பஞ்சும் பசியும்/013-028
13
ஆறுமுகத்துக்குக் காய்ச்சல் வந்து பத்து நாட்களுக்கு மேலாகிவிட்டது.
முந்திய நாள் இரவு முழுவதும் அவன் கண்ணே திறக்கவில்லை; முனகி முனகிப் புரண்டு கொடுத்தவாறே படுத்திருந்தான்; உடம்பில் சூடும் தணியவில்லை. கதகத வென்று கொதித்த வண்ணம் இருந்தது. தங்கம்மாளுக்கு இரவுமுழுவதும் தூக்கமில்லை. ஆறுமுகத்தின் அருகிலேயே உட்கார்ந்து அவனையே கவனித்துக் கொண்டிருந்தாள்.
"சுப்பிரமணியா, உன்னைத்தாண்டா நம்பியிருக் கிறேன். பெத்த வயித்திலே பாலை ஊத்தப்பா. மோசம் பண்ணிராதே உன் சன்னிதிக்கு இவன் பேராலே மணி படிச்சிப் போடுதேன்" என்று அவள் மனத்துக்குள்ளாகவே ஆயிரம் தடவை நேர்ந்து கொண்டாள்; லோகநாயகி அம்மனுக்குச்சந்தனக்காப்புசாத்துவதாக நேர்ந்து, மஞ்சள் துணியில் கால்ரூபாய்க் காசை எடுத்து முடித்துவைத்தாள்.
விடிந்து எட்டுமணி ஆனபிறகும் ஆறுமுகம் கண் விழிக்கவில்லை.
கைலாச முதலியாரும் ஆறுமுகத்தின் நிலைமையைக் கண்டு கவலை கொண்டவராக, இன்னது செய்வதென்று தெரியாமல் டாக்டரின் வரவை எதிர்நோக்கி, கட்டிலின் மீது இடித்துவைத்த புளியாக அமர்ந்திருந்தார். காப்பி குடித்து விட்டு வருவதற்காக ஹோட்டலுக்குச் சென்றிருந்த மணி, "என்னம்மா, தம்பிக்கு எப்படியிருக்கு” என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான்.
"எல்லாம் அப்படிதான் இருக்கு" என்று சலிப்புடன் கூறிவிட்டு, மணி, அடுப்பிலே வென்னி போட்டிருந்தேன். காஞ்சிட்டுத்தான்னு பாரு" என்று வேண்டிக் கொண்டாள் தங்கம். மணி வெந்நீரைப் பார்ப்பதற்காக அடுக்களையுள் சென்றான்.
சிறிது நேரத்தில் டாக்டர் வந்து சேர்ந்தார். "அதோ டாக்டர் வந்துட்டாரு" என்று கணவனிடம் கூறியவாறே - விலகிக் கிடந்த சேலையை இழுத்துத் தோளை - மூடிக்கொண்டு எழுந்து நின்றாள் தங்கம்மாள். உள்ளே சென்றிருந்த மணியும் வெந்நீரை எடுத்துக்கொண்டு வந்து சேர்ந்தான். "வாங்க டாக்டர். ராத்திரிப் பூராவும் கண்ணே திறக்கலை; ஒண்ணும் சாப்பிடவுமில்லை" என்று கூறிக் கொண்டே கட்டிலை விட்டு இறங்கி வந்தார், கைலாச முதலியார்.
எல்லோருடைய முகங்களும் அருள் அற்றுக் கவலை தோய்ந்திருந்தது. டாக்டர் ஆறுமுகத்தைப் பரிசோதித்தார். பரிசோதித்து முடித்துவிட்டு, மணியிடம் திரும்பி, "மிஸ்டர் மணி, இது மிகவும் நெருக்கடியான கட்டம். நீங்கள் ஒன்றும் பயப்பட வேண்டாம், ஒரு ஊசி போடவேண்டும்” என்று ஆங்கிலத்தில் கூறிவிட்டு, கைலாச முதலியாரிடம் திரும்பி, "பையனுக்கு ஊசி போடணும். நான் ஒரு மருந்து எழுதித் தருகிறேன். ஆளையனுப்பி வாங்கிவரச் சொல்லுங்கள். பத்துப் பத்தரைக்குள் நான் திரும்பவும் வந்து ஊசியைப் போட்டுவிட்டுச் செல்கிறேன்" என்று நிதானத்தோடு கூறிவிட்டு ஒருதுண்டுத்தாளில் மருந்தின் பெயரை எழுதிக் கொடுத்தார்.
டாக்டர்வெளிச்சென்றபிறகு, தங்கம்மாள் மணியைப் பார்த்து "ஏம்ப்பா, டாக்டர் என்ன சொன்னாரு" என்று கேட்டாள்.
