உள்ளடக்கத்துக்குச் செல்

பஞ்சும் பசியும்/006-028

விக்கிமூலம் இலிருந்து

6

வடிவேலுமுதலியாரும் அவரையொத்ததறிகாரர்கள் சிலரும் 'தனலக்ஷ்மி ஸ்டோரி'ன் வெளிக் கிராதி கேட்டைக் கடந்து உள்ளே நுழைந்தார்கள் 'தனலக்ஷ்மி ஸ்டோர்ஸ்- கைத்தறி அண்டு நூல் ஜவுளி மொத்த வியாபாரம்' என்று விலாசமிட்ட எனாமல் போர்டு மாட்டப் பெற்ற அந்தக் கடை-மாஜி ராவ்சாகிபும், பரம்பரைப் பெரிய முதலாளியுமானதாதுலிங்க முதலியாரின் கிட்டங்கி அந்தக் கிட்டங்கியில் மூன்று குமாஸ்தாக்களும், ஏழெட்டு எடுபிடி ஆட்களும் வேலை பார்த்து வந்தார்கள்; கிட்டங்கிக்குப் பின்புறம் சிறிது தள்ளி, தாதுலிங்க முதலியாருக்குச் சொந்தமான சாயப் பட்டறை ஒன்றும் இருந்தது. சாயப் பட்டறை வெளித்தோற்றத்துக்கு லகுவில் புலப்படாவிட்டாலும், துர்க்கந்தம் வீசும் அந்தப்பட்டறையின் நெடி நாற்றம் மட்டும், மெயின்ரோடு வரையிலும் வியாபித்து நின்று, தாதுலிங்க முதலியாரின் பெருமையை நிலைநாட்டிக் கொண்டிருந்தது. தனலஷ்மி ஸ்டோர்ஸ் கிட்டங்கியிலிருந்துதான் தறிகாரர்களுக்குநெய்வதற்கு நூல் கொடுத்து வாங்குவதும், உள்ளூர்ச் சில்லரை வியாபாரிகளுக்கும், நூல், ஜவுளி முதலியன கொடுக்கல் வாங்கல் செய்வதும் வாடிக்கை. தனலஷ்மி ஸ்டோர்ஸ் ஒன்றுதான் ஊரும் உலகமும் அறிந்த, தெரிந்த கிட்டங்கி: இது தவிர, தாதுலிங்க முதலியாருக்கு வேறு சில கிட்டங்கிகளும் உண்டு. அந்தக் கிட்டங்கிகள் தாதுலிங்க முதலியாருக்கும் அவரது அந்தரங்கமான அடியாட்கள் சிலருக்கும் தெரியுமேதவிர, சாதாரணத்தறிகாரர்களுக்கோ, வருமானவரி, விற்பனை வரிச் சிப்பந்திகள் முதலியோருக்கோ தெரியாத விஷயங்கள்.  வடிவேலு முதலியாரும் அவரது சகாக்களும் தாதுலிங்க முதலியாரிடம் நெய்வதற்கு நூல் பெற்று வரத்தான் சென்றார்கள்.

உள்ளே நுழைந்ததும், கட்டிடத்துக்கு எதிராக வழிமறித்து நின்ற பியூக் காரைக் கண்டதும் உள்ளே பெரிய முதலாளி இருக்கிறார் என்ற உண்மையை அவர்கள் கண்டு கொண்டார்கள்; அது மட்டுமல்லாமல், கடையில் தடை வாசலை மிதித்ததுமே, அங்கு நிலவிய சாயப்பட்டறை நாற்றத்தையும் மிஞ்சி, அவர்களது சுவாசத்தைத் தொட்டு உலுப்பும் கான்பூர் ஸெண்டின் நறுமண வாசனையால், உள்ளே மைனர் முதலியார்வாளும் இருக்கிறார் என்பதையும் வடிவேலு முதலியார் உணர்ந்து கொண்டார்.

"உள்ளே சகுனி மாமாவுமில்லெ இருக்கார் போலிருக்கு!" என்று தம்கூட வந்தவரிடம் காதைக் கடித்தமாதிரிசொல்லிவிட்டு உள்ளே நுழைந்தார் வடிவேலு முதலியார்.

