156
கால்டுவெல் ஒப்பிலக்கணம்
வழக்கிலும், சாதிப்பெயர்க் குறிப்பிலுமே இவை பெரும்பாலும் இக்காலை வழங்கப் பெற்று வருகின்றன.
இற்றைநாள் கிடைத்துள்ள தமிழிலக்கியத்தின் துணை கொண்டு திராவிட மொழிகளின் தொன்மையைக் கி. பி. இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டு வரையிற் கொண்டு செல்லலாம் ; கிரேக்க வரலாறுகளிற் கிடைக்கும் திராவிடச் சொற்களின் துணை கொண்டு அதனைக் கிறித்தவக் காலத் தொடக்கத்திற்குக் கொண்டு செல்லலாம். அதற்கு முன்னர் இம்மொழிகளின் வரலாற்று நிலையை அறிவதற்குத் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண ஆராய்ச்சியே துணை புரிவதாகும். தமிழரது நாகரிகமும், தமிழிலக்கியந் திருக்கமுற்ற காலமும் கி. மு. ஆறு அல்லது எழாம் நாற்றாண்டாகலாம். ஆனால், திராவிட மூலமொழி இக்காலக் கிளைகளாகப் பிரிந்ததோ, திராவிடர் இந்தியாவிற்குள் வந்து இக்காலை வசிக்கும் பகுதிகளில் குடியேறிய பின்னரேயாகும். இஃது இன்ன காலந்தான் என்று அறுதியிட்டுக் கூற முடியாது ; எனினும் மிகமிகப் பழைய காலத்திலேயே அவ்வாறு பிரிந்திருக்க வேண்டுமென்று கொள்ளலாம். கெல்கியத்திலிருந்து ஐரிஷூம், வெல்ஷூம், தெயுத்தோனியத்திலிருந்து பண்டை உயர் மொழியும் பண்டைக் கீழ்மொழியும், உக்ரியத்திலிருந்து பின்னிஷூம் , மாகியரும் ஆகிய இவையெல்லாம் அவ்வம் மொழிக்குரிய மக்கள், அவரவர்கள் இக்காலை காணப் பெறும் இடங்களில், குடியேறுவதற்கு முன்னர்ப் பிரிந்து விட்டிருக்கலாம்; திராவிட மொழிமூலமோ அவர்கள் வந்து குடியேறிய பின்னரே தான் பிரிவுற்றதாதல் வேண்டும். அங்ஙனம் திராவிடர்கள் வந்தமை ஆரியர் வருகைக்கு முன்னராக வேண்டும். எனினும், அம்மொழிகளிற் காணப்பெறும் இலக்கண அமைதிகள், சொல்லொப்புமைகள் ஆகியவெல்லாம் ஆரியர் வருகைக்குப் பின்னர், ஆரியர் தம் இலக்கண