உள்ளடக்கத்துக்குச் செல்

பஞ்சும் பசியும்/019-028

விக்கிமூலம் இலிருந்து

19

"ஏன் ஓடி வந்தேன்!"

பொழுது பலபலவென்று விடிந்து கொண்டிருந்தது கீழ்வான மண்டலத்தில் உதயஜோதியின் ஒளிமூட்டம் பனிபோல் படர்ந்து வெளிறத் தொடங்கியது கன்னங்கரிய வான விதானத்தில் துளித் துளிப் பொட்டுகளாகத் தெறித்துச் சிதறிக் கிடந்த தாரா கணங்கள் ஒளியிழந்து மறையத் தொடங்கின. இருளைக் கண்டு அஞ்சி நடுங்கி எங்கோ ஒளிந்து முடங்கிக் கிடந்த ஊமைக்காற்று உயிர்ப்புப் பெற்றுச் சிலுசிலுத்து வீசியது. பனிக்காற்றில் ஸ்பரிசத்தால் தன்னுணர்வு பெற்ற மரத்து இலைகள் தாக்கம் கலைந்து தலை நிமிரத் தொடங்கின.

உலகம் ஒளியின் வரவை உணர்ந்து விழிப்புறத் தொடங்கியது; ஆனால், மணியின். மனத்திலோ இருட் பாரம்தான் திட்டுத் திட்டாகப் படிந்து கவிந்து கொண்டிருந்தது.

அம்பாசமுத்திரத்திலிருந்து தருவைப் பாதையாகப் பாளையங்கோட்டைக்குச் செல்லும் ஸெர்விஸ் பஸ்ஸில் மணி வந்து கொண்டிருந்தான். சூரிய வட்டம் முகம் காட்டுவதற்குள் சுப்பிரமணியபுரத்தைக் கடந்து மேலப்பாளையம் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் டிரைவர் அந்த அத்துவான இருட்பாதையில் காரை அதிவேகமாக ஓட்டி வந்தான், மணி அந்தக் காரில் இருந்தவாறே வெளியே பரவிக் கிடந்த குமரியிருட்டையே வெறித்து நோக்கிக் கொண்டிருந்தான்.

அவன் மனத்தில் எண்ணிறந்த சிந்தனைகள் குழம்பிக் குழம்பி உருத்திரிந்து உழன்று கொண்டிருந்தன.

"ஏன் ஓடி வந்தேன்? என்னைப் பயமுறுத்திய பொறுப்பின் பாரங்களையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு ஓடிவந்து விட்டேன். ஆனால்?"

அந்த 'ஆனால்' மட்டும் அவன் சிந்தனையை அடிக்கடி தடுத்து நிறுத்தியது; தடம் புரட்டியது; தாக்கியது. எனினும் அவனால் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை.

"எங்கள் குடும்பமே சிந்திச் சிதறிவிட்டது. நானோ? ஆசையோடு காதலித்த அருமைக் கமலா, ஆறுதல் கூறித் தேற்றிய நண்பன், பெற்றெடுத்து ஆளாக்கிய தாய் எல்லோரையும் விட்டுவிட்டு ஓடி வந்துவிட்டேன். ஒடுகிறேன். ஆனால் எந்தப் பொறுப்புக்களை, எந்த மனிதர்களை மறந்து விட்டு ஓடிவர நினைத்தேனோ, அந்தப் பொறுப்புக்களை, அந்த மனிதர்களை, என்னால் மறக்க முடியவில்லையே! ஏன்? ஏன்...?"

பளீரென ஒளிவீசிப் பாய்ந்து வந்த காரை செவல் அருகில் ஒரு கை வழிமறித்தது; கார் நின்றதும் கைநீட்டிய பிரயாணி ஏறி அமர்ந்தான்.

-அண்ணே பாளை ஒரு டிக்கட். நம்பர் எம்பத்தொன்பது!"

டிரைவர், 'இன்வாய்ஸை'ப் பதிந்து கொள்ள முனைந்தார். அதற்குள் தூரத்தில் காருக்குப் பின்னால் ஒரு பிளஷர் கார் தன் கொள்ளிக் கண்களை அகலத் திறந்து வைத்தவாறு அசுர வேகத்தில் ஓடி வந்தது.

மணிக்கு நெஞ்சு படபடத்தது. அவன் மனத்தில் திடிரென்று ஒரு பீதி உருவாயிற்று. 'யாரேனும் என்னைத் துரத்திப் படிக்கத்தான் வருகிறார்களோ? ஒரு வேளை சங்கராக இருந்தால் அவனுக்குத் தான் அமர்ந்திருக்கும் கார் சீக்கிரமே ஓடத் தொடங்காதா என்றிருந்தது. பிளஷர் நெருங்க நெருங்க அவன் இதயம் நிலை கொள்ளாது துடித்து அலறியது. நல்ல வேளையாக, அந்தப் பிளஷர் இருளோடு இருளாய், புழுதியை வாரியிறைத்துவிட்டு முன்னேறிச் சென்ற பிறகுதான், மணியின் இதயம் படபடப்பு நீங்கிச் சமனப்படத் தொடங்கியது.

