கவிபாடிய காவலர்/ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன்
11. ஒல்லையூர் தந்த
பூதப் பாண்டியன்
இங்கு இதுபோது கூறப்படும் புலவர் பாண்டிய மரபினர் என்பது இவரது பெயரில் ஈற்றில் உள்ள சொல்லாகிய பாண்டியன் என்பதனால் நன்கு தெரிய வருகிறது. இவர் வெறும் பாண்டியன் என்று அழைக்கப் பெறாமல் ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் என்று அழைக்கப்பட்டமைக்குக் காரணம், புதுக்கோட்டையைச் சார்ந்த ஒல்லையூர் என்னும் ஊரை வென்று தம்மடிப்படுத்தி அரசு புரிந்தமையே ஆகும். ஒல்லையூர் என்பது புதுக்கோட்டை சமஸ்தானத்தில் உள்ள ஒலிய மங்கலம் என்னும் ஊரிலுள்ள சாஸனத்தால் அவ்வூரைச் சார்ந்தது என்பது தெரியவருகிறது. தென்னாட்டில் உள்ள பூதப் பாண்டி என்னும் ஊர் இவர் பெயரால் அமைக்கப்பட்டது என்ற காரணத்தால் பூதப் பாண்டியன் என்று கூறப்பட்டதாகவும் தெரிகிறது. இவர் செய்யுள் செய்வதிலும் வல்லவர். போரிடுவதிலும் வல்லவர். இவர் செய்யுள் செய்வதில் வல்லவர் என்பதை இவரது பாடல்கள் புறநானூற்றில் மூன்றும் அகநானூற்றில் நான்கும் ஆக ஏழு செய்யுட்கள் இருப்பதினின்று உணரப்படுகிறது. இவரது வீரத்திற்குச் சான்று ஒல்லையூர் என்னும் ஊரை அகப்படுத்தித் தம் நாட்
டுடன் கூட்டி அதன் சிறப்பையே தம் சிறப்புக்கு அறிகுறியாகப் பெயரை அமைத்துக் கொண்டதிலிருந்து தெற்றெனத் தெரிய வருகிறது.
இவரது நண்பர்கள் மையல் என்னும் ஊரிலிருந்த மாவனும் எயில் என்னும் ஊரில் இருந்த ஆந்தையும், அந்துவஞ்சாத்தனும் ஆதனழிசியும், இயக்கனும் ஆவர். இயக்கன் மிகுந்த கோபம் உடையவன் போலும் ! அவனைப்பற்றி இப்புலவர் கூறும்போது வெஞ்சின இயக்கன் என்றே கூறியுள்ளார். ஆந்தை என்னும் பெயரில் மற்றொரு புலவர் ஒருவரும் இருந்திருக்கிறார், அவர் கோப் பெருஞ் சோழனது நண்பர். பிசிர் என்னும் ஊரினர். அவர் இப்பாண்டியன் நண்பர் அல்லர். அவரினும் இந்த ஆந்தை வேறு என்பதற்காகவே ஆந்தையார் என ஆர் என்னும் மரியாதைப் பன்மை விகுதி கொடுத்துப் பேசப்படாததோடு, எயில் என்னும் ஊரைச் சார்ந்த ஆந்தை என்று குறிக்கப்பட்டதை நினைவுபடுத்திக் கொள்ளுதல் வேண்டும்.
ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் என்னும் அரசப் புலவர்க்கு வாய்த்த இல்லக்கிழத்தி யாரும் மிகுந்த ஏற்றமுடையவர். இவ்வம்மையார் பெருங் கற்புடையவர் என்று கூறப்படுவதோடல்லாமல் கவிபாடும் சிறப்பும் பெற்றவர். இவ்வம்மையார்க்குக் கணவன் மாட்டு இருந்த அன்பினைத் தம் கணவனார் இயற்கை எய்தியபின் தாம் உயிருடன் வாழ விரும்பாமல். உடன்கட்டை ஏறி உயிர்விட்டதனால் நன்கு அறியலாம். “இப்படி இறக்க வேண்டா. கைம்மை நோன்பு மேற்கொண்டு வாழலாம்” என்று பெரும் புலவர்கள் கூறித் தடை செய்த காலத்தும் அவர்களை எள்ளி நகையாடி உடன்கட்டை ஏறி உயிர்விட்ட பெருந்தகையார் இவ்வம்மையார். இத்தகைய கற்புக்கரசியாரை மனைவியாராகப் பெற்ற ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியனார் புலமை பெருக்கைச் சிறிது கவனிப்போமாக. இவர் பாடினவாகப் புறநானூற்றில் ஒன்றும், அக நானுாற்றில் ஒன்றும் ஆக இரண்டு பாடல்கள் உள்ளன.
