உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

சாதிப் பிரிவினை கற்பித்த பார்ப்பனர் மட்டும் நாடாளும் அரச குடும்பத்தினர்களொழிந்த மற்றையோர் அனைவரையும் சூத்திார் என்ற பெயருக்கு மேற்பட்ட எப்பெயராலும் அழைத்ததாகத் தெரியவில்லை. இது வியப்பாகவே இருக்கிறது. ஏனெனில் அவர்கள் எளிதாக வேளாளரையும், வணிகரையும் ' வைசியர் ’ என்று அழைத்து, மற்றைக் கீழ்த்தர வகுப்பினரை ஸூத்திார் என அழைத்திருக்க முடியும். அங்ஙனம் அவர்கள் செய்யவில்லை. அஃதேனின், ஆரிய இனத்தைச் சேர்ந்தோரையன்றி ஏனையோரை க்ஷத்திரியரென்றோ, வைசியரென்றோ அழைப்பது அவர்கள் மரபுக்கு மாறானதொன்றாகையால், ஆரியரல்லாத திராவிட மக்களை,- (அவர்கள் எவ்வளவு உயர்தர மக்களேயாயினும்)-ஸூத்ரர்கள் என்றே அழைத்து வந்துள்ளனராதலின் என்க.

மேற்கூறிய நிலைமையினால்தான் வட இந்தியாவில் ஸூத்திரர் என்ற மொழிக்கிருந்த பொருளைவிடத் தென் இங்கியாவில் அதற்கு உயர்வான பொருள் எற்பட்டது. வட இந்தியாவில் ஸூத்திரர் என்போர் அடிமைகள் ; சட்டத்தின் பாதுகாப்புக்குப் புறம்பானவர்கள். அவர்களுக்கு நிலமோ, அரசியல் உரிமையோ கிடையாது. எனவே, அடிமைகளும் தாழ்ந்த வகுப்பினருமே அங்கு ஸூத்திரர் என்னப்பட்டனர். தென் இந்தியாவிலோ எனின், உயர் வகுப்பினரும் நடு வகுப்பினருமே ஸூத்திரர் என்றழைக்கப் பட்டனர். வட நாட்டு ஸூத்திரருக்குச் சரியான தென் நாட்டு மக்களோ ஸூத்திரர் என்றழைக்கப்படாமல், பள்ளர், பறையர் முதலிய பெயர்களாலேயே அழைக்கப்பட்டனர். " ஸூத்திரர் " என்ற பெயர் கொண்டு அழைக்கப்பட்டதாலேயே தென்னாட்டிலுள்ள சிற்றரசர்களும், வீரர்களும், வேளாளரும் ஆரியரால் அடிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றாகி விடமாட்டார்கள். உண்மையில்