தும்பைப்பூ-நாவல்/அத்தியாயம் 5
5
பின்னர், சதானந்தம் பிள்ளையும் மாசிலாமணி முதலியாரும் நாற்காலியில் வந்து உட்கார்ந்தனர். அப்போதும் பிள்ளையவர்களின் செவிகளில் மங்கையர்க்கரசியின் மொழிகள் இனிமையாக ஒலித்துக் கொண்டிருந்தன; ஆதலால், அக்குரல் இனிமையிலேயே மனத்தை லயிக்க விட்டு மெளனமாயிருந்தார்.
மாசிலாமணி முதலியார் பிள்ளையவர்களின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். எப்போதும் ஏதேனும் ‘தொன தொண’ வென்று பேசிக் கொண்டிருக்கும் இயற்கையுடைய அவருக்கு இம்மெளன நிலையை நீண்ட நேரம் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. ஆகவே அவர் பிள்ளையவர்களை நோக்கி, மெல்லப் பேச்சுக் கொடுக்கத் தொடங்கி, “என்ன அண்ணா, இருந்தாற் போலிருந்து தக்ஷிணாமூர்த்தி கோலம் கொண்டு விட்டீர்கள். பக்தனொருவன் நான் காத்துச் கிடக்கிறேன், தங்களின் கருணா கடாட்சத்துக்கு திருவாய் மலர்ந்து அருளுங்கள். சொல்லாமல் சொல்லும் தங்கள் மெளன நிலையை அடியேனால் உணர்ந்து கொள்ள முடியவில்லை” என்றார் நகைத்தவாறே.
முதலியாருடைய நையாண்டிப் பேச்சு பிள்ளையவர்களை விழிப்புற வைத்தது. “ஏதோ யோசனை யுண்டாயிற்று. அதிலேயே ஆழ்ந்து விட்டேன், முதலியார்வாள்! வேறொன்றுமில்லை” என மங்கையர்க்கரசியின் பேச்சு நினைவிலிருந்து விடுபட முயன்றவாறே கூறினார்.
“என்ன யோசனையோ?” என்று முதலியார் கேட்கப் போகும் சமயத்தில், பிள்ளையவர்கள், “அத்துடன் இன்றெல்லாம், கோனார் விவகாரத்தைப் பற்றியே எங்கும் யாருடனும் பேச வேண்டியதாய் விட்டது. எங்கோ எவனோ ஏதோ செய்துவிட்டுப் போக, அதற்கெல்லாம் நாம் கண்டவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.
‘ஊரான் உழுது விட்டுப் போக, பண்ணைக்காரன் தண்டவரி செலுத்த வேண்டியிருக்கிறது’ என்று பழமொழி சொல்லுவார்களே! அதுபோல மற்றவன் செய்யுந்தப்புத் தண்டாவுக் கெல்லாம் நாம் சமாதானஞ் சொல்லி மன்னிப்புக் கேட்க வேண்டியதாய் இருக்கிறது. இதையெல்லாம். பார்த்தால்.....” என்று பேசி வருகையிலேயே, முதலியார் இடைமறித்து, “கேட்பவர்கள் கண்டவர்களைக் கேட்பார்களா? கேட்பதற்கு உரிமையுடையவர்களிடத்தில் தான் கேட்பார்கள். ஆகவே இங்கு நடக்கும் காங்கிரஸ் விவகாரகளுக்குச் சமாதானமோ அல்லது பதிலோ சொல்லும் கடமை உங்களுக்கு இருக்கிறது......” என்று கூறினார்.
“அதென்ன, அப்படிச் சொல்லுகிறீர்கன்? முதலியார் வாள்! நானென்ன......”
பிள்ளையவர்களை மேலே பேசவிடாமல், முதலியார் குறுக்கிட்டுப் பேசத் தொடங்கி, நீங்களில்லாமல், நேற்று பட்டம் பதவிகளுக்காக வந்தவனெல்லாமா ― பதில் சொல்வான்? தமிழ் நாட்டில் காங்கிரஸ் என்றால், நீங்கள், சிதம்பரம், சிவம், பாரதி, கல்யாணசுந்தரம், வரதராசன், இராமசாமி, ஸ்ரீநிவாசன், சத்தியமூர்த்தி, இராஜகோபால் ஆகிய பத்து பேர்தானே! காங்கிரஸை தேச மகாசபை என்று கூறும்படியான பெருனயேயேற்படச் செய்தவர்கள் நீங்கள் அல்லவா! சுதந்திர தாகத்தையும் தேச பக்தியையும் தமிழ் மக்களுக்குக் காங்கிரஸ் வாயிலாக உண்டாக்கியவர்கள் நீங்கள் அல்லவா! காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பைப் பெற்றிருக்கும் இன்று வேண்டுமானால், பல்லாயிரம் பேர் காங்கிரஸ்காரர் என்று சொல்லிக் கொண்டு முன் வரலாம். ‘இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம்’ என்றிருந்த அன்னிய அரசாங்க அடக்கு முறைக் கொடுமையினால், நாட்டு மக்கள் அல்லல் பட்டுக் கொண்டிருந்த காலத்தில், சுதந்திரப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள் நீங்கள் அல்லவா! இன்று சட்டசபை யங்கத்தினர்களாய், மந்திரிகளாய் இருப்பவர்கள் எல்லோருமா சுதந்திர வீரர்களாயிருந்தனர்? அவர்களை மக்கள் கேட்பதற்கு?”
