உள்ளடக்கத்துக்குச் செல்

நூறாசிரியம்/கழைமென் றோளி

விக்கிமூலம் இலிருந்து

13 கழைமென்றோளி


தணந்த சுறவத்து மணந்த மாணிழை
அணைந்த சுறவமுன் அகறல் ஆகின்றே!
புணர்ந்த தோளும் பொலிவழிந் திலையே!
நிணந்த மார்பும் நிமிர்பழி கிலையே
மன்றற் கூறையும் மடிகலைந் திலையே! 5
கலியெழு கிளைமுன் கவிழ்ந்த புன்றலை
இன்றும் ஏர்ந்தன் றிலையே! எழுதிய
கால்வரிக் கோலமும் கலைந்தன் றிலையே!
சுடரொளி வாணுதல் வெளிறப் பொதிகுழல்
படர்ந்து நிலம்புரள இடைநுடங்கிப் 10
புறமஞ்சி யுள்ளழுங்கும் புனல்வார் கண்ணொடு
கையற்று ஞெகிழும் கழைமென் றோளிக்கு
உறுநாள் உவப்புற வேண்டி
மறுமணம் புணர்த்தீம் மனைவாழ் வோரே!


பொழிப்பு :

நீங்கிய (கடந்த சுறவ ஒரையில் (தைத் திங்களில்) மணந்த ஞான்றை அணிந்த பெருமை மிக்க அணி (தாலி), வரவிருக்கின்ற சுறவத் திங்களின் முன் அகலும்படி ஆகிற்றே! கணவனால் தழுவப் பெற்ற தோளும் இளமை ஒளி அழியவில்லையே! புடைத் தெழுந்து நின்ற மார்பும் நிலை தாழ வில்லையே! மன்றல் நாளில் உடுத்துக் கொண்ட புதிய உடையின் மடிப்பும் இன்னும் கலைய வில்லையே! ஆரவாரம் எழும்பும் கிளைஞர் தம்முன் மணநாட் போதில் கவிழ்ந்த, பொலிவிழந்த தலை, இன்றும் நிமிரவில்லையே! அன்று காலின்கண் எழுதப் பெற்ற அழகிய கோலமும் இன்னும் கலைந்து போகவில்லையே! சுடரென ஒளிரும் வளைந்த நெற்றி வெளிறவும், பொதியப் பெற்ற குழல் அவிழ்ந்து நிலத்தே புரளும்படி படர்ந்திருப்பவும், இடை துவளவும், புறத்தே இருப்பார்க்கு அஞ்சியவாறு, அகத்தே மிகுதுயரால் நீர் வழிந்த கண்களோடு செயலாற்றும், உடல், உள்ளம், உயிர் தளர்வுறவும் கிடவாநின்ற இளமூங்கில் போலும் மென்மை வாய்ந்த தோள்களையுடைய இவளுக்கு, இனி, வரவிருக்கின்ற நாள்கள் மகிழ்வுறுமாறு இருத்தலை விரும்பி, மற்றும் ஒரு முறை மணம் செய்வீராக, மனைக்கண் வாழ்தலை மேற்கொண்டு. நிற்பீராகிய நீவிரே !

விரிப்பு:

இப்பாடல் புறத் துறையைச் சார்ந்ததாகும்.

மணமுடிந்து ஓராண்டிற்குள் கணவனை இழந்த இளம் பெண் ஒருத்திக்கு மறுமணம் புணர்த்துமாறு மனை வாழ்வோருக்குச் சான்றோர் ஒருவர் அறிவுறுத்தியதாக அமைந்ததிப் பாட்டு.

கனவற் றுறந்த நங்கை ஒருத்தியின் இளமைக் கொழிப்பினையும், இல்லறந் தோய்ந்து இளமை நலந் துய்க்கா அவளின் துயர் மண்டிய சூழலையும் எடுத்துக்காட்டி, அவளின் எஞ்சிய வாழ்வின் இன்பத்தை உறுதிப்படுத்திக் குமுகாயத் திருத்தத்தைச் செய்ய வற்புறுத்திக் கூறுவதாகும் இப்பாடல்.

