கவிபாடிய காவலர்/சோழன் நலங்கிள்ளி
5. சோழன் நலங்கிள்ளி
கிள்ளி என்னும் மொழி சோழர் குடிக்கே சிறப்புப் பெயராகத் திகழவல்லது. அச் சொல்லையே தமக்குரிய பெயராக இவ்வேந்தர் பெற்றிருப்பாராயின், சோழருள் இவரும் ஒரு சிறப்புப் பெற்றவர் என்பதும் அறிய வருகிறது. மேலும், இவர் சோழர்குடிச் சீரியர் ஆதலின், பெயருக்கு முன் அக்குடிக்குரிய பொதுச் சொல்லையும் சேர்த்துச் சோழர் நலங்கிள்ளி என்று கூறப்பட்டு வந்தார். குடிப் பண்புடன் நலப் பண்பும் கூடி இருந்தமையின் சோழன் நலங் கிள்ளி என்றும் அழைக்கப் பட்டு வந்தனர்.
இம் மன்னர் சோழன் நலங் கிள்ளி என்ற பெயரால் மட்டும் குறிப்பிடப் பெறாமல், சேட் சென்னி, புட்பகை, சேர் வண் கிள்ளி, என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளார். இங்ஙனம் தனித் தனிப் பெயரால் சுட்டப் பெறாமல் சேட் சென்னி நலங் கிள்ளி என்றும் குறிப்பிடப்பட்டு வந்துள்ளார்.
இவர் புலவர்களால் சிறப்பித்துப் பாடப் பட்ட புகழ்பெற்றவர். இவரை, உறையூர் முது கண்ணன் சாத்தனார், கோவூர் கிழார், ஆலத்தூர் கிழார், ஆகிய முப்பெரும் புலவர்கள் பாடிச் சிறப்பித்துள்ளார். இம் மூவரது பாடல்களால் சோழன் நலங்கிள்ளி யின் வாழ்க்கைக் குறிப்புக்கள் பல தெரிய வருகின்றன. சோழன் நலங்கிள்ளி போர் செய்து வெற்றி கொள்ளுதலையே பொருளாகக் கொண்ட மனப் பண்புடையவர் என்றாலும், உறையூர் முதுக் கண்ணனார் இவரது வீரத்தின் வேகத்தைக்கண்டு, “இப்படி இம்மைக்குரிய இன்பத்திற்கு ஆவன செய் யின், அம்மைக்குரிய ஆன்ம லாபத்திற்கு ஆவனவற்றை எப்போது இவர் செய்வது?" என்பதை அறிந்து, “அறம் பல செய்க” என்னும் நல்லுரையினைக்கூற, அதன்படியே இவர் நடந்து கொண்டவர். இதனால் இவர் புலவர் வாய் மொழிப்படி நடப்பவர் என்பது தெரிகிறதல்லவா?
இவரது போர்ச்சிறப்பு மிகுதியாகக் கோவூர் கிழாரால் பாராட்டப்பட்டுப் பாடப்பட்டுள்ளது!. இவரது வெண் கொற்றக்குடை சேரர் பாண்டியர் குடைகள் பின்னிட முன்னின்ற சிறப்புடையது. இங்ஙனம் முன் நின்ற சிறப்பானது பொருளும் இன்பமும் முன்னுள்ள அறத்தின் பின்னே தோன்றும் காட்சி போன்றது எனப் புலவர் உவமையாலும் விளக்கினர். இவர் நாட்டின்கண் இருப்பதினும், புகழையும் போர் வென்றி யையும் விரும்பிப் பாடி வீட்டிலேயே வீற்றிருக்க விரும்புவர். இவரது மனப்பண்புக்கு ஏற்ப, இவரது யானைகளும், பகைவரது மதிலைக் குத்துவதினின்றும் அடங்கமாட்டா. இவரது போர் வீரரும் போர் என்றதும் மகிழ்ச்சியில் பொங்குபவர் ஆவர். இவ்வாறான படைப் பலம் பெற்ற மன்னர் இவர் ஆயின், வடபுலத்து மன்னர் வாட்ட முறுதற்குக் கேட்கவா வேண்டும்? அவர்கள் தம் உள்ளத்தில் துன்பம் மிக்கு உறங்காத கண்ணுடையவராயினர்.
இவர் பாண்டிய நாட்டில் உள்ள ஏழ் அரண்களை வென்றவர். வென்றதற்கு அறிகுறியாகத் தம் புலிப் பொறியினைப் பொறித்தவர். ஏழ் அரண்களைக் கோவூர்கிழார் ஏழ் எயிற் கதவம் என்று குறிப்பிட்டுள்ளார். ஏழ் எயில் கதவமாவது ஏழு மதிலின் கண் உள்ள கதவுகள் என்பதாம். பாண்டிய நாட்டில் ஏழு பொன் கோட்டை என்ற ஓர் ஊர் உளதாகவும், அது சிவகங்கையைச் சார்ந்ததாகவும், அதுவே இவ்வேழ் எயில் இருந்த இடமாக இருக்கலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது.
