தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்/023-066

விக்கிமூலம் இலிருந்து

சென்னைக்குப் போவதை மறுத்தது

ஒருநாள் சேஷாத்திரி ஆச்சார் கும்பகோணத்திற்கு வந்து ஆசிரியப் பெருமானைப் பார்த்தார். “நீங்கள் சென்னைக்கே வந்து விட்டால் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

“நான் எப்படி சென்னைக்கு வருவது? இங்கேதானே எனக்கு உத்தியோகம் இருக்கிறது?” என்றார் ஆசிரியர்.

“நீங்கள் சென்னைக்கு வருவதாக இருந்தால் அங்கே உள்ள மாநிலக் கல்லூரிக்கு உங்களை மாற்றும்படி நானே ஏற்பாடு செய்கிறேன். கல்வித்துறையில் எல்லோரையும் எனக்குத் தெரியும். நீங்கள் சென்னை வரச் சம்மதம் கொடுங்கள், போதும்” என்றார் ஆச்சார்.

அப்போது சென்னை மாநிலக் கல்லூரியில் முதிர்ந்த பிராயமுள்ள ஒருவர் தமிழாசிரியராக இருந்தார். அவருக்குச் சென்னை சொந்த ஊராக இருந்தது. சென்னைக்கு வந்தால் பதிப்பு வேலைகளை எளிதில் கவனித்துக்கொள்ள வசதி ஏற்படும் என்ற எண்ணம் ஆசிரியருக்கு இருந்தாலும், அந்த முதியவருக்கு முதிர்ந்த காலத்தில் இடையூறு ஏற்படுத்துவதை விரும்பவில்லை. எனவே, சென்னைக்கு வர இயலாது என்று தெரிவித்துவிட்டார்.