பஞ்சும் பசியும்/021-028
21
மதுரை மாநகரில்_
நகர வாழ்க்கையின் நாடித் துடிப்பு ஜன்னி வேகத்தில் படபடக்கும் மாலை வேளை; எங்கும் அவசரம்! பரபரப்பு! ஹோட்டல்களில், பஸ்ஸ்டாண்டில், சினிமாக் கொட்டகைகளில், நடை பாதைகளில், கடை. கண்ணிகளில் - எங்கும் மக்கள் சுறுசுறுப்போடு இயங்கிக் கொண்டிருந்தார்கள்; கார்கள், வண்டிகள், சைக்கிள்கள், ரிக்ஷாக்கள் முதலிய வாகனங்கள் பெரும் இரைச்சலை உண்டாக்கிக் கொண்டு மேலும் கீழும் மின்னலைப் போல பாய்ந்து மறைந்து கொண்டிருந்தன.
அவன் எவ்வித அவசரமும் பரபரப்புமற்று டவுன் ஹால் ரோட்டில் ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தான்.
புழுதியும் அழுக்கும் படிந்து கறுத்துப்போன முகம், முகத்தின் செம்பாதியை மூடி மறைத்து, தளிர்த்து வளர்ந்திருக்கும் இளந்தாடி, மீசை; உலைத்தெறிந்த குருவிக் கூடு போல் சிலிர்த்து மதர்த்து நிற்கும் சிக்குப் பிடித்த தலைமயிர்; மஞ்சள் பூத்துப் பாசி பற்றிய பற்கள்; வாடி புலர்ந்து பாளம் கண்டு வெடித்துப் போன உதடுகள்; சவக்களை தட்டியது போல் பஞ்சடைந்து எய்த்துப் போன கண்கள் கண்ணுக்குள் ஆழம் புலப்படாத ஒரு ஏக்க பாவம்; அறுந்து தொங்கும் அவயவம் போல் கிழிந்து ஊசலாடும் மேல் சட்டை; கரைப் புரத்தில் கால்பட்டு வாய் பிளந்து பிதிர்ந்த வேட்டி - இத்தியாதி கோலத்தோடு அவன் அங்கு நிர்விசாரமாக, போவோர் வருவோர் பற்றிய பிரக்ஞையே யற்ற, அர்த்தமற்று வெறித்து நோக்கும் கண்களோடு நின்று கொண்டிருந்தான்.
குடலைப் பிசைந்து கருக்கும் கும்பிக் கொதிப்பின் ஜ்வாலை அவன் முகத்தில் அனல் வீசியது; அந்த ஜ்வாலையின் உஷ்ண வேகம் அவனது உணர்ச்சிகளை சிந்தனைகளை, நம்பிக்கைகளை எல்லாம் சுட்டும் பொசுக்கிச் சூரணமாக்கிக் கொண்டிருந்தது. இடையிடையே உலர்ந்து வாடி மேலண்ணத்தோடு ஒட்டிக் கொள்ளும் நாக்கைச் சப்புக் கொட்டித் தொண்டையை நனைக்க முயன்றான்; எனினும் உமிழ்நீர் பற்றிச் சுவறிய அந்தத் தொண்டையில் பசி நாக்கின் கைப்புத்தான் வழுக்கி இரங்கியது. கண்ணும் காதும் அடைத்தது; இருண்டு வரும் பசி மயக்கம் அவனது புலனுணர்வையும் அறிவையும் கொஞ்சங் கொஞ்சமாக விழுங்குவது போலிருந்தது.
அவன் தன்னைத்தானே மறந்தவனாய் நின்று கொண்டிருந்தான்.
திடீரென்று ரோட்டில் செல்லும் வாகனாதிகளின் இரைச்சலையும், கடை. கண்ணிகளின் ஓசைக் குழப்பத்தையும் மிஞ்சி, பொங்கிவரும் அலை முழக்கம் போன்ற தொரு ஆரவாரம் அந்தச் சூழ்நிலையைச் சிலிர்த்து நடுக்கியது. அந்த ஆரவாரம் அவனது மயக்க நிலையை மோதித் தள்ளி, அவனை உசுப்பி உலுப்பித் தன்னுணர்வு கொள்ளச் செய்தது.
இருண்டு வரும் கண்களைத் திறந்து அவன் ஏறிட்டுப் பார்த்தான்.
எதிரே நுங்கும் நுரையாய்ப் பொங்கிப் புடைபெயர்ந்து வரும் காட்டாற்று வெள்ளம் போல், ஒரு பெரும் ஜனத்திரள் அலைமோதி விம்மி ஆரோகணித்து வந்தது கொண்டிருந்தது. அந்த மனிதப் பிரவாகத்தின் முன்னணியில் ஒருவன் விண்ணளாவிப் பறந்து படபடக்கும் ஒரு செந்நிறப் பதாகையைக் கம்பீரமாக ஏந்திப் பிடித்து ராஜ நடை போட்டு வந்தான்; அவனுக்குப் பின் அலைமேல் அலைதிரண்டு வருவது போல் மக்கள் அணியணியாய் வந்து கொண்டிருந்தார்கள்,
"ஊர்வலமா?"
விழிப்புற்று எழுந்த அவன் மனம் எண்ணியது!.
அந்த ஊர்வலத்திலிருந்து சப்த சாகரங்களும் ஏகோபித்துப் புடைத்தெழுத்து ஆரவாரிப்பது போல், பல கோஷங்கள் விண்முட்டி அளாவி முழங்கின, அந்த ஆரவாரம் வீதியின் இரு மருங்கிலுள்ள கடை கண்ணிகளில், கட்டிடங்களில் மோதித் திரும்பி எதிரொலித்தது; அங்கு நின்ற மனிதர்களின் செவித் தொளையில் மோதி அவர்களைச் சிலிர்க்கச் செய்தது. அந்த மனிதர்களின் இதயக் குகைகளில் முட்டி மோதி எதிரொலித்தது.