"ஒன்றும் பயமில்லைன்னுதான் சொன்னார்" என்றான் மணி.
ஏனோ அவன் குரல் கம்மி உடைந்து கரகரத்தது.
கைலாச முதலியார் டாக்டர் எழுதிக்கொடுத்த சீட்டை எடுத்துக் கொண்டு வெளி முற்றத்துக்கு வருவதற்கும், இருளப்பக் கோனார் வந்து சேர்வதற்கும் சரியாக இருந்தது.
"முதலாளி, பிள்ளைக்கு எப்படியிருக்கு?" என்று வந்ததும் வராததுமாய் ஆவலுடன் விசாரித்தார் இருளப்பக் கோனார்.
"இன்னம் கண்ணே முழிக்கலே. இப்பதான் டாக்டர் வந்துட்டுப் போனார். சரி, வாரும் இப்படி" என்று கூறிக் கொண்டே, முன்கட்டிலுள்ள தமது கடையைத் திறந்து, பட்டறையில் அமர்ந்தார். இருளப்பக் கோனார் மரியாதையோடு வந்து அவரருகில் நின்றார்; கைலாச முதலியார் இரும்புப் பெட்டியைத் திறந்து, பணம் வைத்திருக்கும் பெட்டியை இழுத்தார்; அதை இழுத்துப் பார்த்தபோதுதான் அவருக்கு நெஞ்சுபகீரென்றது.
பெட்டியில் ஏழே ஏழு ரூபாயும், கொஞ்சம் சில்லரையும் தான் இருந்தன!
அப்போதுதான் அவருக்கு முந்திய நாள் மாலை ஒரு பாக்கி வகைக்காக, ரூபாய் இருநூறு கொடுத்தது ஞாபகம் வந்தது; அவசரத்தில் அவர் அந்தப் பாக்கியை அடைத்து விட்டாரே ஒழிய, அந்தச் சமயத்தில் கையிருப்பு எவ்வளவு என்று கவனிக்கவில்லை; வேறுஎங்கேனும் ரூபாய் ஒதுங்கிக் கிடக்கிறதா என்று ஒவ்வொரு அறையாகத் துழாவித் துழாவிப்பார்த்தார்.ஆனால் இரும்புப்பெட்டி, பணத்தைப் பாதுகாத்துத்தான் தருமே ஒழிய, குட்டி போட்டுத் தருவதில்லையே!
'டாக்டர் எழுதிக்கொடுத்த மருந்தை வாங்க இது போதும்' என்று தமக்குத் தாமே நம்பிக்கை ஊட்டியவராய், ஏழுரூபாயை எடுத்து இருளப்பக் கோளாரிடம் கொடுத்து, "சீக்கிரம் போய் இந்த மருந்து எங்கிருந்தாலும் உடனே வாங்கி வாரும்" என்று உத்தரவிட்டார்.
இருளப்பக் கோனார் சென்ற பிறகுதான் அவருக்குப் பல சந்தேகங்கள் எழுந்தன. ஒரு வேளை மருந்து கிடைக்கா விட்டால்? மருந்து கிடைத்தாலும் விலை அதிகமாயிருந்தால்?'
கைலாச முதலியார் இப்படித் தமக்குத் தாமே மனம் உளைந்து கலங்கிக் கொண்டிருக்கும் போதுதான் அந்தக் கிங்கரக்குரல் திடீரென்று ஒலித்தது.
"என்ன"வே,கைலாசமுதலியார்! இருக்கே'ரா?"
ஸெண்ட் மணம் கமகமக்க, மைனர் முதலியார் அமுத்தலாக வந்து கைலாச முதலியாருக்கு எதிரே கிடந்த பெஞ்சின் மீது அமர்ந்தார்.
மைனர் முதலியாரைக் கண்டதுமே, கைலாச முதலியாருக்குக் குலை நடுக்கம் எடுத்து விட்டது. "பாவி, எமன் மாதிரி நேரிலேயே வந்துவிட்டானே" என்று அவரது மனம் கறுவிக் கொண்டது. எனினும், அவர் வாய் விட்டு, "வாங்கய்யா" என்றுகூறிக்கொண்டார்.
"என்ன வே, நானும் ஆள்மேலே ஆள் அனுப்பிப் பாத்துட்டேன். ஒரு செப்புக் காசு நகர மாட்டேங்குதே?" என்று எகத்தாளமாகக் கேட்டார் மைனார் முதலியார்.
"என்ன முதலியார்வாள், நிலைமை தெரியாதா, உங்களுக்கு? பணம் வந்தால் நானே கொண்டு வந்து தரமாட்டேனா?என்று கெஞ்சாத குறையாய்ச் சொன்னார் கைலாசமுதலியார்.
