மணி பல்லவம் 4/23. சான்றாண்மை வீரன்
கப்பலில் காலைக் கதிரவனின் பொன்னொளி பாய்ந்து பரவிக் கொண்டிருந்தது. நீலக் கடற்பரப்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காலை வெயிலில் மின்னும் பசுமை யான தீவுகள் தென்பட்டன. உடலில் அருவி நீர் சிதறிப் பாய்ந்து நீராட்டு வதுபோல் காற்று சுகமாக வீசிக் - கொண்டிருந்தது. அப்போதுதான் துயில் நீங்கியெழுந்த பதுமை தனக்கும் முன்பாகவே எழுந்திருந்து தளத்தில் நின்றுகொண்டு கடலையும் கதிரவன் உதிக்கும் காட்சியையும் கவனித்துக் கொண்டி ருந்த தன் கணவனருகே சென்றாள். அவளுடைய கை வளைகளும் கால் சிலம்புகளும் கப்பலின் ஆட்டத்தில் நளினமாய் ஒலித்தன. கிழக்கு வானத்தில் இளஞ்சிவப்பும், கடல் நீரின் நீல நிறமும் வண்ணச் சித்திரங்களாய் ஒன்றுபட்டுக் கலக்கும் அழகில் ஈடுபட்டிருந்த மணிமார்பன் தனக்குப் பின்னால் வளையொலியும், சிலம்பொலியும் மெல்லக் கிளர்ந்து ஒலிக்கக் கேட்டுத் திரும்பினான். பதுமை வந்துகொண்டிருந்தாள். கிழக்கே சூரியன் உதயமாவதைப் பார்ப்பதற்காகச் சந்திரன் உதயமாகி எழுந்து வருவதைப் போலவும் பதுமையின் முகம் அப்போது மிகவும் அழகாயிருந்தது. தன்னுடைய கற்பனையைத் தன் மனைவி பாராட்ட வேண்டும் என்ற ஆவலோடு அவளிடம் பேச்சுக் கொடுத்தான் அவன்.
“இங்கே கதிரவன் உதயமாகும் அழகைப் பார்க்கலாம் என்று நான் எழுந்து வந்து நின்றேன். பதுமை இப்போது பின் பக்கம் திரும்பிப் பார்த்தால் குளிர் நிலவு பொழியும் கதிர்களோடு சந்திரன் உதயமா யிருக்கிறான்! இது என்ன அதிசயமோ !”
அவன் கூறியது புரியாமல், “எங்கே ? எங்கே ?” என்று கேட்டு நாற்புறமும் நோக்கி மருண்டாள் பதுமை.
“எங்கேயா? இதோ.. இங்கே!” என்று தன் அருகே வந்து நின்ற அவள் முகத்தைத் தொட்டுக் கொண்டே சொல்லிச் சிரித்தான் மணிமார்பன். பதுமை நாணத்தோடு அந்தப் பேச்சை உடனே வேறு கருத்துக்கு மாற்றினாள்.
“இரண்டு மூன்று நாட்களாக எனக்கு நல்ல உறக்கமே இல்லை. உறக்கத்தில்கூட அந்த ஒற்றைக் கண் மனிதரைப் பற்றிய கெட்ட சொப்பனங்கள்தான் காண்கின்றன. அன்றைக்குக் கற்பூர மரக்கலத்தில் தீப்பற்றிய பின் கட்டையைப் பற்றிக்கொண்டு அவர் மிதந்தபோது அவரைப் பார்த்ததனால் வந்த வினை இது. நேற்றிரவு மட்டும் அவரைப் பற்றிய கனவில் ஒரு மாறுதல் எற்பட்டது. அந்த ஒற்றைக் கண் மனிதரைப் பற்றிய கனவில் நேற்றைய அனுபவம் மட்டும் எனக்கு ஒரு புதுமை. காட்டு வழியில் ஓர் இடத்தில் நாலைந்து முரட்டு மனிதர்களாகச் சேர்ந்துகொண்டு அவரை அடித்துக் கொன்றுவிடுகிறாற் போலக் கனவு கண்டேன்.”
“கனவில்தானே அப்படி நடந்தது? உண்மையாகவே அப்படி நடந்திருந்தால்கூட நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் பதுமை ! அப்படி அடிபட்டுச் சாக வேண்டிய பெரிய கொடும்பாவிதான் அவன். ஆயினும் இதற்குள் சாகமாட்டான் அவன். சாவையே ஏமாற்றி அனுப்பிவிடக் கூடிய கொடுந்துணிவும் அவனுக்கு உண்டு. அன்று நீயும் நானும் அவன் கடலில் மிதந்து சீரழிந்ததைப் பார்த்தோம் அல்லவா ? அப்படி மி தப்பதும், நீந்துவதும்கூட அவனுக்குத் துன்பமில்லை. அவனும் அவனை வைத்து ஆளும் பெருநிதிச் செல்வரும் தங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கடல் பயணத்திலும், கடல் கடந்து வாணிகம் செய்வதிலுமே கழித்தவர்கள். இந்த இரண்டு மூன்று நாட்களாய்க் கப்பல் பயணம் செய்துகொண்டு வருகிற நாமே இத்தனை யோசனை தூரம்தான் கடக்க முடிந்திருக்கிறது. ஆனால் அந்த ஒற்றைக் கண் வேங்கையோ இதற்குள் நீந்தியே பூம்புகாரின் கரைக்குள் போய்ச் சேர்ந்திருக்கும்” என்றான் மணிமார்பன்.