"நூல் விலையைக் குறை!"
"அன்னியத் துணி இறக்குமதியை அனுமதிக்காதே!
"ஜவுளிக்கொள்கையை மாற்று!"
"தேங்கியுள்ள சரக்கைக் கொள்முதல் செய்!"
"நெசவாளரைப் பட்டினி போடாதே"
"வேலை கொடு, அல்லது சோறு கொடு!"
மீண்டும் மீண்டும் அந்தக் கோஷங்கள் கும்மென்று எதிரொலித்து விம்பிப் பரந்தன; அவன் அந்த ஊர்வலத்தை ஆர்வத்தோடு பார்த்தான்; அவனது முகத்தில் தோன்றிய பசியின் ஜ்வாலை உள்ளடங்கிக் கும்பிக்கூட்டுக்குள் அடைபட்டுப் போனது போலிருந்தது. புழுதியும் புகையும் மண்டிய முகத்தில் தியரென்று ஒரு புத்தொளியின் ரேகை படருவது போல் இருந்தது.
'வேலைகொடு அல்லது சோறு கொடு!"
அந்தக் கோஷம் அவனது இதயத்திலே மோதி, வீணைத் தந்தியின் கமக நாதத்தைப்போல் ரீங்காரிக்கத் தொடங்கியது.
ஊர்வலம் நெருங்கிவந்துவிட்டது.
செந்நிறப் பதாகையைச் சுமந்து வந்த மனிதன் அவனைக்கடந்து அப்பால் சென்றுவிட்டான்; அவனுக்குப் பின்னால் பற்பல வாக்கியங்களைப் பொறித்த போர்டுகளையும் அட்டைகளையும் சுமந்துகொண்டு சாரிசாரியாக மனிதர்கள் வந்தார்கள்; மதுரை நகர் நெசவாளர் சங்கம்' என்று விலாசமிட்ட சிவப்புக்கொடி அந்த ஊர்வலத் தினரின் தலைக்குமீது பட்டொளி வீசிப் பறந்தது. குடிலிலிருந்து கலைக்கப்பட்ட எறும்புச்சாரைபோல் அந்த ஊர்வலம் முடிவே காணாமல் மேலும் மேலும் வந்து கொண்டிருந்தது. ஊர்வலத்தின் பிரவாக கதியை அணை கடந்து விடாதவாறு தடுத்து அணைப்பது போல், ஊர்வலத்தின் இரு மருங்கிலும் பல இளைஞர்கள் சைக்கிள்களில் அணி வகுத்து வந்தனர். அவர்கள் மீண்டும் மீண்டும் கோஷங்களிட்டார்கள்; அந்தக் கோஷ முழக்கம் ஊர் வலத்தின் அடி, முதல் நுனி வரையில் உத்வேகமும் உணர்ச்சியும் நிறைந்த மின்சார வேகத்தோடு பரவிச் சிலிர்த்து ஏகோபித்து விம்மியது. "வேலை கொடு அல்லது சோறுகொடு!"
மீண்டும் அந்த கோஷம் அவனைக் குலுக்கி உலுக்கியது; அவன் தன் பசி வேதனையையே மறந்து விட்டான். அந்தக் கோஷம் அவனது தொய்ந்து தொள தொளத்துக் கிடந்த நரம்புகளுக்குப் பகை தீட்டி முறுக்கேற்றுவது போலிருந்தது. தாது விழுந்து படுத்துக்கிடந்த நாடித் துடிப்பைத் தட்டியெழுப்பித் துடி துடிக்கச் செய்தது; இதய மண்டலத்தின் அஷ்ட கோணங்களையும் ஆக்கிரமித்துக் கவிந்து நின்ற இருட் செறிவைப் பிளந்தெறியும் மின்னல் சொடுக்கைப்போல் அந்தக் கோஷம் பளீரென ஒளி வீசியது; சூனிய வெளியாக, வெற்றம்பலமாகக் கிடந்த அவன துசித்த அரங்கிலே, திடீரென்று ஒரு இதய நிறைவு மானாவாரியாய் வர்ஷித்துப் பெருகியது.
"வேலைகொடு அல்லது சோறு கொடு!"
திடீரென்று முறுக்கேறி விறைத்த இதயத் தந்தியில் அந்தக் கோஷம் மோதி மோதி ஏதோ ஒரு இன்ப நாதத்தை இசை மீட்டி எழுப்புவது போல் அவன் உணர்ந்தான். அந்த நாதம் அவன் உதட்டை அசைத்தது; உடலை அசைத்தது; உள்ளத்தை அசைத்தது. உலர்ந்து பொருக்காடிப் போன அவன் உதடுகள் அந்தக் கோஷத்தை முணுமுணுத்தன. வற்றி வறண்ட தொண்டைக்குழி அந்தக் கோஷத்தை வெளியிட முயன்று கரகரத்தது.
ஊர்வலம் சென்றுகொண்டிருந்தது.
காந்த ஊசி அருகில் வந்ததும் துள்ளித் தாவிப்போய் ஒட்டிக் கொள்ளும் இரும்புத் தூளைப் போல், பல பேர் அந்த ஊர்வலத்தோடு சங்கமமானார்கள். அந்த மனிதப் பிரவாகத்தின் ஆகர்ஷண சக்தி அவனையும் கவர்ந்து. இழுத்தது; அவன் கால்கள் அவனையுமறியாமல் இடம் பெயர்த்தன.
