உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8/குமரகுருபரரின் உயிர்க் கொள்கை

விக்கிமூலம் இலிருந்து


26


குமரகுருபரரின் உயிர்க்கொள்கை


வாழ்வியலுக்குத் தத்துவ இயல் தொடர்புடையது. தத்துவத் தெளிவே வாழ்வியலுக்கு நல்ல அடிப்படை வாழ்வியல் இயக்கத்தில், குழப்பத்தைத் தவிர்த்து நன்னெறியில் படர்வது தத்துவத் தெளிவிருந்தாலே சாலும். இன்று உலகில் பல சமயங்கள், சமயங்களிடையே தத்துவங்கள் வேறுபடுகின்றன. அதனால் தத்துவப் பயிற்சியே தலை வலியாகி விடுகின்றது. ஆனால், தத்துவ இயலில் அறிவியல் ஆய்வு நிகழவும், தெளிந்த முடிவுகளை எடுக்கவும் முடியும்; ஒரே சமயநிலைக்குக்கூட நாம் வர இயலும். ஆனால், மதத் தலைவர்கள் இதனை விரும்பமாட்டார்கள். இன்று மதம் என்ற அமைப்பு அறிவியலிலிருந்து விடுதலை பெற்றுவிட்டது. மிகவும் இறுக்கத் தன்மையுடையதாகிவிட்டது. நெகிழ்ந்து கொடுக்கும் போக்கு மதத் தலைவர்களுக்கிடையில் இல்லை! ஏன்? மதங்களின் குறிக்கோளாகிய மனிதகுல ஒருமைப்பாடு இன்று மதங்களில் இல்லை. மதமே ‘மத’மாக இடம் பெற்று விளங்குகிறது. இது வாழும் உலகத்திற்கு நல்லதல்ல.

தத்துவம் என்பதற்கு உள்ளது என்று பொருள். எவை எவை உள்ளவையோ அவ்வவற்றை ஆய்வு செய்வது தத்துவ ஆராய்ச்சி. உள்ளவைகளை - உண்மைகளைப் பற்றிய அறிவே தத்துவ அறிவு; தத்துவ ஞானம். உலகத்தார் உண்டு என்பதை எங்ஙனம் மறுக்க இயலும்? செழுந்தமிழ் வழக்காகிய சிவநெறி உள்பொருள்-என்றும் உள்பொருள் - தோற்றமும் மறைவும் இல்லாத பொருள். மூன்று என்ற கொள்கையுடையது. அவை முறையே உயிர், ஆணவம், கடவுள் ஆகியன. இம் மூன்றினைப் பற்றிய தெளிவான அறிவு இருந்தால் நமது வாழ்வினை அமைத்துக் கொள்ளவேண்டிய நெறிமுறைகள் தோன்றும்; வாழ்வு சிறக்கும்!

கடவுள் முதற் பொருள். கடவுளைப் பற்றிய அறிவு நமக்கு அவசியமே. ஆயினும் கடவுளைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்பு, உயிர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுவது நல்லது. தம்மை உணர்ந்து, தம்மையுடைய தலைவனை உணர்தலே வழிமுறை.

உயிர்கள் இயற்கையாக உள்ளன; என்றும் உள்ளன. உயிர்கள் தோற்றம் இல்லாதன; அறிவு இல்லாதன. உயிர்களுக்குப் பிறப்பும் இல்லை; இறப்பும் இல்லை. உயிர்கள் பலப்பல. இவை தமிழ் நெறிய தத்துவக் கொள்கை. செந்தமிழ்க் குமரகுருபரர் ‘மன்னுயிர்த் தொகுதி’ என்று குறிப்பிடுகின்றார். மன்னுதல்-நிலை பெறுதல்-என்றும் நிலைபெற்று விளங்குதல் என்பது பொருள். ‘மன்னுயிர்த் தொகுதி’ என்றதால் உயிர்கள் பலப்பல என்ற கருத்தையும் உணர்த்துகின்றார். உயிர்கள் பலப்பல மட்டும் அல்ல. பலவகையின என்ற கொள்கையும் உணர்த்தப் பெறுகிறது. இதனைப் ‘பல்லுயிர்த் தொகுதி’ என்று கூறி விளக்குகின்றார்.

“முட்டையிற் கருவில் வித்தினில் வெயர்ப்பில்
நிற்பன நெளிவ தத்துவ தவழ்வ
கடப்பன நடப்பன பறப்பன வாகக்
கண்ணகன் ஞாலத் தெண்ணில்பல் கோடிப்
பிள்ளைகள் பெற்ற பெருமனைக் கிழத்திக்கு
நெல்லிரு நாழி நிறையக் கொடுத்தாங்கு”

(சிதம்பரம் மும்மணிக்கோவை 464:15-20)

என்ற பாடல் அடிகளில் விளக்குவதை அறிக.

