திருக்குறள் பரிமேலழகர் உரை எளிய தமிழில். 65. சொல்வன்மை

விக்கிமூலம் இலிருந்து
திருக்குறள் பரிமேலழகர் உரை எளிய தமிழில்
பொருட்பால்
65. சொல்வன்மை



‘சொல்வன்மை’யாவது, “அமைச்சியல் நடத்தற்கு ஏதுவாய சொற்களைச் சொல்ல வல்லனாதல்” என்று கூறுவர் பரிமேலழகர். “அரசற்குக் கல்வி இன்றியமையாதது போல அமைச்சர்க்கு இஃது இன்றியமையாதது” என்பர் மணக்குடவர். எனவேதான், அமைச்சனது இலக்கணங்கூறிய ‘அமைச்சு’ எனும் அதிகாரத்தின்பின் ‘சொல்வன்மை’ வைக்கப்பட்டுள்ளது.

சொல்வன்மை என்றால், ‘சொல்லாற்றல்’ ஆகும். இதனை, ‘நாநலம்’ என்பர் நாயனார் (திருவள்ளுவர்).

நாநலம் என்னும் நலன்:

நாவன்மை என்று சிறப்பித்துச் சொல்லப்படும் நலம் -அதாவது சொல்வன்மை- ஒருவனுக்குச் செல்வமாகும். அந்த நலம் வேறு எந்த நலத்தினும் உள்ளதொரு நலம் அன்று; எல்லாவற்றினும் மிக்கது, சிறந்தது.

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று.

ஆக்கம் தருவதும், கேடு தருவதும் அதுவே:

நன்மையும் தீமையும் நாம் சொல்லும் சொல்லினால் வருதலால், பேசும் பொழுது சொற்சோர்வு ஏற்படாமல் நன்கு காத்துக் கொள்ளுதல் வேண்டும். இதனை,

ஆக்கமும் கேடும் அதனால் வருதலான்
காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு.

-என்கின்றார்.

சொல்லும் முறைமை:

கேட்டாரைக் கவருகின்ற தன்மை கொண்டதாய்க், கேளாதவர்களையும் கேட்க விரும்பும் தன்மை உடையதாய்ச் சொல்ல வல்லதுதான் சொல்வன்மை எனப்படும்.

கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாஞ் சொல். (643)

கேட்டார்ப் பிணிக்கும் குணங்கள் என்பதனைப் பரிமேலழகர், “அக்குணங்களாவன: வழுவின்மை (வழு-குற்றம், குற்றமில்லாத சொற்கள்), சுருங்குதல் (சுருக்கமாகக் கூறல்), விளங்குதல் (பிறருக்கு விளங்கும்படியாகக் கூறல்), இனிதாதல் (இனிமை), விழுப்பயன் தருதல் (உயர்ந்த பயனைத்தரும் சொற்கள்) என்றிவை முதலாயின” என விளக்குவர்.

அறனும் பொருளும் அருள்வது:

ஒரு சொல்லைச் சொல்லும் திறனறிந்து சொல்லவேண்டும்; அதனைக் காட்டிலும் மேம்பட்ட அறனும் பொருளும் இல்லை.

வெல்லும் சொல்:

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.

என்கின்றார்.

நாம் சொல்லுகின்ற சொல்லைப் பிறிதொரு சொல்லால் வேறொருவர் வெல்லுகின்றபடி இல்லாமல் ஆராய்ந்து சொல்லுதல் வேண்டும் என்று அழகுபடக் கூறுகிறார் சொல்வேந்தர் வள்ளுவப் பெருந்தகை.

‘சொல்’ எனும் சொல்லை வைத்து இங்குச் சொல்விளையாடல் புரிகின்றார் வள்ளுவக் கலைஞர். சொல் என்ற சொல்லே பின்னும் பலமுறை வருவதால் இது ‘சொற்பொருட் பின்வருநிலை அணி’ என்று இதனை அணியிலக்கண நூலார் கூறுவர்.

வேட்பச் (விரும்பும்படியாக) சொல்க!

பிறர் தாம்கூறுவதை மீண்டும் கேட்க விரும்புமாறு சொல்லுதல் வேண்டும்; அவ்வாறு கேட்டவர் தமக்குச் சொல்லும்போது, அவர் கூறும் சொற்களில் உள்ள பயனைக் கொள்ளுதல் ‘மாசற்றார்’ கொள்கையாகும். (மாசற்றார் - குற்றம் இல்லாதவர்).

சொல்வன்மை உடையார் சிறப்பு:

சொல்வன்மை உடையவன், சோர்வு இல்லாதவன், அவைக்கு அஞ்சாதவன் ஆகிய சிறப்புகளை உடையவனை வெல்லுதல் என்பது எவராலும் இயலாது! சொல்லப்படுவனவற்றை நிரல்படக் கோத்து (வரிசைப்படியாக), இனிதாகச் சொல்லும் வல்லமை உடையவரின் வார்த்தைகளைக் கேட்டு இவ்வுலகம் அவர் சொன்னபடி விரைவாக நடக்கும். இதனை,

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.

என்று கூறும்.

சொல்வன்மை இல்லார் நிலை:

கூறவரும் கருத்துகளைச் சில சொற்களால் சொல்ல அறியாதவர்தாம், ‘பல சொல்லக் காமுறுவர்’ என்கின்றார். (காமுறுவர் = விரும்புவர்).

நறுமணம் வீசா மலர்:

தாம் கற்ற பொருள்களை நன்கு அறிந்து வைத்திருந்தும், அவற்றைப் பிறர் அறியும்படி விரித்துக்கூறும் வல்லமை இல்லாதவர், கொத்தாக மலர்ந்தும் நறுமணம் வீசாத பூங்கொத்து போன்றவர் ஆவார். இதனை,

இணர்ஊழ்த்தும் நாறா மலரனையார் கற்றது
உணர விரித்துரையா தார்.

பார்க்க:[தொகு]

பரிமேலழகர் எளிய தமிழில்- 39. இறைமாட்சி

பரிமேலழகர் எளிய தமிழில்- 48. வலியறிதல்

பரிமேலழகர் எளிய தமிழில்- 49. காலமறிதல்

பரிமேலழகர் எளிய தமிழில்- 60. ஊக்கமுடைமை


பரிமேலழகர் எளிய தமிழில்- 69. தூது

பரிமேலழகர் எளிய தமிழில்- 82. தீநட்பு

பரிமேலழகர் எளிய தமிழில்- 83. கூடாநட்பு

பரிமேலழகர் எளிய தமிழில்- 99. சான்றாண்மை

பரிமேலழகர் எளிய தமிழில்- 109. தகையணங்குறுத்தல்

பரிமேலழகர் எளிய தமிழில்- 60. ஊக்கமுடைமை

பரிமேலழகர் எளிய தமிழில்- 69. தூது [[]] [[]] [[]] [[]] [[]] [[]] [[]] [[]]