"வேலைகொடு அல்லது சோறுகொடு!" திடீரென்று அவன் தொண்டை கட்டுடைந்து கும்பிக் கொதிப்பின் அக்கினி ஜ்வாலையோடு கொதித்து எழுந்தது; அவனும் அந்தக் கோஷத்தை வாய்விட்டு முழங்கிக் கொண்டே ஊர்வலத்தோடு சங்கமமானான்.
"வேலைகொடு அல்லதுசோறுகொடு"
கூடல்மாநகரை வளைத்து வேலி கட்டிய பண்டைய பௌராணிக ஆலவாய்க் கால சர்ப்பம்போல், அந்த ஊர்வலம் நகரின் பிரதான வீதிகளையெல்லாம் சுற்றி வந்து மதுரை நெசவுத் தொழிலாளர் சங்கக் காரியாலயத்தின் முன்னர் வந்து முடிவடைந்தது. ஊர்வலம் அந்த இடத்தில் வந்து முடிந்து அணி பெயர ஆரம்பித்தது. . கோஷ முழக்கங்கள் முடிவுற்ற பிறகு, அவனிடம் குடிகொண்டிருந்த ஆவேச உணர்ச்சி திடீரென்று குடியோடிப் போனது போலிருந்தது; மறுகணமே அத்தனை நேரமும் பம்மிப் பதுங்கிக் கிடந்த களைப்பும் பசியும் அவனை ஆட்கொண்டு அலைக்கழித்தன. அவன் கண்கள் இருண்டு மங்கின; கால்கள் குழலாடித் தளர்த்தன; பற்கள் நெரிந்தன, அறிவு மங்கிக் கழன்றோடுவது போலிருந்தது...
அவன் திடீரென்று சாய்ந்துவிட்டான்!
"ஐயையோ! யாரோ மயக்கம் போட்டு விழுந்துட்டாரு" என்ற கூக்குரல் அவனுக்குப் பின் புறமிருந்து கிளம்பியது.
மறுகணமே அவனைச் சுற்றிலும் ஒரு பெருங்கூட்டம் கூடி விட்டது. இரண்டு ஊழியர்கள் கூட்டத்தைப் பிளந்து கொண்டு, அவனருகே வந்து அவனைத் தூக்கித் தம்மீது சாய்த்துக் கொண்டார்கள்.
"காத்து வர்ரதுக்கு இடம் கொடுங்கய்யா!"
"ஓடிப்போய் தண்ணி கொண்டாங்க!"
"உசுருக்கு ஆபத்தில்லையே!" "பசிக்கொடுமை தானோ, என்னவோ"
பல்வேறு குரல்கள் எங்கிருந்தோ தங்கள் அனுதாபத்தைக் காட்டிக் கொண்டன, அதற்குள் அவனைத் தூக்கிப் பிடித்திருந்த ஊழியர் "காரியதரிசியைக் கூப்பிடுங்க" என்று சத்தமிட்டார். தண்ணீர் வந்து சேர்ந்தது. அந்த ஊழியர்கள் அவன் முகத்தில் தண்ணீரைத் தெளித்து விசிறினார்கள்.
காரியதரிசி ராஜுவும் அங்குவந்து சேர்ந்தார்;சுற்றிக் குழுமி நின்ற கூட்டம் அவருக்கு வழிவிட்டு ஒதுங்கியது.
"யாரது? என்ன விஷயம்?" என்று கூறிக் கொண்டே , அவனது கை நாடியைப் பிடித்துப் பார்த்தார் ராஜு "ஒண்ணும் ஆபத்தில்லை. மயக்கம்தான்" என்று அவர் வாய் முனகியது. அவர் அந்த ஊழியர்களைப் பார்த்து, "எதற்கு இத்தனை கூட்டம்? இவரை உள்ளே எடுத்து வாருங்கள்" என்று கூறியவாறே எழுந்திருந்து காரியாலயத்துக்குள் சென்றார்; ஊழியர்கள் அவனைக் காரியாலய வெளி வரந்தாவில் கொண்டு வந்து சேர்த்தனர்.
"இவர் யார் தெரியுமா?"
"தெரியலியே!"
அதற்குள் அங்கு குழுமி நின்ற கூட்டத்திலிருந்து ஒருவர் குரல் கொடுத்தார்;"யாரோ தெரியலை. டவுன்ஹால் பக்கம் இவர் நம்ம ஊர்வலத்திலே வந்து கலந்துக்கிட்டதை நான் பார்த்தேன்,"
சிறிது நேரத்தில் அவனுக்குப் பிரக்ஞை மீளத் தொடங்கியது. கை கால்கள் அசைந்தன; நெடுமூச்சு வாங்கியது; உதடுகளும் கண்ணிமைகளும் லேசாகத் துடித்தன. அவன் கண்களைத் திறந்து சுற்று முற்றும் வெறிக்க வெறிக்கப் பார்த்தான்:
"தண்ணீர்!" அவன் குரல் உள்வாங்கி விக்கி ஒலித்தது. ஊழியர்கள் அவன் வாயில் தண்ணீர் ஊட்டினார்கள்; தண்ணீர் தொண்டைக் குழியை நனைத்தவுடன் அவனுக்குச் சிறிது தெம்பு வந்தது. கையை ஊன்றி எழுந்து உட்கார்ந்தான் எதிரே கூடிநின்ற கூட்டத்தைத் திருகத்திருக விழித்துப் பார்த்தான். அவனுக்கு நடந்து போன நிகழ்ச்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக நினைவுக்கு மீண்டன; அந்த நினைவின் அதிர்ச்சி அவன் முகத்தில் பிரதிபலித்தது.
"இப்போ எப்படி இருக்கு?" என்று பரிவோடு கேட்டார் ராஜு.
