பஞ்சும் பசியும்/024-028
24
மாலை மயங்கும் நேரம்.
அம்பாசமுத்திரம் ரயில்வே ஸ்டேஷனில் திருநெல்வேலியிலிருந்து வரும். செங்கோட்டை பாஸஞ்சரை எதிர்நோக்கி, பிரயாணிகள் பொறுமையை இழந்து, தவித்துக்கொண்டிருந்தார்கள் காத்திருந்த பிரயாணிகளின் பொறுமையை விட ரயிலை எதிர்நோக்கிக் காத்து நின்ற வடிவேலு முதலியாரும், சங்கரும் வேறு சில நெசவாளிகரும் பொறுமையை இழந்து புழுங்கிக்கொண்டிருந்தார்கள்.
குறிப்பிட்ட நேரம் கடந்து சுமார் பதினைந்து நிமிஷங்கள் ஆகியும், ரயில் கல்லிடைக்குறிச்சியை விட்டு 'அவுட்' ஆகவில்லை.
"இந்த எழவு ரயில் என்னிக்குத் தான் நேரங் காலத்திலே வந்து தொலைஞ்சிது?" என்று சலித்துக் கொண்டார் ஒரு நெசவாளி அந்த ரயிலில் அவர்கள் மதுரை நெசவாளர் சங்கக் காரியதரிசி ராஜுவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் மத்தியான வண்டிக்கே அவர் வந்து சேர்ந்து விடுவார் என்று தான் தகவல். மத்தியான வண்டிக்கு அவர்கள் எல்லோரும் தலைவரை வரவேற்க மாலையும் கையுமாக வந்து நின்று ஏமாந்து திரும்பினார்கள். அவர் மதியம் வண்டிக்கு வரவில்லை. எப்படியும் மாலை வண்டிக்கு வந்து விடுவார் என்று நம்பினார்கள். ஆனால் அந்த ரயிலின் தாமதமோ அந்த நம்பிக்கையைக் கூடச் சிதற அடித்துவிடும் போலிருந்தது.
"என்ன சங்கர், ஏழரை மணிக்குக் கூட்டத்தை ஆரம்பிச்சாகணுமே!" என்று தவித்தார் வடிவேலு முதலியார். "நான் அப்பவே சொன்னேன். நேரா திருநெல்வேலிக்கு ஒரு ஆளை அனுப்பி, கையோட கூட்டிக்கிட்டு வரணும்னேன். கேட்டாத்தானே?" என்று ஒரு நெசவாளி தமது எரிச்சலை வெளியிட்டார்.
சங்கர். அவர்களது பொறுமையின்மையைக் கண்டு அவர்களுக்குத் தைரியம் கூறினான்."ரயில் தான் வரட்டுமே! எப்படியும் இந்த ரயிலில் வந்துவிடுவார். திருநெல்வேலியிலிருந்து என் நண்பர் அவரைத் தாமே கூட்டிக்கொண்டு வருவதாக எழுதியிருக்கிறார். எப்படியும் இந்த வண்டியில் வந்து விடுவார்கள்!"
அதற்குள் இன்னொரு நெசவாளி பெருமூச்செறிந்து கொண்டே சொன்னார்: "வந்தாவாச்சு, தம்பி இல்லேன்னா, நாமும் இன்னிக்கில் கூட்டம் நடத்தினாப்பிலே தான்; நாளைக்கு நம்ம போராட்டத்தையும் ஆரம்பிச்சாப்போலே தான்!"
அவர்கள் அனைவரும் கிழக்குத் திக்கிலே ரயிலின் கரும்புகை தெரிகிறதா என்று கண்ணை விழித்து விழித்தும் பார்த்துக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் மனத்தில் இருந்த கவலையெல்லாம் அன்றைய பொதுக் கூட்டம் சிறப்பாக நடந்தேற வேண்டும் என்பதும், மறுநாள் தொடங்கவிருக்கும் போராட்டத்துக்கு எந்தவித விக்கினமும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதும் தான்.
சென்ற ஒரு சில மாதங்களுக்குள்ளாக அம்பாசமுத்திரத்திலுள்ள நெசவாளர்களின் நிலைமை பெரிதும் மாறிவிட்டது.