“போதும்! இரையாதீர்கள். அதோ இந்தக் கப்பலின் கோடியில் அவர்கள் ஏதோ ஆழ்ந்த ஈடுபாட்டுடன் தங்களுக்குள் தனியாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நாம் இரைவது, அவர்களுடைய பேச்சுக்கு இடையூறாக முடியலாமோ, என்னவோ?” என்று சொல்லிக் கொண்டே தன் மனைவி பதுமை அப்போது சுட்டிக் காண்பித்த பகுதியில் பார்த்த மணிமார்பன் பெரிதும் வியப்பு அடைந்தான்.
குளிர்ந்த காற்று வீசும் இந்த வைகறை வேளையில் இளங்குமரனும் வளநாடுடையாரும் எதைப்பற்றி இவ்வளவு ஈடுபட்டுத் தனிமையில் பேசிக்கொண்டிருக்க முடியும் என்று அவனுக்கே புரிந்துகொள்ள முடியவில்லை. வீரசோழிய வளநாடுடையாரின் முகபாவத்திலிருந்து அவர் இளங்குமரனிடம் ஏதோ கடுமையான விஷயத்தை வற்புறுத்திச் சொல்லிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது. இளங்குமரனின் முகமோ மலர்ச்சி குன்றாமலே அவர் கூறுவனவற்றைத் தாங்கிக் கொண்டிருக்கும் சாயலைக் காட்டியது. இடையிடையே அவர் கோபமாகக் கூறுவனவற்றைத் தாங்கிக் கொண்டிருக்கும் சாயலைக் காட்டியது. இடையிடையே அவர் கோபமாகக் கூறுவனவற்றைக் கேட்டு அவன் புன்முறுவல் பூப்பதையும் மணிமார்பன் கவனித்தான். தன் ஆவலை அவனால் அடக்கிக் கொள்ள முடியவில்லை. “பதுமை நீ இங்கேயே இரு” என்று கூறிவிட்டு வளநாடுடையாரும் இளங்குமரனும் பேசிக் கொண்டிருந்த பகுதிக்கு மிக அருகில் ஒரு பாய் மரத்தின் மறைவில் போய்த் தனக்கு அவர்கள் தெரியும் படியாகவும் தன்னை அவர்கள் பார்த்துவிட முடியாதபடியும் நின்று கொண்டான் மணிமார்பன். அவர்கள் இருவரும் பேசிக் கொள்வதை அவன் அங்கிருந்து நன்றாகக் கேட்க முடிந்தது. வளநாடுடையார் ஆத்திரத்தோடு இளங்குமரனைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
“நீ இவ்வளவு பெரிய கோழையாக மாறியிருப்பாய் என்று நான் கனவில்கூட நினைத்ததில்லை தம்பீ! நீ சென்று கொண்டிருக்கிற கப்பலையே தீக்கிரையாக்கி அழித்துவிடும் திட்டத்தோடு வந்து கொடியவர்கள் தீப்பந்தங்களை வீசும்போது ‘நான் அருளாளன் என்னிடம் இதற்கு எதிர்ப்பு இல்லை’ என்று நீ எனக்கு மறுமொழி கூறுகிறாய். நடந்து மறந்துபோன நிகழ்ச்சியை மறுபடியும் நினைவூட்டிப் பேசுகிறேனே என்று நீ என்மேல் வருத்தப்பட்டுக் கொள்ளக்கூடாது. எதிர்ப்புக்கு முன்னால் துறவியாக நின்றுவிடுவது கருணை மறம் என்று நீ எண்ணிக் கொண்டிருக்கிறாய் போல் தோன்றுகிறது. ஏலாதவர்களிடமும், இயலாதவர்களிடமும் அன்பு செலுத்திக் கருணை காட்டுவதுதான் கருணை மறம். கொடியவர்களை எதிர்க்க வேண்டிய வேளையில் கைகட்டி நிற்பதும் கருணை மறம் காட்டுவதும் உன் ஆண்மைக்கு அழகில்லை.....”