அவன் அதற்குப் பதில் பேசவில்லை . சிறிது நேரம் கழித்து, 'பசிக்குது!' என்று அடைபட்ட குரல் அவன் தொண்டைக் குழியிலிருந்து திமிறிப் பிறந்தது.
உடனே ராஜு எதிர்த்தாற்போலுள்ள நாயர் ஹோட்டலிலிருந்து ஏதாவது டிபன் வாங்கி வரச் சொன்னார்; ஊழியர்கள் இட்டிலியும் டீயும் வாங்கி வந்தார்கள்.
"இதைச் சாப்பிடுங்கள்" என்று வேண்டிக்கொண்டார் ராஜு. அவன் அவற்றை மெதுவாகச் சாப்பிட்டு முடித்து விட்டு, கையைக் கழுவி முடித்ததும் மீண்டும் வந்து உட்கார்ந்து கொண்டான்.
"இவ்வளவு பசி இருந்தும்கூட ஊர்வலத்தில் எப்படி வந்து சேர்ந்தீர்கள்?" என்று வியப்போடு கேட்டார் ராஜு,
அவன் அவர் முகத்தை ஏறிட்டுப்பார்த்தான்.
"என்னையும் அறியாமல்தான் வந்து சேர்ந்து கொண்டேன். ஊர்வலத்தைப் பார்த்ததும், என்னமோ ஒரு ஆவேசம் என்னை அதில் கொண்டு தள்ளியது. பசி கூடத் தெரியலை" என்று வெள்ளைக் குரலில் பதில் சொன்னான் அவன். பிறகு அவன் அன்பும் ஆதரவும் பொங்கிப் பிரதிபலிக்கும் ராஜுவின் கண்களை வெறித்து நோக்கியவாறே, "ஐயா, என்னைக் காப்பாற்றியதற்கு, உங்களுக்கு தான் ரொம்பவும் கடமைப்பட்டவன்" என உணர்ச்சி ததும்பச் சொன்னான்.
"நாங்கள் தான் உங்களுக்குக் கடமைப்பட்டவர்கள், இத்தனை பசிக் கொடுமையிலும் எங்கள் ஊர்வலத்தில் கலந்து உங்கள் அனுதாபத்தையும் ஆதரவையும் காட்டிக் கொண்டீர்களே. நான்தான் உங்களுக்கு நன்றி செலுத்த வேண்டும்" என்று தன்னடக்கத்தோடு கூறிக் கொண்டார் ராஜு.
சிறிது நேர மௌனத்துக்குப் பிறகு காரியதரிசி ராஜு அவனை நோக்கிக் கேட்டார்.
”உங்களுக்கு இந்த ஊர் தானா?”
"இல்லை, அயலூர். பிழைக்கலாம் என்று வந்தேன்.' வந்த இடத்திலே..." அவன். பெருமூச்செறிந்தான்.
"உங்கள் பெயர்?
"மணி".
மணிக்குப் பசி வேதனை தணிந்து விட்ட போதிலும் எய்ப்பும் களைப்பும் குறையவில்லை. அவனது ஆயாசம் முகத்தில் வியர்வைத் துளிகளாகத் துளித்தது. அவனது ஆயாசத்தைக் கண்டுணர்ந்த ராஜு அவனை நோக்கி, "உங்களுக்கு இப்போது ஓய்வு தேவை. பேசாது படுத்துத் தூங்குங்கள், பிறகு பார்க்கலாம்" என்று கூறியவாறு, ஒரு ஊழியரை, காரியாலயத்தின் ஒரு பகுதியில் மணிக்குப் படுக்கை விரித்துப் போடச் சொன்னார்.
மணி உள்ளே சென்று படுத்துக்கொண்டான்.
ராஜு தம்மைச் சூழ்ந்து நின்ற நெசவாளர் ஊழியர்களை நோக்கி, "எல்லோரும் போய்ச் சாப்பாட்டை முடித்து விட்டு, பத்துமணி சுமாருக்கு வந்து சேருங்கள். அந்த ரிப்போர்ட்டைக் குறையும் முடித்து விடலாம் என்று கூறினார். அந்தக் காரியாலயத்தில் மணியைத் தவிர வேறு யாருமில்லை; காரியாலயத்துக்கு வெளியேயுள்ள வெட்ட வெளியில் மட்டும் இரண்டு ஊழியர்கள் மூங்கில் தட்டிகளில் போஸ்டர்கள் ஒட்டிக்கொண்டிருந்தார்கள்.
மணியின் உடம்பு பலவீனத்தாலும் களைப்பாலும் அலுத்துப் போயிருந்தும் கூட, அவன் மனம் அன்றைய நிகழ்ச்சிகளால் ஏற்பட்ட உள்ளச் சிலிர்ப்போடு அவனைத் தூங்க விடாமல் அலைக்கழித்தது. மணி புரண்டு படுத்தவாறே அந்த அறையின் சூழ்நிலையைக் கவனித்தான்.