ஏதோ அரைப்பட்டினி குறைப் பட்டினியாகவாவது வாழ்க்கை நடத்துவதற்கு, அவர்களுக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்னே நூல் கிடைத்து வந்தது. இப்போது அந்த நிலைமையும் தட்டுக் கெட்டுப் போய் விட்டது. நைஸ் ரக நூலை வாங்கி நெய்து பிழைத்து வந்த நெசவாளி களுக்கோ வள்ளிசாக நூலே கிடைக்கவில்லை. மலிந்த ரக நூல்களை வாங்கி நெய்து பிழைத்து வந்த நெசவாளிகளுக்கோ, பத்து நாட்களுக்குப் போதுமான வருமானம் கூடக் கிடைக்கவில்லை. நிலைமை சீர் திருந்துகிற வரையிலும் எப்படியாவது, வாயை வயிற்றைக் கட்டியாவது, காலம் தள்ளிவிடலாம் என்று எண்ணியிருந்தவர்கள் எண்ணத்திலும் மண் விழுந்துவிட்டது. தறித்தொழில் முடக்கப்பட்டவுடன், பலர் வேறு சில்லறைத் தொழில்களைத் தேடியலைந்தார்கள்; மணிமுத்தாறு அணைக்கட்டு வேலையில் கூலி வேலை தேடிப் பல பேர் சென்றார்கள்; சென்றவர்களில் முக்காலே மூன்று வீசம் பேர் வேலை கிடைக்காது திரும்பி வந்தார்கள். ஒரு சிலர் இருக்கின்ற சொத்து பத்துக்களையெல்லாம் விற்றுக் காசாக்கிக் கொண்டு, பட்டணக் கரைகளுக்குப் பிழைப்புத் தேடிச் சென்றார்கள்; சிலர் மரியாதையோடும் மானத்தோடும் பிறந்து வளர்ந்து ஜீவித்த மண்ணில், பட்டினி கிடந்து செத்து அபக்கியாதியடைவதை விட எங்கேனும் அயலூருக்குச் சென்றாவது சாகலாம் என்று பயணப்பட்டார்கள்.
ஆனால், அதே சமயத்தில் வேறு பல நெசவாளிகள் என்ன கஷ்டங்கள் நேர்ந்தபோதிலும் பிறந்த மண்ணையும், செய்த தொழிலையும் விட்டுப் பிரிவதில்லை என்ற வைராக்கிய சித்தத்தோடு, நெசவாளர் சங்கத்தில் ஒன்றுபட்டு நின்று தங்கள் உரிமைகளுக்காகப் போராட முன் வந்தார்கள்; சங்கத்தின் மூலம் தங்கள் கண்டங்களுக்கு நிவாரணம் தேட முடியும் என்ற நம்பிக்கைக்கு ஆளானார்கள்; தங்கள் கஷ்டங்களின் காரணகாரியத் தொடர்பைப் புரிந்து கொண்டு, தங்கள் தலை விதியைத் தாமே நிர்ணயிக்க முன் வந்தார்கள்.
சுருங்கச் சொன்னால் அவர்கள் அனைவரையும் பல்வேறு கஷ்ட நஷ்டங்கள் நெருப்பைப் போல் சுட்டுத் தகித்துக் கொண்டிருந்தன. ஆனால் ஒரு புறத்திலோ அந்த நெருப்பின் தகிப்பைத் தாங்கி நிற்க முடியாமல் சிலர் நீறாகி, பஸ்மீகரம் ஆனார்கள்; மறுபுறத்திலோ அந்த நெருப்பின் தகிப்பையும் ஜ்வாலையையும் உறுதியோடு தாங்கிக் கொண்டு சிலர் நெருப்பிலிட்ட இரும்பைப் போல் பதப்பட்டு உருக்காக மாறினார்கள்!