தணந்த சுறவத்து மணந்த மாணிழை - நீங்கிய சுறவ மாதத்தில் மனஞ் செய்தலாற் பெற்ற பெருமை மிக்க அணி. தணத்தல்- நீங்கல், போதல், கடத்தல், தள் என்னும் வேர்ச் சொல்லடியாப் பிறந்த சொல் தணத்தல். (தள்-தள்ளுதளர்வு முதலிய சொற்களை ஓர்க). கறவம் முதலை மகரம் (வ. சொல்) தை மாதம். கதிரவன் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு மீன் கூட்டத்தினிடையே புகுவதாகும் நிகழ்ச்சியின் அடிப்படையாக அமைக்கப் பெற்றன மாதப் பிரிவுகள். மீன் கூட்டம் ஓரை எனப்படும். அவற்றை அடையாளம் கண்டு கொள்ள ஒவ்வோர் உருவத்தினை அக்கூட்டங்களுக்குக் கற்பனையாகப் பொருத்தி வழங்கினர் பண்டை வானியலார். பின்னை, அவ்வவ் வுருவங்களின் பெயரே அவ்வம் மாதங்களுக்குரிய பெயர்களாக வழங்கின. பண்டைத் தமிழர் மாதங்களின் பெயரை ஓரைப் பெயர்களாகவே வழங்கினர். இடையில் வந்த ஆரியர் அத்துய் தமிழ்ப் பெயர்களையெல்லாம் வட சொற்களாகத் திரித்து வழங்கினர். அரசச் செல்வாக்காலும், சமயப் புனைவுகளாலும் மக்களிடை அவர் பெருமையுற்றபொழுது, அவர் அமைத்த பெயர்களும் பிறவற்றைப் போலவே பெருமையுற்றன. ஆரியர் அமைத்த ஆண்டமைப்பிற்குச் “செளரமானம்” என்றும், அவர்கள் அமைத்த மாதங்களுக்குச் “செளரமான மாதங்கள்” என்றும் பெயர் வைத்துக் கொண்டனர். “செளரம்” என்பது கதிரவனைக் குறிக்கும் வட சொல். கதிரவனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அக்கால அளவை கணிக்கப் பெற்றதாகலின் அஃது அப் பெயர் பெற்றது.

ஓர் ஓரையில் புகுந்த கதிரவன் பிறிதோர் ஒரைக்குப் போகும் வரையில் உள்ள காலம் ஓர் இராசி அல்லது ஒரு மாதம் எனப் பகுத்தனர். இக் கணக்கீடு பண்டைத் தமிழருடையதே ஆரியர் இடம் மாறிகளாக இருந்தமையான் அவர்களுக்கு நிலையான வானியலறிவு குறைவாக இருந்தது. தமிழரின் இவ் வானியல் அடிப்படையில் அவர் திரித்த வட மொழிப்பெயர்களே பிற்காலத்து நிலை பெற்றுப் போனமையாலும், பண்டைத் தமிழரின் மூலநூற்கள் யாவும் அழிந்தும், அழிக்கவும் பட்டமையாலும் அவர் வழக்கே நிலைத்தது குறித்து, தமிழர்க்கு வானிய லறிவே குறைவென மொழிவர் மதிக்குறைவினார் சிலர். அவர் தருக்குரைகள் கதிர்முன் பனி போல் உருக்குலைந்து போங்காலம் மிகத் தொலைவில் இல்லையென உணர்க.

இனி, ஒவ்வோர் ஓரைப் பெயராலும் அழைக்க பெற்ற மாதப் பெயர்கள் சைத்திரம், வைசாகம், ஆஹரம் (ஆணி) ஆஷாடம் (ஆடி) முதலியன. இவ் வழக்கு, தமிழரின் ஓரைப் பெயர் வழக்கை அடியொட்டின. (விரிவைக் கணிய நூலிற் கண்டு கொள்க)