"எனக்கா தருவேரு? அந்தத் தாதுலிங்க முதலியாருக்குக் கொண்டு கொடுப்பீரு. அவரு பெரிய பணக்காரரு. அவருக்குப் பாக்கி வைக்கக் கூடாது. என்ன அப்படித் தானே?
"அதெல்லாமில்லை. அவர் கோர்ட் மூலமாய் நடவடிக்கை எடுக்கிறதுன்னு. ஆரம்பிச்சார். அதனாலே தான்..." என்று இழுத்தார் கைலாச முதலியார்.
"நானும் ஏன் அப்படிச் செய்யலைன்னு புத்தி சொல்லிக் கொடுக்கேரா?" என்று எகத்தாளமாகப் பேசி விட்டு, "இந்தா அந்தான்னு மாசக்கணக்கா சொல்லிக்கிட்டு வாரீரே. இந்த ஓட்டை வீட்டை அடமானம் வச்சதோடே, உம் கடன் தீர்ந்து போச்சுன்னு நினைச்சிட்டீரா? இல்லெ. கேக்கிறேன்_” என்று முகத்தில் உக்கிர நெருப்பு கனன்று மிஞ்ச, முறைத்துப் பேசினார் மைனர்.
கைலாச முதலியாருக்குப் பதில் சொல்ல நாக்கே வளையவில்லை.
"கோபிக்காதிங்க, வந்து." பின்னே நீர் செஞ்ச வேலைக்கு, கோபிக்காம, உம்மோடே கொஞ்சவா செய்வாங்க? மரியாதையா எனக்குச் சேர வேண்டியதுக்கு இந்தவாரக் கடேசிக்குள்ளே ஒரு வழி பண்ணியாகணும். இல்லேன்னா, நான் பொல்லாதவனாயிருவேன்?" என்று ஆத்திரம் பொங்கப் பயமுறுத்தி விட்டு, இடத்தை விட்டு எழுந்து நின்றார் மைனர் முதலியார்.
அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் கைலாசமுதலியார் திண்டாடிக்கொண்டிருந்தவேளையில், இன்னொருவரும் கடன் பாக்கிக்காக வந்துவிட்டார். வந்தவரைக் கண்டதும் கைலாச முதலியாரின் உள்ளம் படபடத்துக் குதித்தது; வாயே அடைத்துப்போய்விட்டது; கைகால்கள் குளிர்ந்துவிறைப்பது போலிருந்தன.
"என்ன முதலியார்வாள் முதலாளி அனுப்பிச்சாக. ரெண்டிலே ஒண்ணு கேட்டுட்டு வரச் சொன்னாக" என்று அருங்கச் சொல்லி விளங்க வைத்தார் புதிதாக வந்தவர்.
கைலாச முதலியார் திக்கிமுக்கி அவருக்குப் பதில் சொல்ல முனைந்தார்.
"இந்தாங்க, பிள்ளைவாள். இன்னம் கொஞ்ச நாளைக்குப் பொறுத்துக்கிடச் சொல்லுங்க. அப்புறம் நானே_"
இடத்தைவிட்டு எழுந்து நின்ற டைனர் அருணாசல முதலியார் உதட்டில் ஏளனம் நிறைந்த புன்னகை தோன்ற, கைலாச முதலியார் மீது மீண்டும் சீறி விழுந்தார்.
"என்னவே முழுங்குறேரு? கடன்காரனுக்குப் பதில் சொல்லி அழத்தான் உமக்கு நேரமிருக்கும் போலிருக்கு ஏன்! அதுக்கும் ஒரு சம்பள ஆளைப் போட்டு வையுமேன்."
கைலாச முதலியாருக்கு உடம்பில் ஆயிரம் தேள்கள் ஏக காலத்தில் கொட்டுவது போலிருந்தது. உள்ளத்தினுள்ளே ஏதோ ஒரு உணர்ச்சி களுக்கென்று குன்றிக் குமைந்தது. அவரது கண்கள் சிவுச்சிவென்று கலங்கிச் சிவந்தன; உதடுகள் உணர்ச்சி வசப்பட்டுத் துடித்து நடுங்கின.
"உங்களுக்குப் பாக்கி தரணுமின்னா, அதுக்காக இப்படி மானக்குறைவாகப் பேசாதிங்க" என்று கெஞ்சினார் கைலாச முதலியார். அவரது குரல் உள்ளடங்கி உடைந்து ஒலித்தது.