இவர் எவர்மீதும் பாடலைப் பாடிலர். தம் உள்ளக்கிடக்கையினையே ஒளியாது செய்யுள் வடிவில் கூறியுள்ளார். இச்செய்யுள் இவர் கூறிய வஞ்சின (சபதம்) வார்த்தைகளைக் கொண்டதாகும். இவர் கூறியுள்ள வஞ்சினத்தைப் பாருங்கள் : அது “நான் என்னோடு எதிர்த்துப் போரிடும் பகை அரசர்களை வென்று அவர்கள் புறமுதுகிட்டு ஓடுவதைக் கண்டிலனேயாயின், என் அருமை மனையாளை விட்டு நீங்குவேனாக. கொடுங்கோல் புரியும் வேந்தன் ஆகுக. என் நண்பர்களுடன் மகிழும் இன்பத்தை இழந்தவனாகுக. பாண்டியர் குலம்விடுத்து மற்றைய குலத்தில் பிறந்தவனாக” என்பதாம்.
இவ்வஞ்சின மொழிகளில் பல உண்மைக் கருத்துக்கள் வெளியாகின்றன. இவர்தம் மனையாளிடம் மிகுந்த அன்பு கொண்டு இன்புற்ற காரணத்தால் அம்மனையாளைப் பிரிய இயலாத வாழ்க்கை நடத்தி வந்தவர் என்பது தெரிகிறதல்லவா ? இத்தகையாளைப் பிரிதல் இயலாமைக்கேனும் பகைவரைப் புறங்காண்டல் இவர்க்கு இன்றியமையாததாயிற்று. கொடுங்கோல் அரசை மிகவும் வெறுத்தவர் என்பதும் தெரிகிறது. நண்பர்களுடன் கூடிக் குலாவும் இயல்பினர் என்பதும் அக்குலாவலை இவர் இழக்க விரும்பிலர் என்பதும் தெரிய வருகின்றன. இவற்றினும் மேலாகத் தம் குடிப்பிறப்பில் மிகுந்த பெருமைகொண்டவர் என்பதும் தெரிந்துகொள்ள நேரிடுகிறது. இவ்வீற்றுக் கருத்தை விளக்கும் செய்யுள் அடியினை இதுபோது சிந்தித்தல் சிறப்பேயாகும்.
“மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த
தென்புலம் காவலின் ஒரீஇப் பிறர்
என்ற அடிகளைக் காண்க.
இவர் பாடியுள்ள அகநானூற்றுச் செய்யுளில் இவரது நண்பனை திதியன் என்பவனை வாயாரப் புகழ்வது நாம் அறிந்து இன்புறுதற்குரியது. அவனைப்பற்றிக் கூறும்போது அவன் பகைவரை வெல்வதில் வீரன் என்றும், பொதியமலையில் வாழ்ந்த பெருஞ் செல்வன் என்றும், அழகிய தேரில் ஊர்ந்து செல்லும் சீரியன் என்றும் கூறுகிறார். அருவியின் ஓசைக்கு அவன் நாட்டு இசை வாத்தியத்தின் ஓசையினை உவமை காட்டுகிறார். பாண்டியர் குல பார்த்திபன் திதியன் என்பானை இங்ஙனம் சிறப்பிக்கின்றனர் எனில், திதியன் ஒரு சிறந்தவன் என்பதில் ஐயம் ஏற்படாதன்றோ !