தாய்/53
24
அவளது பயம் ஒரு துர்நாற்றம் போல் அவளது தொண்டையில் கமறியெழுந்து அவளைத் திணறச் செய்தது. விசாரணை தினத்தன்று, தனது இதயத்தை அழுத்திக்கொண்டிருக்கும் அந்தப் பெரும் மனப்பாரத்தைச் சுமந்துகொண்டுதான் தாய் நீதிமன்றத்துக்குச் சென்றாள்.
தெருவெல்லாம் சுற்று வட்டாரத் தொழிலாளர் குடியிருப்பிலிருந்து வந்த, அவளுக்கு அறிமுகமான பல தொழிலாளர்கள் அவளை வரவேற்றார்கள். அவள் வாய்திறந்து எதுவும் பேசாமல் அவர்களுக்குத் தலை வணங்கிக்கொண்டே அந்த ஜனக்கூட்டத்தைக் கடந்து சென்றாள். நீதி மன்றத்திலும் அதற்கு வெளியேயுள்ள நடை வழிகளிலும் விசாரணைக்கைதிகளின் உறவினர்கள் கூடிக் குழுமி, தணிந்த குரலில் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசிக்கொள்ளும் பேச்சு தாய்க்கு அபரிமிதமாகப்பட்டது: அவளுக்கு அது புரியவில்லை. எல்லோரும் ஒரே மாதிரியான சோகத்துக்கு ஆளாகி நின்றார்கள். தாயும் இதை அறிந்திருந்தாள். அதனால் அவளுக்கு மனப்பாரம்தான் அதிகமாயிற்று.
"என் பக்கத்திலே உட்கார்” என்று ஒரு பெஞ்சில் ஒதுங்கி இடம் கொடுத்துக்கொண்டே கூறினான் சிஸோவ்.
அவள் பணிவோடு உட்கார்ந்து, தன் உடுப்பைச் சரியாக இழுத்து விட்டுக்கொண்டு சுற்றுமுற்றும் பார்த்தாள். அவளது கண் முன்னால் பச்சை, சிவப்புப் புள்ளிகளும், கோடுகளும், மஞ்சள் நாடாக்களும் நடனமிட்டன.
“எங்கள் கிரிகோரியை உன் மகன்தான் இதில் இழுத்து விட்டுவிட்டான்” என்று அவளுக்கு அடுத்தாற்போல் இருந்த ஒரு பெண் முனகினாள்.
“வாயைமூடு, நதால்யா!” என்று கோபத்தோடு சொன்னான் சிஸோவ்.
தாய் அந்தப் பெண்ணைப் பார்த்தாள். அவள் தான் சமோய்லவின் தாய். அவளை அடுத்து அவள் கணவன் உட்கார்ந்திருந்தான்; சுமூகமான தோற்றமும், மெலிந்த முகமும், வளர்ந்து பெருகிய சிவந்த தாடியும் வழுக்கைத் தலையுமாகக் காட்சியளித்த அவன் தன் கண்களை நெரித்து ஏறிட்டுப் பார்த்தான்; உள்ளுக்குள் பட்டுக்கொண்டிருந்த சிரமத்தால் அவனது தாடி நடுநடுங்கிக்கொண்டிருந்தது.
வெளிப்புறத்திலிருந்து பனி படிந்துள்ள உயர்ந்த ஜன்னல்களின் வழியாக, மங்கிய ஒளி மயக்கம், நீதி மன்றத்துக்குள்ளே பரவி ஒளிசெய்தது. ஜன்னல்களுக்கு மத்தியில் அலங்காரமான முலாம் சட்டத்தில் அமைந்த ஜார் அரசனின் சித்திரம் தொங்கிக்கொண்டிருந்தது. அதன் இருபுறத்தையும் கருஞ்சிவப்பான ஜன்னல் திரைகள் மடிமடியாகத் தொங்கி மறைத்துக்கொண்டிருந்தன. அந்தச் சித்திரத்துக்கு முன்னால் பச்சைத் துணியால் மூடப்பட்டிருந்த ஒரு பெரிய மேஜை அந்த ஹாலின் அகலம் முழுவதையுமே வியாபித்துக்கொண்டிருந்தது. ‘கைதிக் கூண்டுகளுக்குப் பின்னால் வலதுபுறச் சுவரையொட்டி இரண்டு மரப்பெஞ்சுகள் போடப்பட்டிருந்தன. இடது புறத்தில் கருஞ்சிவப்பு துணிவைத்துத் தைக்கப்பட்ட கைநாற்காலிகள் இரு வரிசையாகப் போடப்பட்டிருந்தன. தங்க நிறப் பித்தான்களைக்கொண்ட பச்சை உடுப்புக்கள் அணிந்த கோர்ட்டுச் சேவகர்கள் வாய் பேசாது முன்னும் பின்னும் வந்து போய்க்கொண்டிருந்தரர்கள். அந்த மப்பும் மந்தாரமும் நிறைந்த சூழ்நிலையில் உள்ளடங்கி ஒலிக்கும் பேச்சுகளும், பற்பல மருந்துகளின் கார்நெடியும் கலந்து நிறைந்தன. இவையெல்லாம்-இந்த வர்ண பேதங்கள், பிரகாசம், குரல்கள், நெடி எல்லாம்-கண்ணையும் காதையும் உறுத்தின; சுவாசத்தோடு இதயத்தில் புகுந்து அர்த்தம் ஒன்றுமற்ற பயவேதனையை நிரப்பின.
திடீரென யாரோ உரத்தக் குரலில் பேசினார்கள். தாய் திடுக்கிட்டாள்.
எல்லோரும் எழுந்து நிற்பதைக் கண்டு அவளும் சிஸோவின் கையைப்பற்றிப் பிடித்தவாறே எழுந்து நின்றாள்.இடதுபுறமாக இருந்த ஒரு பெரிய கதவு திறந்தது. மூக்குக் கண்ணாடி அணிந்த ஒரு வயதான மனிதர் ஆடியசைந்துகொண்டு உள்ளே வந்தார். அவரது சாம்பல் நிறக் கன்னங்களில் மெல்லிய வெள்ளையான கிருதாக்கள் அசைந்து கொடுத்தன. மழுங்கச் செய்யப்பட்ட அவரது மேலுதடு பற்களேயற்ற வாய் ஈறுக்குள் மடிந்துபோயிருந்தது. அவரது மோவாயும் தாடையும் அவரது உத்தியோக உடுப்பின் உயர்ந்த காலர் மீது சாய்ந்து கழுத்தே இல்லாததுபோல் தோற்றமளித்துக்கொண்டிருந்தது. கொழுத்துத் திரண்ட நெட்டையான வெள்ளை மூஞ்சி இளைஞன் ஒருவன் கைகொடுத்து அவரை மேலேற்றிவிட்டான். அவர்களுக்குப் பின்னால் தங்க நிறக்கரை வைத்துத் தைத்த உத்தியோக உடைகளோடு மூன்று பேர் வந்தார்கள். சாதாரண உடையணிந்து மூன்று பேர் வந்தார்கள்.
