இளையர் அறிவியல் களஞ்சியம்/வைட்டமின்
வைட்டமின் : 'வைட்டமின்' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு 'ஊட்டச் சத்து’ என்பது தமிழில் பொருளாகும். நாம் அன்றாடம் உண்னும் உணவுப் பொருட்களில் ஊட்டச்சத்தான வைட்டமின் இடம் பெறுவது மிக முக்கியமாகும்.
நம் உடலுக்கு மிக இன்றியமையாத ஊட்டச் சத்தான வைட்டமினில் பலவகைகள் உண்டு. ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு விதமான உணவுப் பொருட்களிலிருந்து கிடைக்கிறது. ஒரே உணவு வகையில் ஒன்றுக்கு மேற்பட்ட ஊட்டச் சத்துக்கள் கிடைப்பதும் உண்டு. இவ்வூட்டச் சத்துக்களை A,B,C,D, E,K, H என வகைப்படுத்தியுள்ளனர். இது வரை 80-க்கு மேற்பட்ட வைட்டமின் வகைகள் கண்டறியப்பட்டுள்ளன.
முதன்முதலாக 1912ஆம் ஆண்டில்தான் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஹாப்கின்ஸ் எனும் அறிவியல் அறிஞர் நம் உடலுக்கு ஒரு வகை ஊட்டச் சத்துத் தேவைப்படுகிறதென்றும் அது பால் முதலான உணவுப் பொருள்களிலிருந்து கிடைக்கிறதென்றும் கூறினார். அதே ஆண்டில் போலந்து நாட்டைச் சேர்ந்த கசிமீர் பஸ்க் எனும் ஆய்வியலறிஞர் ஊட்டச் சத்துப் பொருளைத் தனியே பிரித்தெடுத்து, அதற்கு வைட்டமின் என்ற பெயரைக் சூட்டினார். அச்சொல்லுக்கு விளக்கம் தரும்போது 'இஃது உடலுக்கு ஊட்டம் தரும் உயிர்ச் சத்துப் பொருள்’ எனக் கூறினார். இதுவரை கண்டறியப்பட்டுள்ள 30 வைட்டமின்களில் 14 தனி உயிர்ச் சத்தாகப் பிரித்துக் கண்டறியப்பட்டுள்ளது.
சாதாரணமாக வைட்டமின்களின் தன்மைகளை இரு வகையாகப் பிரிப்பர். ஒன்று, நீரில் கரைபவை; மற்றொன்று கொழுப்பில் கரைபவை. நீரில் கரையும் வைட்டமின்கள் A, B இன வைட்டமின்களாகும். கொழுப்பில் கரையும் வைட்டமின் இனங்கள் A, D, E, K ஆகியவைகளாகும். வைட்டமின்களில் B இனம் ஒரே வகையான வைட்டமின் எனக் கருதப் பட்டது. பின்னர் நடைபெற்ற தொடர் ஆய்வின் விளைவாக அது பல்வேறு உயிர்ச் சத்துக் கூறுகள் அடங்கிய ஒரு தொகுப்பு (Complex) எனக் கண்டறியப்பட்டது. இத் தொகுப்பில் இது பன்னிரண்டு இனங்கள் அடங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இன்னும் பல உயிர்ச் சத்துக் கூறுகள் இருக்கக் கூடுமெனக் கருதித் தொடர்ந்து ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகிறது.
நாம் சாதாரணமாக உட்கொள்ளும் உணவு வகைகளில் வைட்டமின் உயிர்ச்சத்துப் பொருட்கள் ஓரளவே உள்ளன. உடல் சீராகவும் சிறப்பாகவும் இயங்க இன்றியமையாதனவாக இவை அமைந்துள்ளன. ஏனெனில், இவ்வைட்டமின்களாகிற ஊட்டச் சத்துக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான உடல் பணிகளையாற்ற உதவுகின்றன. எனவே, சிறப்பாக உடல் இயங்க இவை அவசியம் தேவை. எல்லா வைட்டமின்களையும் உடல் பெறுகின்ற அளவில் நாம் உண்ணும் உணவுகள் அமைவது அவசியம். அப்படியிருந்தும் வைட்டமின் பற்றாக்குறை உடலுக்கு ஏற்படும்போது அதைச் சரிகட்ட மருத்துவ ஆய்வின் விளைவாக செயற்கையாக மாத்திரை உருவிலும் திரவ வடிவிலும் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றைத் தேவைப்படுவோர் உண்டு தம் வைட்டமின் பற்றாக்குறையைப் போக்கிக் கொள்ளலாம்.