அறையின் மூலையிலே கிடந்த சிறிய மேஜைமீது ஒரு ஹரிக்கேன் விளக்கு மங்கிய ஒளியைப் பரப்பிக் கொண்டிருந்தது;அந்தமங்கிய ஒளிமூட்டத்தில் அந்த அறை ஏதோ ஒரு சொப்பனத் தரிசனம் போல் மணிக்குக் காட்சியளித்தது. அந்த அறையின் சுவர்களைப் பல தலைவர்களின் சித்திரங்கள் அலங்கரித்தன;வாசல்புறத்தில் பல துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டநோட்டீஸ்போர்டு ஒன்று தொங்கியது. அதற்கு அருகில் ஒரு மெகபோன் குழல் தொங்கிக் கொண்டிருந்தது. அறையின் ஒரு மூலையில் ஒரு மண் பானையும், இன்னொரு மூலையில் கிழிந்த காகிதங்களும், கரிந்த தீய்ந்த சிகரெட் துண்டுகளும், தீக்குச்சிகளும் கிடந்தன. சுவரையொட்டியிருந்த அலமாரியில் பற்பல பைல்களும் புத்தகங்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
மணி தன் கண்களை மூடினான்; எனினும் மனம் மட்டும் மூடவில்லை. அவன் மனம் சென்றுபோன நாட்களை எண்ணியது. கடந்த காலத்தில் தான் எத்தனை துன்பங்கள்! அனுபவங்கள்! படிப்பினைகள்!.
திருநெல்வேலியை விட்டு இரவோடு இரவாய் ஓடிவந்த மணி ரயிலில் வரும்போதே தன் எதிர்காலத்தைத் திட்டமிட்டான். இருளின் அந்தகாரத்திலே தாள லயத்தோடு ஆடிக் கொண்டு சென்ற ரயிலைப் போலவே அவன் கற்பனையும் ஆடிப் பாடித் தன்னிச்சையாகச் சென்றது.
'திருச்சிக்குச் சென்று அங்குள்ள நண்பன் ஒருவனைச் சந்தித்து.ஒரு வேலை தேடிக்கொள்ள வேண்டும்; பின்னர் அம்மாவிடம் மன்னிப்புக் கேட்டுக் கடிதம் எழுதி அவளை வரவழைக்க வேண்டும்; கமலாவையும் முறைப்படி கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்; அம்பாசமுத்திரத்தில் நிகழ்ந்த பயங்கரங்களையெல்லாம் மறந்து விட்டுப் புது வாழ்க்கை தொடங்கவேண்டும்..'
அந்தப் புது வாழ்க்கையைப் பற்றிய கனவிலேயே அவன் திருச்சி போய்ச் சேர்ந்தான்.ஆனால் அங்கு அவன் தேடிச் சென்று நண்பன்தான் இல்லை.அவனைப் பற்றித் தகவல் தெரிவிப்பாரும் இல்லை!
மணி திருச்சியில் தெருவில் நின்றான்; பையிலுள்ள இருபது ரூபாயும் சொச்சமும் அவனுக்குச் சிறிது தெம்பளித்தது.
இந்த ரூபாயும் செலவழிவதற்குள் ஊர் சென்று விடலாமா? சே! ஊருக்குச் சென்று யார் முகத்தில் எப்படி விழிப்பது? சேச்சே! ஊர் திரும்பக் கூடாது. இவ்வளவு பெரிய ஊரில் எனக்கு ஒரு வேலையுமா கிடைக்காது?...
அவன் தன் திட்டம் இன்று அல்லது நாளை நிறைவேறி விடும் என்ற நம்பிக்கையோடு வேலை தேடி அலைந்தான். பஸ் கம்பெனி, ரயில்வே ஸ்டேஷன், காபி ஹோட்டல், சினிமாக் கொட்டகை, ஒர்க் ஷாப், கடை - எங்கெல்லாமோ சுற்றியலைந்தான். அவனது நம்பிக்கைகள் தவிடு பொடியாவதற்கு அதிக நாட்கள் பிடிக்கவில்லை.
அவன் வேலையற்று, பணமற்று: உணவற்று, தெருவில் திண்டாடி நின்றான்....
அந்த அனுபவங்களை எண்ணியபோது அவன் கண்ணில் நீர் கரித்தது. எத்தனை துன்பங்கள்! - ஒரு சட்டைக்காரத் துரை அவனை நாயை விட்டு விரட்டியடித்தான்; ஆபீஸிலுள்ள லேடி டைபிஸ்டோடு சரச சல்லாபம் நடத்திக் கொண்டிருந்த ஒரு கம்பெனி மேனேஜர் அவன் மீது காரி உமிழ்ந்தான்; ஒரு கருணையற்ற ஹோட்டல் முதலாளி அவன் மீது வெந்நீரைக் கொட்டி விரட்டியடித்தான்!....
அவனது கண்ணீரையும் கதறலையும் பசியையும் பட்டினியையும் பொருட்படுத்த, கருணை காட்ட, அவனுக்கு வேலை தர யாரும் முன் வரவில்லை; அவன் அந்த நகரத்தில் நாய் மாதிரித் திரிந்தான்; நாய் மாதிரித் தெரு ஓரங்களில் படுத்துத் தூங்கினான். பசித்து அழுதான்; கண்ணீர் விட்டான்.
கடைசியில் அவனும் அந்த நகரங்களிலுள்ள ஏழை பாழைகளைப்போல், கூலிவேலை தேடியலைந்தான். அந்த பிழைப்புக்கும் ஆயிரம் போட்டி; அடிபிடி. எனினும் உயிராசை அவனையும் அந்தப் போராட்டத்தில் ஈடுபடச் செய்தது. அவனும் ரயில், பஸ், பிரயாணிகளின் மூட்டை முடிச்சுகளைத் தூக்கிப் பிழைத்தான். பெட்டியடி, டீ ஹோட்டல்களில் பத்துப் பாத்திரம் துலக்கி ஒரு வேளைப் பாட்டைக் கழித்தான், கை வண்டி இழுக்கத் துணையாளாகச் சென்றான்; துட்டுக் கிடைத்த வேளையில் வயிற்றைக் கழுவினான்; கிடைக்காத வேளையில் பட்டினி கிடந்தான்.