பிள்ளையவர்கள் கலகலவென்று நகைத்து, “பேஷ் முதலியார்வாள்! நன்றாகப் பேசுகிறீர்களே! வரப் போகும் பொதுத் தேர்தலில் உங்களைப் பிரசாரஞ் செய்ய வைத்தால் நீங்கள் ஆதரிக்கும் அபேட்சகர் கட்டாயம் வெற்றி பெறு வார்......... ” என்று கூறினார்.
முதலியார் அவர் பேசுவதைக் காதில் வாங்கிக் கொள்ளாமலே, “அக்காலத்தில் உங்கள் போன்ற தலைவர்கள் பேச்சைக் கேட்டுத்தானே தமிழ் மக்கள் காங்கிரஸை ஆதரித்தார்கள்? உங்களைப் போன்ற தலைவர்கள் நடத்திய போராட்ட இயக்கங்களில் பெருவாரியாகக் கலந்து கொண்டார்கள்? போலீஸ் குண்டாந் தடிகளால் அடிபட்டு இரத்தஞ் சிந்தினார்கள்? துப்பாக்கிப் பிரயோகத்துக்கு இலக்காகி உயிர் இழந்தார்கள்? சிறைவாசம் ஏற்றார்கள்? இவ்வளவும் எதற்காக? தங்களுக்குக் காங்கிரஸ் சுதந்திரம் வாங்கிக் கொடுக்கும்? சுகவாழ்வு ஏற்படச் செய்யும் என்றுதானே! இவ்விதம் அவர்கள் எதையெதை எதிர்பார்த்துக் கஷ்ட நஷ்டங்களை அனுபவித்தார்களோ, அவற்றிற்கெல்லாம் நேர்மாறாக இன்று காரியங்கள் நடைபெற்றால், நாட்டு மக்களுக்குக் கோபமுண்டாகத்தானே செய்யும்? அரசியல் சுதந்திரம் கிடைத்தும் வாழ்க்கையில் சுதந்திரம் கிடைக்கவில்லை யென்றால், சுகவாழ்க்கை கிட்டவில்லை யென்றால், இந்த அவல நிலையை எப்படி ஏற்பார்கள்? அடிமைகளாய் இருந்த காலத்தில் அனுபவித்த வாழ்க்கையின்பங்களைக்கூட இன்று அனுபவிக்க முடியாமல், துன்பத்தின்மேல் துன்பமாக, வறுமையும் பஞ்சமும் வாட்ட அவதியுறும் நிலையை எப்படி சகிப்பார்கள்? எங்கும் கள்ள வணிகர்களும், பேராசைப் பேயர்களும் கொள்ளையடிப்பதற்கா, தங்களின் சுகவாழ்க்கையைச் சூறையாடுவதற்கா, இவர்கள் அந்தக் காலத்தில் உங்கள் பேச்சைக் கேட்டு உங்களைப் பின்பற்றி வந்து துன்பங்களையும் கஷ்டங்களையும் வலிய ஏற்றார்கள்? சுயநலக்காரர்களின்-சந்தர்ப்பவாதிகளின் பதவிப் போட்டிக்காக-அவர்களுடைய சுகபோகங்களுக்காக-நாட்டு மக்களின் வாழ்க்கை பணயமாக வைக்கப்பட வேண்டுமா? என்ன! ஆகவே தங்களுடைய இன்றைய துன்பங்களுக்குக் காரண கர்த்தர்களாக இருக்கும் சுயநலப் பிண்டங்களை-கயவர்களை-ஏன் காங்கிரஸில் சேர்த்தீர்கள்? சட்டசபையில் அமர்த்தினீர்கள்? மந்திரிகளாக்கினீர்கள்? என்று, பொதுமக்கள் உங்களைக் கேட்கத் தான் செய்வர்?...”
