உள்ளடக்கத்துக்குச் செல்

நூறாசிரியம்/குடுமித் தேங்காய்

விக்கிமூலம் இலிருந்து
40 குடுமித் தேங்காய்

குடிமித் தேங்காய் துருவிப் பிழிந்த
கடும்பால் சுவையின் நலந்தரு தீம்பால்
முதிர முதிர முகங்கெடப் புளிக்குந்
துதைசொற் பூரியர் தோன்றா நட்பிற்
கஞ்சுவல் யாமே நெஞ்சுதளை யவிழ்ந்து 5
மஞ்சமை குன்றத்து மலர்வாய் குடைந்து
துமி துமி ஈண்டிய மூரித் தேறல்
தமிழ்பெறக் கெழீஇய தகையோர் தொடர்போல்
முற்ற முற்றச் சுவைமூ வாதே!
ஆகலின், 10
உணர்வின் தூவிய லுரவோர்க்கு
இணைவுற நடநீ நெஞ்சுபல் யாண்டே!

பொழிப்பு:

மட்டையுரித்துக் குடுமியிட்டுலர்ந்த தேங்காயைப் பூத்துருவிப் பிழியக் கிடைத்ததும், கன்றின்ற ஆவின் சீம்பாலினும் சுவையும் நலமும் தருவதும் ஆகிய இனிய தேங்காய்ப் பால், பொழுது கழியக் கழிய, முகம் நெருங்கி மோத்தற்கும் இயையாவாறு புளிப்பு மிகும் தன்மையின், நெருங்கி நின்று சுவை துளும்பிய சொல்லாடி மகிழ்வூட்டியிருந்து, காலஞ்செல்லச் செல்ல, முகமும் எதிர்ப்பட விரும்பாத நிலையில் மனம் புளித்துப் போகின்ற கீழ்மை யுணர்வு நிரம்பியவர்களின் தோன்றக் கூடாத நட்பிற்கு யாம் அஞ்சுகின்றோம். குளிர்ந்த நீர்த்துளி நிரம்பிய மெல்லிய வெண்மேகம் வந்து அமைகின்ற குன்றத்தில் பூத்துக் கிடக்கும் மலர்களின் வாய்களைக் குடைந்து, துளி துளியாகத் திரட்டிய செந்நிறம் பாய்ந்த தேன், இனிமை சேரும்படி நெஞ்சின் கட்டுகளையவிழ்த்துக் கொண்டு, உரிமை பாராட்டிப் பழகும் மேற்பாடுற்றவர் தொடர்புபோல், நாட்செல்லச் செல்ல மேலும் மேலும் சுவை மிகுமேயல்லது திரிந்து வேறுபடாது ஆகலின், உள்ளத்தின் அளவாக வெளிப்படும் உணர்வினது தூய்மை இயல்புடைய அறிவு நலஞ்சான்றவர்க்குப் பொருந்திய தொடர்பாளனாகும்படி ஏ! நெஞ்சே! நீ பல ஆண்டுகளாயினும், நெடுந்தொலைவாயினும் நடந்து அங்காந்து தேடிச் செல்வாயாக! விரிப்பு:

இப்பாடல் புறத்துறையைச் சார்ந்ததாகும்.

புறத்தே நெருங்கி நின்று சுவையான சொற்களைப் பேசி, அகத்தே பொருந்தாத நட்பு செய்து, காலத்தே முகமும் பொருந்தாமல் விலகியிருக்கும் கீழ்மை நெஞ்சினார் தம் தொடர்பால் நோவுற்ற ஒருவன் நெஞ்சின் கட்டுகளை அவிழ்த்துக் கொண்டு உள்ளத்தினளவாக வெளிப் போந்த இயல்பான உணர்வுடன் நட்புச் செய்யும் கசடு நீங்கிய உயர்ந்த அறிவினார் தம் இணைவுக்குப் பொருந்தத் துடிக்கும் தன் நன்னெஞ்சிற்கு “அவ்வாறு அருமை வாய்ந்தோரைத் தேடிப்போகும் முயற்சியில் எத்துணைக் காலமும் இடமும் கடப்பதற்கு நீ அஞ்சாதே ஊக்கமுடன் மேன்மேற் செல்” என்று கட்டளை யிடுவதாக அமைந்ததிப் பாட்டு.