அவனுக்கு வாழ்க்கையே மரத்துப் போய் விட்டது; மாறிப் போய் விட்டது. அவன் கமலாவை மறந்தான்; தாயை மறந்தான்; ஊரை மறந்தான்; உற்றாரை மறந்தான். எனினும் அவன் தன் சாண் வயிற்றை மட்டும் மறக்கவில்லை; மறக்க முடியவில்லை.
அந்த நாட்களில் அவன் உயிர் வாழும் போராட்டத்தின் சகல குரூரங்களையும் கண்டான்; அனுபவித்தான். ஒரு உருண்டைச் சோற்றுக்காகச் சண்டை பிடிக்கும் மனிதர்களை, ஒரு அணாக் காசுக்காக வெட்டுப்பழி குத்துப்பழியில் விமோசனம் தேடும் மக்களை, ஒரு நேரக் கஞ்சிக்காக உடம்பை அடகு வைக்கும் ஏழைப் பெண் மக்களை, பசிதாங்க முடியாது அரையணாப் பண்டத்தைத் திருடிவிட்டு அடி வாங்கி நைகின்ற ஜனங்களை - அவன் கண்டான்; பழகினான். ஆனால், அந்தக் குரூர சக்தி கொண்ட உயிர் வாழும் போரில் ஈடுபட்டிருந்த அதே மக்களிடம் அவன் கருணையைக் கண்டான்; மானாபிமானத்தைக் கண்டான். தரும சிந்தையைக் கண்டான்; நட்புரிமையைக் கண்டான்.
அந்த ஜனங்களின் உடம்பு வியர்வை பற்றி நாறியது; உடைகள் அழுக்குப் பற்றி நாறின; வாயும் நாவும் அசிங்கமான வார்த்தைகளைக் கக்கி நாறின; எனினும் அவர்தம் உள்ளங்களிலிருந்து திடீரென்று அவ்வப்போது நற்குணங்கள் பரிமளகந்தம் போல் வீசிப் பரவுவதையும் அவன் அனுபவித்தறிந்தான்.
'லட்ச லட்சமாகப் பணமிருந்தும், உழைப்பவனுக்குக் கிடைக்கும் ஓரணாக் காசையும் தட்டிப் பறிக்க எண்ணும் பிச்சைக்காரப் புத்தி அவர்களிடம் இல்லை; தங்கள் சொத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக, நாகரிகமாகப் பொய்கள் சொல்லி, நயவஞ்சகம் செய்யும் சின்னப்புத்தி அவர்களிடம் இல்லை. அவர்கள் பொய் சொன்னார்கள்: சண்டை பிடித்தார்கள்; திருடினார்கள்; சோரம் போனார்கள். எனினும் அத்தனையும் ஒரு சாண் வயிற்றைக் கழுவுவதற்காகத் தான் செய்தார்கள். தம் வயிறு நிறைந்து இருக்கும் சமயங்களில் அவர்கள் அந்தக் குரூர வாழ்க்கையை அதன் கோரங்களை வெறுத்தார்கள்; தம் செய்கைகளுக்காக வருந்தினார்கள்.
கடைத்தர வாழ்க்கையின் அத்தனை குரூரங்களையும் பயங்கரங்களையும், இழிதன்மைகளையும் அவன் கண்டான். அந்த வாழ்க்கைக்கும் தான் கனவு கண்ட வாழ்க்கைக்குமுள்ள வித்தியாசத்தையும் கண்டுணர்ந்தான். அவனுக்கு அந்த மக்களின் வாழ்க்கையை மாற்றுவதற்கு வழி கிடையாதா என்ற ஆவேசம் இருந்தது; அவர்களுக்கும் தங்கள் வாழ்வு மாறவேண்டும் என்ற தாகம் இருந்தது. எனினும் அந்த வாழ்வுக்குரிய பாதை அவனுக்கோ அவர்களுக்கோ தெரியவில்லை.
திருச்சியில் இருந்த சமயம், மணி ஒரு புதிய பிரபஞ்சத்திலேயே வாழ்ந்தது போன்ற அனுபவத்தைப் பெற்றான்; 'மதுரையிலேயே மில்லுக்கு ஆள் எடுக்கிறார்ளாம்!' என்று எவனோ சொன்னதைக் கேட்டுத்தான் அவன் மதுரைக்கு வந்து சேர்ந்தான்;ஆனால் மதுரையிலும் அவனுக்குத் திருச்சி அனுபவம் தான் காத்திருந்தது.
மதுரை வந்து ஏமாந்து, மணி பட்ட சிரமங்கள் கொஞ்சமல்ல; திருச்சி அவனுக்குப் பழகிப்போன இடமாயிருந்தது. மதுரையிலோ?....
அவன் மனம் கடந்த காலச் சிந்தனைகளை எண்ணியெண்ணி உள்ளுக்குள் குமைந்துகொண்டிருந்தது; அவன் தன் வாழ்க்கையின் பயங்கரத்தைப் பற்றிச் சிந்தித்தவாறே கண்களை மூடினான்; சிறிது நேரத்தில் தூக்கம் அவனை ஆட்கொண்டது...
காலை நேரத்து இளவெயில் தன் மீது பட்டு உறைப்பதை உணர்ந்தவுடன் மணி கண் விழித்துத் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான்; அவனுக்கு எதிரே ராஜு சிகரெட்டைப் புகைத்தவாறே பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார். மணி தூங்கி எழுந்ததைக் கண்டதும், அவர் அவன் பக்கம் திரும்பி, "நல்லாத் தூங்கினீர்கள் போலிருக்கே?" என்று சௌஜன்ய பாவத்தோடு கேட்டார்.
அதற்குள் எதிர்த்த நாயர் ஹோட்டல் பையன் இரண்டு கப் டீ கொண்டு வந்து கொடுத்தான்.