எனினும் மறு கணமே அவன் சிந்தனை திசைமாறிக் கறங்கியது. கார் ஓடத் தொடங்கிவிட்ட போதிலும் அவன் மனத்தில் பீதியின், உறுத்தல் மறையவில்லை. தன்னை யாராரோ, ஏதேதோ உருவமுள்ள மனிதர்களும் உருவிலிகளான பொறுப்புக்களும் பயவுணர்ச்சிகளும் - இடைவிடாது கண் வைத்துத் துரத்திப் பிடிக்க முனைவதுபோல் ஒரு பிரமை அவன் மனத்தில் ஏறியமர்ந்து, பேய்க்கனவு போல் அழுத்திக் கொண்டிருந்தது.

"நான் தான் ஓடி வந்து விட்டேனே, என்னை ஏன் இவர்கள் துரத்துகிறார்கள்! என் கூடவே ஏன் ஓடி வருகிறார்கள்? ஏன் அந்தப்பயங்கரப் பொறுப்புணர்ச்சிகள் என்னைத் துரத்தியடிக்கின்றன? ஏன்? ஏன்...?"

அவன் தன் சிந்தனையில் தோன்றும் பய விகாராங்களுக்கு 2.ருப்பிடித்துத் தெளிவுபட முயன்றான்.

"நான் பிறந்த ஊரை, வீட்டை, உற்றவரையெல்லாம் விட்டு ஓடி வருகிறேன். எனினும் என் நெஞ்சைவிட்டு இவையனைத்து ஓடி மறையவில்லையே! அதோ என் தாய் - அதோ கமலா - அதோ சங்கர் - அதோ அம்பாசமுத்திரம் - ஆற்றுப்பாலம் சுதித்தோடும் ஆறு - ஆக்குக் கயிற்றில் அப்பா! - ஏன் இவையெல்லாம் என் மனத்தைவிட்டு மறையவில்லை? அழியவில்லை? அவர்கள் என் நெஞ்சில் விதைத்த எண்ணங்களையெல்லாம் நான் ஏன் இன்னும் மறக்க முடியவில்லை? நான் ஏன் சென்றதையெல்லாம் பழகியவர்களையெல்லாம் மறந்து தலை முழுகிவிட்டு, புது மனிதனாக இன்று பிறந்த பிள்ளைபோல் மாற முடியவில்லை ...? ஏன்...?"

இந்தக் கேள்விக்கெல்லாம் அவனுக்குப் பதில் கிட்ட வில்லை , எனினும் அவன் சிந்தித்தான்; சிந்தித்தான்...

"ஏன் மறக்க முடியவில்லை.?

"அவர்களை நான் மறந்துவிடுவேன். ஆனால் அதற்கு முன் நான் என்னையல்லவா மறக்கவேண்டும் போலிருக்கிறது? என் மனத்தை, என் ஆத்மாவை மறந்துவிட வேண்டும். என் மனம்தானே அந்த நினைவுகளையெல்லாம் இறக்கி வைக்க வழி தெரியாமல் என்னோடு இழுத்துக் கொண்டுவருகிறது!என் ஆத்மாவை மறந்தாலொழிய வேறு கதியே இல்லை... "அதை எப்படி மறப்பது? எதை மறக்கவேண்டும் என்று நினைக்கிறேனோ அதுதானே மேலும் மேலும் விரிந்து வளர்ந்து பயமுறுத்துகிறது...!

"நான் யார்? என் ஆத்மா யார்? நான் என்று தனிப்பட்ட தன்மை ஒன்று உண்டா? இருத்தால் அதை மட்டும் சுமந்து திரிய முடியாதா? அல்லது அதை மட்டும் என்னால் கழற்றி எறிய முடியாதா? ஆனால் 'நான்' என்று நான் கருதுவது, என் ஆத்மா என்று உரிமை கொண்டாடிக் கொள்வது முழுவதிலும், என் சென்றகால வாழ்வின் நினைவுச் சித்திரங்கள் தானே தெரிகின்றன. அப்படியானால் அந்த வாழ்வும் நினைவும் உருவாக்கிய உருவமற்ற மனப்பிராந்திதான் என் ஆத்மாவா? சங்கர் சொன்னானே, அந்த பாதிரி நான் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் சூழ்நிலையால் பாதிக்கப்பட்டு உருவான சாசனச் செப்பேடுதானா என் மனம்? எனக்கென்று தனி மனம் கிடையாதா? தனி ஆத்மா கிடையாதா? என் விருப்பப்படி என் மனச் சித்திரங்களைத் தீட்டவோ அழிக்கவோ முடியாதா? என் மனம் எனக்குக் கட்டுப்பட்டதில்லையா? அப்படியானால் என்னை ஆட்டிப் படைத்து அலைக்கழிக்கும் பூத பயங்கரம் தானா என் ஆத்மா...?"

ஆயிரக்கணக்கான வருஷங்கள் ஆராய்ச்சி செய்தும், வேதாந்திகள் கையில் சிக்காது என்றென்றும் விடியாத கேள்வியாகக் கொக்கியிட்டுக் குறுக்கே நிற்கும் அந்த ஆன்ம விசாரம் மணிக்கு மட்டும் அவ்வளவுலகுவில் புரிந்து விடுமோ கஞ்சாபோதையைப் போல் மனக்கிறக்கம்தந்த அந்த ஆன்ம விசாரணைக்குள் தீக்கோழிபோல் தலையைப் புதைத்துக் கொண்டான் மணி எனினும் இத்தனை கேள்விகளுக்கிடையிலும் அவன் 'நான் ஏன் சிந்திக்கிறேன்? ஏன் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை?' என்ற கேள்வியை மட்டும் எண்ணவும் இல்லை; எழுப்பவும் இல்லை.