அந்த நீண்ட மேஜை முன்னால் அவர்கள் உட்கார்ந்து முடிப்பதற்கே வெகு நேரம் பிடித்தது. அவர்கள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தவுடன் மழுங்கச் சவரம் செய்து வழவழப்போடு விளங்கும் சோம்பல் முகமுள்ள ஒரு மனிதன் அந்த வயோதிகரின் பக்கம் குனிந்து தனது தடித்த உதடுகளை என்னவோ போல அசைத்துக்கொண்டு, ரகசியமாக ஏதோ சொல்லத்தொடங்கினான். அந்தக் கிழவர் நிமிர்ந்து அவன் கூறுவதை அசையாமல் கேட்டார். அவரது கண்ணாடிக்குப் பின்னால், இரு சிறு புள்ளிகள் மாதிரி தோன்றும் உணர்ச்சியற்ற கண்களைத் தாய் கண்டாள்.
அந்த மேஜையின் ஓரமாகக் கிடந்த எழுதும் சாய்வு மேஜைக்கு அருகே ஒரு நெட்டையான வழுக்கைத் தலை ஆசாமி நின்று கொண்டிருந்தான்; அவன் தொண்டையைக் கனைத்துச் சீர்படுத்திக்கொண்டே தஸ்தாவேஜுக்களைப் புரட்டிக்கொண்டிருந்தான்.
அந்தக் கிழவர் முன்புறமாகக் குனிந்து பேசத்தொடங்கினார். எடுத்த எடுப்பில் அவரது பேச்சு தெளிவாக ஒலித்தது, அப்புறம் அந்தப் பேச்சு அவரது மெல்லிய உதடுகளுக்குள்ளாக மடிந்து உள்வாங்கிப் போய்விட்டது.
“விசாரணை தொடங்குகிறேன்........ அவர்களைக்கொண்டு வாருங்கள்...”
“பார்!” என்று தாயை முழங்கையால் இடித்து நிமிர்ந்து நின்றவாறே மெதுவாகச் சொன்னான் சிஸோவ்.
கைதிக் கூண்டுக்குப் பின்புறமுள்ள கதவு திறந்தது. பளபளக்கும் வாளைத் தோளில் சாத்தியவாறே ஒரு சிப்பாய் வந்தான், அவனைத் தொடர்ந்து பாவெல், அந்திரேய், பியோதர் மாசின், கூஸெவ் சகோதரர்கள், சமோய்லவ், புகின், சோமல் முதலியோரும், தாய்க்கு அறிமுகமில்லாத ஐந்து இளைஞர்களும் வந்து சேர்ந்தார்கள். பாவெல் அவளைப் பார்த்துப் புன்னகை புரிந்தான். அந்திரேய் பல்லைக்காட்டி, தலையை ஆட்டினான். அவர்களது புன்னகையும், உற்சாகம் நிறைந்த முகங்களும், அசைவுகளும் அந்த நீதிமன்றத்தின் உம்மணா மூஞ்சிச் சூழ்நிலையை மாற்றி, அதைத் தளரச் செய்தது. உத்தியோக உடுப்புகளின் பொன்னொளி ஜாலம் மங்கிப் போயிற்று. தைரியம் மீண்டும் தாயிடம் குடிபுகுந்தது. அந்தக் கைதிகள் தம்மோடு கொணர்ந்த அமைதியான தன்னம்பிக்கையும் ஜீவ சக்தியும் அவளுக்கு வலுவூட்டின. அவளுக்குப் பின்னுள்ள பெஞ்சிகளில், இத்தனை நேரமும் சோர்ந்து அசந்துபோய் நின்ற மக்கள், தங்களுக்குள் குசுகுசுத்துப் பேசத் தொடங்கினார்கள்.
“அவர்கள் பயப்படவே இல்லை!” என்று சிஸோவ் ரகசியமாகச் சொன்னான். சமோய்லவின் தாயோ உள்ளுக்குள்ளாகப் பொருமத் தொடங்கினாள்.
“அமைதி” என்று ஒரு கடுமையான குரல் ஒலித்தது.
“முதலிலேயே நான் உங்களை எச்சரித்து விடவேண்டும்...” என்று சொன்னார் அந்தக் கிழவர்.
முன்னாலுள்ள பெஞ்சியின்மீது பாவெலும் அந்திரேயும் ஒருவர் பக்கம் ஒருவராக உட்கார்ந்திருந்தார்கள். அவர்களோடு மாசின், சமோய்லவ், கூஸெவ் சகோதரர்கள் முதலியோரும் உட்கார்ந்திருந்தார்கள். அந்திரேய் தன் தாடியை எடுத்துவிட்டிருந்தான்; ஆனால் மீசையை மட்டும் வளரவிட்டிருந்தான். அந்த மீசை வளர்ந்து படிந்து அவனது உருண்டை முகத்தைப் பூனைமுகம் மாதிரி காட்டிக்கொண்டிருந்தது. அவனது முகத்தில் ஏதோ ஒரு புதுமை இருந்தது. கூர்மையும் குத்தலும் நிறைந்த பாவம் அவனது முகத்தில் தோன்றியது. கண்களில் ஏதோ ஒரு கருமை தென்பட்டது. மாசினுடைய மேலுதட்டில் இரு கரிய கோடுகள் காணப்பட்டன; அவனது முகம் உப்பி உருண்டுகொண்டிருந்தது. சமோய்லவின் சுருட்டைத் தலை எப்போதும் போலவே இருந்தது. இவான் கூஸெவ் பல்லைக் காட்டிச் சிரித்தான்.
“ஆ! பியோதர்! பியோதர்!” என்று தலையைக் குனிந்து கொண்டே முணுமுணுத்தான் கிஸோவ்.
அந்தக் கிழவர் தமது உத்தியோக உடுப்பின் காலருக்குள் அசையாமல் புதைந்து கிடந்த தலையைக் கொஞ்சம்கூட அசைக்காமல், நிமிர்ந்தும் பார்க்காமல் கைதிகளைப் பார்த்து ஏதேதோ கேள்வி கேட்டார், அந்தத் தெளிவற்ற கேள்விக் குரலைத் தாயும் கேட்டுக்கொண்டிருந்தாள். அந்தக் கேள்விகளுக்கு, தன் மகன் கூறிய அமைதியான சுருக்கமான பதில்களையும் அவள் கேட்டாள். பிரதம நீதிபதியும் அவரது சகாக்களும் தன் மகன் விஷயத்தில் குரூரமாகவும் கொடுமையாகவும் நடந்துகொள்ள முடியாது என்று அவளுக்குத் தோன்றியது. அந்த நீண்ட மேஜைக்கு எதிரே இருந்தவர்களின் முகத்தைப் பார்த்து விசாரணையின் முடிவை அவள் ஊகிக்க முயன்றாள்; அவளது ஊகத்தால், அவளது இதயத்தினுள்ளே ஒரு நம்பிக்கை வளர்ச்சிபெற்று ஓங்குவதை அவள் உணர்ந்தாள்.
