உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/விருப்பங்கள்

விக்கிமூலம் இலிருந்து

91. விருப்பங்கள்

இனிய செல்வ,

திருக்குறள் ஓர் அரசியல் நூல். திருக்குறள் முடியாட்சிக் காலத்தில் தோன்றினாலும் இக்காலத்திற்குரிய பண்புகளை விரித்துரைக்கத் தவறவில்லை. உண்மையில் - சொன்னால் இன்று பிரிட்டனில் நடைபெறும் முடியாட்சியும் குடியாட்சியும் கலந்த முறையைத் திருக்குறள் விரும்பியதாக இருக்கிறது. ‘நாகரீகம்’ என்ற சொல்லுக்கு உலக மொழிகள் சொல்லும் விளக்கம் வேறு. ஆனால், திருக்குறள் கூறும் விளக்கம் சிறப்புடையது. நண்பர்கள், பழகிய நட்புடையவர்கள் கொல்லும் நஞ்சைக் கொடுத்தாலும் விரும்பிக் குடிக்கவேண்டும். அப்படி விரும்பிக் குடித்தால் சாகாமல் வாழ்வர் என்பது திருக்குறள் கூறும் நாகரிகம். இனிய செல்வ, உன்னுடைய கேள்வி புரிகிறது! நஞ்சைக் குடித்தால் சாகாமல் இருக்க இயலுமா? என்பதுதானே உன் கேள்வி; இயலும் என்பது திருக்குறளின் பதில்!

தூய செங்குருதியைப் பெற்றுள்ள உடம்பில் நஞ்சு ஒன்றும் செய்யாது. நஞ்சினை, நஞ்சின் தன்மையை மாற்றும் ஆற்றல் தூய செங்குருதிக்கு உண்டு. அத்தகைய தூய செங்குருதியை எப்படி பெறுவது? விருப்பு-வெறுப்பற்ற நிலையிலேயே தூய செங்குருதி கிடைக்கும். விருப்பங்கள் இல்லாத வாழ்க்கை உண்டா? உண்டு! தேவை வேறு. விருப்பம் வேறு. விருப்பங்கள், வெறுப்புகளுக்கு வாயிலாக அமைந்து விடுதல் உண்டு. நமக்கு ஒன்றில் விருப்பம். நமது விருப்பத்திற்கு மாறாக விரும்புவர் அல்லது விருப்பத்திற்கு உடன்படாதவர் மீது வெறுப்பு ஏற்படும்.

இனிய செல்வ, வாழ்க்கை, செயல்களால் ஆய ஏடுகளை உடையது. செயல்களுக்குத் தாய் கடமையுணர்வு. கடமையில் விருப்பார்வம் இல்லாமல் போனால் கடமையைச் சீராகச் செய்துமுடிக்க இயலாதே! ஆம், உண்மைதான்! ஆனால், விருப்பம் என்பது கடமையைத் தூண்டும் அளவிற்கு இருத்தல் பிழையன்று. இறுகிப்போன வெறுப்புக்களை ஈன்றெடுக்கும் பண்பாக விருப்பம் உருக்கொள்ளக்கூடாது. இனிய செல்வ, நாம் இந்த மண்ணில் வாழ்கின்றோம்; சமூகத்தில் வாழ்கின்றோம்! நமக்கென்று வழி இருக்கிறது; சமயம் இருக்கிறது. பொறுப்புகள் இருக்கின்றன; கடமைகள் இருக்கின்றன. இந்தச் சமூகத்தில் நாம் எப்படி விருப்பு அற்றவர்களாக வாழமுடியும் என்பது உன்னுடைய கேள்வி! ஒருவருடைய விருப்பத்துடன் ஒத்துப் போகாதவர்களிடம் வெறுப்பு ஏற்படுவானேன்? பிரிவு ஏற்படுவானேன்? அந்நியமாக வேண்டிய அவசியம் என்ன? காலப்போக்கில் பகைவராக அனுமதிக்க வேண்டுமா? அவசியம் இல்லை.