குணதிசைக்கோடியில் பாலசூரியனின் சிவந்த முகம் சூடேறி, நீலம் பாரித்த வெள்ளிய நெருப்புக் கோளமாக

உருமாறும் வேளையில், அந்த ஸெர்விஸ் பஸ் பாளையங்கோட்டை லெவல் கிராஸிங்கைத் தாண்டி, ஊருக்குள் பிரவேசித்தது.

ஸ்டாண்டுக்குள் வந்து பஸ் நின்ற போதுதான் மணியின் ஆன்ம விசாரம் அறுபட்டது; ஊர் வந்துவிட்டதை மணி உணர்ந்தான். பஸ்ஸை விட்டு பிரயாணிகள் ஒவ்வொருவராக இறங்கத் தொடங்கினார்கள். எல்லோரும் இறங்கியவுடன் தான் மணிக்குத் தானும் இறங்க வேண்டும் என்ற உணர்வே வந்தது. அவனுக்குத் தன்னைச் சுற்றிக் குழுமியிருந்த ஒரு சிறு பிரபஞ்சமே திடீரென்று சிந்திச் சிதறிப் போய் விட்டது போல் இருந்தது; அந்தக் கார் ஓரிடத்திலும் நிற்காமல் தன்னைச் சுமந்து கொண்டே, காலமெல்லாம் ஓடிக் கொண்டிருந்தாலென்ன என்று அசட்டுத்தனமாய் எண்ணிப் பார்த்தான் மணி. திடீரென்று பிரத்தியட்ச உலகுக்குள் குதித்துத் தன்னுணர்வு பெற்று இயங்குவதற்கு அவனுக்குச் சிரம சாத்தியமாயிருந்தது. வேண்டா வெறுப்பாகக் காரை விட்டு இறங்கினான்; திடீரென அவன் மனத்தில் ஒரு நிராதரவுணர்ச்சி தலை தூக்கியது.

"இனி என்ன செய்வது? எங்கு செல்வது?"

பஸ் ஸ்டாண்டிலேயே நின்று கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்று உணர்ந்தவனாக, வெளியே புறப்பட்டான். வெளியே வந்ததும் எதிரேயுள்ள காப்பி ஹோட்டல் போர்டு அவன் கண்ணை இழுத்தது. ஹோட்டலைக்கண்டதும் மணிக்குப்பசியெடுப்பது போல் இருந்தது. ஹோட்டலுக்குச் செல்லுமுன் மணி தன் பையில் கை விட்டு அதிலிருந்து பணத்தை எடுத்துப் பார்த்தான் ஆஸ்பத்திரியை விட்டுக் கிளம்பும் போது அவன் தன் சட்டைப் பையில் நோட்டும் சில்லறையுமாகப் பணம் இருப்பதைக் கண்டும் அந்தப் பணம் எப்படி வந்தது என்று சிந்திக்கவில்லை. தனக்கு உதவ வந்த சமய சஞ்சீவியாகத்தான் அந்தப் பணத்தைக் கருதினான். அவனுக்கிருந்த பட்டப்பில் அதை எண்ணிப் பார்க்கக்கூட முடிய வில்லை. இப்போதுதான் அதை எண்ணிப் பார்த்தான். நோட்டும் சில்லறையுமாக ரூபாய் முப்பத்தியேழு சொச்சம் இருந்தது.

"இந்தப் பணம் ஏது? கோனார் பணமா? கோனாரிடம் ஏது இவ்வளவு? எதற்காகவைத்திருந்தார். என் செலவுக்கா, வீட்டுச் செலவுக்கா? யாரிடமேனும் கடன் வாங்கினாரா? அல்லது சங்கர் கொடுத்திருப்பானா...?"

மணி அதைப்பற்றி அதிக நேரம் சிந்திக்கவில்லை; அதனால் பிறருக்கு ஏற்படும் சிரமத்தைப் பற்றியும் அவன் சிந்திக்கவில்லை. அந்தக் கணத்தில் அவன் மனத்தில் சுயநலம்தான் மேலோங்கி நின்றது. எனவே அவன் வேறொன்றும் நினையாமல் நேரே ஹோட்டலுக்குள் சென்றான். ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே, அவன் அடுத்தாற்போல் எங்கு செல்வது என்றும் சிந்தித்தான். அவனுக்கு எதுவும் புலப்படவில்லை. கடைசியாக வன்ணார் பேட்டையிலுள்ள தன் கல்லூரி நண்பன் ஒருவன் அறையில் சென்று தங்குவது, பிறகு யோசிப்பது என்று தீர்மானித்தவனாகச் சாப்பிட்டு முடித்தான்.