ஒரு வெள்ளை முக ஆசாமி ஒரு தஸ்தாவேஜை உணர்ச்சியற்று ஒரே குரலில் வாசித்தான். மந்திரத்தால் கட்டுப்பட்டவர்கள் மாதிரி அதைக் கேட்ட ஜனங்கள் ஆடாது அசையாது உட்கார்ந்திருந்தார்கள்.விசாரணைக்காக நிற்பவர்களைப் பார்த்து, நாலு வக்கீல்கள் உணர்ச்சியோடும் அமைதியோடும் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களது அசைவுகள் பலமாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தன. அவர்கள் பெரிய கரும்பறவைகளைப்போல் தோன்றினார்கள்.
அந்தக் கிழ நீதிபதிக்கு அருகில் இருந்த நாற்காலியில் ஒரு கொழுத்த உப நீதிபதி உட்கார்ந்திருந்தார். அவரது சிறு கண்கள் கொழுத்த சதைப் பகுதிக்குள் புதைந்து போயிருந்தன. இன்னொரு கைப் பக்கத்தில் கூனிய தோள்களும் வெளுத்த முகமும், சிவந்த மீசையும் கொண்ட இன்னொரு உப நீதிபதி உட்கார்ந்திருந்தார். அவர் தமது தலையைச் சோர்வோடு நாற்காலியின் பின்புறம் சாய்த்து கண்களைப் பாதி மூடியவாறே சிந்தனையில் ஈடுபட்டிருந்தார். அரசாங்க வக்கீலும் களைப்புணர்ச்சியோடும் எரிச்சலோடும் இருப்பதாகத் தோன்றியது. நீதிபதிகளுக்குப் பின்னால் மூன்று முக்கிய பிரமுகர்கள் உட்கார்ந்திருந்தார்கள்; ஒருவர் நகரத்து மேயர்—அவர் கனத்துத் தடித்த ஆசாமி; அவர் தமது கன்னத்தைத் தடவிக்கொடுத்தவாறு உட்கார்ந்திருந்தார். மற்றொருவர் பிரபு வம்சத் தலைவர்—நரைத்த தலையும் சிவந்த கன்னமும், நீண்ட தாடியும், கவர்ச்சிகரமான விசாலமான கண்களும் கொண்டவர் அவர். அடுத்தாற்போல் ஜில்லா அதிகாரி இருந்தார். பெரிய தொந்தியுள்ள ஆசாமி அவர். தொந்தி விழுந்திருப்பது அவருக்கு மனச்சங்கடத்தை உண்டுபண்ணியதுபோல் தோன்றியது. ஏனெனில் அவர் தமது கோட்டினால் அந்தத் தொந்தியை எவ்வளவோ மறைக்க முயன்றும், முடியவில்லை.
“இங்கு கைதிகளும் இல்லை. நீதிபதிகளும் இல்லை!” என்று பாவெலின் உறுதியான குரல் ஒலித்தது, “பிடிபட்டவர்களும்
பிடித்தவர்களும்தான் இருக்கிறார்கள்!”எல்லோரும் அமைதியானார்கள். சில விநாடிகள்வரையிலும் கரகரவென்று எழுதிச் செல்லும் பேனாவின் சத்தத்தையும், அவளது இதயத் துடிப்பையும் தவிர வேறு எதையுமே தாய் கேட்கவில்லை.
பிரதம நீதிபதியும் அடுத்தாற்போல் என்ன நடக்கப்போகிறது என்பதையே கவனித்துக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருப்பதுபோல் தோன்றியது. அவரது உதவி நீதிபதிகளும் நிலையிழந்து அசைந்து. கொடுத்தார்கள். முடிவாக அவர் சொன்னார்”ஹும்..... அந்திரேய், நரோத்கா! நீங்கள் குற்றவாளி என்று ஒத்துக்கொள்கிறீர்களா?”
அந்திரேய் மெதுவாக எழுந்தான் நிமிர்ந்து நின்றான். மீசையை இழுத்துவிட்டான், தன் புருவங்களுக்குக் கீழாக, அந்தக் கிழ நீதிபதியைப் பார்த்தான்:
“நான் எப்படி என் குற்றத்தைக் கூறமுடியும்?” என்று நிதானமாக இனிமையாக தோள்களை உலுப்பிக்கொண்டே கூறினான் அந்திரேய். “நான் யாரையும் கொலை செய்யவில்லை; எதையும் திருடவில்லை. ஆனால் ஒருவரையொருவர் திருடவும், கொலை செய்யவும் தூண்டிவிடும் இந்த வாழ்க்கை அமைப்புத்தான் நான் எதிர்க்கிறேன்.”
“சுருக்கமாகப் பதில் சொல்க” என்று அந்தக் கிழவர் சிரமப்பட்டுச் சொன்னார்.
தனக்குப் பின்னால் உள்ள பெஞ்சிகளிலுள்ளவர்கள் பரபரத்துக் கொண்டிருப்பதைத் தாயால் உணர்ந்துகொள்ள முடிந்தது. ஜனங்கள் குசுகுசுத்து ரகசியம் பேசினார்கள், அங்குமிங்கும் அசைந்தார்கள்; அந்த வெள்ளை மூஞ்சி ஆசாமியின் பேச்சினால் தம்மீது படர்ந்துவிட்ட தூசி தும்புகளைத் துடைத்துவிடுவது போலவும் நடந்துகொண்டார்கள்.
“அவர்கள் சொல்வதைக் கேள்” என்று சிஸோவ் ரகசியமாகச் சொன்னான்.
“பியோதர் மாசின், பதில் சொல்லுங்கள்......”
“முடியாது. சொல்லமாட்டேன்” என்று துள்ளிக்கொண்டு கூறினான் பியோதர். அவனது முகம் சிவந்து போய்விட்டது. கண்கள் பிரகாசமடைந்தன்: என்ன காரணத்தினாலோ அவன் தன் கைகளைப் பின்புறமாகக் கட்டிக் கொண்டிருந்தான்.
சிஸோவ் மூச்சடைத்துப் போனான். தாயின் கண்கள் வியப்பினால் அகலவிரிந்தன.
