் சமரில் ஊற்றலாமா? 9550


கையில் குடையும் காலில் சோடும் வேண்டும்.

கையில் கெளுத்தி மீனை வைத்துக்கொண்டு ஆணத்திற்குக் கத்தரிக்காயைத் தேடி அலைந்தாளாம்.

கையில் சாவு, வாயில் கோல்.

கையில் தாழ்வடம், மனசிலே கரவடம்.

கையில் பணம் இருக்கிறதா என்றால், பணம் இருந்த கை இருக்கிறது என்றானாம். 9555


கையில் பறவையை விட்டுக் காட்டுப் பறவைக்குக் கண்ணி வைக்கலாமா?

கையில் பிடப்பது துளசி மாலை; கட்கத்தில் இடுக்குவது கன்னக்கோல்,

(ஜபமாலை.)

கையில் பிள்ளையோடு கடலில் விழுந்தாள்.

கையில் மஞ்சள் ஆனால் காரியம் மஞ்சூர்தான்.

கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அழுவானேன்? 9560


கையில் ஜபமணி கொண்டு மிரட்ட வருகிறாயே!

கையில் ஜபமாலை; கட்கத்தில் கன்னக் கோல்.

கையிலே காசு; வாயிலே தோசை.

கையும் இல்லை; காலும் இல்லை; திம் தடாக்கா.

கையும் கணக்கும் சரி. 9565


கையும் களவுமாய்க் கண்டு பிடிக்கிறது.

கையெழுத்துப் போடத் தெரிந்தால் கடனுக்குத்தான் வழி.

கையை அறுத்து விட்டாலும் அகப்பையைக் கட்டிக் கொண்டு திருடுவான்.

கையை உடைத்து விட்டவன் தலையை உடைத்தாலும் உடைப்பான்.

கையை ஊன்றித்தான் கரணம் போட வேண்டும், 9570

கையைக் காட்டி அவலட்சணமா?

கையைச் செட்டியார் குறைத்தால் காலைக் கைக்கோளன் குறைப்பான்.

(குறைத்தான். )

கையைப் பார்த்து முகத்தைப் பார்.

கையைப் பார். முகத்தைப் பார் என்று இருந்தால் காரியம் ஆகுமா?

(நடக்குமா?)

கையைப் பிடித்தால் காலபலன். 9575


கையைப் பிடித்து இழுத்து வராதவள் கண்ணைக் காட்டி அழைத்தால் வருவாளா?

கையைப் பிடித்துக் கண்ணைப் பார்த்து மயிரைப் பிடித்துக் காசு வாங்குவதா?

கையைப் பிடித்துக் கள்ளை வார்த்து மயிரைப் பிடித்துக் காசு வாங்குகிறது.

கையைப் பிடித்துத் தூக்கிவிடு; பிணக் காடாயக் குவிக்கிறேன் என்றானாம்.

கையை மூடிக் கொண்டிருந்தால் கமுக்கம்; விரலைத் திறந்தால் வெட்டவெளி. 9580

(விரலைத் திறந்து விட்டால் ஒன்றும் இல்லை.)


கையை விட்டுத் தப்பினால் காடை காட்டிலே.

கைவரிசை இருந்தாலும் மெய்வரிசை வேண்டும்.

கை விதைப்பை விடக் கலந்த நடவை நல்லது.

கைவிரல் கண்ணிலே பட்டால் கையை என்ன பண்ணலாம்?

கை வைத்தால் கை இற்றுப் போம். 9585

"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழ்ப்_பழமொழிகள்_2/கை&oldid=1160285" இலிருந்து மீள்விக்கப்பட்டது