சாப்பிட்டு முடித்துவிட்டு இலையைத் தொட்டியில் போடுவதற்காகச் சென்றான் மணி,

"சாமி, சாமி தொட்டியிலே போடாதே சாமி, இப்படிப் போடு!" என்ற குரல் கேட்டு, மணி திடுக்கிட்டு நின்றான்; ஹோட்டலின் எச்சில் இலை போடும் தொட்டிக்கு அப்பால், இரண்டு கைகளையும் ஏந்திக் கொண்டு ஒரு பிச்சைக்காரன் ஆவலோடு நின்று கொண்டிருந்தான்; இலை அவன் கையில் விழாமல், தவறித் தன் முன்னால் விழாதா என்று ஏங்கிக் கொண்டிருப்பது போல் அவனுக்கு அருகில் ஒரு வங்கு பற்றிய சொறி நாய் நின்று கொண்டிருந்தது. மணி அந்தப் பிச்சைக்காரனையும் நாயையும் எச்சில் இலை போடும் தொண்டின் வழியாகப் பார்த்தான். முன்பெல்லாம் இது போன்றதொரு நிகழ்ச்சி மணியின் மனத்தில் எந்தவிதச் சலனத்தையும் ஏற்படுத்தியதில்லை; இப்போதோ அவன் மனத்தில் தோன்றிய அருவருப் புணர்ச்சியையும் மிஞ்சி, ஒரு அனுதாப உணர்ச்சி மெல்லத் தலை தூக்கியது. மணி ஒன்றும் பேசாமல், அந்தப் பிச்சைக்காரனை நோக்கி இலையை விட்டெறிந்தான்.

இலை கீழே தவறி விழுந்தது; மறு கணமே அந்தப் பிச்சைக்காரனும் நாயும் அந்த இலைக்காகப் பாய்ந்து விழுந்து போராட முனைவதையும் மணி கண்டான்!

மறு கணமே மணி அங்கு நிற்க மனமில்லாமல் ஹோட்டலைவிட்டு வெளியேறினான்.

"சே! எச்சில் இலைக்கா இந்தப் போட்டி; அந்த நாய்க்குத் தான் அறிவில்லை. அந்தப் பிச்சைக்காரனுமா அப்படி? இவ்வளவு கேவலமாகவா வயிறு வளர்க்க வேண்டும்? இதை விட எங்கேனும் விழுந்து சாகலாமே!..."

மணி அந்த நிகழ்ச்சியைப் பற்றிச் சிந்தித்தவனாக, டவுண் பஸ் ஸ்டாப்புக்கு நடந்தான்.

வண்ணார்பேட்டையில் மணி எதிர்பார்த்தபடியே அந்த நண்பன் தன் அறையில்தான் இருந்தான். மணியைக் கண்டதும், அவன் அவனை ஆவலோடு வரவேற்றான்.

"என்ன மணி, ஏது இங்கே ? அபூர்வமா? காலம். காத்தாலே!"

"ஒன்றுமில்லை. குடும்ப விஷயமா வந்தேன். நாளைப் போகணும்."

மணி அன்று அங்கு தங்கினான்.

அப்போது கல்லூரி விடுமுறைக் காலமாதலால், மணியின் நண்பனும் எங்கும் செல்லவில்லை. தான் மட்டும்

அறையிலேயே தங்கினால், தன் நண்பன் எங்கே சந்தேகப்பட்டுவிடுவானோ என்று சிறிது நேரத்தில் வெளிக்கிளம்பிச் சென்றான் மணி நல்லவேளையாகத் தன் குடும்பத்தின் கதையெல்லாம் அந்த நண்பனின் காதுவரை எட்டாதிருக்கிறதே என்று மணி திருப்திப்பட்டுக் கொண்டான். அன்று பகல் முழுவதும் மணி இன்னது செய்வதெனத் தெரியாமல், யார் கண்ணிலும் பட்டுவிடக்கூடாது என்ற பயத்தில், முனிஸிபல் பார்க்கில் போய் அமர்ந்து பொழுதைக் கழித்தான்.

நிர்மானுஷ்யமான முனிஸிபல பார்க்கின் புல்வெளியில் படுத்தவாறே மணி தன் நிலைமையைச் சிந்தித்துப் பார்த்தான்.

"இனி என்ன செய்வது?"

கீறல் விழுந்த இசைத் தட்டைப்போல் இதே கேள்வி மீண்டும் மீண்டும் ஒலியெழுப்பிக் சரகரத்தது. அவன் மனத்தில் திட்டவட்டமான சிந்தனைகள் எதுவும் உருவாகவில்லை. எதிர்காலம் திக்குத் திசாந்திரம் தெரியாத இருள் மண்டலமாய் அவனுக்குத் தோன்றியது.

"என்ன செய்வது?"

அதைப்பற்றி யோசித்து யோசித்து அலுத்துக் கொள்ளும்வேளையில்,அவனுக்குப்பாளையங்கோட்டை ஹோட்டலில் கண்ட அந்த ஏழைப்பிச்சைக்காரனின் வற்றி மெலிந்த முகம் தான் காட்சியளித்தது...

அவன் ஏன் இந்த கதிக்கு ஆளானான்? பசியின் கொடுடமை மனிதனை இவ்வளவு கேவலத்துக்கா ஆளாக்கி விடுகிறது. ஒரு சாண் வயிற்றுக்காக, மானாபிமானம் இன்றி, கூச்சமின்றி, அருவருப்பின்றி, மனிதன் எச்சில் இலைக்கா நாயோடு போட்டி போட வேண்டும்? மனித உயிர் அவ்வளவு பெரிதா? அந்த உயிரை அப்படிப் பேணி வளர்க்காவிட்டால் என்ன.?" அப்போதுதான் அவனுக்குத்தன் தந்தையின் ஞாபகம் வந்தது.

"என் தந்தை கேவலத்துக்கும் மானாபிமானத்துக்கும் அஞ்சித்தானே உயிரை மாய்த்துக் கொண்டார்? ஆம். இப்படிப்பட்ட அவலமான, கேவலமான நிலைமைக்கு ஆளாவதைவிட அவரைப் போல் உயிரை விட்டு விடுவது நல்லது.