வடிவேலு முதலியாரும் சங்கரும் கடந்த மாதங்களில் சங்கத்தைப் பலப்படுத்துவதில் முழுமூச்சுடன் வேலை செய்து, சுமார் நூறு நெசவாளிகளைச் சங்கத்தில் அங்கத்தினராக்கினார்கள். சங்கத்தில் அங்கத்தினராகச் சேர்ந்த நெசவாளிகள் தங்கள் உரிமைகளை உணர்ந்து, தங்கள் கோரிக்கைகளுக்காகப் பல வழிகளிலும் போராடினார்கள். தாங்கள் கஷ்டங்களையும் கோரிக்கைகளையும் அரசியல்வாதிகளுக்கும், சர்க்காருக்கும், மக்களுக்கும் தெரியப்படுத்தினார்கள். பாவுக்கூலியைக் குறைப்பதற்காக உள்ளூர் முதலாளிகள் செய்த சதியை அம்பா சமுத்திரம் தாசில்தாரைப் பேட்டி கண்டு, அவர் தலையீட்டின் மூலம் முறியடித்தார்கள். அதன்பின் மாதாமாதம் தங்கள் வாழ்க்கைச் செலவுக்குப் போதிய அளவு நூல் கிடைக்க வேண்டும் எனவும், தறி ஒன்றுக்குக் குறைந்த பட்சம், நூறு ரூபாயாவது மான்யம் தர வேண்டுமெனவும் அவர்கள் அரசியலாரைக் கோரினார்கள். தமது கோரிக்கைகளைப் போர்டுகள், துண்டுப் பிரசுரங்கள், சிறு கூட்டங்கள் முதலியனவற்றின் மூலம் பொதுமக்களுக்கு எடுத்துரைத்து ஆதரவு திரட்டினார்கள். அம்பாசமுத்திரத்தில் முகாம் போட்டிருந்த சேர்மாதேவி உதவிக் கலெக்டரிடம் தமது கோரிக்கைகளைக் கோஷங்களாக முழக்கியவாறு ஊர்வலமாகச் சென்று மனுச் செய்து மகஜர் சமர்ப்பித்தார்கள்; மணிமுத்தாறு நதித் திட்டத்தைப் பார்வையிடுவதற்காக வந்த ராஜ்ய சர்க்கார் மந்திரியிடம் ஒரு தூது கோஷ்டியை அனுப்பி, தங்கள் குறைகளை யெல்லாம் எழுத்து பூர்வமாக எடுத்துரைத்து நிவாரணம் கோரினார்கள்.
ஆனால்_ அரசாங்கமோ அவர்களது கோரிக்கைகளுக்கும் மனுக்களுக்கும் எந்தவிதமான மதிப்பும் கொடுக்கவில்லை; அவர்களுக்கு எவ்வித நிவாரணமோ, நிவாரணத்துக்கான உத்தரவாதமோ அளிக்க முன் வரவில்லை. எனவே, கிட்டியிட்டு நெருக்கும் வாழ்க்கைக் கஷ்டங்களைத் தாங்க முடியாமல், கடைசியாக, தங்கள் உரிமைக்காகப் போராடத் தீர்மானித்து விட்டார்கள்.
வேலை அல்லது நிவாரணம்!
நூல்கொடு அல்லது சோறுகொடு!
அவர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக அரசாங்கத்தோடு அறப்போர் நடத்துவதென்று முடிவு கட்டினார்கள்; தங்கள் கோரிக்கைகளுக்குச் சர்க்கார் இணங்கிவரும் வரையிலும், அந்த நெசவாளிகள் அம்பாசமுத்திரத்திலுள்ள தாலுகா ஆபீஸ் முன்னிலையில் சத்தியாக்கிரகம் செய்வதென்று தீர்மானித்தார்கள்; வடிவேல் முதலியார் அந்தச் சத்தியாக்கிரகிகளை ஆதரித்து, தாலுகா ஆபிஸ் முன்னிலையில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார்.