தொடக்கக் காலத்தே மிகவும் சுவைபடப் பேசிப் பழகியிருக்கும் கீழ்மை நெஞ்சினார், காலத்தே தம் தன்மையில் மாறிப்போதற்கு, புதியதில் மிகுசுவையும், நலனும் அளிக்கும் தேங்காய்ப் பால் மிக விரைந்து புளித்தும், தீதாகவும் போகும் தன்மையும், இணையும் புதுத் தொடர்பில் இனியராயிருந்து, காலம் கழியக் கழிய மேலும் நலமும் சுவையும் வாய்ந்தோராய் விளங்கும் தூயமனமும், அறிவுநலமும் வாய்ந்தார் நட்புக்கு, தொடக்கத்தில் நறுஞ்சுவை பயப்பதுவாக விருப்பத் தோடமையாது, எவ்வளவு காலஞ் செல்லினும் சுவையினும் நலத்தினும் மேன்மேலும் மிகுவதல்லது மாறுபாடும் வேறுபாடும் உறாத தேனின் தன்மையும் உவமைகளாகக் கூறப்பெற்றன.

குடுமித் தேங்காய் - குடுமிவிட்டு உரித்த தேங்காய், விட்ட குடுமியைச் சிறப்பித்தலால், உரித்த கால முதிர்ச்சி தெரிவிக்கப் பெற்றது. மட்டை உரிக்கப் பெற்று, நன்கு உலர்ந்து முற்றிப் பால் பிழியும் பக்குவம் பெற்ற தேங்காய் என்க.

துருவிப்பிழிதல் - தேங்காயைப் பூத்துருவிப் பிழிந்து பாலெடுத்தல்.

கடும்பால் ... ஆவின் ஈன்றனிமைப் பால், சீம்பால், கடும்பால் . தீம்பால் சீம்பாலை விடச் சுவையும் நலமும் தருகின்ற தேங்காய்ப்பால்,

முதிர முதிர (பிழியப்பெற்ற பால்) காலமுதிர்ச்சி தோன்றத் தோன்.

முகங்கெடப் புளிக்கும்:-வாயால் பருகுதற்கு அருகில் சென்ற முகம் தன் தன்மையிற் கெடும்படி புளிப்பும், நெடியும் வீசும்.

துதைசொல் பூரியர் - மிக நெருக்கமாகி நின்று உரைக்கும் சொற்களையுடைய கீழ்மைக் குணமுடையவர். பூரித்தல் மிகுதல் பூரியர் உலகியல் உணர்வான் மிகுந்து தோன்றும் பொதுக் குணமாந்தர்.

தோன்றா நட்பு .- தோன்ற வேண்டாத நட்பு. அஞ்சுவல் யாமே - முற்காலங்களில் அவ்வாறு விரும்பத்தகாதவர் நட்பு ஏற்பட்டதற்கும் இனி ஏற்படுவதற்கும் யாம் அஞ்சுகின்றோம்.

மஞ்சமை குன்றத்து - சிறு அளவில் நீர்த்துளி நிரம்பிய மென்மேகம், பொருந்துகின்ற குன்றத்தில்,

மலர்வாய் குடைந்து -மலர்களின் இதழ்களை விலக்கி உட்புகுந்து.

துமி துமி ஈண்டிய- துளி துளியாகச் சேர்க்கப் பெற்ற

மூரித்தேறல் -முதிர்ந்து செந்நிறம் பாய்ந்த தேன்; முதிர்தலால் செந்நிறம் பாய்தல் இயல்பாயிற்று.

நெஞ்சுதளை யவிழ்ந்து - நெஞ்சின் அகப்புறக் கட்டுகள் நீங்கி,

தமிழ் பெற - இனிமை பெற.

கெழிஇய - உரிமை யுணர்வுடைய.

தகையோர் - பெருமைமிக்கோர்,

தொடர் போல் - இணைவுப் போல்; நட்புப்போல்,

முற்ற முற்ற -முதிர்ச்சியடைய அடைய.

சுவை மூவாது: சுவை தளராது! மூப்பு தளர்வைக் குறித்தது. ‘நெஞ்கதளை யவிழ்ந்து தமிழ்பெறக் கெழீஇய, தகையோர் தொடர் போல் முற்ற முற்றச் சுவை மூவாதே' என்று கூட்டுக.

நெஞ்சின் கட்டுகள் அவிழாவிடத்து உரிமை உணர்வு செலுத்தவும், செலுத்தியதை உணரவும் இயலா வென்க,

உணர்வின் தூவியல் - மனவுணர்வின் துய்மையான இயற்கையாந் தன்மை, துளவியல் தூய இயல்பு.

உரவோர் - அறிவுணர்வுடையோர் உரன்- அறிவுப் புலன்.

இணைவுற- தொடர்புறும்படி, உரவோர்பால் தொடர்பு நிகழுமாறு.

ஆகலின்- எனவே, (அத்தகையாரைத் தேடி)

நெஞ்சு, நீ பல் யாண்டு நட - முன் பூரியர் நட்பிற் கலந்து கவன்று நின்ற நெஞ்சமே, உரவோரொடு பொருந்துவதன் பொருட்டு, நெடுங்காலமேனும் நெடுந்தொலைவேனும் சலிப்புறாது நடந்து கொண்டிரு என்பதாம்.