இனி, தலைமை மீனின் பெயரே அந்த மீன் சார்ந்த கூட்டத்திற்கும் வழங்கப்பெற்றது. வெள்ளாடு போல் அமைந்த மீன் கூட்டத்திற்கு மேஷம் என்றும். ஆணும் பெண்ணும் இணைந்த இரட்டைத் (மிதுனம்) தோற்றம் போல் உள்ளதற்கு மிதுனம் என்றும், நண்டு, மடங்கல்(சிங்கம்), கன்னி, துலை(தராசு), நளி(தேள்) சிலை(வில்), சுறவம் (முதலை) கும்பம் (குடம்), மீன் ஆகியன போல் அமைந்தவற்றிற்கு முறையே கடகம், சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம் (தேள்), தனுசு (வில்) மகரம்(முதலை), கும்பம், மீனம் என்றும் வழங்கினர். இவ்வழக்கில் கடகம், கன்னி, துலாம், கும்பம், மீனம் என்பன தூய தனித் தமிழ்ச் சொற்கள். இவ்வாரிய வழக்கு தலையெடுத்தபின் ஓரைப் பெயரால் மாதங்களைக் குறிக்கும் தமிழ் வழக்கு தலை மறைக்கப் பெற்றது.

இனி, சித்திரை, வைகாசி என்று தொடரும் வட நூல் வழக்கிற்கான, தூய தமிழ்ப் பெயர் வழக்கு மேழம், விடை இரட்டை அல்லது ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலாம், நளி, சிலை, சுறவம், கும்பம், மீனம் என்பன.

எனவே சுறவத் திங்கள் இக்கால் ஆரிய வழக்குப் பெயரான தை மாதத்தைக் குறிக்கும் தூய தனித் தமிழ்ச் சொல்லும் வழக்குமெனக் கொள்க.

மாணிழை: பெருமைக்குரிய அணி, இழைக்கப் பெறுவதால் அணி இழையெனப்பட்டது. இழைத்தல்-ஆராய்தல், கலப்பித்தல். சீவல், பொடியாக்குதல், செதுக்குதல், செய்தல், அழுத்துதல், மணி பதித்தல் ஆகிய பொன்செய்வினைகள் அத்தனையும் குறிக்குமோர் அருஞ்சொல். இத்தனை வினைப்பாடுகளும் கொள்ளலால் பொன்னால் செய்யப் பெறும் அணிக்கு இழையென்று பெயர் வந்தது. இழை அணிவோரை யன்றி அதனைச் செய்வோரை வளையோர் என்று குறிக்காமை போல.

இனி, செய்யப்பெறும் அல்லது அணியப் பெறும் அணிகளுள் தாலி ஒன்றே மங்கலச் சிறப்பு வாய்ந்ததாகலின் அது மாணிழை எனப் பெறும் தகுதி வாய்ந்தது. மணக்கப் பெற்ற காலத்து அணியப் பெற்ற தாகலின் மணந்த மாணிழை எனப்பெற்றது.

அணந்த சுறவுமுன் அகறல் ஆகின்றே -நெருங்கி வரும் சுறவத் திங்களுக்கு முன் அகலுதல் ஆகிற்று.

அணத்தல்-நெருங்குதல்-மேலாகி நிற்றல் (அண்- என்னும் சொன் மூல அடியாகப் பிறந்த சொல்-வேர்-அள். (அண்-அண்ணு-அண்டு-அண்டை அடு-அண்-அணை போன்றவற்றை ஒர்க)

அகறல்- அகலுதல் நீங்குதல் அகலம் என்னும் சொல் பரப்பைக் குறித்த பின், இரண்டு பொருள் அகலுமிடத்துப் பிரிவு தோன்றலால் அகலுதல் என்னும் சொற்கு நீங்குதல், விலகுதல் என்னும் பிரிவுப் பொருள் தோன்றிற்றென்க.

ஆகின்று - ஆகிற்று என்பதன் மெலித்தல், வேறுபாடுவேறுபடல். விகாரித்தல் (வ. சொ)

புணர்ந்த தோள் - புணரப் பெற்ற தோள் - தழுவப் பெற்ற தோள்.

பொலிவு - இளமை ஒளி, பொன்-பொல் பொலம்-பொலிவு, மணவாத இளமையோர்க்கு உடலின்கண் உள்ள பொன் போன்றதொரு மினுமினுப்பு. மணஞ் செய்து கொண்டார்க்கு இவ்வொளி மழுங்கித் தோன்றுமாம். திருமணம் செய்விக்கப் பெற்றும் இவ் விளையோளின் பொலிவு குன்றா திருப்பதை எடுத்துக் காட்டி இவள் இல்லற இன்பத்தை நினைவுறத் துய்த்தோள் அல்லள் எனக் குறிப்பிக்கக் கூறப்பெற்றது.