அம்பாசமுத்திரம் நகரெங்கிலும் போர்டுகள் தொங்கவிடப்பட்டன, எங்குபார்த்தாலும் 'வேலை அல்லது நிவாரணம்' 'நூல் கொடு அல்லது சோறு கொடு' என்று வாக்கியங்கள் காணப்படும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன, "நெசவாளர் சத்தியாக்கிரகம்'. 'வடிவேலு முதலியார் உண்ணாவிரதமிருப்பார்' என்ற செய்திகள் சில நாட்களில் மக்கள் மத்தியிலே பரவிவிட்டன. மக்கள் அனைவரும் நெசவாளர் சத்தியாக்கிரகத்தைப் பற்றிப் பேசினார்கள்; ஆதரித்தார்கள்.
தங்கள் சத்தியாக்கிரகப் போருக்கு நகர மக்களின் பரிபூரண ஆதரவையும் பெறுவதற்காகத் தான் அவர்கள் ராஜுவை வரவழைத்துச் சொற்பொழிவாற்ற ஏற்பாடு செய்திருந்தார்கள்; மறுநாள் காலையில் ராஜுவே சத்தியாக்கிரகிகளுக்கு வாழ்த்துக்கூறி, அவர்களை வழியனுப்பி வைக்க வேண்டும் என்றும் தீர்மானித்திருந்தார்கள்.
கையெழுத்து மறையும் நேரமுமாகி விட்டது; ரயில் இன்னும் இந்த பாடில்லை. ஏழு மணி சுமாருக்குத் திடீரென்று கீழ்த்திசையில் ரயிலின் கீச்சுக்குரல் கேட்டது; தொடர்ந்து ரயிலின் வெளிச்சமும், சப்தமும் அந்த ரயிலில் வரும் தலைவர்களுக்குக் கட்டியம் கூறுவதுபோல் முன்னேறி வந்தன.
வடிவேலு முதலியாரும் மற்றவர்களும் கைகாட்டி மரத்தைத்தாண்டி ரயில் வருவதற்குள்ளாகவே பரபரப்புற்று நிலை கொள்ளாமல் தவித்தார்கள்; நேரம் கழித்து வந்ததற்காக வருந்துவதுபோல் புஸ்புஸ்ஸென்று இரைந்து பெருமூச்சு விட்டுக்கொண் டேஸ்டேஷனில் வந்து நின்றது ரபில்.
ரயில் வந்து நின்றதும் வடிவேலு முதலியாரும் . சங்கரும் ராஜுவைத் தேட முயன்றார்கள். அதற்குள் ரயிலை விட்டு இறங்கிய மணி சங்கரைக் கண்டுகொண்டு, "சங்கர்!” என்று உரக்கக் கூப்பிட்டான்.
குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினான் சங்கர்; அவனெதிரே மணி நின்று கொண்டிருந்தான்,
"மணியா?" சங்கரின் வியப்பு வார்த்தை வடிவில் வெடித்தது.
"மணியேதான்!" என்று தன்னைத்தானே சிரித்துக் கொண்டு அறிமுகப்படுத்தினான் மணி.
சங்கர் அந்தக் கணத்தில் எல்லாவற்றையுமே மறந்துவிட்டான்; ராஜூவைக் கூட மறந்து நின்றான்.
"என்ன சங்கர் விழிக்கிறே?' என்று கேட்டவாறே, ரயிலிலிருந்து இறங்கிய ராஜுவைச் சங்கருக்கு அறிமுகப்படுத்திவைக்க முனைந்தான் மணி; "ராஜு, இவன் தான் என் நண்பன் சங்கர்."
"மிஸ்டர் சங்கர் உங்களைப்பற்றி மணி என்னிடம் நிறையச் சொல்லியிருக்கிறார். உங்களைச் சந்திக்க நேர்ந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி!"என்று கூறி வணக்கம் தெரிவித்தார் ராஜு.
சங்கரின் திக்பிரமை மேலும் அதிகமாயிற்று: "மணி எப்படி வந்தான்?, ராஜுவை அவனுக்கு எப்படித் தெரியும்."
சங்கர் தனக்கேற்பட்ட திக்பிரமையால், இன்னது சொல்வதெனத் தெரியாமல், வடிவேலு முதலியாரிடமிருந்து மாலையை வாங்கி, ராஜுவின் கழுத்தில் போடப்போனான், அதற்குள் ராஜு அவனைத் தடுத்து நிறுத்தி, "எனக்கு எதற்கு மாலை? மணிக்குப் போடுங்கள். உங்கள் ஊரை விட்டுக் கோழையாக ஓடிப் போய், வீரனாகத் திரும்பி வந்தவர் அவர். அவருக்குப் போடுங்கள்" என்றார்.