இப்பாட்டின் கண் பூரியர்க்குத் தேங்காயும், அவரிடத்துப் பெறும் நட்புக்கு அதனின்று பிழிந்த பாலும் உவமைகளாகக் கூறப்பட்டன.

மட்டையை நீக்கிய பின்னரே பயன் படுத்துவதற்குரிய நிலையில் தேங்காயைப் பெறமுடிவது போல், பூரியர் தம் உலகியல் அழுத்தங்களை நீக்கிய பின்னரே, தொடர்பு கொள்வதற்குரிய தகுதியை அவரிடமிருந்து பெறமுடியும் என்க.

தேங்காயின் குடுமி, அவர் தம் ஆரவாரத்தைக் காட்டுவதாகும். தேங்காயின் வலிந்த ஓட்டை உடைத்து, மூடிகளைத் துருவிப் பிழிந்து பாலெடுப்பது போல், அவரிடம் நெருங்கி அவர் மனவோட்டை உடைத்து உணர்வூட்டித் துருவி ஆராய்ந்து நட்பைப் பெறுவது கூறப்பெற்றது.

தொடக்கத்து அவர் நட்பினால் கிடைக்கும் நகை நலன்களுக்கும் சுவை நலன்களுக்கும், தேங்காயின் வெண் பருப்பும், சுவை நீரும் உவமைகளாம் என்க. காலக் குறுமையில் தோன்றும் அப்பயன்களும், அவரைப் பெற்ற புதிதில் கிடைப்பன போல்வனவாம் என்க.

தேங்காயை உடைக்கும் ஒலியில் பூரியரின் பொருந்திய சொல்லொலியும் நகையொலியும் வெளிப்பட்டு நிற்பதும் கண்டு மகிழ்க! இனி, தகையோர் தொடர்புக்குத் துளி துளியாகத் திரட்டப் பெறும் தேனை உவமித்துக் கூறியது, அதன் கிடைத்தற்கரிய அருமையும், சுவையும், முதிர்வு நலனும் உணர்த்துவான் வேண்டி யென்க.

தேன் பருகுவதல்லாது, சிறிது சிறிதாகச் சுவைக்கப்பெறுதல் போலும், பெரியோர் நட்பு ஒரேயடியாக நுகரப் பெறுதல்லாது அவ்வக்கால் சுவைக்கப்பெறுதல் காண்க

மெல்லிய வெண்மேகம் அமைந்த மலைச்சாரலின் கண் உள்ள நறிய பூக்களினின்று எடுக்கப்பெறும் தேன் என்றது, அவர் தூய மெய்ப் பொருள் சான்ற உயரிய வாய்மை நெஞ்சத்தையும், அந்நெஞ்சினிடத்து மலர்ந்து அன்பு கமழும் சொற்களையும், அவற்றினின்று பெறும் அறிவுத் தேனையும் குறித்தல் வேண்டி என்க.

அவர் சொற்களின்று அவ்வப்போது சிறிது சிறிதாக வெளிப்படும் அறிவு நலன்களை ஒருங்கு திரட்டி நலம் பெறுதல் துளி துளியாக ஈண்டிய முதிர்வுற்ற தேனினால் சுட்டப் பெற்றது என்க.

உரவோர் நட்பு உரிமைக்கும் கெழுதகைமைக்கும் இடனாயிருப்பதை மலர்வாய் குடைந்து ஈட்டிய மூரித்தேறல் என்பதனான் உணர்க. வாய்குடைதல் என்னும் வினை அவர்டால், செலுத்தும் உரிமை உணர்வைக் குறித்த தென்க.

'தேங்காய்த் தீம்பால் முதிர முதிர முகங்கெடப் புளிக்கும் துதை சொற் பூரியர்' என்றவிடத்து, உவமேயத்தை உவமையால் விளக்கியும், 'மலர் வாய் குடைந்து, துமிதுமி ஈண்டிய மூரித்தேறல் தகையோர் தொடர்போல் முற்ற முற்றச் சுவை மூவாது’ என்ற விடத்து, உவமையை உவமேயத்தால் விளக்கியும்போந்தது, முன்னதின் உவமைக்கும் பின்னதின் உவமேயத்திற்கும் காட்டிய சிறப்பும் உயர்வும் என்க.

நட நீ நெஞ்சு என்றதில் உறுதியும் ‘பல் யாண்டு' என்றதில் அருமையும் சோர்வுறாமையும் கூறப் பெற்றமை காண்க

இது பொதுவியல் என் திணையும் பொருண் மொழிக் காஞ்சி என் துறையுமாம்.