நிணந்த மார்பு - புடைத்து விம்மலுற்ற மார்பகம். நினம்-கொழுப்பு. மதர்ப்பு. நிரைத்தல் கட்டப்படுதலுமாம்.

நிமிர்பு - நிலை நிற்கும் தன்மை அழிகிலை - அழிதல் இல்லை. பெண்டிர்க்குத் தோளும் மார்புமே இளமைக்கும் முதுமைக்கும் வேறுபாடு தோற்றுவிக்கும் கருவிகளாக விருக்கின்றமையின், இளமை யாழியா இளையோள் என்று. காட்டுவான் வேண்டி அவ்வுறுப்புகளின் நலனழியாமை கூறப்பெற்றது.

மன்றற் கூரையும் மடி கலைந் திலையே - மணத்திற்காக உடுத்தப் பெற்ற புதுச்சீரை மனத்தின் பின் மீண்டும் மடிக்கப் பெற்று, மங்கலப் பொருளாகப் பேணிக் காக்கப் பெறுமாகலின், அது மடிக்கப் பெற்ற நிலையிலேயே உள்ளதென்றும், பிறிதொருகால் உடுத்தப்பெறும் வாய்ப்பையும் பெறவில்லை என்றும் குறிக்கலாயிற்று. இனி அதனை என்றும் உடுத்தக் கூடாத தன்மையில் மங்கலம் இழந்தாள் என்று இரக்கந் தோன்றக் கூறியதுமாம்.

கலியெழு கிளைமுன் கவிழ்ந்த புன்றலை - ஆரவாரத்தை எழுப்புகின்ற கிளைஞர்முன் நாணத்தால் கவிழ்ந்த தலை. மணநாட் பொழுதில் நாணத்தால் கவிழப் பெற்ற தலை, ஈண்டுத் துயரால் கவிழப் பெற்றது குறிக்கப் பெற்றது. புனையப் பெற்ற தலையாக இல்லாமல் புனைவில்லா வெறுந் தலையாக இருத்தலை ஈண்டுக் குறித்திடப் புன்றலை எனப்பெற்றது. புன்றலை-புல்லிய தலை, புல்லிது-புன்மையானது.இழிந்தது-எளிமை தோற்றும் இழிசொல். புல் போலும் எளிமையும் இழிவுமாம். தலை புனைவில்லாமை நெய்யில்லாது வறளலும், வாராது பரத்தலும், மலரில்லாது எழில் பெறாமையும் ஆம்

இன்னும் ஏர்ந்தன் றிலையே- அன்று கவிழ்ந்த தலை இன்று வரை நிமிர்த்தப் பெற்றது இல்லையே! ஏர்தல் எழுதல், ஏ-எழுச்சியைக் குறிக்கும் ஒரு முதனிலை. மேல் நோக்கி நின்ற எல்லாப் பொருள் குறித்த சொற்களுக்கும் ஏ சொல் முதலாக நிற்பதை உன்னுக. (எ-டு) ஏர்-ஏண்-ஏணி. ஏறு-ஏற்றம்-ஏக்கழுத்தம்-ஏந்தல்-ஏமாப்பு-ஏவல் (மேற் செலுத்துதல்) ஏவுதல்ஏனாதி (சேனைத் தலைவன்) ஏ-எ, எட்டம் எட்டுதல் (உயர்ச்சிக்குத் தாவுதல்), ஏ-சே-சேண்சேய்மை-செலவு(மேற் செல்லுதல்).சேடு ( உயர்ச்சி, பெருமை) சேட்டன் (மூத்தவன், தனக்கு மேலானவன், முதல்வன்) சேட்டி (மூத்தவள், தமக்கை) தோழியைக் குறிக்கும் “சேடி” என்ற வழக்குச் சொல் முதுமைப் பொருள் குறித்த தூய தனித் தமிழ்ச் சொல்லே. தலைவிக்கு தோழியாக இருப்பவள் மூத்தாளாக இருந்து வழி காட்டுதல் பண்டைய வழக்கம் (இதன் விரிவைப் பாவாணரின் முதல் தாய்மொழியில் காண்க.)