“பெரியவரே! நீங்கள் சொல்வதை நான் மறுக்கவில்லை. ஆனால் அறிவினாலும் மனத்தினாலும் வாழ விரும்புகிறவர்கள் உலகில் புதிய ஆண்மை ஒன்றைப் படைத்திருக்கிறார்கள். அதுதான் சான்றாண்மை. சால்பை ஆள்வதுதான் சாற்றாண்மை. சான்றாண்மைக் குணத்தை நம்புகிறவர்கள், எதையும் எதிர்ப்பதை வீரமாகக் கொள்வதில்லை. பொறுத்து நிற்பதைத்தான் வீரமாகக் கொள்கிறார்கள். எதையும் எதிர்த்துக் குமுறி நிற்பதுதான் வீரமென்று நம்பிக் கொண்டு நான் வாழ்ந்த காலமும் உண்டு. அப்போது உடல் வலிமையை மட்டும் நம்புகிற பேராண்மையாளனாக இருந்தேன் நான். இப்போதோ உடல் வலிமையில் பெரிது என்று எண்ணுகிற சான்றாண்மையாளனாக என்னை மாற்றி விட்டார் திருநாங்கூர் அடிகள். இப்படி நான் சான்றாண்மை வீரனாக மாறியதைத் தானே நீங்கள் பெரிய கோழைத்தனம் என்று குறிப்பிடுகிறீர்கள்?” எனச் சிரித்த படியே இளங்குமரன் அவருக்கு மறுமொழி கூறினான். வளநாடுடையார் மீண்டும் அவனைக் கேட்டார்.
“உடம்பின் வலிமையால் நீ பலரை எதிர்க்க வேண்டிய அவசியம் மறுபடியும் உன் வாழ்வில் எப்போதாவது நேர்ந்தால் நீ என்ன செய்வாய்?”
“அப்படிப்பட்ட துன்பங்களினால் என்னுடைய சான்றாண்மை வலுவடையுமே ஒழியக் குன்றாது. துக்க நிவாரணம் தேடும்போதுதான் மனித மனம் பிரகாசித்து ஒளிரும் என்று நான் நம்புகிறேன். பெரியவரே! சுடச்சுட ஒளிரும் பொன்போல் கோபமூட்டத்தக்க வெம்மையான அனுபவங்களிலும், கவலைப்படத் தகுந்த துக்கங்களிலும் வெதும்பி, வெதும்பி இறுதியில் உணர்ச்சிகளைக் கடந்துபோய் நின்று ஒளிர்வதற்குப் பழகிக் கொள்ள வேண்டும் என்று என் ஆசிரியராகிய திருநாங்கூர்த் தவச் செல்வர் எனக்கு அருளுரை கூறியிருக்கிறார். கருணை மறமும்கூட அகங்காரத்துக்கு இடமுண்டாக்கலாம் நாம் நிறையக் கருணை செலுத்துகிறோம் என்று நினைத்து அதனாலேயே மனம் வீங்குவதுகூடப் பாவம்தான். கருணை மறவனிலும் மேலே உயர்ந்து சான்றாண்மை மறவனாக எல்லையற்ற நிதானத்தில் போய் நின்றுகொண்டு இந்த உலகத்தைப் பார்த்துச் சிரிக்க வேண்டும்போல் ஆசையாக இருக்கிறது எனக்கு. திருநாங்கூரில் கற்று நிறைந்த பின் பூம்புகாரின் வீதிகளிலும் சமயவாதிகளின் பட்டி மண்டபங்களிலும், இப்போது, உங்களோடு இந்தக் கப்பலிலும் நான் திரிந்து கொண்டிருப்பதுகூட உலக அநுபவத்தில் தோய்ந்து தோய்ந்து அதிலிருந்தும் ஞானத்தைக் கற்பதற்காகத்தான். சேற்றில் பிறந்தும் சேறு படாமல் மேலெழுந்து மலர்கிற தாமரையைப்போல் இந்த உலகியல்கள் என்னை மேல் நோக்கி மலர்விக்கத் துணை புரிய வேண்டுமே ஒழியக் கீழே தள்ளி மறுபடியும் அழுக்கில் புரட்டி எடுத்துவிடக் கூடாது.”
இவற்றைச் சொல்லும்பொழுது நேர்கிழக்கே உதித்துக் கொண்டிருந்த சூரியனின் கதிர்கள் எல்லாம் இளங்குமரனின் முகத்தில் பட்டு அந்த அழகிய முகத்தைத் தெய்வீகப் பொற்சுடராக்கின. அந்தக் கணத்தில் அப்படியே கைகூப்பி வணங்கி விடலாம் போலத் தூய்மையாய்த் தெரிந்த அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்த வளநாடுடையாருக்குக் கோபம் வரவில்லை. இனம் புரியாத தயக்கத்தோடு அவர் அவனை நோக்கி மேலும் சிலவற்றை வற்புறுத்திக் கூறினார்.