தறிகாரர்களைக் கண்டதும் அங்கிருந்த குமாஸ்தா ஒருவர் "வாங்கய்யா வாங்க" என்று சம்பிரதாய பூர்வமாக வரவேற்றுவிட்டு, "என்ன, எங்கே வந்தீக?" என்று விசாரித்தார்,

"வேறே எங்கே வருவோம்? நூல் வாங்கத்தான்" என்று ஒரு நெசவாளி பதிலளித்தார்.

உடனே அந்த குமாஸ்தா தொண்டையை ஒரு முறை கனைத்துச் செருமிவிட்டு, "அய்யா, நீங்க நூல் வாங்கிட்டுப் போறது சரி ஆனால், பழைய கூலிக்கே நீங்க நெஞ்சி தாரதுன்னாத்தான் நூல் தரமுடியும். சம்மதம்தானா?" என்று கேட்டார்.

வந்திருந்த நெசவாளிக்கு இந்தக் கேள்வி புதிராகவும் வியப்பாகவும் இருந்தது.  "என்னங்க, குமாஸ்தாப்பிள்ளைவாள். போன ஊர்க் கூட்டத்திலெ எங்களுக்குக் கூலியை உசத்தித் தீர்மானம் பண்ணினது உங்களுக்குத்தெரியாதா? பெரிய முதலாளியும் இருந்துதானே தீர்மானிச்சாக!" என்று குமாஸ்தாவின் 'அப்பாவித்தன'த்தைச் சுட்டிக் காட்ட முனைந்தார் ஒரு அப்பாவி நெசவாளி.

"எல்லாம் தெரியும். அதனாலேதான் பழைய கூலின்னு சொன்னேன்" என்றார் குமாஸ்தா.

"இதென்னய்யா இது? ஊர்க் கூட்டத்திலே ஒண்ணு தீர்மானிக்கிறது, இங்கே வந்தா இப்படிச் சொல்றது. இதென்ன நியாயம்?" என்று ஆத்திரத்தோடு கேட்டார் வடிவேலு.

"வடிவேலு முதலியார்வாள், எல்லாம் முதலாளி உத்தரவு. நாங்க அதை மீறி ஒண்ணும் செய்ய முடியாது. வேணுமானா, நீங்க முதலாளியையே. ஒரு வார்த்தை கேட்டுக்கிடுங்க. அவுஹ உள்ளேதான் இருக்காக" என்று கூறிக்கொண்டே, குமாஸ்தா உள்ளே இருந்த ஒரு அறையைச் கட்டிக்காட்டினார்.

தறிகாரர்கள் அனைவரும் அந்த அறையை நோக்கிச் சென்றார்கள்.

"என்னவே, எங்கே வந்தீங்க?" என்று உள்ளேயிருந்த மைனர் முதலியார் கேட்டார். மைனர் முதலியாருக்கு எதிர்த்தாற்போலுள்ள மேஜை முன்னால், தாதுலிங்க முதலியார் மின்சார விசிறியின் சுகானுபவ லஹரியிலே மூழ்கியவராக அமர்ந்திருந்தார்.

தறிகாரர்கள் வந்த விஷயத்தை விளக்கினார்கள்.

"பழைய கூலிக்கு நெஞ்சி குடுக்கிறதானா, நூல் வாங்கிக்கிட்டுப் போங்க; இல்லேன்னா, கூலி கூட்டித் தர்ர மாராசனைப் பாருங்க" என்று சுருக்கமாகச் சொன்னார் பெரிய முதலாளி.  "இதென்ன முதலாளி, அன்னிக்கி ஊர்க் கூட்டத்திலே_" என்று ஆரம்பித்தார் வடிவேலு.

ஊர்க் கூட்டத்திலே முடிவு பண்ணிட்டா, உடனே அதற்கு. நாங்க கட்டுப்படணும்னு கட்டாயமா? இஷ்டமிருந்தா நூல் தாரோம்; இல்லேன்னா இல்லை" என்றார் மைனர் முதலியார்.

"ஆமா, வே. உங்களுக்குக் கூலி உசத்திக் குடுத்து, இங்கே துணியை வாங்கி அடுக்கிவைக்கிறதைவிட, இருக்கிற நூலை மட்டும் வித்தாலே எங்கள் வியாபாரம் நடந்துட்டுப்போகுது. நூலுக்கின்னாலும் என்னிக்கும் கிராக்கி உண்டு", என்று, வியாபார சூட்சுமத்தை விட்டுச் சொல்லி பயமுறுத்தினார் பெரிய முதலாளி.