டீயை எடுத்து மணியிடம் கொடுத்தவாறே, "சாப்பிடுங்க தம்பி" என்றார் ராஜு. மணி டீயைச் சாப்பிட்டு முடித்தான்.
ராஜு தமது பையிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து நீட்டியவாறு, "சிகரெட்வேணுமா?” என்று அருமையோடு கேட்டார்.
"இல்லை சார், எனக்குப்பழக்கமில்லை
"இப்போது உடம்புக்குத்தேவலையா?"
"ம்" என்று முனகினான் மணி
"தம்பி, ஊரிலே உங்களுக்கு என்ன தொழில்
"ஊரில் நான் தொழில் செய்யலை; காலேஜில் படித்துக்கொண்டிருந்தேன்."
"காலேஜிலா? அப்போ, உங்கள் குடும்பம் கொஞ்சம் வசதியான குடும்பமென்று சொல்லுங்கள்..
'அப்படித்தான் இருந்தது."
"சரிபடித்துக் கொண்டிருக்கும்போதே வேலை தேடி வரக் காரணம்?"
அவரிடம் தனது விருத்தாந்தத்தை எல்லாம் சொல்லிவிட வேண்டும் என்று மணிக்குத் தோன்றியது. வீட்டை விட்டு வெளியேறியதிலிருந்து தன்னிடம் இந்த மாதிரிப் பேசிப் பழகி, தன் மனப்பாரத்தைக் குறைக்கச் செய்ய, இதுவரை இதுபோல் எந்த ஜீவனும் முன்வரவில்லை என்ற எண்ணம், அவனுக்கு ராஜுவின் மீது திடிரென்று ஒரு பிரியத்தையும் மதிப்பையும் உண்டாக்கியது. மணி தன்னைப் பற்றிய விவரங்களையெல்லாம் அவரிடம் சொல்லி முடித்தான். அவன் சொல்வதையெல்லாம் மிகுந்த கவனத்தோடும் அக்கறை போடும் கேட்டுக் கொண்டிருந்தார் ராஜு.
மணிசொன்னான்: "வீட்டைவிட்டு ஓடிவந்தது முதல் நான் பட்டபாடு நாய் கூடப்பட்டிருக்காது. வேலை கிடைக்காது அலைந்து திரிந்து கடைசியில் இக்கோலத்துக்கு ஆளானேன், என் அப்பாவைப்போல் நானும் உயிரை விட்டிருந்தால் எனக்கு இந்தக் கதி நேர்ந்திருக்காது. அதற்குக்கூடத் துணிச்சல் இல்லை, எனக்கு"
இத்தனை நேரமும் மணி பேசுவதையே கவனித்துக் கேட்டு வந்த ராஜு மீண்டும் பேசத் தொடங்கினார்:
"மிஸ்டர் மணி உங்கள் வரலாற்றைக் கேட்டதில் என் மனம் மிகுந்த வேதனை அடைகிறது. ஆனால், நீங்கள் உங்கள் தந்தையைப் போல் தற்கொலை செய்து கொள்ள முனையாது, இத்தனை கஷ்டங்களுக்கிடையிலும் உயிர் வாழ விரும்பியது பற்றி மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் நினைப்பது போல், தற்கொலை செய்து கொள்வது அப்படியொன்றும் துணிச்சலான காரியமல்ல. வாழ்க்கையில் விரக்தியடைந்த எந்தப் பைத்தியக்காரனும் லகுவில் செய்து கொள்ளக்கூடிய காரியம் அது.தற்கொலை என்பது கோழையின் கண்ணில் படும் முதல் புகலிடம். வாழ்க்கையின் சிரமங்களை எதிர்த்துப் போராடத் துணிச்சலற்றுத் தன்னைத் தானே ஒருவன் அழித்துக் கொள்வதா? ஆனால், நீங்கள் வீட்டைவிட்டு ஓடிவந்ததையும் நான் துணிச்சலான காரியம் என்று சொல்லமாட்டேன். அதுவும் கோழைத்தனம் தான். எங்கு ஓடிவிட முடியும்? இமயம் முதல் குமரி வரையிலும் ஓடியலைந்தாலும், நாடெங்கிலும் இதே நிலைமைதானே.இதிலிருந்து நீங்கள் மட்டும் தப்பித்துவிட முடியுமா? நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இந்த உலகப் போக்கிற்கு நீங்கள் கட்டுப்பட்டவர்கள். இதை உங்கள் இத்தனை நாள் அனுபவமே கற்றுக் கொடுத்திருக்குமே!"
இந்த வாக்கியத்தைக் கேட்டதும், மணிக்கு ஏதோ திடீரென்று ஞாபகம் வந்தது.ஆஸ்பத்திரியில் கிடந்தபோது சங்கரும் இப்படித்தானே சொன்னான்?... "நீங்கள் சொல்வது சரிதான் என்று ஆமோதித்தது அவன் வாய். தன் கஷ்டங்களுக்குரிய காரணத்தை அவன் இத்தனை ஸ்தூலமாக இதற்கு முன்னர் தொட்டுணர்ந்ததில்லை.
