குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13/தொழிலாளர் தினச் சிந்தனைகள்
இந்த உலகம் உழைப்பால் ஆனது; உழைப்பால் வளர்வது. கடவுள் கூட ஒரு தொழிலாளிதான். படைத்தல், காத்தல், மறைத்தல், அழித்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களை இறைவன் செய்கிறான். அண்டமெலாம் படைத்து, படைத்த அண்டங்களையெல்லாம் படைத்த வண்ணம் காக்கின்றான். உழைப்பே உலகின் உயிர்ப்பு, உழைப்பே உலகின் இயக்கம். உழைப்பே உலகத்தின் வாழ்வு.
இந்த உலகம் தோன்றிய நாள் தொடங்கி, உழைப்பு உலகத்தை வளர்த்து வந்திருக்கிறது. எண்ணற்ற தொழிலாளர்கள் இந்த உலகை வளர்ப்பதில்-மானுடத்தை வளர்ப்பதில் ஈடுபட்டிருந்திருக்கின்றனர். ஈடுபட்டுள்ளனர், ஆயினும் உழைப்பும் உழைப்பாளியும் மதிக்கப்படாதிருந்த காலம் ஒன்று இருந்தது. இன்றும்கூட மனநிறைவு தரக்கூடியதாக இல்லை. உற்பத்தி செய்யும் தொழில் திறமையுடையவனின் உழைப்பாற்றல் விலைப் பண்டமாயிற்று. உற்பத்தி செய்பவன், கூலி வழங்குபவனின் பணத்தின் முன்னே கைகட்டி நின்றான்! மூலதனத் திரட்சிக்குக் காரணமாக இருந்த தொழிலாளர்கள் ஓய்வில்லாத வேலை, உத்தரவாதமில்லாத வாழ்வு, குறைந்த கூலி, போதிய வசதியின்மைகளில் அவதிப்பட்டனர். தொழிலாளர்கள் கொள்ளையடிக்கப்பட்டனர்.
இந்தச் சூழ்நிலையில்தான் 1886-ம் ஆண்டு மே முதல் நாளில் சிகாகோ நகரில் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தினால் விளைந்த தலையாய நன்மை, தொழிலாளர்கள் உலகம், நாடு - எல்லைகளைக் கடந்து ஒன்றுபட்டது. ஆம்! எல்லை, வேலி, சுவர் - இவை மனிதனின் படைப்பு! இயற்கையில் எல்லை இல்லை! தொழிலாளர்கள் உலக சகோதரர்களாக ஆனது, உலக வரலாற்றிலேயே மிகப்பெரும் சாதனையாகும். இந்தச் சாதனையின் விளைவாக 1889 மே முதல் நாள் முதல் ஒவ்வொரு மே மாதம் முதல் தேதியைத் தொழிலாளர் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.
இன்னமும் தொழிலாளர் வாழ்க்கை மேம்பாடுறுதல் வேண்டும். தொழிலாளர்களுடைய தொழில் திறன் நாளும் வளர் வாய்ப்புகள் வழங்கப்பெறுதல் வேண்டும். தொழிலாளர்களுக்குப் போதிய கல்வி வசதியும், சுகாதார மருத்துவ வசதிகளும் செய்து தரப்பெறுதல் வேண்டும். நாட்டளவில் சிறந்த தொழிலாளர்களைத் தேர்வு செய்து விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கவேண்டும். வேளாண்மைத் தொழிலாளர்களும், தொழிற்சாலைத் தொழிலாளர்களும் கூடித் தொழில் செய்து, நாட்டின் வளத்தைக் காப்பாற்ற வேண்டும் நாளும் உழைப்பின் தரம் தாழாமல் வளர்த்துக் கொள்ளவேண்டும். தொழிலாளர் நலனே, நாட்டின் நலன். நாட்டின் நலனே, தொழிலாளர் நலன், இந்தச் சிந்தனை நமக்கும் நமது நாட்டுத் தொழிலாளர்களுக்கும் வந்தாக வேண்டும்; இதுவே நமது கொள்கை; கோட்பாடு!
இன்று பெரும்பாலும் தொழிலாளிக்கு உத்தரவாதம் பாதுகாப்பு நலன்கள் உறுதிப்படுத்தப் பெற்றுள்ளன. இந்தச் சூழ்நிலையில் தொழிலாளர்கள் பொறுப்பும் கடமை உணர்வும் உடையவர்களாக வளரவேண்டும் என்று எதிர் பார்ப்பது தவறல்ல. அண்மைக் காலமாகப் பணியின் தரம் குறைந்து வருகிறது. எண்ணற்ற பணிகள், செய்யவேண்டியவர்கள் இருந்தும் செய்யப்படுவதில்லை. செய்யும் வேலையின் தரத்திற்கும் பயனுக்கும் உத்தரவாதம் இல்லையானால் காலப்போக்கில் மூலதனம் அழியும்; நாடு, வளம் குன்றும். இன்று, இந்தியாவின் நிலை இதுவே! ஏன்? சோவியத்தில் ஏற்பட்ட நொடிவுகளுக்குக் கூட இதுவே காரணம். தொழிற்சாலை, உற்பத்தி இலக்கை அடையத் தக்கவாறு உழைப்பதில்லை. உற்பத்தி செய்யும் பொருள்களின் தரத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஏன்? தொழிற்சாலையையே இழந்து விடுவோமோ என்ற அளவுக்குத் தொழிற்சாலைகள் பழுதுற்று விட்டன. தொழிற்சாலைகள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. இவைகளைப்பற்றித் தொழிலாளர்கள் கவலைப்படுவதில்லை. அப்படியே கவலைப்படுபவர்கள் இருந்தாலும் மிகச் சிலர்தான் கவலைப்படுகின்றனர். மிகச் சிலர் உதாரணத்திற்குத்தான் பயன்படலாம். நாட்டின் பணிகள் இடையீடின்றி, தரத்தில் தாழ்வு இம்மியும் குறைவுபடாமல் நடக்கவேண்டும். செய்யும் தொழிலைத் தெய்வமாகப் போற்றவேண்டும். தொழிற்சாலையைக் கோயிலாக எண்ணவேண்டும்.
அன்பு நிறைந்த தொழிலாளர்களே! மே தின வாழ்த்துக்கள்! ஒன்றுபடுவோம்! கூடி உழைப்போம் கூடி வாழ்வோம்! தொழிலாளர்களின் நலன்களைப் பேணிக் காப்போம்!
- ↑ மதுரை வானொலி.