"ஆனால் எல்லோருமா உயிரை விட்டுவிடுவார்கள்.?"

"அப்படியானால், மனிதர்கள் எதற்கு அஞ்சுகிறார்கள்?"

"உயிருக்கா? மானாபிமானத்துக்கா?"

"எது பெரிது? உயிரா? மானாபிமானமா.?"

"உயிரைப் பெரிதாக நினைக்கிறவன் மானாபிமானத்தைக் கைவிடுகிறான்; மானாபிமானத்தை மதிப்பவன் உயிரை விட்டு விடுகிறான்...

"எனக்கு எது பெரிது?."

"உயிரா? மானாபிமானமா."

யோசிக்க யோசித்துப் பார்க்கதில் அவனுக்கு இரண்டுமே பெரிதாய்த்தோன்றின.

"அப்படியானால் மானாபிமானத்தோடு உயிர் வாழ்வதஎப்படி?"

அதற்குத்தான் அவன் விடை தேடிக் கொண்டிருந்தான். அவனால் ஒரு வழியையும் காண இயலவில்லை . சிந்தித்துச்சிந்தித்து உடம்பையும், உள்ளத்தையும் அலுக்கச் செய்து கொண்டான். மாலை வரையிலும் அவன் ஒரு முடிவுக்கும் வரவில்லை. அமைதியும் காணவில்லை.

இரவு எட்டு மணி சுமாருக் அவன் மீண்டும் வண்ணார் பேட்டைக்குத் திரும்பி வந்தான்.

அவன் வந்து சேர்ந்த போது, அந்த நண்பனின் அறையில் வேறு சில கல்லூரி நண்பர்களும் அமர்ந்து சுவாரசியமாகப் பேச்சில் ஈடுபட்டிருந்தார்கள்.

மணியைக் கண்டதும் அந்த மாணவர்களில் ஒருவன், "அடேடே, மணியா? நீ இங்கேயா இருக்கே? சாயந்தரம் ஜங்ஷனிலே நம்ம சங்கரைக் கண்டேன். அவன் என்னிடம் "மணியைப் பார்த்தியா?” என்று கேட்டான்." என்று பேசத் தொடங்கினான்.

மணியின் உள்ளம் திடீரென்று சுளுக்கிற்று.

"சங்கரைப் பாத்தியா? என்ன சொன்னான்?" என்று படபடத்தான் மணி

"ஒண்ணும் சொல்லலெ. உன்னைப் பார்க்கலேன்னேன். உடனே அவசரமா எங்கேயோ போனான்...."

"வேறே ஒண்ணும் சொல்லலியா?"

"இல்லை ஏன்? என்ன விஷயம்?"

"ஒண்ணுமில்லெ, கேட்டேன்"

மணிமழுப்பினான். மறு கணமே அவன் அங்கு நிற்கப் பிடிக்காமல் அறைக்கு வெளியேயுள்ள இருள் மண்டிய வராந்தாவுக்கு வந்து அங்கு கிடந்த கட்டிலில் படுத்தான். உள்ளே அந்த மாணவர்கள் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தன்னைப் பற்றித்தான் ஏதேனும் பேசுகிறார்களோ என்ற பதைப்பில் மணி கிட்டிவந்த தூக்கத்தையும் கெடுத்தவாறு அவர்கள் பேசுவதைக் கூர்ந்து கேட்டான்.

"இந்த நாடு உருப்பட வேண்டுமானால் இங்கு ஒரு பெரும் அறிவுப் புரட்சி ஏற்பட வேண்டும், மக்களின் மூட நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் போக வார்ப்புரு:Has

வேண்டுமென்றால் அவர்கள் நெஞ்சில் அறிவு சுடர்விடவேண்டும், எல்லோரும் சமம் என்ற உணர்வு எல்லோருக்கும் வந்து விட்டால்.

"அறிவுப் புரட்சி அறிவுப் புரட்சி என்று அடித்துக் கொள்ளுகிறாயே, அறிவில் மட்டும் புரட்சி ஏற்பட்டால் போதுமா? இப்போது? என்னை எடுத்துக் கொள். எனக்கு இந்த மூடநம்பிக்கைகளில் ஒன்றும் நம்பிக்கை இல்லை மனிதனை மனிதனாகத்தான் நேசிக்கிறேன். இதனால் என் வாழ்க்கை மேம்பட்டு விட்டதா? சொர்க்கத்தில் இருக்கிறோம் என்று நினைத்து கொள்வதால் மட்டும் ஒருவன் சொர்க்கத்துக்குப் போய் விட முடியுமா? அறிவு வேண்டும்; அந்த அறிவின் கொள்கை வெற்றிபெற நடைமுறைப் போராட்டம் வேண்டும். இல்லாவிட்டால். ஒன்றும் நடக்காது."

"பிரசாரத்தின் மூலம் அறிவைப் புகட்ட முடியாதா? மக்கள் வாழ்வை மேம்படச் செய்ய முடியாதா? எத்தனை அறிவியல் நூல்கள் உலகத்தின் கதியை மாற்றியிருக்கின்றன."