மைனர் முதலியாருக்கு உடனே அனுதாபம் பிறந்து விடவில்லை; ஆத்திரம்தான் வந்தது. "அடேயப்பா! பெரிய மானஸ்தன் பேச்சைப் பாரு. நீர் கெட்ட கேட்டுக்கு உமக்கு கோயில் தர்மகர்த்தா உத்தியோகம் வேறெ. வெட்கமில்லெ! ஆசையிருக்கு தாசில் பண்ண; அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க" என்று நீட்டி முழக்கினார் மைனர், , -
"முருகா!" என்று இரு செவியையும் பொத்திப் பரிதாபகரமாய் முனகினார் கைலாச முதலியார். "நல்லாயிருப்பீங்க. நானே நொந்து போய்க் கிடக்கிறேன். என்னை மேலும் மேலும் துன்பப் படுத்தாதீங்க" என்று அழாக்குறையாகக் கெஞ்சினார்.
மைனர் முதலியாருக்குக் கைலாச முதலியார் ஏதோ சொல்லக் கூடாததைச் சொல்லிவிட்டது போல் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. தொண்டையைக் கனைத்து இருமி விட்டு, ஆக்ரோஷமாகச் சீறி விழுந்தார்.
"உம்மை ஏனையா துன்பப்படுத்தப்போறேன், பாக்கிப் பணத்தைக் கீழே எண்ணி வச்சிட்டா? கோபம் மட்டும் மூக்குக்கு மேலே முட்டிக்கிட்டு வருதே. வாங்கின பாக்கியைக் கொடுக்கிறதுக்கு வக்கு இல்லேன்னா, ஆத்திலே குளத்திலே விழுந்து சாகப்படாது? ஒருமுழக் கயித்துக்குமா விதியத்துப் போச்சு?"
கைலாச முதலியார் "ஐயோ!" என்று கம்மிக் கரகரத்த குரலில் அலறிக் கொண்டு பெட்டியடி மேசைமீது குப்புற விழுந்தார்; அவர் உடல் குலுங்கியது. கீழே ஏதோ வார்த்தை தடிப்பதாக உணர்ந்த மணி, மாடியிலிருந்து அவசர அவசரமாகக் கீழே இறங்கிவந்தான்; ஆனால் அவன் வருவதற்குள் மைனர் முதலியாரும் அவருக்குப்பின் வந்த ஆசாமியும் வெளியேறிவிட்டார்கள்.
மணி தன் தந்தை இருந்த நிலையைப் பார்த்தான். கூப்பிடுவோமா வேண்டாமா என்று ஒருகணம் தயங்கினான்.
"அப்பா_ அப்பா"
மேஜைமீது தலை சாய்த்துக் கிடந்த கைலாச முதலியார் தம் மகனின் முகத்திலேயே விழிக்கக் கூசினார். அவரது உடலெல்லாம் குன்றிக் குறுகி ஒடுங்குவது போலிருந்தது. மகனை ஏறிட்டுப் பார்க்காமலே, "நீ போடா, ஒண்ணுமில்லே" என்று கட்டி வறண்டு போன அடிக்குரலில் கூறினார்.
மணி நிலைமையை ஊகித்தவனாக ஒன்றும் பேசாமல் வீட்டுக்குள் திரும்பிச் சென்றான்.
மகன் சென்ற பின்னர் கைலாச முதலியார் தமது வேட்டி முனையை எடுத்துக் கண்ணில் ததும்பிக் கரித்து நின்ற கண்ணீரைத் துடைத்துக்கொண்டார்; கலங்கிய கண்களோடு தலை நிமிர்ந்தார்.அவருக்கு எதிரே ஆறுமுகப் பெருமான் கல்யாண சொரூபனாய் அசையாது நின்றார்; அந்தப் படத்தையே வெறித்துப் பார்த்தவாறு வெந்து சாம்பும் உள்ளத்தோடுகல்லாய்ச் சமைந்திருந்தார் கைலாச முதலியார்.
'முதலாளி!"
உணர்வு மீண்ட முதலியார் திரும்பிப் பார்த்தார். எதிரே இருளப்பக்கோனார் வெறுங்கையோடு நின்று கொண்டிருந்தார்.
"என்ன?" என்று திடுக்கிட்டுக் கேட்டார் முதலியார். "மருந்து விலை பதினெட்டு ரூபாயாம்!" என்று சொல்லமாட்டாமல் சொல்லி முடித்தார் கோனார்.
"பதினெட்டு ரூபாயா" பிளந்த வாய் மூடாமல் பிரமை பிடித்தவர்போல் சுவரில் சாய்த்தார் முதலியார்; அவரது கண்களிலிருந்து நீர் பொங்கி வழிவதை அவரால் தடுக்க முடியவில்லை.
