குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8/நற்சொல் எது?

விக்கிமூலம் இலிருந்து


28


நற்சொல் எது?


சொல், பொருளுடையது. பொருள் என்பது பதவுரை மட்டுமன்று. சொல்லின் பொருளை உணர்ந்து அடைதற்குப் பதவுரை ஒரு வாயிலே. அங்ஙனமாயின், சொல்லுக்குப் பொருள் யாது? சொல்லினால், உயிர்களின் அனுபவத்திற்குரியனவாக விளையும் பயனே சொல்லுக்குப் பொருள்.

“பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனும்” என்பார் குமர குருபரர். ஆளுடைய அடிகளும் தாம் அருளிய திருவாசகத்திற்குப் பொருள், அம்பலத்தே ஆடல்வல்லானின் திருவடிப் போதுகளே என்றார். இங்கனம் சொல்லுக்குப் பொருள் காணும் ஆர்வம், இன்று நாட்டிடையில் இல்லை.

பொதுவாகப் பொறிகளைக் கடந்த புலன்களுக்கும், புலன்களையும் கடந்த உணர்வுக்கும், உணர்வினையும் கடந்த உயிருக்கும் இன்பம் தருகின்றவற்றில் இன்று விழைவு இல்லை; விருப்பம் இல்லை. இன்று பொறிகளின் இன்பத்திலேயே நாட்டம் மிகுதி. செவிக்கினிய சொற்களை விரும்புகிறார்களே தவிர, நலம் தரும் சொற்களை நாடுவதில்லை.

நம்முடைய நாட்டில் சொற்கள் ஏராளம்! சொல்லுபவர்களும் ஆயிரமாயிரம் பேர்கள்! ஏன், வாய் படைத்தவரெல்லாம் சொல்ல ஆரம்பிக்கின்றனர்; பேச ஆரம்பிக்கின்றனர். வாய் படைத்தவருக்கெல்லாம் பேசும் உரிமை இருத்தல் கூடாது. வாய்மையுடையவருக்கே பேசும் உரிமை இருத்தல் வேண்டும்.

இன்று சொற்களை வழங்குவோரிடத்திலும் நலன் நாடும் வேட்கையில்லை. சொற்களைக் கேட்பவர்களிலும் கூடப் பலர் செவிக்கினியவற்றையே விரும்புகின்றனர். அதனால், எங்கும் முகமனுரைப்பவர்கள் அதிகமாகி விட்டனர்.

முகமன் என்பதே முகத்திற்காகச் சொல்வதுதான்! முகமன் கூறுகிறவர்களில் பெரும்பாலோர் போலிகள்! தன்னல உணர்ச்சியுடையவர்கள். அவர்களுக்கு வாழ்விக்கும் நோக்கமில்லை. இந்த நூற்றாண்டில் புகழ்தல் ஒரு கலையாகவே போய்விட்டது. ஏன், சிலருக்கு அது தொழிலும் கூட!

புகழுக்கே இலக்கணம் நேரில் சொல்வதன்று. புகழுக்குரியவன் இல்லாத இடத்தில் பலரறியப் புகழைப் பறைசாற்றி அது செவிக்குச் செய்தியாக வரும் பொழுது புகழாகிறது. அதுவும் கூடப் பயனைத் துய்த்தவர்கள் அனுபவித்தவர்கள் கூறுவதுதான் புகழ்.

நம்மை நாள்தோறும் சுற்றிக் கொண்டிருப்பவர்கள்-நத்திப் பிழைத்துக் கொண்டிருப்பவர்கள் சொல்வது புகழன்று. பழங்காலத்துச் சான்றோர்கள் தற்யெலாகத், தம்மை யாராவது புகழ்வதைக் கேட்டுவிட்டால் அந்தப் புகழைக் கேட்க வெட்கப்பட்டார்கள். தம் புகழ் கேட்க நாணுவர் என்பது சங்கத் தமிழ் நல்லுரை.

புகழ் விருப்பம் மிகுதியும் வந்து விட்டதால் நல்லதைக் கேட்கும் பழக்கும் அருகிவிட்டது. செவிகைப்பச் சொற் பொறுக்கும் சால்பு இன்று காண்டற்கரியதாகிவிட்டது. சொற் சுவையைவிடச் சொற் பயனே முதன்மை பெற செய்ய வேண்டும்.

நல்ல மனமுடையவர் ஒப்புக்குப் பேசத் தெரியாமல் போகலாம். புகழ்ந்து பிழைக்கத் தெரியாத அப்பாவிகளாக இருக்கலாம். உள்ளதை உள்ளவாறு சொல்கிறவர்களாகவும் இருக்கலாம். வன் சொல்லாகவும் இருக்கலாம். ஆயினும் சொல்கிறவர்களுடைய நன்னெஞ்சத்தைப் பொறுத்து வன் சொல்லும் கூடப் பயன் நோக்கிய இனிய சொல்லாக இருத்தல் உண்டு.

யாழ், வடிவத்தில் கோணலானது. அம்பு, வடிவத்தில் நேரியது. ஆயினும் இவ்விரண்டின் விளைவு வேறுபாடுடையது என்பார் வள்ளுவர்.

கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல்.

என்பது திருக்குறள்.

தோற்றத்தில் நேரிதாக இருக்கும் கணை கொலை செய்கிறது. தோற்றத்தில் வளைவுகளைப் பெற்று இனிமையல்லாத தோற்றமுடைய யாழ் இன்னிசையைப் பொழிகிறது. இனிய பயனைத் தருகிறது.

பக்தியிற் பழுத்த நெஞ்சுடைய சாக்கிய நாயனார் எறிந்த கல், இறைவனுக்கு மலராயிற்று. கல்லையும் மலராக்கும் ஆற்றல், அன்பிற் கனிந்த இதயத்திற்கு உண்டு. காமவேள், இறைவன் மீது மலர்க்கணைகளையே தொடுத்தான். ஆயினும், கல்லை மலராக ஏற்றுக் கொண்ட இறைவன், காமவேளின் மலர்க்கணைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏன்? விளைவு நோக்கியே!

ஆதலால், சொற்களில் சுவை நாடற்க! செவிக்கினியவாக மட்டும் உள்ள பயனற்ற சொற்களை நாடாதொழிக! சொற்களின் விளைவாகிய வாழ்க்கையின் பயனை நாடுக! அத்தகைய சொற்கள் வன்சொற்களாக இருந்தாலும் ஏற்றுக் கொள்க!

நல்லோர்களுக்கு, தூய மனமுடையோர்களுக்கு உண்மை தான் சொல்லத் தெரியும், புகழத் தெரியாது.

ஆதலால் சொற்களின் மொழிச் சுவையைவிட சொற்களால் விளையும் பயனையே நாடுக! இதுவே நன்னெறி ஆசிரியர் காட்டும் வாழ்க்கை முறை.

மாசற்ற நெஞ்சுடையார் வன்சொலினிது ஏனையவர்
பேசுற்ற இன்சொல் பிறிதென்க ஈசற்கு
நல்லோன் எறிசிலையோ நன்னுதல் ஒண் கருப்பு
வில்லோன் மலரோ விளம்பு.

என்பது நன்னெறி வாக்கு.