"வாஸ்தவம். பிரசாரம் உணர்வைத்தான் ஊட்ட முடியும்; வாழ்க்கைதான் அந்த உணர்வை ஸ்திரப்படுத்த முடியும்; ஆனால், நடைமுறை இயக்கம் தான் உணர்வின் வெற்றியை உருவாக்க முடியும். புஸ்தகத்தின் மூலம் மட்டும் புரட்சி உண்டாகிவிடுமா...?"

"நீ என்னதான் சொல்லுகிறாய்? மனம் உண்டானால் மார்க்கமில்லையா?"

"உண்டப்பா உண்டு. ஆனால் நீ என்ன நினைக்கிறாய் மனம் மாறினால் உலகமே மாறிவிடும் என்கிறாய். மனம் உண்டானால் மார்க்கமும் உண்டு என்று மட்டும் நினைக்கிறாய். ஆனால் மனமும் மனத்துக்கிசைந்த மார்க்கமும் ஒன்று. சேர்ந்தால்தான், கொள்கையும் நடைமுறையும் சிந்தையும் செயலும் ஒன்றுபட்டால்தான் விமோசனம் உண்டு..." இதற்குள் இன்னொரு குரல் குறுக்கே விழுந்து வெட்டிப் பேசியது.

"என்னப்பா நீங்கள்? புரியாத விஷயத்திலே ஏன் இப்படிப் போட்டு மண்டையை உடைச்சிக்கிடுதீங்க.? பாளையங்கோட்டையிலே'பாலித் தீவின் கன்னிகள்'னு ஒரு படம் நடக்குதாம்.எல்லாத்தையும் அப்படி அப்படியே காட்டுதானாம்... வாங்கப்பா, போயிட்டு வரலாம்!"

தொடர்ந்து எல்லோரும் கலீர் என்று சிரித்துக் குலுங்குவது கேட்டது.

மணி அவர்கள் பேச்சை மேலும் கேட்டுக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் தன்னைப் பற்றிப் பேசவில்லை என்றவுடனேயே அவர்கள் பேச்சைக் கேட்பதில் அவன் அக்கறை கொள்ளவில்லை. அத்துடன் அவனுக்குக் கடந்த நாள் தூக்கமில்லாமையால் தூக்கக் கிறக்கம் கண்ணில் கனமேற்றி உறுத்தியது, காய்ந்து சுருங்கும் கனியைப்போல் அவன் கண்கள் தவிர்க்க முடியாத தூக்கவுணர்ச்சியால் கிட்டித்து இறுகின எனினும் அவன் மனம் மட்டும் சிந்தனை செய்வதை நிறுத்தவில்லை. நினைவு மயங்கும் அந்த நிலையிலும் அவன் மனம் என்னென்னவோ எண்ணிக் குமைந்து கொண்டிருந்தது....

"அவன் சொன்ன மாதிரி, இவர்கள் ஏன் இந்தப் புரியாத விஷயங்களைப் பற்றி பேசி மூச்சைத் தொலைக்கிறார்கள்? இவர்களுக்கு வேறு வேலையில்லையா? உலகத்தைப் பற்றி இவர்களுக்கு என்ன கவலை? இவர்கள் தான் உலகத்தை மாற்றியமைக்கப்போகிறார்களா இந்த அரசியலும் ஆராய்ச்சியும் எதற்கு?...

"உலகத்தைப் பற்றிக் கவலை கொள்ள இவர்களுக்கு என்ன ஆத்திரம் வந்தது. உலகத்து மக்களின் வாழ்க்கையில் இவர்களுக்கு ஏன் இத்தனை சிரத்தை அவர்கள் வாழ்ந்தால் தான் இவர்களும் வாழ முடியும் என்ற நினைப்பா? தங்கள் க்ஷேமலாபங்களும் உலகத்தின் க்ஷேமலாபங்களும்

ஒன்றுதான் என்ற எண்ணமா? அல்லது உலக நலத்தில்தான் இவர்கள் தங்கள் நலத்தைக் காண்கிறார்களா....?"

"ஏன் அப்படி? இவர்கள் தமது வாழ்க்கையை உலக வாழ்க்கையோடு ஒட்டவைத்துப்பார்க்கிறார்களா? அப்படியானால், நான் என் வாழ்க்கையை உலக வாழ்க்கையோடு ஒட்டவிடாமல், எட்ட வைத்துப் பார்க்கிறேனா? எது சரி, எதனால் நன்மையுண்டு...?”.

சொப்பனலய சுகம் போன்ற அந்த மங்கிய சிந்தனைக்கிறக்கத்தில் மணி என்னென்னவோ எண்ணிப் பார்த்தாள்; எனினும் அந்தச் சமயத்தில் அவன் மனத்தின் எந்த மூலையிலும் அன்று சங்கர் சொன்ன வார்த்தைகள் சிறிதும் எதிரொலிக்கவில்லை. கவிந்து ஆட்கொள்ளும் நித்திரையையும் திமிறிக்கொண்டு அவன் உள்ளம் அவனது எதிர்காலத்தைப் பற்றிச் சிந்தனை செய்தது...

"இனி நான் என்ன செய்வது? எப்படி வாழ்நாளை ஓட்டுவது? கையிலுள்ள பணம் எத்தனை நாளைக்குக் கட்டி வரும்.? அதற்குப்பின்? எங்காவது வேலை தேடித் தான் பிழைக்க வேண்டுமா? வேலை கிடைக்காவிட்டால்.? ஒரு சின்ன கிளார்க் உத்தியோகத்துக்குமா பஞ்சம்...? அதுவும் கிடைக்காவிட்டால்....?அப்புறம்?"