இருளப்பக் கோனாருக்கு நிலைமையைப் புரிந்து கொள்ள வெகுநேரம் ஆகவில்லை. அவர் மனம் இருண்டது. ஆனால் மறு கணமே அவர் மனத்தில் ஒளி வீசியது. தமது முதலாளியின் பதிலையே எதிர்பாராதவராக, "முதவாளி, கவலைப்படாதிங்க. எப்படியம் மருந்தை வாங்கிக்கிட்டு வந்திருதேன்" என்று கூறிவிட்டு, ஓட்டமும் நடையுமாக வெளியேறினார் இருளப்பக்கோனார். அவரது மனக்கண் முன்னால் அவரது மனைவி மாரியம்மாளின் கழுத்தில் கிடந்த பிள்ளையார் தாலி நம்பிக்கை ஒளிபரப்பி அவரது கால்களுக்குப் புத்துணர்வும், புது வலிவும் ஊட்டியது!
கைலாச முதலியார் உயிரும் உணர்வுமற்ற கற்சிலை போல் ஆடாது அசையாது அமர்ந்திருந்தார். அவரது கண்ணிலிருந்து கொப்புளித்துப் பெருகும் நீர்த் திரைக்கு அப்பால், எதிரே ஆறுமுகப் பெருமான் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்புக் குதூகலித்துப் பொங்க, தமது பக்தனை வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தார்.
கைலாச முதலியாரின் உள்ளம் காளவாய் நெருப்பிலிட்டது போல் வெந்து கனன்று நீறிக் குமைந்தது. அவரது சித்தவெளிக்குள்ளே கோடானு கோடி எரிமலைகள் தமது அடிவயிற்றைத் திருகிக் கலக்கும் வேதனையைத் தாங்க மாட்டாமல், நெருப்பையும் அக்கினிக் குழம்பையும் புகையையும் புழுதியையும் ஓங்கரித்து வாந்தியெடுக்கப் போவது போல் குமுறிக் கொதித்துக் கொண்டிருந்தன; பிரளய கால ஊழி நாசம்போல், அவரது உள்ளத்தில் எண்ணிறந்த மகாசமுத்திரப் பரப்புக்கள் பொங்கியெழுந்து, ஆயிரம் தலை உயர்த்திய ஆதிசேடனைப்போல் தங்கள் அலைக்கரங்களை வீசிப்புடைத்து ஆர்ப்பரித்தன. அவரது. சின்னஞ்சிறு இருதயமும் கொதிப்புற்ற மூளையின் முகுளத் தவழும் பிரபஞ்ச கோளங்களைப்போல வீங்கிப் புடைத்துப் பருத்து அசுர வேகத்தில் கறங்கிச் சுழல்வது. போலிருந்தன.
கைலாச முதலியார் தமக்கு எதிரே தோன்றிய ஆறுமுகப் பெருமானை, திரிபுரத்தையும் எரித்த ருத்திரனைப்போல் கண்ணில் தீப்பொறி பறக்க வெறித்து நோக்கினார்.
அவரது எண்ணக் குகையிலே திசைமாறிச் சுழலும் எண்ணற்ற உணர்ச்சிச் சுழிப்புக்கள் குமிழியிட்டுக் கொப்புளித்துப் பெருகின.
-"முருகா! என் அப்பனே! எனக்கு ஏனப்பா இந்தச் சோதனை? என்னை ஏன் இப்படி சந்தி சிரிக்க வைக்கிறாய்? உனக்கு நான் என்ன குறையப்பா வைத்தேன்? கோயில் சொத்தைத் திருடித் தின்றவர்களெல்லாம் நல்ல முறையில் வாழும்போது, தெய்வத் திருப்பணியில் ஒரு குறையும் வைக்காத எனக்கா இந்த நிலைமை? எனக்கா இந்த அவமானம்? பதில் சொல்_
-"சொல்ல மாட்டாயா? சிரித்துக் கொண்டா நிற்கிறாய்? நான் படும் அல்லலைக்கண்டு உனக்குச் சிரிப்பா வருகிறது. என்மீது உன் சித்தம் இறங்கவில்லை? கள்ள மார்க்கெட் காரனுக்குத் தானா உன் கருணாகடாட்சம்? அடே, கல் நெஞ்சுக்காரா! என் வீடு வாசல் நிலம் புலம் எல்லாவற்றையும் சூறையாடி வாரியிறைக்க வைத்ததும் காணாதென்று என் குழந்தையையுமா பலிகேட்டுச் சிரிக்கிறாய்? பெற்றெடுத்த பிள்ளைக்கு ஒருவேளை மருந்து வாங்கிக் கொடுக்கக்கூட விதியற்றுச் செய்து விட்டாயே. நீ தெய்வம்தானா? "நீயா தெய்வம்? இல்லை, நீ ஈரநெஞ்சமற்ற வெறுஞ்சித்திரம் தானா? பணக்காரர்கள் எங்களை ஏமாற்றிக் கொள்ளையடிப்பதற்காக, பிடித்து வைத்த பொம்மை தானா? நீ உண்மையிலேயே தெய்வமானால் நல்லவனை ஏன் துன்புறுத்துகிறாய்? ஏமாற்றுகிறவனை ஏன் வாய வைக்கிறாய்? சீ/ நீ ஏழைகளுக்குத் தெய்வமல்ல. பணக்கார்னுக்குத் தெய்வம்; பணக்காரனுக்குப் பங்காளி!