"இந்த உண்மையை மட்டும் நீங்கள் உணர்ந்து விட்டால், அப்புறம் தற்கொலையிலோ, ஊரை விட்டு ஓடுவதிலோ அர்த்தமேயில்லை என்பதையும் அறிந்து கொள்வீர்கள். நானும் உங்களைப்போல் பல துன்பங்களை, கொடுமைகளை அனுபவித்திருக்கிறேன்; பசி, பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம் அத்தனையிலும் அடிபட்டுக் காய்ந்திருக்கிறேன். ஆனால், உயிர் வாழும் வேட்கையும், தைரியமும் தான் என்னை வாழ வைத்தன. நமது கஷ்டங்களுக்குரிய காரணத்தைக் கண்டறிந்து அதை அழிக்க முயலவேண்டுமே ஒழிய நம்மை நாமே அழித்துக் கொள்ளக் கூடாது; அந்தக் காரணத்தை அறிந்து அழிக்க முயலும் முயற்சியில் நாம் அழிந்து போனாலும் பரவாயில்லை; நாம் அழிந்தாலும் நம்மைச் சார்ந்தவர்களும் சந்ததியார்களும் வாழ்வார்கள் என்ற திருப்தியாவது நமக்கு உண்டாகும். அதுதான் மனிதவாழ்க்கை!"
மணி அவரது பேச்சின் அழுத்த பாவத்திலும், உறுதியிலும், கவர்ச்சியிலும் தன்னையுமறியாமல் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.அவரது பேச்சு அவன் மனத்தில் புதியதொரு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் உருவேற்றுவது போலிருந்தது.
"மிஸ்டர் மணி, நீங்களும் பாதிக்கப்பட்ட ஒரு 'நெசவாளிக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே உங்களோடு இவ்வளவு உரிமையோடும் அக்கறையோடும் பேசுகிறேன், உங்கள் குடும்பமும் உங்கள் வாழ்வும் சீர்குலைந்ததற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா? இந்தச் சர்க்காரின் ஜவுளிக்கொள்கை தான் அடிப்படைக்காரணம். அதன் காரணமாகத் தான் இன்று பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் சீரழிகின்றன. இந்த நிலைமையை மாற்று வதற்காகத் தான் இங்குள்ள நெசவாளிகள் போராடுகிறார்கள். இது போல் நாடெங்கிலும் போராட்டம் பரந்து விரிந்து பலம் பெற்று விட்டால், ஒன்று இந்த சர்க்காரின் ஜவுளிக் கொள்கை மாறும், அல்லது இந்த ஆட்சி மறையும். உலகத்தை வாழ வைக்க முடியும் என்ற நம்பிக்கையில்தான் என்போன்ற ஊழியர்கள் எவ்வளவோ சிரமங்களைத் தாங்கிப் போராடி வருகிறோம்."
ராஜு கூறியதை மணியால் மறுக்க முடியவில்லை; அவன் அவர் கூற்றை ஆமோதித்தான். பின்னர் ராஜூ அவனுக்கும் சர்க்காரின் ஜவுளிக் கொள்கை பற்றியும் அரசியல் கொள்கை பற்றியும் விளக்கிச் சொன்னார். அதைக் கேட்கக் கேட்க அவன் உள்ளம் தன் தந்தையின் மரணத்துக்குரிய பிரதான காரணத்தின் ஜீவநாடியைத் தொட்டறிந்தது; தான் வேலை கிடைக்காமல் திண்டாடியதற்கும், பசியால் வாடியதற்கும், மயங்கி விழுந்ததற்கும் உரிய காரணத்தின் மூலாதாரத்தைக் கண்டறிந்தது; கடந்த காலத்தில் தன்னோடு பழகி வந்த ஏழை மக்களின் இறுமைக்கும் இழி நிலைமைக்கும் குரூர வாழ்க்கைக்கும் காரணமான விஷ மூலம் எங்கிருக்கிறது என்ற உண்மை யையும் கண்டுணர்ந்தது.
அந்த உணர்வு அவன் மனத்தில் ஊற ஊற, அவனது இதயத்தை இறுக்கிப் பிணித்திருந்த பல்வேறு விதமான சந்தேகங்கள், குழப்பங்கள், முடிவுகள் எல்லாம் இற்றுத் தேய்ந்து அறுபடுவது போல் அவனுக்குத் தோன்றியது. அந்த தளைகளின் பிடிப்புத் தளரத் தளர, அவன் உள்ளத்திலே புகைமூடிப் பூத்துக் கிடந்த தர்மாவேச உணர்ச்சி சத்திய வேட்கை கொண்டு விம்மிப் புடைத்து விகசித்துப் பரந்தது. அவன் கண்களில் புதியதொரு ஒளிசுடர் விட்டது.
திடீரென்று அவன் ராஜுவை நோக்கிக் கேட்டான்: "உங்கள் போராட்டத்தில் நானும் கலந்து கொள்ளக் கூடாதா?" ராஜூவின் முகத்தில் மெல்லிய புன்னகை திரிந்து மறைந்தது. நேற்றே நீங்கள் அதில் பங்கு பெற்று விட்டீர்களே. அதனால்தான் உங்களைப் பற்றி இவ்வளவு தூரம் விசாரித்தேன். இவ்வளவு நேரம் பேசினேன். உங்கள் மனத்தின் நல்லுணர்ச்சிதானே உங்களை எங்கள் மீது அனுதாபம் கொள்ளச் செய்தது இல்லையா?"
மணி மௌனமாக இருந்தான்; ராஜு சொன்னார்: "மிஸ்டர் மணி, நீங்கள் படித்த வாலியர். நீங்கள் மட்டும் சிறிது சிரத்தையெடுத்துப் பணியாற்றினால், நமது விடுதலைப் போராட்டத்துக்கு நீங்களும் பேருதவி செய்ய முடியும். அதைத்தான் நானும் எதிர்பார்க்கிறேன்.
"நான் என்ன செய்ய வேண்டும்." என்று அப்பாவி போலக் கேட்டான் மணி.
"இங்கேயே தங்கிவிடுங்கள். எங்கள் உணவையும் பசியையும் பகிர்ந்து கொள்ளுங்கள் சம்மதம்தானே!"
மணிதலையை அசைத்தான்.
ராஜு அவனைத் தோளில் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தினார்.