இனிய செல்வ, ஒன்றுக்கொன்று இனம் என்று இயற்கையிலே உண்டு. பாலுக்கு இனம் உப்பல்ல; சர்க்கரை! அது போல, நீ காணும் ஒவ்வொருவரிடத்திலும் உனக்கு ஒத்துவரக்கூடிய ஒன்றிரண்டு பண்புகள் கூடவா இல்லாமல் இருக்கும்! இருக்கின்ற ஒத்த பண்பினை அறிந்து மேவிப் பழகி, நட்பை வளர்த்துக் கொள்வதன் மூலம் இரண்டு பேருக்குமிடையே உள்ள இடைவெளி குறையும். இடைவெளி குறையக் குறைய நட்பு வளரும். ஒத்த கருத்துக்கள் உருவாகும். ஆற்றல் பெருகும் ஆக்கம் வளரும்.

இனிய செல்வ, ஜனநாயக வாழ்க்கைமுறை-கூட்டுறவு வாழ்க்கைமுறை எளிதில் உருவாகாது. ஒவ்வொரு மனிதனும் நாள்தோறும் இத்துறையில் தன்னை வளர்த்துக்கொள்ளப் போராடவேண்டும். சினம் என்றும் சேர்ந்தாரைக் கொல்லும். கொடுந் தீமையை வென்றெடுக்க வேண்டுமாயின் பெரும் போராட்டம் தேவை. இனிய செல்வ, அழுக்காறு போன்ற தீமைகளைக் கூட விருப்பு-வெறுப்புக்களைக் கடந்தால்தான் வெல்லமுடியும். மற்றொருவர் என்று ஒருவர் இல்லை. எங்கு நோக்கினும் நீயே! உன்னோடு பிறந்த பட்டாளம்! மானிட சமுத்திரம்! இச்சமுத்திரத்தில் உள்ள தண்ணீரில் வேற்றுமை உண்டா? இல்லையே! மானிட சமுத்திரத்துக்குள் சங்கமமாகி விட்டால் வேற்றுமைகள் அகலும்! ஒருமைப்பாடு கால்கொள்ளும்! எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணும் பெருந்தகைமை, சன்மார்க்க ஒழுக்கம்-தோன்றும். இந்த நிலை கைகூடினால் "யாரோடும் பகை கொள்ளாத” பெரு வாழ்வு அமையும்.

கடவுள் பக்தி உடையவர் என்று விளம்பரம் செய்து கொள்வோருக்கு முதலில் தேவையான பண்பு, வேண்டுதல் - வேண்டாமை யில்லாது ஒழுகுதலாகும். வரலாறு முழுதும் கூர்ந்து பார்த்தால் மதவெறி-ஆதிக்க வெறி இவைகளால் நடந்த கலகங்கள், சண்டைகளே மிகுதி. இன்றும் நம்மை வருத்தும் கொடிய நோய்களான ஆசைகள், விருப்பங்கள், பெருமை பாராட்டல், விளம்பர வேட்டை யாடுதல், பணம் தேடல் இன்னோரன்னவற்றால் இன்றும் மனிதன் பிரிக்கின்றான்; பிரிந்துகொண்டேயிருக்கின்றான்! ஒரு சிலர் ஒன்றாக இருத்தல் போலக் காட்டி வாழ்வில் பிரிந்தே நிற்கின்றனர். இது பெரிய கொடுமை, மாடுகள் மந்தைகளாக வாழ்கின்றன. மனிதன் ஒன்றாகக் கூடி வாழ இயலாதா?

தி.33. இனிய செல்வ, இயலும்! முக்காலும் இயலும்! தேவை, மனிதத்துக்கு-உறவுக்கு முதன்மையான இடத்தைக் கொடுத்தல்; மற்றெல்லாம் இரண்டாம் நிலையின என்று கருதுதல்; தன் விருப்பத்தைத் திணிக்காது மற்றவர் விருப்பத்தை மதித்தல்; அந்த விருப்பத்திற்கு இடையூறின்றி வாழ்தல்; ஒரோவழி மாறுபாடுகள் தோன்றின் உடல் நோய்க்கு மருத்துவம் போல மருத்துவப் பாங்கில் அணுகுதல்; மாறுபாடுகளை அகற்றுதல்; மாறுபாடுகளை அகற்றிக் கொள்ளுதல். இந்தப் பண்பு விட்டுக் கொடுத்தல் ஆகாது. ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளும் அறிவியல் சார்ந்த முடிவாகும்.