"இனி உன்னை நம்பி என்ன பலன்? நீ என்னை இனியா கௌரவம் கொடுத்து வாழவைக்கப் போகிறாய்? - கடன்காரர்கள் முன்னால் நானும் என் மனைவி மக்களும் கதிகலங்கி நிற்பதைத் தடுத்து ஆட்கொள்ளப் போகிறாயா? இல்லை, இல்லை.."
கைலாசமுதலியார் சீறிச் சிவந்த கண்களோடு அந்தக் சித்திரத்தைச் சுட்டெரித்து விடுவதுபோல் பார்த்தார். அந்தச் சித்திரத்துக்குப் பின்னால், அந்த இளம் தெரியாக ஏகாம்பர முதலியாரின் குரக்கு வலித்த பிணக் கரங்கள் கைலாச முதலியாரை வாவாவென்று அழைப்பது போலிருந்தன; அதே கணத்தில் மைனர் முதலியாரின் அந்தக் கடைசி வார்த்தைகள், விஷம் தோய்ந்த சொல்லப்புகள் அவரது உள்ளத்தில் புகுந்து தைத்தன; அந்த அவமான கோஷம் அண்ட சராசரங்களையும் உலுக்கிக் குலுக்கும் அதிர்வேட்டைப்போல் பயங்கரமாக பன்மடங்காக விம்மி விம்மி ஒலித்து வீங்குவது போல் அவரது உள்ளத்தில் உணர்வு தட்டியது.
"ஒரு முழக் கயித்துக்குமா விதியத்துப் போச்சு? ஆத்திலே குளத்திலே விழுந்து சாகப்பிடாது? ஒரு முழக் 'கயித்துக்குமா விதியத்துப் போச்சு? ஒரு முழக் கயித்துக்குமா_"
கைலாச முதலியார் தமது காதில் யாரோ கொதிக்கின்ற ஈயத்தைக் காய்ச்சி ஊற்றி விட்டது போல் திடீரென்று இரு காதுகளையும் இறுகப் பொத்திக் கொண்டார். ஆனால் அவரது மனக் கதவை இழுத்து பாடுவதற்கோ அவருக்கு மார்க்கமே தெரியவில்லை...
திக்பிரமை பிடித்தது போல் வீற்றிருந்த கைலாச முதலியார் தங்கத்தின் குரல் கேட்டுத் திடுக்கிட்டு விழித்தெழுந்தார்.
"உங்களைத்தானே, எந்திரிச்சதிலேயிருந்து பல்லு கூடத் தேய்க்காம இப்படிக் கவலைப்பட்டுக்கிட்டிருந்தா? வாங்க, சாப்பிட" என்று அருமையுடன் அழைத்தாள் தங்கம்.
"இப்போ சாப்பாடு ஒண்ணுதான் பாக்கி" என்று சலித்துக் கொண்டார் முதலியார்.
"அதுக்காக? எல்லாம் திருச்செந்தூருக்கு நேத்திருக்கேன். நம்ம ஆறுமுகத்துக்கு ஒரு குறையும் வராது. வாங்க."
கைலாச முதலியார் இடத்தைவிட்டு எழுந்திருந்து தங்கத்தைப் பின் தொடர்ந்தார். வீட்டுக்குள் வந்ததும் திரும்பவும் ஏதோ மனம் மாறியவராகத் திடீரென்று நின்றார், தங்கம் அவரை அர்த்த பாவத்தோடு திரும்பிப் பார்த்தாள்.
"எனக்குச் சாப்பாடு வேண்டாம். பசியே இல்லெ. மச்சியிலே போய் இருக்கேன். டாக்டர் வந்தா கூப்பிடு" என்று சாவதானமாகக் கூறிவிட்டு மாடிப்படிகளில் ஏறி மேலே சென்றார் கைலாச முதலியார்.
கணவன் மேலே ஏறிச்சென்று மறைவதைக் கவனித்துக் கொண்டு நின்ற தங்கம் ஆழ்ந்த பெருமூச்சு விட்டுவிட்டு, ஆறுமுகத்தினருகே சென்றாள்; மணி ஆறுமுகத்துக்குப் பக்கத்தில் அமர்ந்து, "தம்பி, தம்பி, ஆறுமுகம்" என்று கூப்பிட்டு, அவனுக்குப் பிரக்ஞை மீளுகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தான்.