ராஜுவின் பேச்சைக் கேட்டதும்தான் சங்கருக்கு ஓரளவு சித்தத் தெளிவுண்டாயிற்று; ராஜு கூறியபடியே அவன் மணிக்கு தன் கையிலிருந்த மாலையைகச் சூட்டினான்; அந்தக் கணத்தில் இருவர் மனத்திலும் பொங்கிப் பிரவகித்த ஆனந்தப் பரவசத்தால், சங்கரும் மணியும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டனர்!
வடிவேலு முதலியாரும் பிற நெசவாளிகளும் சங்கரைப் போலவே மணியின் வரவைக் கண்டு பிரமித்து நின்றார்கள்; சிறிது நேரத்தில் சங்கர் மிகுந்த மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும், வடிவேலு முதலியாரையும் பிற நெசவாளிகளையும் ராஜுவுக்கு அறிமுகப்படுத்திவைத்தான்; ராஜு அவர்கள் அனைவருக்கும் தமது வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டார்.
"கூட்டத்துக்கு நேரமாய்விட்டதா?
"ஆமாம், ஏழரைமணிக்கு!” "அப்போ, புறப்படுங்கள் போகலாம்."
அவர்கள் ஸ்டேஷனை விட்டு வெளியேறும்போது, வடிவேலு முதலியார் மணியின் முதுகில் தட்டிக்கொடுத்து, "என்னப்பா மணி? இப்படிச் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போயிட்டே?" என்று உரிமையோடு விசாரித்துக் கொண்டார்.
"என்ன மணி, ஏன் மத்தியான வண்டியிலேயே வரலை?" என்று கேட்டான் சங்கர். அவனுக்கிருந்த குதூகலத்தில் மணியிடம் என்ன கேட்பதென்றே தெரியவில்லை.
"மத்தியான வண்டிக்கு வர முடியலை, திருநெல்வேலியிலே ராஜுவுக்கு கொஞ்சம் வேலை இருந்தது" என்று கூறிவிட்டு, மணி சங்கரிடம் மெல்லக் கேட்டான்;
"என்னசங்கர்? கமலா சௌக்கியமா?"
சங்கர் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை; வெறுமனே புன்னகை செய்தான். எனினும் அவன் மனம் 'கமலாவுக்கு இனிமேல் சௌக்கியத்துக்கு என்ன குறை?” என்று எண்ணிப் பூரித்தது,
"என்ன மணி? உன்னைப் பார்த்தவுடன் நான் அப்படியே பிரமித்து விட்டேன்" என்றான் சங்கர்.
"அதைவிட, பிரமிப்புத் தரும் விஷயம் ஒன்று இருக்கிறது. வா, கூட்டத்துக்கு"
ஸ்டேஷனுக்குவெளியே நின்றுகொண்டிருந்த காரில் அவர்கள் நால்வரும் நெருக்கியடித்துக் கொண்டு ஏறியமர்ந்தார்கள்.
கார் ஊருக்குக் கிழக்கே கூட்டம் நடக்கவிருந்த மைதானத்தை நோக்கிப் பறந்தது.
காருக்குள்ளே இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை மனத்தில் கிடந்து துடித்தது. சங்கர் மணியின் வரவைக் கமலாவுக்கு உடனே தெரிவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். மணி கமலாவையும், தாயையும் காணவேண்டுமென்று ஆசைப்பட்டான். ராஜு தன் பெற்றோர்களைக் காண வேண்டுமென்று ஆசைப்பட்டார். எனினும் அவர்கள் ஏழரை மணிக்குக் கூட்டத்தை ஆரம்பிக்க வேண்டிய சுடமையுணர்ச்சி, அனைவரையும் தமது ஆசையை வெளியிட முடியாதவாறு தடுத்து நிறுத்தியது.