எழுதிப் கால்வரிக் கோலமுங் கலைந்தன் றிலையே - திருமண நாளில் அழகுக்காக இவள் காலின்கண் செம்பஞ்சுக் குழையாலும், பவளக் குறிஞ்சிச் சாற்றாலும் எழுதப் பெற்ற கோலமும் இன்னும் அழிந்த பாடில்லை என்பது. பவளக்குறிஞ்சி-மருதோன்றி. மணம் செய்விக்கப் பெற்று இன்னும் நெடு நாளாகிவிடவில்லை என்ற குறிப்புத் தோன்றக் கூறியது. கோலுதல்.கோலம், கோலுதல்-வரைதல்-எழுதுதல்-சூழச் செய்தல்-வளைதல் முதலிய பொருள்களைக் குறிக்கும்.

வாணுதல் வெளிற - வாள்+ நுதல் என்று பிரிபடும். வாள் நுதல் ஒளி பொருந்திய நெற்றி, வாள்வளைந்த என்றும் பொருள் பட்டு வளைந்த நெற்றி என்றும் கொளப்பெறும். சுடரொளி என்ற முன்னரே அடை பெற்றமையான் வளைந்த என்று கொள்வதே சிறப்பாம். துயர் மேலீட்டால் நெற்றி வெளிறிப் போதலால் 'வெளிற்' எனப்பட்டது.

பொதிகுழல் படர்ந்து நிலம் புரள- அடர்ந்த குழல் என்றும், முன்னர் பொதிந்து வைக்கப் பெற்ற குழல் என்றும் பொருள்படும். பொதிதல் மிடைதல்-பிணித்தல்-உள்ளடக்குதல் முன்னர் பொதியப் பெற்ற குழல் இக்கால் தளையவிழ்ந்து படர்ந்து நிலம் புரண்டு கிடத்தல் என்பது. குழல் நிலம் புரளுதலால் இவள் தரையில் படுத்துக் கிடந்தனள் என்றபடி

இடை நுடங்குதல் - இடை துவளுதல், துயர் மீக்கூர்தலால் செயலற்றுப் போதல்.

புறம் அஞ்சி உள்ளிழுங்கும் - புறத்தே உள்ளோர்க்கு அஞ்சி உள்ளத்திற்குள்ளேயே குமைதல். சில நாட்களே கணவனோடு வாழப்பெற்றும், அவனை மறத்தற் கியலாதுயரம் பெற்றது பிறர் எள்ளற் குரியதாகலின், அவர்தம் எள்ளலுக்கு அஞ்சுதலால் உள்ளத்தே வருந்தினாள் என்பதுமாம்.

புனல் வார் கண் - நீர் வழிந்த கண்.

கையறுதல் - செயலற்றுப் போதல். கழைமென் தோளி - இள மூங்கிலை ஒத்த மென்மையான தோள்களை உடையவள்.

உறுநாள் - இனி வருதலுற்ற நாள். எதிர் உறும் நாள். மறுமணம் - மீட்டும் ஒரு மணம் புணர்த்தீம்-புணர்த்துவீர்-செய்வீர் என்றபடி

மனை வாழ்வோர்-மனைக்கண் வாழ்தலை மேற்கொண்டு விளங்குவோர்.

நீவிர் எல்லாரும் மனைக்கண் வாழ்தலை மேற்கொண்டொழுக, இவ் விளையாள் மட்டும் நூம்மோடு இருந்து கொண்டே வாழாமை மேற்கொண்டு கைம்மை நோற்றல் பொருந்தாது என்றபடி

கழி இளமைப் பருவத்தே கணவனை இழந்தாள் ஆகையால் இவள் மணமின்றி, இல்லற இன்ப நுகர்ச்சி துறந்து வாழல் பொருந்தாது என்று கூறி, இவளுக்கு மேலும் மணம் செய்வித்தல் வேண்டும் என்று வலியுறுத்திக் கூறியதாம் இது. கணவனை இழந்தார் இளம் பருவத்தினரேனும் கைம்மை நோற்றல் வேண்டும் என்ற ஆரிய வழக்கை அழித்துக் கூறியதாம் இக்கூற்று. இவள் இங்ஙனமே மணமின்றி வாழுதல் இயற்கைக்கும், உடலியலுக்கும் மாறுபட்டதாம் என்று வலியுறுத்தியதாகும் இப் பாடல்.

இது பொதுவியல் என் திணையும், முதுபாலை என் துறையுமாம்.