“எனக்காக வக்காலத்துப் பேச நான் வக்கீலை அமர்த்தவும் இல்லை: நான் எதுவும் சொல்லவும் மறுக்கிறேன், இந்த விசாரணையே சட்ட விரோதமானது என நான் மதிக்கிறேன். நீங்களெல்லாம் யார்? எங்களுக்கு நீதி வழங்கும்படி உங்களுக்கு மக்கள் உரிமை வழங்கியிருக்கிறார்களா? இல்லை, அவர்கள் உங்களுக்கு உரிமை தரவில்லை. உங்களது அதிகாரத்தையே நான் ஏற்றுக்கொள்ள மறுக்கிறேன்!”
அவன் உட்கார்ந்தாள். தனது கன்றிச்சிவந்த முகத்தை அந்திரேயின் தோளுக்குப் பின்னால் மறைத்துக்கொண்டான்.
அந்தக் கொழுத்த நீதிபதி பிரதம நீதிபதியை நோக்கித் தலையை அசைத்து, காதில் ஏதோ ரகசியமாகச் சொன்னார். வெளுத்த முகம் கொண்ட நீதிபதி தம் கண்களைத் திறந்து, கைதிகளைக் கடைக்கண்ணால் பார்த்துவிட்டு, முன்னாலுள்ள காகிதத்தில் ஏதோ குறித்துக்கொண்டார் ஜில்லா அதிகாரி தலையை அசைத்தார்; தமது காலை நீட்டி தொந்தியைத் தொடைமீது சாய்த்து, அதைக் கைகளால் மூடிக்கொண்டார். தனது தலையைத் திருப்பாமலே, அந்தக் கிழ நீதிபதி தமது உடம்பு முழுவதையுமே திருப்பி, அந்த வெளுத்தமுக நீதிபதியைப் பார்த்து அவரிடம் ஏதோ ரகசியம் பேசினார். அந்த உபநீதிபதி அவர் கூறியதை வணங்கிய தலையோடு காதில் வாங்கிக்கொண்டார். பிரபு வம்சத் தலைவர் அரசாங்க வக்கீலிடம் என்னவோ சொன்னார்; அதை நகர் மேயரும் தம் கன்னத்தைத் தடவிக் கொடுத்தவாறே கேட்டார்: மீண்டும் அந்தப் பிரதம நீதிபதி மங்கிய குரலில் பேசத் தொடங்கினார்.
“அவன் அவர்களை வெட்டிப் பேசினான் பார்த்தாயா?” என்று தாயை நோக்கி வியப்போடு கூறினான் கிஸோவ். “அவன்தான் இவர்கள் எல்லோரிலும் கெட்டிக்காரன்!”
அவன் சொன்னதைப் புரிந்துக்கொள்ளாமலேயே புன்னகை புரிந்தாள் தாய். அங்கு நடக்கும் சகல காரியங்களும்,
அவர்களையெல்லாம் கூண்டோடு நசுக்கித் தள்ளும் மகா பயங்கரத்துக்கான, வேண்டாத வீண் அறிகுறிகளே என்று அவள் கருதினாள். ஆனால் பாவெலும் அந்திரேயும் பேசிய பேச்சுக்கள் நீதிமன்றத்தில் பேசுவதுபோல் இல்லாமல், தொழிலாளர் குடியிருப்பில், தமது சிறிய வீட்டுக்குள் பேசிய பேச்சுப்போல் பயமற்றும் பலத்தோடும் ஒலித்தன, பியோதரின் உணர்ச்சிவசமான உத்வேகப் பேச்சைக் கேட்டு அவள் பரபரப்பபடைந்தாள்.. அந்த விசாரணையில் ஏதோ ஒரு துணிந்து காரியசரதனை நடைபெறுவது போல் தோன்றியது. தனக்குப் பின்னாலுள்ள ஜனங்களைப் பார்த்தபோது, அவ்வித உணர்ச்சி தனக்கு மட்டுமே ஏற்படவில்லை. அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது என்பதையும் கண்டுகொண்டாள் தாய்.“உங்கள் அபிப்பிராயம் என்ன?” என்று அந்தக் கிழ நீதிபதி கேட்டார்.
அந்த வழுக்கைத் தலை அரசாங்க வக்கீல் எழுந்து நின்றார்; ஒரு கையை மேஜை மீது ஊன்றியவாறே படபடவென்று புள்ளிவிவரங்களை அடுக்கிப் பேசத் தொடங்கிவிட்டார். அவரது பேச்சில் எவ்விதப் பயங்கரமும் இல்லை.
அதே சமயத்தில் ஏதோ ஒரு வறண்ட குத்தலான பயபீதி உணர்ச்சி தாயின் உள்ளத்திலே புகுந்து உறுத்தியது. கையை உயர்த்திக் காட்டாமல், வஞ்சம் கூறிக் கத்தாமல், ஆனால், அதே சமயத்தில் கண்ணுக்குத் தெரியாமல், புலனுக்கும் வசப்படாமல், குமுறி வளர்ந்து வரும் ஒரு வெம்பகை உணர்ச்சி அந்த நீதிமன்ற சூழ்நிலையிலே தொனித்துக் கொண்டிருப்பதை அவள் உணர்ந்தறிந்தாள். அந்தக் கொடும் பகை நீதிபதிகளின் முன்னிலையிலேயே வட்டமிட்டு அவர்களுக்கு வெளியில் நடைபெறும் காரியங்கள் எதுவும் அவர்கள் மனத்துக்குள் புகுந்து விடாதபடி, அவர்கள் உள்ளத்தைக் கவர்ந்து சூழ்ந்து கப்பி மூடிக்கொண்டிருப்பதுபோல் தோன்றியது. அவள் அந்த நீதிபதிகளைப் பார்த்தாள்; அவர்களது பார்வையிலிருந்து அவளால் எதுவும் அறிந்துகொள்ள முடியவில்லை. அவள் எதிர்பார்த்ததுபோல், அவர்கள் பாவெலின் மீதோ பியோதர்மீதோ கோபம் கொள்ளவில்லை. அவர்களை அவமானப்படுத்திப் பேசவில்லை. தாங்கள் கேட்ட கேள்விகளுக்கே அவர்கள் எந்த முக்கியத்துவமும் அளித்ததாகவும் தெரியவில்லை. அவர்களது குரல் விருப்பற்ற குரலாக ஒலித்தது: நமது கேள்விகளுக்குக் கிடைத்த பதில்களையும் அவர்கள் வேண்டா வெறுப்பாகத்தான் கேட்டுத் தீர்த்தார்கள். அவர்கள் எதைப்பற்றியும் கவலை கொள்ளாதவர்கள் போலவும் எல்லா விஷயத்தையும் ஏற்கெனவே தெரிந்து வைத்திருந்தவர்கள் போலவும் காணப்பட்டார்கள்.
இப்போது அவர்கள் முன்னால் ஒரு போலீஸ்காரன் வந்தான். ஆழ்ந்த குரலில் சொன்னான்.