அடுத்து உயிர்-உய்தற்குரியது. உயிர்கள் இன்பத் துய்ப்பை அடிப்படையாகக் கொண்டவை. உயிர்களுக்குத் துன்பம் செயற்கையே. இயற்கையில் உயிர்கள் இன்பத் துய்ப்பிற்குரியவை; இன்பமானவை. ஆதலால் நற்றமிழ்க் குமரகுருபரர் “இன்னுயிர்” என்றே உயிர்களைக் குறிப்பிடுகின்றார்; அழைக்கின்றார். இன்பம் பலவகையின. உயிர்கள், அறிவும் தெளிவும் இன்மையின் காரணமாகத் துன்பமானவற்றை துன்பம் கலந்த இன்பங்களைக்கூட இன்பமென்றே கருதுகின்றன. என்றும் எப்போதும் எல்லோருக்கும் இன்பமாயிருப்பதே இன்பம். அது மட்டுமல்ல, இன்பத்திற்கு எல்லையில்லை; வளர்ச்சியுண்டு. பேரின்பம் வரையில் வளரும். ஆங்கும் எல்லையில்லை; முடிவில்லை. அதனால் ‘ஆரா இன்பத்தேன்’ என்று குறிப்பிடுகின்றார். குமரகுருபரர் இதனை,

“அடுத்தவின் வயிர்கட் களவில் பேரின்பம்
கொடுப்பது முதல்வநின் குஞ்சித பதமே”

என்பார். இறைவனின் குறிக்கோள் மன்னுயிர்களுக்கு இன்னருள் பாலிப்பதேயாம். உயிர்கள் என்றும் உள்ளவை; உயிர்கள் பலப்பல; உயிர்கள் இன்ப இயல்பின, உயிர்களின் குறிக்கோள் ஆரா இன்பம் பெற்றுத் துய்ப்பதுவேயாம். பேரின்ப நுகர்வே உயிர் வாழ்க்கையின் பயன். இதனைக் குமரகுருபரர் ‘இன்பப் பயன் கொள்ளும் பொழுது உயிர்கள் சார்பினால் வந்த துன்பங்களிலிருந்து விடுதலை பெறுகின்றன’ என்பார்.

உயிர், சிறப்புறு நலன்கள் பெற, உணர்வு தேவை. உணர்ச்சி வேறு; உணர்வு வேறு. உணர்ச்சி உடற் சார்புடையது. உணர்வு உயிர்ச் சார்புடையது. உணர்ச்சி தற்சார்புடையது; தீமையை விளைவிப்பது. உணர்வு, பிறர் நலச் சார்புடையது; தியாக இயல்பினது; நன்மையையே செய்வது. ஆதலால் உயிர்கள் உணர்வில் சிறந்து விளங்குதல் வேண்டும். இதனைச் செந்தமிழ்க் குமர குருபரர்,

..............உயிரால்
வாலத் துணர்வு நீர் பாய்ச்சி
வளர்ப்பார்க்கு ஒளிபூத் தளிபழுத்த
மலர்க் கற்பகமே’

-மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்–44

என்று விளக்குகிறார். உணர்வில்லையெனில் உயிர் இயல்பில் குன்றி, உடலியக்கம் வளர்ந்திருக்கிறது என்பது குறிப்பு. உயிருக்கு உடல் கருவி. கருவிகள், பயன்படுத்துபவர்களை விஞ்சிவிட்டால் விளையக்கூடியது தீமைதானே!

உயிர்களுக்கு, உயிர்க்குயிராக இருந்து அறிவு நிலையில் உணர்த்தி உய்த்துச் செலுத்தும் பொருள் கடவுள். “உயிர்க்கு உயிராம் மதுரேசர்” என்பது மதுரைக் கலம்பகக் கவி. உயிர்க்கு உயிர் என்றால் ‘உயிர்’ என்றே பொருள் கொள்ளக் கூடாது. உயிரியக்கத்திற்கு-உயிர் மேம்பாட்டுக்குத் துணையாக இருக்கும் ஆற்றல் வாலறிவு. “ஊனாய் உயிர்க்கு உயிரானாய்” என்ற முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் வரியையும் எண்ணுக.

உயிர்கள் தழைத்து வளரவேண்டும். உயிர்கள் தழைத்து வளரத் தடையாய் அமைந்துள்ள ஆணவக்காடுகள் அகற்றப் பெறுதல் வேண்டும். ஆணவம் என்றும் உள்பொருள்; உயிருடன் இருப்பது. ஆணவத்தை அகற்றுதல் இயலாது. ஆணவத்தின் கேட்டை அடக்கி வைக்கலாம். அவ்வளவு தான். ஆணவத்தின் தூண்டுதல் வழி, வினைகளையும், வினைகள் வழி, ஊழ் ஆகிய படிகளையும் கடந்து, உயிர்கள் வளர்தல் வேண்டும். உயிர் தளிர்த்து வளர்தல் என்பது அருட்புனலில் தளிர்த்தலாகும். ‘உயிர்ப் பயிர் தழைப்ப’ ‘கண்டுயிர் தளிர்த்த’ என்ற அடிகளைப் பலகாலும் படித்திடுக.

செந்தமிழ்க் குமரகுருபரர், தமது பிரபந்தங்கள் முழுவதிலும், உயிர்கள் என்றும் உள்ளவை, உயிர்கள் பலப்பல, உயிர்கள் வளர்வதற்கு உணர்வு தேவை; உணர்வுக்குத் துணையாயிருந்து தூண்டிச் செய்வது - ஆற்றுப் படுத்துவது கடவுள் என்பதை உணர்த்துகின்றார்.