சிறிது நேரத்தில் ஆறுமுகம் லேசாக அசைந்து கொடுத்தான்; கண்ணைத் திறந்து பரக்கப் பரக்க விழித்தான்; அவனது முகத்தில் புதியதொரு களை தோன்றுவது போலிருந்தது.
"இந்த பாருடா ஆறுமுகம், அண்ணன் கூப்பிடுதான் பாரு" என்று பாசமெல்லாம் தோய்ந்து கலந்த வார்த்தைகளில் அருமையோடு பேசினாள் தங்கம்.
ஆறுமுகத்தின் முகத்தில் மெல்லிய புன்னகை வதங்கிச் சாம்பியது; அண்ணனையும் தாயையும் வெறித்து நோக்கினான். ஆனால் மறுகணமே அவன் கண்கள் ஏறச் சொருகின; வெள்ளை விழி பிதுங்கி பயங்கரமாகச் சுழன்றது; மூச்சு கொரகொரத்துத் திணறத் தொடங்கியது.
தங்கம் பதறினாள்.
"என்னடா இது? ஏண்டா இப்படி மயங்குதே? வயித்தை என்னமோ பண்ணுதேடா_ ஆறுமுகம். ஆறுமுகம்" என்று கலங்கிக்குழம்பிய குரலில் பரிதவித்தாள் தங்க ம்.
இந்தச் சமயத்தில் டாக்டர் வந்து சேர்ந்தார்; டாக்டரைக் கண்டதும் தங்கம்மாளின் கலங்கிய மனத்தில் சிறு தெளிவு, சிறு நம்பிக்கை பிறந்தது.
"டாக்டரையா, என் பிள்ளையைப் பார்த்து ஒரு நல்ல வார்த்தை சொல்லுங்கையா" என்று குழறினாள் தங்கம். பிறகு மணியிடம் திரும்பி, "மணி, அப்பாவைக் கூப்பிடு" என்று வேண்டிக் கொண்டாள். மணி எழுந்து அவசர அவசரமாக மாடிப்படி ஏறினான்.
. டாக்டர் மௌனமாகச் சென்று ஆறுமுகத்தின் கையைப் பிடித்துப்பார்த்தார்; மூக்கின் முன்னால் விரலை வைத்துப் பார்த்தார். ஆறுமுகத்தின் கை 'கொளக்'கென்று விழுந்தது.
"டாக்டர், டாக்டர்"என்று கத்தினாள் தங்கம். டாக்டர் குனிந்த தலை நிமிராமல் நின்றார்.
தங்கத்துக்கு விஷயம் புரிந்து விட்டது. "போயிட்டியாடா மகனே!" என்று அவள் அலறினாள்; அவளது கதறல் அந்த வீட்டின் முகட்டையே பிய்த்துப் பேர்த்தெறிவது போல் எதிரொலித்து விம்மியது...
மணியின் வரவை எதிர்நோக்கி வெளி வராந்தாவில் வந்து நின்று கொண்டார் டாக்டர்.
இருளப்பக் கோனார் மேல் மூச்சு வாங்க ஓடோடியும் வந்தார். ஆனால் அவர் வீட்டுவாசலை நெருங்குவதற்குள்ளாகவே, உள்ளிருந்து பொங்கியெழுந்த தங்கத்தின் அழுகுரல் அவருக்கு விஷயத்தைத் தெரிவித்து விட்டது. அவரது கால்கள் குழலாடிச் சோர்ந்தன; அவர் அப்படியே வாசற் புறத்திலேயே திடுக்கிட்டு நின்று விட்டார். அவரது கையில் இருந்த மருந்துப் பெட்டி பிடி தவறிக் கீழே விழுந்து சப்தித்தது. உடைந்து கசியும் ஊசி மருந்து அந்த அட்டைப் பெட்டியை நனைந்து வழிந்தோடியது!....
திடீரென்று தங்கம்மாளின் பிரலாப ஓலத்தையும் மிஞ்சிக் கொண்டு, "அப்பா" என்ற கோடையிடி அலறல். மாடிப்புறத்திலிருந்து அதிர்ந்து ஒலித்தது; தொடர்ந்து இடி விழுவது போல் 'திடு' மென்ற பேரோசையும் கேட்டது.
வெளியே நின்று கொண்டிருந்த டாக்டரும் இருளப்பக் கோனாரும் விழுந்தடித்துக் கொண்டு மாடிக்கு ஓடினார்கள்.
மாடியில், பூஜை அறையை ஒட்டியிருந்த வெளி வராந்தாவில்,மணி அலங்கோலமாக விழுந்து கால் பரப்பிக்கிடந்தான்; அவனது மண்டையிலிருந்து குங்குமச் சேறு போன்ற. ரத்தம் கொழுகொழுத்துப் பொங்கி வழிந்து கொண்டிருந்தது.