“பாவெல் விலாசவ்தான் இவர்களில் பிரதம கிளர்ச்சிக்காரன் என்று சொல்லப்படுகிறது...”
“நயோத்காவைப் பற்றி என்ன?” என்று அந்த கொழுத்த நீதிபதி சோம்பலுடன் கேட்டார்.
“அவனும்...”
ஒரு வக்கீல் எழுந்திருந்தார்.
“நான் ஒரு வார்த்தை சொல்லலாமா?” என்று கேட்டார்.“ஏதாவது மறுத்துக் கூறவேண்டுமா?” என்று பிரதம நீதிபதி கேட்டார்.
அத்தனை நீதிபதிகளும் ஏதோ நோய்வாய்ப்பட்டுத் துன்புறுவதுபோல் தாய்க்குத் தோன்றியது. அவர்களது பேச்சிலும் நடத்தையிலும் ஏதோ ஒரு சீக்கான அலுப்புணர்ச்சி பிரதிபலிப்பதுபோல் தோன்றியது. முகங்களும் அந்த அலுப்பையும் ஆயாசத்தையுமே பிரதிபலித்தன. அவர்களது உத்தியோக உடைகள், நீதிமன்றம், அரசியல் போலீஸ்காரர்கள், வக்கீல்கள். நாற்காலிகளில் உட்கார்ந்து கேள்வி கேட்பது, அதற்கு வரும் பதில்களைக் கேட்டுக் கொண்டிருக்கும்படியான தேவை எல்லாவற்றையுமே அவர்கள் ஒரு நிர்ப்பந்தவசமான தொல்லையாகத்தான் கருதினார்கள் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.
தாய்க்கு ஏற்கெனவே அறிமுகமாயிருந்த அந்த மஞ்சள் மூஞ்சி அதிகாரி அவர்களுக்கு முன்னால் வந்து நின்றான், பாவெலைப்பற்றியும் அந்திரேயைப்பற்றியும் தனக்குத் தெரிந்த விஷயங்கள் அனைத்தையும் உரத்தக் குரலில் நீட்டி நீட்டிப் பேசினான்.
“உனக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!” என்று தனக்குள் நினைத்துக்கொண்டாள் தாய்.
கைதிக் கூண்டுகளுக்குப் பின்னால் இருப்பவர்களை அவர்களைப்பற்றிய பயமும் இல்லாமல், அவர்கள் மீது அனுதாபமும் இல்லாமல் ஏறிட்டுப் பார்த்தாள் தாய். அவர்கள் மீது அவள் அனுதாபம் கொள்ள முடியாது. அவள் மனதில் அவர்கள் வியப்புணர்ச்சியைத்தான் உண்டாக்கினார்கள். அவர்களைக் கண்ட மாத்திரத்தில் அவளது உள்ளத்தில் ஓர் அன்புணர்ச்சி அலைபாய்ந்து சிலிர்த்துப் பரவியது. அந்த வியப்புணர்ச்சியோ அமைதியாயிருந்தது. அந்தப் பரவச ஆனந்தம் தெளிவோடிருந்தது. சுவருக்கு எதிராக அவர்கள் உறுதியோடும் இளமையோடும் உட்கார்ந்திருந்தார்கள். சாட்சிகளின் கிளிப்பிள்ளைப் பேச்சையும், நீதிபதிகளையும், சர்க்கார் வக்கீலோடு மற்ற வக்கீல்கள் பேசும் விவாதப் பேச்சுக்களையும்; அவர்கள் கவனித்ததாகவே தெரியவில்லை, இடையிடையே அவர்களில் யாராவது ஒருவன் வெறுப்பாக சிரித்துக்கொண்டே, தனது தோழர்களைப் பார்த்து ஏதாவது கிண்டலாகச் சொல்வான். அந்தத் தோழர்களின் முகங்களும் அந்தக் கிண்டலைப் பிரதிபலித்துப் புன்னகை புரிந்தன. குற்றவாளிகளின் தரப்பில் பேசிக்கொண்டிருந்த வக்கீல் ஒருவரோடு, பாவெலும் அந்திரேயும் இடையிடையே ஏதேதோ மெதுவாகப் பேசினார்கள். அந்த வக்கீலை முந்தின நாள் இரவு நிகலாயின் வீட்டில் தாய் பார்த்திருந்தாள். மற்றவர்களை விட உணர்ச்சிக்கு ஆளாகி நிலைகொள்காராமல் தவித்துக் கொண்டிருந்த மாசின் அவர்களது பேச்சைக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தான். சமயங்களில் சமோய்ல இலான் கூஸெவைப் பார்த்து ஏதாவது பேசுவான். அதற்குப் பதிலாக இவான் தன் தோழனை முழங்கையால் இடித்துக்கொண்டே..ொங்கி வரும் சிரிப்பை அடக்க முயலுவான். அந்த முயற்சியில் அவனது முகம் சிவந்து கன்னங்கள் கன்றிப் போகும்: உடனே அவன் தலையைக் கவிழ்த்துக்கொள்வான்: இருமுறை அவன் வாய்விட்டே சிரித்துவிட்டான். பிறகு அவன் தன் சிரிப்பையெல்லாம் உள்ளடக்கிக்கொண்டு, தன்னைக் கட்டுப்படுத்த முயன்றவாறு உட்கார்ந்திருந்தான். அந்தக் கைதிகள் ஒவ்வொருவரிடமும் இளமை பொங்கிப் பிரவாகித்தது: நுரைத்துப் பொங்கும் அந்தப் பிரவாகத்தைத் தடுக்க முயலும், சகல முயற்சிகளையும் அந்த இளமை லாவகமாக எதிர்த்து ஒதுக்கியது.
“சிஸோவ் தாயின் முழங்கையை லேசாகத் தொட்டான். அவள் திரும்பினாள். மகிழ்ச்சியும். ஓரளவு பாதைபதைப்பும் பிரதிபலிக்கும் அவனது முகத்தை அவள் கண்டாள்.
“நமது இளவட்டங்கள் எவ்வளவு தைரியசாலிகளாகிவிட்டார்கள் என்று பார்” என்று மெதுவாகக் கூறினான் அவன். “பெரிய சீமான்கள்!”