"உழைக்கிறதுக்குத்தானே, முதலாளிகூலியை உசத்திக் கேக்கிறோம்? சும்மா, தானமா கேக்கிறோம்?" என்று வாய்விட்டுக் கேட்டார் வடிவேலு.

இதைக் கேட்டதும் தாதுலிங்க முதலியாருக்குச் சுருக்கென்றது.

"அட சரிதாம்வே! இப்பக் குடுக்கிற கூலி உங்களுக்குக் கட்டாமலா போச்சி? உங்களுக்கெல்லாம் கூலியை உசத்தியே குடுக்கப்படாது. குடுக்கிற துட்டையெல்லாம் காப்பிக் கடைக்கும் சினிமாக் கொட்டகைக்கும் அழுது தொலைச்சிட்டு, காணாது காணாதுன்னு எங்கய்யா போறது!" என்று அடித்துப் பேசினார், தாதுலிங்க முதலியார்.

மைனர் முதலியாரும் சும்மா இருக்கவில்லை; பெரிய முதலாளியைத் தொடர்ந்து பின்பாட்டாக ஒரு ஆவர்த்தம் பாடி முடித்தார்;

"...எதுக்கு நின்னுகிட்டு இருக்கிய? நாங்க ஒண்ணும் ஊர்க் கட்டுப்பாட்டுக்கு ஒத்துக்கிட முடியாது: இது அம்மன் கோயில் விவகாரமில்லை. வியாபார விசயம். இதிலே கொடுக்கிறதும், வாங்கறதும் எங்க இஷ்டம். இல்லேன்னா, அந்தத் தர்மப்பிரபு கைலாசம் இருக்காரே, அவரைப் போய்ப் பாருங்க. கர்ணன் போகையிலே அவரைத்தான் கையைக் காட்டிட்டுப் போனானாம். போங்க, போங்க."

வடிவேலு முதலியாரும் மற்ற நெசவாளிகளும் இன்னது செய்வதென்று தெரியாமல் சில வினாடிகளுக்கு ஒருவர் முகத்தை, ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பிறகு அவர்கள் அனைவரும் ஒன்றுமே பேசாமல் நடை இறங்கி வெளியே வந்தார்கள்.

வெளிக் கிராதி கேட்டைத் தாண்டுவதற்குள்ளாகவே வடிவேலு முதலியார் அத்தனை நேரமும் கட்டுப்பட்டுக்கிடந்த தம் வாயைத் திறந்தார்.

ஊரிலே பெரிய முதலாளி ஆச்சேன்னு நான் வாயை மூடிக்கிட்டுக் கிடந்தேன். இல்லேன்னா, என் வாயிலே வந்ததுக்கு நல்லாக் கேட்டிருப்பேன்" என்று தமக்குத் தாமே சொல்லி, சமாதானம் தேட முயன்றார்.

"ஆமாம் தம்பி, ஊரிலே உள்ளவனுக்கின்னா ஒரு வழக்கு; இல்லாதவனுக்கின்னா இன்னொரு வழக்கு, தெரிஞ்சதுதானே?” என்ற அனுபவ சித்தாந்தம் பேசினார், ஒரு வயதான நெசவாளி.

அவர்கள் கேட்டைத் தாண்டி வெளிவந்ததுமே, எல்லோரும் தத்தம் வாயைத் திறந்து தமது ஆத்திரத்தைத் தணித்துக் கொண்டனர்.

"இவங்க தினம் தினம் பாலும் பழமும் அல்வாவும் நெய்யுமாத் தின்னு செழிக்கிறதில்லே குத்தமில்லெ. என்னமோ நம்ம ஒருநாள் ஆசைப்பாட்டுக்கு காப்பிக் கடைக்கோ சினிமாவுக்கோ போறதுனாலேதான் ஓட்டையாப் போச்சாம். காசைக் கரியாக்குதோமாம்!" என்றார் ஒருவர். 