அவன் மனக் கண் முன்னால், பாளையங்கோட்டையில் கண்ட அந்தப் பிச்சைக்காரனின் பரிதாபக் கோலம் தென்பட்டது...

"சேக்சே." அந்த மாதிரிக் கதிக்கு ஆளாவதைவிட, என் அப்பாவை மாதிரிதானும் தற்கொலை செய்துகொண்டு விட்டலாம். அப்படிச் செய்துவிட்டால், ஒரு கவலையில்லை. எள் எதிர்காலம் என்னை என்றும் பயமுறுத்த முடியாது..."

அவன் மனம் திடீரென்று தற்கொலையைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கியது...

"தற்கொலை செய்து கொள்வதா? எப்படிச் செய்வது? ஆறு குளம்.ரோட்டடிப் புளிய மரம் ஒரு துளி விஷம் ஓடுகின்ற ரயில் எப்படிச் செய்வது? ஆமாம் நாளைக்குத் துணிந்து தற்கொலை செய்துகொள்ள வேண்டியதுதான் ரயிலில் விழுந்து. அதுதான் சரி. துணிந்துவிட வேண்டியதுதான். அவ்வளவுக்குத் தைரியமில்லையா."

பாளையாங்கோட்டை ஊசிக் கோபுரக் கடிகாரம் பன்னிரண்டு மணி அடித்து ஓய்ந்து அடங்குவது அவன் காதில் தெளிவாகக் கேட்டது,வயற்காட்டில் விடாது முணமுணத்துக் கொண்டிருக்கும் தவளைகளின் சத்தமும் அவனுக்குக் கேட்டது.

மணி யோசித்தான்; தற்கொலையைப் பற்றிக் கற்பனை பண்ணுவது அவனுக்கு இன்பம் தருவதாகவும், நிவர்த்தியுணர்ச்சி அளிப்பதாகவும் இருந்தது....

'நாளை இந்தக் கடிகார ஓசையை நான் கேட்க மாட்டேன்; இந்தத் தவளைகளின் முணுமுணுப்பு என் காதில் விழாது. நாளை நான் இறந்து போய் விடுவேன். காலையில் மேற்கே இருந்து வரும் ரயிலுக்குக் குறுக்கே விழுந்து உயிரை விட்டுவிட வேண்டியதுதான். கூண நேரத் துணிச்சல். அதுவுமா என்னிடமில்லை ...?"

அவன் மனம் மறு நாளையக் காட்சியைக் கற்பனை பண்ணிப் பார்த்தது...

ரயில் கடகடத்து ஓடிவருகிறது; மணி நெஞ்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு தண்டவாளத்தின் மீது படுத்திருக்கிறான்; ரயில் இதோ வந்துவிட்டது; இதோ, இதோ. மணி கண்களை இறுக்கி மூடுகிறான் சடசட என்று மண்டை நொறுங்கும் சப்தம்!. ஓடிச் சென்ற ரயில் கிரீச்சிட்டு பிரேக் போட்டு நிற்கிறது! கார்டும், ஜனங்களும் இறங்கி ஓடி வருகிறார்கள்!.... ரத்தக்களரி!" எல்லோர் முகத்திலும் பரிதாப உணர்ச்சி, "யார் பெத்த பிள்ளையோ?" என்று அனுதாபப்படுகிறது ஒரு குரல்… மறுநாள் பத்திரிகையில், இளைஞனின் கோர மரணம் என்ற தலைப்பில் செய்திப் பிரசுரம்… ஊரெல்லாம் இதே பேச்சு… அம்பாசமுத்திரத்துக்கும் செய்தி கிடைக்கிறது… கமலா துடிதுடிக்கிறாள்!… மணியின் பிணத்தின்மீது விழுந்து அலறுகிறாள்…! சங்கர் கண்ணீர் விடுகிறான்… மணியின் தாய் புலம்புகிறாள்…!

என்ன அலங்கோலம்? என்ன பரிதாபம்?

மணி அந்தக் காட்சியின் கற்பனாலங்காரத்தை எண்ணிப் பார்த்தான்; உலகத்தின், உற்றாரின் கவனமும் அனுதாபமும் ஒரேகணத்தில் தன்மீது, தன் பிணத்தின்மீது திரும்புவதைக் காணும் அவனது கற்பனையுள்ளம் இன்னதெனத் தெரியாத திருப்தியும் மகிழ்ச்சியும் கொண்டது…

திடீரென்று அவன் உடம்பின்மீது ஏதோ ஒரு ஈரவுணர்ச்சி கொண்ட பொருள் நழுக்கென விழுந்து துள்ளியது. மணி அலறிப் புடைத்துக்கொண்டு எழுந்திருந்தான்; அவனது பலவீனமான இருதயம் படபடவென்று துடித்துக் குதித்தது. '

"என்ன அது? தேளா?… பாம்பா…"

மணி மறுகணமே விளக்கின் சுவிட்சைப் போட்டான்; ஒரு வெள்ளைப் பல்லி அவன் படுத்திருந்த கட்டிலிலிருந்து துள்ளிக்குதித்து ஓடி மறைந்தது.