நீதிமன்றத்தில் சாட்சிகள் உணர்ச்சியற்ற குரலில் அவசர அவசரமாகவும், நீதிபதிகளோ விருப்பமின்றியும் அக்கறையின்றியும் பேசிக்கொண்டேயிருந்தார்கள். அந்தக் கொழுத்த நீதிபதி தமது தடித்த கரத்தால் வாயை மூடிக்கொண்டு கொட்டாவி விட்டார். சிவந்த மீசைகொண்ட நீதிபதியின் முகம் மேலும் வெளுப்புற்றுப் போயிற்று. இடையிடையே அவர் தமது நெற்றிப் பொருத்துகளைக் கை விரலால் அழுத்திப் பிடித்துவிட்டவாறே. முகட்டை நோக்கி நிமிர்ந்து சிரமத்தோடு வெறுமனே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். இடையிடையே எப்போதாவது அரசாங்க - வக்கீல் பென்சிலை எடுத்து எதையாவது குறித்துக் கொள்வார். அதன் பிறகு, அவர் ஊமைக் குரலில் அந்த பிரவவம்சத் தலைவரோடு தமது பேச்சைத் தொடங்குவார். அவரோ நரைத்த தாடியை நீவிக்கொடுத்தவாறு தமது அழகான பெரிய கண்களை உருட்டி விழிப்பார்; கழுத்தைக் கம்பீரமாக அசைத்துக்கொண்டே புன்னகை செய்வார். நகர மேயர் கால்மேல் கால்போட்டு, முழங்காலின் மீது கை விரல்களால் தாளம் போட்டுக்கொண்டு அந்தத் தாளத்தையே கவனித்துக்கொண்டிருந்தார். முழங்காலின் மீது தொந்தியைச் சரித்துத் தாங்கிக்கொண்டிருந்த அந்த ஜில்லா அதிகாரி அதை இருகையாலும் அன்போடு வாரித் தழுவிக்கொண்டிருந்தார், அவர் ஒருவர்தான் அந்த நச்சுப்பிடித்த சாட்சிகளின் முனகலையெல்லாம் காது கொடுத்துக் கேட்டுக்கொண்டிருப்பதுபோலத் தோன்றியது. அந்தக் கிழ நீதிபதியோ, காற்றடிக்காத திசையில் ஆடாது அசையாது நிற்கும் காற்றாடியைப்போல், இம்மிகூட அசையாது தமது நாற்காலிக்குள்ளேயே புதைந்துகிடந்தார். சுற்றுச்சூழ இருந்த ஜனங்கள் ஆயாசத்தால் அலுத்து மரத்துப்போகும்வரை இவையனைத்தும் நீடித்தன.
“நான் அறிவிக்கிறேன்.....” என்று கூறிக்கொண்டே அந்தக் கிழவர் எழுந்து நின்றார். இந்த வார்த்தைகளுக்குப் பின் வந்த வார்த்தைகள் - அவரது உதடுகளுக்குள்ளாகவே மடிந்து உள்வாங்கிப் போய்விட்டன.
நீதிமன்றம் முழுவதிலும் பெருமூச்சுக்களும், அமைதியான வியப்புக் கேள்விகளும், இருமலும், காலைத் தேய்க்கும் சப்தமுமே நிறைந்து ஒலித்தன, கைதிகளை வெளியே கொண்டுபோனார்கள். அவர்கள், தமது நண்பர்களையும் உறவிளர்களையும் பார்த்துத் தலையை ஆட்டிக்கொண்டே புன்னகை புரிந்தார்கள். இவான்கூலெவ் யாரையோ துணிந்து வாய்விட்டுக் கூப்பிட்டுவிட்டான்:
“இகோர், தைரியத்தை இழக்காதே!”
தாயும் சிஸோவும் நீதிமன்றத்துக்கு வெளியேயுள்ள வராந்தாவுக்கு வந்தார்கள்.
“பக்கத்துக் கடையிலே போய் ஒரு கப் தேநீர் சாப்பிடலாமா?” என்று சிஸோவ் அன்போடு கேட்டான், “இன்னும் நமக்கு ஒன்றரை மணி நேர அவகாசம் இருக்கிறது.”
“எனக்கு இப்போது தேநீர் தேவையில்லை.”
“எனக்கும்தான் தேவை இல்லை, அந்தப் பையன்களைப் பற்றி நீ என்ன நினைக்கின்றாய்? இவ்வுலகத்திலேயே அவர்கள் மட்டும்தான்” இருப்பது போலல்லவா. அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள்? மற்றவர்களெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை. அந்த பியோதரைப் பார்!”
சமோய்லவின் தந்தை அவர்கள் அருகில், தொப்பியைக் கையில் பிடித்தவாறே, வந்து சேர்ந்தான்.
“என். கிரிகோரியைப் பார்த்தீர்களா?” என்று கசந்த புன்னகையோடு கூறினான் அவன், “அவன் எதிர்வாதம் செய்யவும் மறுத்துவிட்டான், அவர்களோடு பேசவே அவன் விரும்பவில்லை, முதன்முதல் அவனுக்குத்தான் இந்த யோசனை எட்டியிருக்கிறது. பெலகேயா, உன் மகனோ வக்கீல்களைவைத்து நடத்திப் பார்ப்பதற்குச் சம்மதித்திருக்கிறான். இவனோ எதற்கும் முண்டியதில்லை. அதன் பிறகு நாலுபேர் இவனைப்போலவே மறுத்துவிட்டார்கள்.”
அவனது மனைவி அவனுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தாள் கண்ணில் தொங்கும் கண்ணீரை அடக்க எண்ணி அவள் கண்ணை மூடி, மூடி விழித்தாள்; கைக்குட்டையால் நாசியைத் துடைத்துவிட்டுக் கொண்டாள்.
“இதுதான் அதிசயம்” என்று தன் தாடியைப் பிடித்துக்கொண்டும். தரைமீது பார்வையை ஊன்றிப் பதித்துக்கொண்டும் பேசத் தொடங்கினான் சமோய்லவின் தந்தை. “இவர்களை இந்தப் பயல்களைப் பார்க்கும்போது, இவர்கள் இந்த மாதிரியான சங்கடத்துக்குள் போய், மாட்டிக்கொண்டதையெண்ணி நம்மால் அனுதாபப்படாமலிருக்க முடியவில்லை. உடனே திடீரென்று நமக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. ஒருவேளை இந்தப் பயல்கள் சொல்வதுதான் சரியான உண்மையோ என்று நினைக்கத் தோன்றுகிறது” அதிலும் நாளுக்கு நாள் தொழிற்சாலையில் இவர்கள் கூட்டம் பெருத்து வருவதைக் கண்டால், இப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது. போலீசாரோ அவர்களைப் பிடித்துக்கொண்டுபோன வண்ணமாயிருக்கிறார்கள்; அவர்களோ ஆற்று மீன்களைப்போல பெருகிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களிடம்தான் சக்தி இருக்கிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.”
“ஸ்திடான் பெத்ரோவில் இந்த விவரத்தைப் புரிந்துகொள்வது நம்போன்றவர்களுக்கு முடியாத காரியம்!” என்றான் சிஸோவ்.
“ஆமாம், சிரமமானதுதான்” என்று ஆமோதித்தான் சமோய்லவின் தந்தை.
“போக்கிரிகள்–இவர்களுக்குத்தான் எவ்வளவு சக்தி?” என்று பலத்துச் சிணுங்கிக்கொண்டே கூறினாள் அவனது மனைவி.