டாக்டர் சிறிதுகூடத் தாமதிக்கவில்லை. இருளப்பக் கோனார் போட்டிருந்த மேல் துண்டை இழுத்துப் பிடுங்கி, மணியின் தலையில் மடித்து வைத்துக் கட்டினார். இருளப்பக் கோனார் 'முதலாளி முதலாளி' என்று கூப்பிட்டுக் கொண்டே பூஜையறைக் கதவை இடி இடியென்று இடித்தார். பதில் இல்லை. கதவு உட்புறம் தாளிடப்பட்டு இருந்தது.
இதற்குள் இருளப்பக் கோனாரை டாக்டர் அவசர அவசரமாகக் கூப்பிட்டார். இருளப்பக் கோனார் யந்திரம் மாதிரி டாக்டரிடம் திரும்பி ஓடினார். அவரது வயோதிக உடலில் புதிய தெம்பும் பலமும் எங்கிருந்தோ வந்து குடிகொண்டுவிட்டது போலிருந்தது. எனினும் உணர்ச்சிக் கொந்தளிப்பால் அவர் உடல் படபடத்துப் பதறியது.
"பெரியவரே, மணிக்குப் பலத்த காயம். 'உடனே ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகணும். வெளியே என் கார் நிக்குது சீக்கிரம் இவரைத் தூக்குங்கள்" என்று அவசர அவசரமாகப் பேசி முடித்தார்.
இருளப்பக் கோனார் பொங்கிவரும் அழுகையை உதட்டைக் கடித்து உள்ளடக்கிக் கொண்டு, மணியைப் பிடித்துக் தூக்கினார்; டாக்டரும் அவருக்கு ஒத்தாசையாக ஒரு புறத்தைப் பிடித்துக் கொண்டார். இருவரும் சிறிதும் காலம் தாழ்த்தாமல் மணியைத் தூக்கிக்கொண்டு மாடியை விட்டுக் கீழிறங்கி வந்தார்கள்.
அந்த அலங்கோலக் காட்சியைக் கண்டு தங்கம்மாள் "ஐயோ!" என்று அலறினாள். "டாக்டரையா, எம் புள்ளைக்கு என்னய்யா நேர்ந்துட்டுது?" என்று புலம்பினாள்.
"ஒண்ணுமில்லேம்மா" என்று சொல்லியவாறே டாக்டர் நடை இறங்கினார். இருளப்பக் கோனார் மாலை மாலையாகக் கண்ணீர் வடித்தவாறே, மணியைக் காரில் கொண்டு போய்ச் சேர்த்தார்.
"பெரியவரே, நீர் ஆகவேண்டியதைக் கவனியும்; நான் வருகிறேன்" என்று கூறியவாறே வீட்டில் தாவி உட்கார்ந்தார் டாக்டர். மறுகணமே கார் விருட்டென்று புறப்பட்டுச் சென்றது.
“கோனாரே, என்ன நடந்தது. என்ன சொல்லுமேன்!” என்று அழுகையுடன் அழுகையாய்ப் பதறிப் போய்க் கேட்டாள் தங்கம்மாள்.
இருளப்பக் கோனார் பதிலே கூறாமல் மடமட வென்று மாடிப்படி வழியாக மேலேறிச் சென்றார்; அவசர அவசரமாகப் பூஜையறைக் கதவருகே சென்று கதவைப் பலங்கொண்ட மட்டும் தட்டினார். “முதலாளி, முதலாளி” என்று கத்தினார். பிறகு இன்னது செய்வதென்று தெரியாமல் மொட்டை மாடிக்கு ஓடி, பூஜையறை வெளிச்சுவருக்கு மேலாக இருந்த உயரமான ஜன்னலின் மீது தொத்திநின்று, பூஜையறைக்குள்ளே பார்வையைக் செலுத்தினார்.
பூஜையறைக்குள்ளே கிழக்கே பார்த்திருக்கும் பூஜை மாடத்துக்கு எதிரே முகட்டின் உத்திரக்கட்டையிலிருந்து ஒரு முழக்கயிற்றில் கைலாச முதலியாரின் உயிரற்ற சடலம் ஊசலாடிக் கொண்டிருந்தது; அந்தக் காட்சிக்குப் பின்னணி தீட்டியதுபோல், உதட்டில் ததும்பிய புன்னகை மறையாமல், கண்களிலே துள்ளும் களிப்புக்குறையாமல், வள்ளி தெய்வானைமீது போட்ட கையை எடுக்காமல் அபயஸ்தானம் காட்டும் கையைச் சுருட்டி மடக்காமல், நிர்க்குண நிச்சிந்தையனாய் நிற்கும் பன்னிருகைவேலனின் திருவுருவச் சித்திரம் பூஜை மாடத்தில் தொங்கிக் கொண்டிருந்தது!