இந்த முடிவும் இந்த முடிநிலை சார்ந்த வாழ்க்கை முறையும் தோன்றினால் சிறியோரை இகழமாட்டார்கள்; யாரையும் அந்நியப்படுத்தமாட்டார்கள். மற்றெவரையும் விடத் தம்மை உயர்ந்தவராகக் கருதிக் கொள்ளமாட்டார்கள். தனிச் சலுகைகள் எதிர்பார்க்கமாட்டார்கள். மற்றவர் உரிமைக்குக் காவலராக வாழ்வர். இவர்களுக்குள் "உதவி இல்லை; ஒப்புரவு உண்டு”. இனிய செல்வ, ஒப்புரவு ஓர் உயர்ந்த வாழ்க்கைமுறை. ஒப்புரவு வாழ்க்கை நிலை மலரும் பொழுதான் ‘கொடுப்பாரும் கொள்வாரும் இல்லா’ச்சமுதாயம் தோன்றும். விருப்பங்கள் உண்டு. விருப்பங்கள் வழிப்பட்ட ஆர்வம் உண்டு. ஆர்வம், ஆளுமை மிக்க முயற்சியைத் தரும். ஆக்கங்கள் படைக்கப் பெறும். இந்த வாழ்க்கைமுறை தவத்தினும் உயர்ந்தது.

இன்று கூடி வாழ விரும்புவோர் சிலரே. ஆயினும் உளமார அந்நிய உணர்வேயின்றிக் கூடி வாழ்வோர் மிகமிகச் சிலரே! அவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அற்ப விஷயங்களுக்கெல்லாம் கோபம், பிரிவினை, அந்நியப்படுதல், தீமை செய்தல், தூற்றுதல், வழக்குகள், நியாமான-தனக்குத் தீங்கில்லாத உரிமைகளைக்கூட மறுத்தல், தன்னை வியந்து கொள்ளல், தன்னை உயர்த்திக் கொள்ளல், தனக்கு ஒத்துவரக் கூடியவையே நியாயங்கள் என்று நம்புதல், தனக்கு ஒத்துவருபவர்களை மட்டுமே நேசித்தல், மற்றவர்களைப் பகைவர்களாகக் கருதுதல், இன்னோரன்ன தீமைகள் வளர்ந்து வருகின்றன. நமது வரலாறு, பழைய வரலாறு. நல்வாழ்வுக்கு ஏராளமான உதாரணங்களைக் காட்டுகின்றன. கோப்பெருஞ்சோழன்-பிசிராந்தையார் நட்பு, பாரி-கபிலர் தோழமை முதலியவை சிறந்த எடுத்துக் காட்டுக்கள்!

இனிய செல்வ, விருப்பங்கள் வளரட்டும்! அவ்விருப்பங்கள் வெறுப்புகளை ஈனுதல் கூடாது. "விதை ஒன்று. போட்டால் சுரை ஒன்று முளைக்குமா?” என்பது பழமொழி. இப்பழமொழி விருப்பங்களைப் பொருத்தவரை உண்மை யல்ல. விருப்பங்கள் வெறுப்புக்களை ஈன்றெடுத்தலே மிகுதி. இது தவிர்க்கப்படுதல் வேண்டும். தன்னை வியத்தல், மற்றவர்களிடமிருந்து விலகி உயர்ந்து அந்நியமாதல் என்பது கூடாது.

"புரவலன் போலும் தோற்றம் உறழ்கொள
இரவன் மாக்களிற் பணிமொழி பயிற்றி"

என்பது சான்றோர் வாழும் நெறி.

"ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்"

என்ற திருக்குறள் நெறி வழியில்-வள்ளுவர் வழியில்-நம் விருப்பங்களைத் திணிக்காது மற்றவர் விருப்பங்களை முன்னிறுத்தி அவை மாறுபாடாக அமையின் மருத்துவம் செய்து கூடி வாழ்வோம்!

இன்ப அன்பு

அடிகளார்