பிறகு அவள் தாயின் பக்கம் திரும்பி, தனது தொள தொளத்த அகன்ற முகத்தில் புன்னகை அரும்பப் பேசினாள்:
“நீலவ்னா, என்மீது கோபம் கொள்ளாதே, கொஞ்ச நேரத்துக்கு முன்னால் நான்தான் உன் மகனைக் குறைகூறினேன், ஆனால் யார் குற்றம் அதிகம் என்று எவர் கூறமுடியும்? எங்கள் கிரிகோரியைப் பற்றிப் போலீஸ்காரர்களும், உளவாளிகளும் என்ன சொன்னார்கள் பார்த்தாயா? அவனும் இந்த விவகாரத்தில் தன்னாலானதைச் செய்திருக்கிறான் செந்தலைப் பிசாசு!”
தனது உணர்ச்சியை அவள் உணர்ந்துகொள்ளாவிட்டாலும் அவள் தன் மகனை எண்ணிப் பெருமை கொள்வதாகவே தோன்றியது. எனினும் தாய் அவள் கூறியதைக் கேட்டு மெச்சிக்கொண்டாள். அன்பான புன்னகை ததும்ப உள்ளத்திலிருந்து பிறந்த வார்த்தைகளோடு பதில் சொன்னாள் தாய்:
“இளம் இதயங்கள்தான் உண்மையைச் சட்டென்று எட்டிப்பிடித்துக்கொள்கின்றன.......”
ஜனங்கள் வராந்தாவில் நடமாடினார்கள். கூட்டம் கூட்டமாகக் கூடி நின்று உள்ளடங்கிப்போன குரல்களோடும் ஆர்வத்தோடும் பேசிக்கொண்டிருந்தார்கள், யாருமே தன்னந் தனியாய் ஒதுங்கி நிற்கவில்லை. எல்லோரது முகங்களிலுமே, பேசவேண்டும். கேள்வி கேட்கவேண்டும், பதில் தெரியவேண்டும் என்ற ஆசையுணர்ச்சிகள் பிரதிபலித்தன. சுவர்களுக்கு இடையேயுள்ள நடைபாதைகளில் அவர்கள் ஓரிடத்திலும் கால் தரிக்காமல் முன்னும் பின்னும் காற்றினால் அலைக்கழிக்கப்பட்ட மாதிரி நடமாடினார்கள்; எதையோ தேடித் திரிவது போலவும் அதைக் கண்டுபிடித்துவிட்டால், நிம்மதியாக இருக்கலாம் என்று எண்ணி உறுதியோடும் பலத்தோடும் பரபரத்துத் திரிவதைப் போலவுமே அவர்கள் காணப்பட்டார்கள்.
புகினின் மூத்த சகோதரன்—புகினைப்போலவே, நிறமற்ற அந்த நெட்டைச் சகோதரன் — தன் கைகளை ஆட்டிக்கொண்டும் எதையோ நிரூபணம் செய்யப் போகிறவன் மாதிரி நாலா திசைகளிலும் திரும்பிப் பார்த்துக்கொண்டும் வந்து சேர்ந்தான்
“அந்த கிளெடானவ்—அவன் தான் அந்த ஜில்லா அதிகாரி— அவனுக்கு இங்கு என்ன வேலை.....”
“கான்ஸ்தந்தீன்! உன் வாயைக் கொஞ்சம் மூடு!” என்று அவனது தந்தையான ஒரு குட்டைக் கிழவன் அங்குமிங்கும் ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொண்டே எச்சரிக்கை செய்தாள்.
“முடியாது. என்னால் முடியாது. போன வருஷம் அவன் ஒரு குமாஸ்தாவின் மனைவியை அடைவதற்காக, அந்த குமாஸ்தாவையே கொன்று தீர்த்துவிட்டான் என்று ஊணில் பேசிக்கொள்கிறார்கள். இப்போது இவன் அவளோடுதான் வாழ்கிறான். இதைப்பற்றி நீ என்ன சொல்கிறாய்? மேலும் இவன் ஒரு பெரிய திருட்டுப் பயல் என்பதும் எல்லோருக்கும் தெரியும்.........”
“ஐயோ! நீ நன்றாயிருப்பாய், கொஞ்சம் பேசாமல் இரேன், கான்ஸ்த ந்தீன்!...”
“ரொம்ப சரி” என்றான் சமோய்லவின் தந்தை: “ரொம்ப சரி, இந்த விசாரணை நேர்மையானது என்று சொல்லவே முடியாது........”
மூத்த புகின் இந்தக் குரலைக் கேட்டான்: அவன் தன்னோடு பலரையும் சேர்த்திழுத்துக்கொண்டு முன்னேறி வந்தான். அவனது முகம் சிவந்துபோயிருந்தது. அவன் தன் கைகளை ஆட்டிக்கொண்டு சத்தமிட்டான்:
“கொலையானாலும் திருட்டானாலும் குற்றவாளிகளைப் பொது மக்களின் ஜூரிகளைக்கொண்டு விசாரிக்கிறார்கள். அந்த ஜூரிகளில் விவசாயிகளும், நகர மாந்தர்களும், தொழிலாளர்களும் உண்டு. ஆனால், ஜனங்கள் அதிகாரிகளுக்கு எதிராகப் போராடினால் மட்டும், அவர்களை விசாரிப்பது பொது மக்களின் ஜூரிகளல்ல; அதிகாரிகளே அவர்களைப் பிடித்து விசாரிக்கிறார்கள்! இதை என்ன சொல்கிறாய்? நீ என்னை அவமானப்படுத்தினாய் என்று வைத்துக்கொள். நான் உன் தாடையில் ஓங்கியறைகிறேன். அப்புறம் நீ என்மீது தீர்ப்புக் கூறுகிறாய்: நீ என்ன கூறுவாய்? என்னைத்தான் குற்றவாளி என்பாய். ஆனால் முதன்முதலில் தவறு செய்தது யார்? நீ தான். அதுபோல்........”
நரைத்த தலையும் கொக்கி மூக்கும் கொண்ட ஒரு காவலாளி மார்பகலத்துக்குப் பற்பல மெடல்களை மாட்டிக்கொண்டு அங்கு வந்து சேர்ந்தான். அவன் ஜனக்கூட்டத்தைக் கலைந்து போகச் செய்தான். புகினின் சகோதரனைப் பார்த்து, விரலால் சுட்டிக்காட்டிப் பத்திரம் என்றான்.
“கூச்சலை நிறுத்து. இது ஒன்றும் கள்ளுக்கடை இல்லை!” என்றான் அவன்.
“அது சரிதான், பெரியவரே, எனக்குத் தெரியும். ஆனால் நான் உங்களை அடித்துவிட்டு, பிறகு நானே நீதிபதியாகவும் மாறினால், அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.,...?”