சதானந்தம் பிள்ளை, “கேட்கட்டும்! கேட்காமல் போகட்டும், இன்று நடக்கும் பகற் கொள்ளைகளுக்கும் லஞ்ச லாவணியங்களுக்கும் என்னைப் போன்ற பழைய காங்கிரஸ்காரர்கள் பரிகாரந் தேடித்தானாக வேண்டும்; பதில் சொல்லத்தான் வேண்டும்...”
மாசிலாமணி முதலியார், “அண்ணா, நான் உங்கள் மீது குற்றஞ்சாட்டுவதாக எண்ணக் கூடாது. கோனார் விஷயமாக நீங்கள் சொன்னதைக் கேட்டதிலிருந்து, என் உள்ளம் கொதிப்படைந்திருக்கிறது. உங்களைப் போன்றவர்கள் விட்டுக்கொடுத்து, கண்டவர்களை யெல்லாம் சட்டசபைக்கு அனுப்பியதனால் எற்பட்ட விளைவுதான் இது சட்டசபை, மந்திரிசபைகளின் கூத்து இப்படியென்றால், நகரசபை, ஜில்லா சபைகளின் நடவடிக்கை இன்னும் மோசமாய் வருகிறது! நம்ம நகரசபையில் இன்று தலைவர் தேர்தல் நடக்கிற தல்லவா! அதைப்பற்றி ஒரு மாதத்துக்கு மேலாக அமளிப்படுகிறது. இத் தலைவர் தேர்தலில் நான்கு பேர் நிற்கிறார்களாமே! ஆனால் பெரியகோடீஸ்வரர் குமாரரான அளகேசன் தான் தலைவராக வருவார் என்று எல்லோரும் உறுதியாகச் சொல்லுகிறார்கள் காங்கிரஸ் பெயரால் அங்கம் வகிப்பவர்களின் யோக்கியதையைத் தெரிந்துதான் கூறுகிறார்களோ! ஏனென்றால் அளகேசன் நகர சபையிலுள்ள முக்கால்வாசிப் பேர்களைத் தனது பணத்தால் விலைப்படுத்தித் தன் பக்கம் வைத்திருக்கிறாராம். இந்நேரம் தேர்தல் நடந்து விட்டிருக்கும். ஆமாம் அண்ணா! இந்த ஸ்தல ஸ்தாபனங்களில் கூடக் காங்கிரஸ் பெயரால் ஏன் அங்கத்தினர்களை அனுப்ப வேண்டும்? குப்பைத்தொட்டி வேலை, ரோடு போடுகிற வேலைகளைக் கவனிப்பதற்கு யாராயினும் போய்த் தொலையட்டுமே!......” என்று சலிப்புடன் சொன்னார்.
சதானந்தம் பிள்ளை ஏதோ சொல்லப் போகும் சமயத்தில் சிவகுமாரன் அவசர அவசரமாக அங்கு வந்து “அப்பா! அப்பா! சமாசாரங் கேட்டீர்களா? அளகேசன் தான் தலைவராக வந்துவிட்டார். காங்கிரஸ் அபேட்சகருக்குப் பத்தே ஒட்டுகள்தான் கிடைத்தன” என்று சொன்னான்.
சதானந்தம் பிள்ளையின் முகத்தில் துயர இருள் சூழ்ந்தது.
மாசிலாமணி முதலியார் துள்ளிக் குதித்து, “நான் அப்போதே சொன்னேனே! பார்த்தீர்களா? அண்ணா! இந்த அயோக்கியப் பயல்கள் துரோகஞ் செய்துவிட்டிருப்பார்கள்...” என்றார்.
சிவகுமாரன், “காங்கிரஸ் மெம்பர்களில் பலபேர் அளகேசனுக்குத்தான் ஒட்டுப் போட்டார்களாம். சில பேர் சபைக்கு வரவில்லையாம். சிலர் நடுநிலை வகித்தனராம்...” என்று தேர்தல் முடிவு பற்றி விளக்கிக் கூறலானான்.
சதானந்தம் பிள்ளை மெல்லப் பேசத் தொடங்கி, “இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. மூன்று நான்கு ஆண்டுகளாகவே, இப்படித்தான் நடந்து வருகிறது. காங்கிரஸ் அபேட்சகர்களை அக்கட்சி யங்கத்தினர்களே, காலை வாரி விடுகின்றனர்... உம்; இன்னும் என்னென்ன நடக்கப் போகிறதோ!” என்று கூறியவர், “ஆமாம், சிவகுமாரா! நீ நகரசபைக்குப் போயிருந்தாயா? என்ன?” என்று கேட்டார்.