இவர் வீரமும் ஈரமும் ஒருங்கே அமையப் பெற்றவர். மென்மை மகளிர்க்கு வணங்குபவர்; வன்மையான வீரரைப் பற்றும் பேர்வலி படைத்தவர். பாணர்களையோ, பரிசில் மாக்களையோ இவர் காண நேரில், அவர்கட்கு அவர்கள் வேட்கை தீர அளிப்பவர். அவர்கள் இவர் பால் பெற்ற பொருள் மிகுதியினால் பிறர்பால் சென்று கேட்கவும் விரும்பார் என்றால், இவரது அள்ளி ஈயும் அளவைக் கூறவும் வேண்டுமோ? “பிறன் கடை மறப்ப நல்குவன் செலினே” என்பர் கோவூர் கிழார். தாம் வென்ற நாட்டையும் கூடப் பிறர்க்கு ஈவராம். “பரிசில் மாக்களே ! சோழன் நலங் கிள்ளியைப் பாடுவோம் வருக. அவன் பூவா வஞ்சியையும் (கருவூரையும்) விறலியர் சூடும் பூவிற்கு விலையாக மாட மதுரையையும் தருகிறவன்” என்று இவரது கொடைத்திறத் தைப் புகழ்ந்துள்ளார் கோவூர்கிழார். அவரே இவரைநோக்கி, “வலிமையும் முயற்சியும் உடைய வேந்தே! பிறரிடம் சென்று பாடிப் பெறுதல் வேண்டா ” என்று கூறுவதனால் இவருக்குப் பிறரிடம் செல்லா வகையில் பொருள் ஈவார் இம்மன்னர் என்பது புலப்படுகிறது. சோழன் நலங்கிள்ளி தம் பகையினைப் போக்கிக் கொள்ளுதலோடு பிறர் பசியைப் போக்கவே முன் வருவர் என்பதைக் கோவூர்கிழார் “தன் பகைகடிதல் அன்றியும் சேர்ந்தோர் பசிப்பகை கடிதலும் வல்லன் மாதோ” என்று கூறியதிலிருந்து தமக்கென வாழாமல் பிறர்க்கென வாழும் பெற்றியும் புலனாகிறது. என்றாலும், “படுகளத்தில் ஒப்பாரி ஏது?” என்பதனால் தம் தாயத்தாரோடு பகைத்து அவர்களது ஆவூரையும் உறையூரையும் முற்றுகை செய்தவர். இதற்குச் சான்று இவர் நெடுங்கிள்ளியுடன் பகைமை கொண்டதால் அறிந்து கொள்ளலாம்.
இன்னோரன்ன பீடும் பேரும் உடைய மன்னர் கவிபாடும் காவலராயும் இருப்பராயின், இவரது புகழைப் புகலவும் வேண்டுமோ? இவரால் பாடப்பட்ட செய்யுட்கள் இரண்டு. அவை புறநானூற்றில் காணப்படுவன. இவரது பாட்டினின்று இவரது ஈரநெஞ்சமும் வீர உள்ளமும் வீறிட்டுத் தோன்றுகின்றன. இவர்பால் இவ்விரு பண்புகளும் உண்டு என் பதை முன்னரும் கண்டனம். ஆனால், அவை புறச்சான்றால் புலனாகிய செய்திகள். இங்கு அகச்சான்றாக இவர் பாடிய செய்யுட்களின் மூலமாகவும் இப்பண்புகள் இவர்க்கு இயற்கை யில் அமைந்த குணங்கள் என்பதை உணரலாம். இவரது வீறு கொண்ட மாற்றத்தினைப் பாருங்கள் : “மெல்ல வந்து எனது நல் அடியை அடைந்து, ‘எமக்கு ஈய வேண்டும்,’ என்று தாழ்ந்து கேட்பராயின், எனது அரசைக் கொடுப்பேன். அது மட்டும் அன்று. இனிய எனது உயிரையும் கொடுப்பேன். ஆனால், தம் வலிகாரணமாக எம் வலியினை அறியாது, என் உள்ளத்தை இகழ்ந்து என்னோடு போரிட வருவராயின், அந்தோ ! அவர்கள் பிழைத்துப் போதல் அரிது” என்கிறார். அவர்கள் பிழைத்தல் அரிது என்பதை ஓர் உவமை வாயிலாக இவர் உணர்த்தி இருப்பதுதான் இவரது நுண்ணறிவுத் திறனை நன்கு விளக்கவல்லதாகும். அமைதியாக உறங்கும் புலியை ஒரு கண்ணிலி இடறுவானாயின், அவன் பிழைக்க வழியுண்டாகுமோ ? தப்பி ஓடுதற்குத் தனி வழிகாணக்கண்ணும் இல்லையே! அதுபோலத் தம்மை அண்டிப் போரிடத் துணிந்தவர் தப்புதல் அரிது என்கிறார். “துஞ்சுபுலி இடறிய சிதடன் போல உய்ந்தனன் பெயர்தலோ அரிதே” என்பன அவ்வுவமையைக்காட்டும் அடிகள். மேலும், இவர் பொதுப் பெண்டிரை விரும்பா இயல்பினர் என்பதும் இவரது பாடல் அறிவிக்கும் கருத்தாகும். இவர் இக்கருத்தினை தமது சபத மொழியாகவும் கூறுகிறார்.
மற்றொரு பாடலால் நாம் அறிவனவற்றையும் காண்போமாக. “அரச உரிமையை ஆண்மை அற்ற சிறியோன் பெறின், அது சிறந்தது அன்று. அது அவனுக்குப் பெரும் பாரமாக இருக்கும். மன எழுச்சியும் வலிய முயற்சியும் உடைய சிறியோன் பெற்றால், அது அவனுக்குப் பாரமாக இராமல் இலேசாக இருக்கும்” என்று கூறும் கருத்தே சீரிய கருத்து. இக்கருத்தே இவரது இரண்டாம் பாடலில் தொனிப்பதாகும்.