பல்லிதானா!…"

மணி மனத்தைச் சமாதானப்படுத்திக் கொண்டான்; எனினும் அவனது இதயப் படபடப்பு மட்டும் சாந்தி பெறவில்லை. திடுக் திடுக்கென்று குதிக்கும் இதயத்தோடு அவன் மீண்டும் விளக்கை அணைத்துவிட்டுக் கட்டிவில் படுத்தான்; திடீரென்று ஏற்பட்ட அதிர்ச்சியால் அவனைக் கவிந்தணைத்த தூக்கம் பிடி நழுவித் தூர விலகியது; அதே சமயம், தற்கொலையைப் பற்றிய கனவில் நிவர்த்தி கண்டு ஆனந்தித்த அவன் மனம் மீண்டும் பிரத்தியட்ச உலகை ஏறிட்டுப் பார்க்கத் தொடங்கியது.

"என்ன இது? நான் என்ன இப்படி அலறிப் புடைத்து விட்டேன்? இந்தப் பல்லிக்கா இத்தனை பயம்?- என் உயிருக்கு ஏதோ திடீரென்று ஆபத்து நேர்ந்து விட்டதுபோல் அல்லவா திடுக்கிட்டு விட்டேன்?- நானா கொஞ்ச நேரத்துக்கு முன்னால் தற்கொலை செய்து கொள்வது பற்றிச் சிந்தித்தேன்?…

அவன் தன்னைத்தானே நோக்கி மெல்ல நகைத்துக் கொண்டான்.

தற்கொலை செய்துகொள்வது அவ்வளவு எளிதான காரியமில்லையா? ஆமாம், எவனுக்குத்தான் இந்த உலகத்தை விட்டு, உலக இன்பங்களை விட்டுப் பலவந்தமாகப் பிரிந்து செல்லத் துணிச்சல் வரும்? அந்தத் துணிச்சல் வர வேண்டுமானால், அவன் எவ்வளவு தூரம் உலகை வெறுக்கவேண்டும்?

"நான் உலகத்தை, உலக இன்பத்தை வெறுக்கிறேனா? கமலா என் அருகிலிருந்தால் எவ்வளவு ஹிதமாயிருக்கிறது?… அவளை நான் மறந்து விடுவதா? மறந்து விடுவேனா?

இந்தப் பல்லிக்கே இந்தப் பயம் பயந்தேனே. எனக்கு என் உயிரின் மீது அத்தனை ஆசையா?… மனிதனுக்கே உயிரின் மீது அவ்வளவு ஆசையா?…"

அப்போது அவன் மனத்தில் மீண்டும் அந்தப் பிச்சைக்காரனின் தோற்றம் உருக் காட்டியது. அவன் ஏன் எச்சில் இலைக்காக நாயுடன் போட்டி போடுகிறான் என்ற உண்மை அவன் உள்ளத்தில் ஒளி கீறிற்று.

"ஆம். மனிதனுக்கு எந்த ஆசையையும்விட, உயிராசை தான் பெரிய ஆசை. இல்லையென்றால், அவன் ஏன் எச்சிலைத் தின்று வாழவேண்டும்? உலகத்தின் இன்பங்களையெல்லாம் பறித்துத் தீர்த்து, வாழ்நாளெல்லாம் வேதனையைத் தந்துகொண்டிருக்கும் குஷ்டரோகத்தையும் தாங்கிக்கொண்டு மனிதன் ஏன் அலைந்து திரிகிறான்? கூனும், குருடும், நொண்டியும் ஏன் உயிர் வாழ்கிறார்கள்? பெண்கள் உடலை விற்று விபசாரம் செய்து ஏன் உயிர் பிழைக்கிறார்கள்?…

"மனிதன் வாழத்தான் விரும்புகிறான்; சாக விரும்புவதில்லை; ஆனால் இப்படித்தான் வாழ வேண்டுமா? இதுவா வாழ்க்கை? நல்ல முறையில் வாழ்க்கையை வாழ்வதற்கு வகையே கிடையாதா?

"இதைப் பற்றித்தான் என் நண்பர்கள் அப்போது கவலைப் பட்டார்களா? இதைத்தான் சங்கர் என்னிடம் சொன்னானா?…

தனக்குத்தானே தர்மாவேசம் கொண்ட மணியின் இதயம் தன்னை வைத்தே உலகத்தை அளந்து பார்த்தது. வேறுமாதிரியாக அளந்து நோக்க அவன் முனையவும் இல்லை; அதற்குரிய அளவுகோலும் அவனிடம் இல்லை; எனவே மானாவாரியாக அவன் உள்ளத்தின்மீது சொரிந்து குவியும் கேள்விகளின் பாரத்திலிருந்து விடுபட முடியாமல் தத்தளித்தான்…

அவனால் அதிக நேரம் சிந்தித்துக் கொண்டிருக்க இயலவில்லை; அவனை விட்டு விலகி நின்ற தூக்கம் மீண்டும் அவனை அணுகி, அவன் பிரக்ஞையைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கொண்டது. அதன்பின் ஊசிக்கோபுர மணியோசை அவன் காதில் உறைக்கவில்லை…

மறுநாள் காலையில் மணியின் நண்பன் படுக்கையை விட்டு எழுந்திருந்து, "மணி, இன்னுமா தூக்கம்?" என்று கேட்டுக்கொண்டே வராந்தாவுக்கு வந்தான்.

அங்கு மணியைக் காணவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பஞ்சும்_பசியும்/019-028&oldid=1684097" இலிருந்து மீள்விக்கப்பட்டது