"ஆமாம்; அப்பா! கல்லூரியிலிருந்து அப்படியே வேடிக்கை பார்க்கப் போனேன்” என்றான் சிவகுமாரன் உற்சாகமாக.
சதானந்தம் பிள்ளை, “உனக்கு இதெல்லாம் என்ன வேடிக்கை? சிவா! படிப்புண்டு; வீடுண்டு என்று போவதை விட்டு” என்று அன்பாகக் கடிந்து கொண்டார்.
சிவகுமாரன் அதற்கு ஏதோ சமாதானம் சொல்ல முயன்றான்.
இச்சமயத்தில் உள்ளறையிலிருந்து “சிவா, சித்தி கூப்பிடுகிறாள், பார்! புத்தகங்களை வைத்து விட்டு முகம் கால் கழுவிக் கொண்டு, காபி சாப்பிடப் போ” என்று திலகவதி கூப்பிட்டாள்.
“சரி, சரி போ! இனிமேல் இந்தமாதிரி அக்கப்போருக்கு எல்லாம் போகாதே! உன் படிப்பு முடிகிற வரை......” என்று சதானந்தம் பிள்ளை சொல்லிக் கொண்டிருக்கையில் சிவகுமாரன் தலையைக் குனிந்து கொண்டே உள்ளே போகலானான்.
அவன் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மங்கையர்க்கரசி, உணவு அருந்தும் மேஜை முன் சிவகுமாரன் வந்து உட்கார்ந்ததும், சிற்றுண்டியை அவனுக்குப் பரிவாகப் பரிமாறிக் கொண்டே, “வா சிவா! இன்று என்ன இவ்வளவு நேரம்?...இதுவரை ஒன்றும் சாப்பிடாமல் இருந்தால் உடம்பு என்னத்துக்கு ஆகும்?” என்று விஷயம் தெரியாதவள் போல் கேட்டாள்.
சிவகுமாரன் சிற்றுண்டியை வாயில் எடுத்துப் போட்டுக் கொண்டே ஏதோ யோசனையில் இருந்ததால் மங்கைக்குப் பதில் எதுவும் சொல்லவில்லை.
“என்ன? சிவா, எதுவும் சொல்லாமல் இருக்கிறாய்? என் மேல் ஏதாயினும் கோபமா?” எனறு கலைந்துமுன் விழுந்திருந்த அவனுடைய கிராப்பை நீவி விட்டுக் கொண்டே கேட்டாள் மங்கை.
“காபி கொண்டு வா, சித்தி” என்றான் சிவகுமாரன் வேறெதுவும் சொல்லாமல்.
மங்கை காபியைக் கொண்டு வந்து வைத்து விட்டு, “அப்பா ஏதோ கேட்டாரே! அதனால் வருத்தமாயிருக்கிறாயா? சிவா! என்னண்டை சொல்லேன்” என்று அவனைக் கனிவோடு பார்த்தவாறே கேட்டாள்.
“அதெல்லாம் ஒன்றுமில்லை, சித்தி...” என்று சிவகுமாரன் சொல்லு முன்பே, மங்கையர்க்கரசி, “அப்பா ஒன்று சொல்லுகிறார் என்றால், நல்லத்துக்குத் தான் சொல்வார். அவர் கட்டுத் திட்டம் செய்கிறாரே என்று வருத்தப்படுவது கூடாது! நானும் தான் உன்னைக் கேட்கிறேன், படிக்கிற பிள்ளைக்கு இதற்குள் ஊர் விவகாரம் எதற்கு?” என்று விநயமாக வினவினாள்.
இதுவரை அறைக் கதவண்டை நின்று மங்கைதன் பிள்ளைக்குப் பரிவாக உபசாரம் செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்த திலகவதி, “அப்படிக் கேளு, மங்கை! அப்படிக் கேளு! பிள்ளையாண்டான் இதற்குள்ளாகவே அப்பாவைப் போல அரசியல் தலைவராகிவிடப் பார்க்கிறாரு...” என்று சிரித்தவாறே கூறினாள்.
“சும்மா இரு, அம்மா! நீ ஒன்னு...” என்று கூறிக் கொண்டே அவன் எழுந்து போனான்.
போகும் சிவகுமாரனத் தாயன்புடன் பார்த்துக் கொண்டே, “புலிக்குப் பிறந்தது பூனையாய் விடுமா, அக்கா! சிவன் நம்ம அத்தானைவிடப் பெரிய மனுஷனாக ஆகத்தான் போகிறான்! நீ வேண்டுமானால் பாரேன்!... ...ஆனால், அத்தான் சொல்லுவது போல, படிப்பு முடிகிறவரை, பொது விவகாரங்களில் கவனம் செலுத்தாமல் இருப்பது நல்லது. அதைத்தான் சிவனுக்கு நாம் அடிக்கடி ஞாபகப்படுத்திச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்...... ” என்று கூறினாள்.