“உன்னை இங்கிருந்து கல்தா கொடுத்து வெளியில் தள்ளத்தான் நான் நினைக்கிறேன். தெரிந்ததா?” என்று கடுமையாகச் சொன்னான் அந்தக் காவலாளி.
“என்னை. வெளியே தள்ளப் போகிறாயா? எதற்காக?”
“இந்தமாதிரிக் காட்டுக் கூச்சல் போடுவதற்காக! உன்னைத் தெருவில் கொண்டுபோய்த் தள்ளிவிடுவேன்!”
மூத்த புகின் தன்னைச் சுற்றியுள்ளவர்கள் அனைவரையும் பார்த்தான். பிறகு தணிந்த குரலில் சொன்னான்!
“அவர்கள் விரும்புவதெல்லாம் ஒரே ஒரு விஷயம்தான். ஜனங்கள் வாயைப் பொத்திக்கொண்டு சும்மா இருக்க வேண்டும்!.....”
“ஆமாம். நீ என்ன நினைத்தாய்?” என்று அந்தக் கிழவன் கரகரத்த குரலில் கேட்டான்.
மூத்த புகின் தோள்களைக் குலுக்கிவிட்டுக்கொண்டு மிகவும் மெதுவாகப் பேசத் தொடங்கினான்.“விசாரணை யைப் பார்க்க எல்லா ஜனங்களையும் ஏன் அனுமதிக்கவில்லை ? உறவினர்களை மட்டும் ஏன் அனுமதிக்க வேண்டும்? உங்கள் விசாரணை நேர்மையானதாக இருந்தால், எல்லோரும்தான் அதைக் கேட்டுவிட்டுப் போகட்டுமே, எதற்காகப் பயப்படுவதாம்?”
“விசாரணை நேர்மையானதல்ல. அதில் சந்தேகமே இல்லை” என்று உரத்த குரலில் ஆமோதித்தான். சமோய்லவின் தந்தை.
இந்த விசாரணையே சட்ட விரோதமானது என்பதைப் பற்றி நிகலாய் இவானவிச் விவரித்துச் சொன்ன விஷயங்களை இவனுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று தாய் திரும்பினான், ஆனால், அவன் சொன்ன விஷயங்களை அவள் பரிபூரணமாகப் புரிந்து கொள்ளவுமில்லை. மேலும் சில வார்த்தைகளும் அவளுக்கு மறந்துபோய்விட்டன. எனவே அதை ஞாபகப்படுத்திப் பார்க்க முயன்றுகொண்டே அவள் ஒரு பக்கமாக ஒதுங்கினாள். அந்தச் சமயத்தில் வெளிர் மீசைகொண்ட ஓர் இளைஞன் தன்னைக் கவனித்துக்கொண்டிருப்பதை அவள் கண்டுகொண்டாள். அவன் தன் வலது கையை கால்சராய்ப் பைக்குள் செலுத்தியிருந்தான். எனவே! அவனது இடது தோள் வலது தோளைவிடத் தணிந்திருப்பது போலத் தோன்றியது. இந்தத் தோற்றத்தை அவள் எங்கோ ஏற்கெனவே கண்ட மாதிரி இருந்தது. ஆனால் அவனோ திடீரென்று தன் முகத்தைத் திருப்பி நின்றுகொண்டான்; நினைவலைகளால் சூழப்பட்டிருந்த அவள். அவனை மறந்துவிட்டாள்.
ஒரு நிமிஷம் கழித்து அவள் காதில் ஒரு கேள்விக் குரல் விழுந்தது.
“அவளா?”
“ஆமாம்” என்று ஆர்வத்தோடு ஒலித்தது பதில்.
அவள் சுற்றுமுற்றும் பார்த்தாள். தோளைத் தூக்கிக்கொண்டு நின்ற அந்த இளைஞன் இப்போது பக்கவாட்டில் நின்றான், கரிய தாடியும், குட்டைக் கோட்டும், முழங்கால்வரை உயர்ந்த பூட்சுகளும் கொண்ட இன்னொரு மனிதனோடு அவன் பேசிக்கொண்டிருந்தான்.
மீண்டும் அவள் தன் நினைவைத் தேடித் திரிந்தாள். அதனால் அவள் மனம் குழம்பியதுதான் மிச்சம். ஒன்றும் அவள் நினைவில் தட்டுப்படவில்லை. தனது மகனது கொள்கையை அந்த ஜனங்களுக்கு விளக்கி எடுத்துக்கூற வேண்டும். என்ற கட்டுப்படுத்த முடியாத பேராவல் அவள் மனத்தில் நிறைந்து பொங்கியது. அதைப்பற்றி இந்த ஜனங்களிடம் சொன்னால் இவர்கள் என்ன சொல்லுவார்கள். அதன் மூலம் அந்த விசாரணையின் முடிவு எப்படியிருக்கும் என்பதைத் தீர்மானிக்கலாம் என்று யோசித்தாள் அவள்.
“இதுதான் விசாரணை நடத்துகிற ஒழுங்கோ ?” என்று அமைதியாகவும் ஜாக்கிரதையாகவும் சிஸோவை நோக்கிப் பேச்சைத் தொடங்கினாள் தாய். “யார் என்ன என்ன செய்தார்கள் என்பதை அறிவதில்தான் இவர்கள் நேரத்தைப் போக்குகிறார்களே தவிர, ஏன் அப்படிச் செய்தார்கள் என்பதை அறிய விரும்பவில்லை. இவர்கள் எல்லாம் கிழட்டு ஆசாமிகள்; இளைஞர்களை இளைஞர்களைக் கொண்டுதான் விசாரிக்க வேண்டும்.”
“ஆமாம்” என்றான் சிஸோல், “இந்த விவகாரத்தை நாமெல்லாம் புரிந்து கொள்வது சிரமம்தான் - படுசிரமம்!” அவன் ஏதோ யோசித்தவாறே தலையை ஆட்டினான்.
காவலாளி நீதிமன்றத்தின் வாயிற் கதவைத் திறந்து விட்டுவிட்டு, வாய்விட்டுக் கத்தினான்.
“உறவினர்களே! உங்கள் அனுமதிச் சீட்டுக்களைக் காட்டுங்கள்!”
“சீட்டுக்கள்!” என்று யாரோ குத்தலாகச் சொன்னார்கள். “இதென்ன சர்க்கஸ் காட்சியா?”
ஜனங்களிடம் ஓர் உள்ளடங்கிய எரிச்சல் குணம் லேசாக வெளித்தோன்றியது. அவர்கள் மிகுந்த இரைச்சலோடு பேசினார்கள், அரட்டையடித்து காவலாளிகளோடு விவாதம் செய்துகொண்டிருந்தார்கள்.