"இவரு மட்டும் என்ன? அன்னிக்கி நான் அம்மன் கோயில்லே வச்சி, பேப்பர்லெ வாசிச்சிக் காட்டலே? நம்ம மந்திரி இருக்கிறாரே, அவருகூட இப்படித்தான் பேசியிருக்காரு. கெவுருமிண்டு. உத்தியோகஸ்தருங்க சம்பளத்தை உசத்திக் கேட்டா, அதிகச் சம்பளம் குடுத்தா, சினிமாவுக்குப் போய்க் கெட்டு போவே, பீடி குடிச்சிச் சீரழிந்து போவே அப்படின்னு இப்படின்னு சொல்லியிருக்காரு, அது மாதிரி தான் இருக்கு இவரு பேச்சும்!" என்று வடிவேலு முதலியார் தமது அங்கலாய்ப்பையும் தெரிவித்துக் கொண்டார்.

"பசிச்சி அழுது ஒருவாய்ப் பருக்கை கேட்டா, அதிகம் சாப்பிட்டா அஜீர்ணம்னு புத்தி புகட்டவர்ர கதையாயிருக்கு அண்ணாச்சி" என்று உவமான பூர்வமாக உண்மையை விளக்கினார் வேறொருவர்.

தறிகாரர்களுக்கிருந்த வயிற்றெரிச்சலில் வாய் ஓய்வதாயில்லை. வெகுநேரம் வரையிலும் பேசாதிருந்த ஒரு தொழிலாளி திடீரென்று ஒரு வாக்கியத்தை, கஷ்டப்படுகிற காலத்தில் பலரும் சொல்லிக் கொள்ளும் சமாதான மொழியைக் கூறினார்.

"ஆனைக்கு ஒரு காலம்னா, பூனைக்கும் ஒரு காலம் வரும்.

இதைக் கேட்டவுடன் வடிவேலு முதலியாருக்கு எரிச்சல்தான் பொத்துக் கொண்டு வந்தது.

"வரும் வரும்னு சொல்லிக்கிட்டிருந்தா, கதை நடக்காது தம்பி மயிலே மயிலேன்னா இறகுபோடுமா? நாம எல்லாரும் நமக்குள்ளே ஒத்துமையில்லாமெ, நவக்கிரகங்கள் மாதிரி மூலைக்கு ஒருத்தரா, வக்கரிச்சிக்கிட்டு இருக்கப்போய்த்தான் இவனும் நம்மகிட்ட மச்சான் முறை கொண்டாடுதாங்க" என்று ஆக்ரோஷத்தோடு பேசினார் அவர்.

"அப்படிச் சொல்லுங்க, அண்ணாச்சி, நாம இல்லாமெ, இவங்க மட்டும் எப்படிச் சம்பாதிச்சாங்க? அன்னிக்கி, எம் மச்சினன் மதுரையிலேயிருந்து வந்திருந்தானே, அவன் சொன்னான். மதுரையிலே நெசவாளிகள்ளாம் சங்கம் வச்சி, ஒண்ணு சேர்ந்து ஒத்துமையா இருக்கதினாலே, எந்த முதலாளியும் தறிகாரர்கிட்டே, அப்படி இப்படி வாய்த்துடுக்காய்ப் பேசவே பயப்படுதானாம். நாமும் அந்தமாதிரிச் சங்கம் கிங்கம் வச்சி ஒண்ணு சேர்ந்தாத்தான் நமக்கும் விமோசனம்" என்று மூச்சுவிடாமல் பேசி முடித்தார் ஒரு நெசவாளி.

"சரி சரி, பேச்சைக் சுருக்குங்க, அந்தக் கோள்மூட்டி சுப்பையா எதிரே வாரான். அவன் காதிலே எதுவும் விழுந்து தொலையப் போவுது" என்று எச்சரிக்கை செய்தார் வடிவேலு.

வடிவேலுவின் எச்சரிக்கையை ஏற்றுக் கொண்ட நெசவாளிகள் அங்கிருந்தவாறே தத்தம் வழியில் பிரிந்து சென்றனர். வடிவேலு முதலியாரும் சிறிது நேரம் அங்கேயே நின்று, 'வீட்டுக்குச்செல்வதா,கைலாசம் அண்ணாச்சியைப் பார்ப்பதா, அல்லது மூப்பனார் கடைக்குப் போவதா' என்று விசாரத்தில் ஈடுபட்டுவிட்டு, ஒரு முடிவுக்கு வந்தவராய்த் தெற்கே திரும்பினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பஞ்சும்_பசியும்/006-028&oldid=1684044" இலிருந்து மீள்விக்கப்பட்டது