திலகவதி சிரித்துக் கொண்டே, “சரி, சரி நீயும் சொல்ல ஆரம்பித்துவிட்டாயோ, இவ்லையோ! இனிமேல் சிவன் உருப்பட்டாற் போலத்தான்...... தேச சேவை, மக்கள் தொண்டு என்று சொல்லி அவர் இப்படிக்கிடந்து தொல்லைப்படுவது போதாதென்று, பிள்ளையும் பொது சேவை செய்யப் பிஞ்சிலேயே புறப்பட்டு விட்டது.....” என்று சொன்னாள்.
இதே சமயத்தில், வெளி வராந்தாவில் மாசிலாமணி முதலியார், “இது,நிசந்தானா அண்ணா! நம்ம சிவகுமாரன், சோஷலிஸ்டு கட்சி, கம்யூனிஸ்டு கட்சிக் கூட்டங்களில் கலந்து கொள்ளுகிறான்; திராவிடக்கழகத்தில் சேர்ந்து காங்கிரஸைத் தாக்கிப் பேசுகிறான் என்றெல்லாம் கூடச் சொல்கிறார்களே! நீங்கள் காங்கிரஸ்காரராயிருந்து- அதுவும்; நீண்ட காலக் காங்கிரஸ்காரராயிருந்து உங்கள் பிள்ளை எதிர்க்கட்சிகளில் சேர்ந்திருந்தால்......” என்று சொல்லுவது திலகவதி காதில் விழுந்தது. மங்கையும் சிவகுமாரன் பெயர் அடிபடவே, திலகவதியுடன் சேர்ந்து ஒற்றுக் கேட்கலானாள்.
சதானந்தம் பிள்ளை “சேர்ந்திருந்தால் என்ன? அப்பன் முட்டாள்தனம் பண்ணினால் மகனும் முட்டாள் போக்கிலேயே போக வேண்டுமென்று எங்கே சொல்லியிருக்கிறது? நான் காங்கிரஸ்காரன் என்று பெயர் வைத்துக் கொண்டு வாங்குகிற கெட்ட பெயர் போதாதோ!... நகரசபைத் தேர்தல் முடிவைக் கேட்ட பிறகு இனியும் காங்கிரஸ்காரனாயிருப்பதா என்றே என்னைக் கேட்டுக் கொள்ள வேண்டியவனாகிறேன். நாளை கோனார் பண்ணும் கூத்தினால் மந்திரி சபையின் வண்டவாளம் சந்தி சிரிக்கும்போது, காங்கிரஸ்காரர்களாயிருப்பவர்கள் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாக வேண்டியதைத் தவிர, வேறு வழியில்லே. எந்த மூஞ்சை வைத்துக் கொண்டு பொதுமக்கள் முகங்களில் விழிப்பது......? காங்கிரசுக்கு ஒரு முழுக்கு போட்டுவிடுவது என்றே......”
“அப்படியெல்லாம் அவசரப்பட்டு ஒன்றும் செய்து விடாதீர்கள், அண்ணா!” என்று அவருடைய ஆத்திர உணர்ச்சிக்கு அணை போட்டார் மாசிலாமணி முதலியார். “யாரோ சில அயோக்கியர்கள் தவறு பண்ணுகிறார்கள் என்பதற்காக நல்லவர்களாகிய உங்களைப் போன்றோர் வெளியேறி விடுவதென்றால் அப்புறம் என்ன இருக்கிறது? பொறுத்து இருப்போம். புல்லர்கள் கூட்டம் பூண்டோடு ஒழியப் போகும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது உங்களுக்குத் தெரியாத விஷயமா நான் சொல்லப் போகிறேன்?...” என்று விடைபெற்றுக் கொள்ளலானார்.
ஆழ்ந்த சிந்தனையிலிருந்த சதானந்தம் பிள்ளை துணுக்குற்று எழுந்து, “போய் வருகிறீர்களா? வணக்கம்; போய் வாருங்கள்” என்று கூறி வழியனுப்பினார்.
“ஐயோ, அத்தான் மனம் எப்படி நொந்து போயிருக்கிறது” என்று இரக்கத்தோடு கூறிக்கொண்டே உள்ளே போகலானாள் மங்கை.
திலகவதி கணவன் இருக்கும் இடஞ் சென்றாள்.