உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழில் சிறு பத்திரிகைகள்/வானம்பாடி

விக்கிமூலம் இலிருந்து



18. வானம்பாடி


குறைந்த காலத்தில், அதிகமான கவனிப்பையும், சிறு பத்திரிகை வட்டாரத்தில் மிகுந்த பாதிப்பையும், கவிதை எழுதுவோரிடையே தீவிரமான தாக்கத்தையும் ஏற்படுத்திய சிறு பத்திரிகை 'வானம்பாடி' ஆகும்.

‘மானுடம் பாடும் வானம்பாடிகளின் விலையிலாக் கவிமடல்' என்று அறிவித்தவாறு, கோவையிலிருந்து வெளிவந்தது இச்சிற்றேடு, 1970 களில், மாதப் பத்திரிகையாக.

'கவிதை வானில் புதிய பறவைகள்', மானுடப் பூங்காவின் தேனெடுத்த தேனீக்கள், புதிய ராகங்கள் இசைக்கும் வானம்பாடிகளாய்க் கூடு திறந்து பாடி வருகின்றன' என்று வானம்பாடிக் கவிஞர்கள் கூறிக் கொண்டார்கள்.

'வானம்பாடி' கவிமடல், விகடன் அளவில், தனி அட்டை இன்றி, நல்ல தாளில், எளிமையான வசீகரத்துடன் அச்சாகி வந்தது. அதன் முதல் இதழில் கூடுகள் திறக்கின்றன என்ற மூன்று பக்கத் தலையங்கம், மகாகவி பாரதிக்கு அஞ்சலி செலுத்தியது.

‘அவன் விட்ட பயணத்தைத் தொடர வந்த பறவைகள் இன்று, தங்களைச் சுற்றிப் புகைப்படலங்களாகச் சுற்றிப் பிணைந்துள்ள சமூக வலைகளைத் தூக்கிக்கொண்டு, பறந்தபடி அவனுக்கு அஞ்சலிகள் செலுத்துகின்றன.

அந்த மானிடம் பாடிக் குவித்த கவிதைக் குயில், மற்றவர்களைப் போலவே மண்ணானாலும், அந்தக் கவியின் ஆத்மா, இந்தப் பரந்த மண்வெளிகளிலேயே, இத்தனை காலமும் யுகப் பசியோடு அலைந் திருக்கிறது.

அவனைப் போலவே இந்த மாநிலம் பயனுற வாழுதற்கு, சுடர்மிகு அறிவுடன் மானிடம் பாடும் வானம்பாடிகளாயினர்.

இந்தப் பறவைகளுள், பழமை என்கிற மண்ணில் காலூன்றி உந்தியெழுந்து, புதுமையாகிய விண்ணில் சிறகுகள் சிலிர்க்கப் பறக்கும் ஒளிப்பறவைகள் இருக்கலாம்.

ஆனால் அந்தப் பறவைகள், மண்ணாகி - மண்ணுக்குள் மறையாமல், தூசாகி - விண்ணுக்குள் கலவாமல், இருளையழித்து, வழியையமைத்து, பகலை அழைக்கும் பறவைகளாகவே இருக்கும்.

இந்தப் பறவைகளுள் , காதல் கீதமிசைக்கும் இளங்குயில்கள் இருக்கலாம். ஆனால் அந்தக் கீதங்கள், மனித ஜீவியத்தின் பொருளுணர்ந்து புணரும் சுதந்திர கீதங்களாகவே இருக்கும்.

இந்தப் பறவைகளுள், யுகயுகங்களாக மனித வாழ்வையும், சமூக தர்மங்களையும் தம் விஷ நாக்குகளால் தீண்டி உயிர் உறிஞ்சிவரும் நாகங்களுக்குக் கல்லறைகள் அமைக்கும் சுருடப் பறவைகள் இருக்கலாம்.

ஆனால் அந்தக் கருடன்களால், எந்தக் குஞ்சுகுளுவான்களுக்கும் ஆபத்தில்லை. புரையோடிப் போய்விட்ட சமூகத்தின் புன்மைகளை மட்டுமே சுட்டெரிக்கும் கருடன்களாகவே இருக்கும்.

மலரப் போகின்ற ஒளிமயமானதொரு பொற்காலக் கனவுகளிலேயே மூழ்கிப் போகாமல், அரும்பிக் கொண்டிருக்கும் புதுயுகத்தின் ஆசார வாசலிலே பூபாளம் பாடிக்கொண்டிருக்கும் வானம்பாடியை இனி மாதந் தோறும் காணுவீர்கள்'

நீண்ட தலையங்கத்தின் சில பகுதிகள் இவை, தலையங்கத்தின் அடியில் 'முல்லை ஆதவன்', 'பாலை நிலவன்' என்ற பெயர்கள் அச்சாகியிருந்தன.

இந்தத் தன்னம்பிக்கை குரலுக்கு ஊக்கம் தரும் எக்காளமாக அமைந்திருந்தது மு. மேத்தாவின் அந்த மனிதாபிமானக் கவிதையை.. என்ற படைப்பு .

‘வைகறைப் போதுக்கு
வார்த்தை தவமிருக்கும்
வானம்பாடிகளே - ஒ
வானம்பாடிகளே!
இந்த
பூமி உருண்டையைப்
புரட்டி விடக்கூடிய

நெம்புகோல் கவிதையை

உங்களில் யார் பாட்ப் போகிறீர்கள்?

இருட்டு வானத்தில்
நாம்
சிவப்புப் பறவைகள்!
பூமி இருண்டிருந்த நேரத்தில்
நாம் புறப்பட்டோம்;
நமக்கு
வெளிச்சம் வேண்டியிருந்ததால்
சிவப்புச் சிறகுகளைச்
சேகரித்துக் கொண்டோம்.

இது மேத்தா கவிதையின் ஒரு பகுதியாகும்.

வானம்பாடிக் கவிஞர்களின் மற்றுமொரு இதயக் குரலாக தமிழன்பன் எழுதிய 'நாம்' மூன்றாவது இதழில் வெளி வந்தது.

‘வானத்தைக் கீறியே
வைகறைகள் பறித்தெடுப்போம் !
மோனக் குரலுக்குள்
முழங்கும் இடி விதைப்போம் !
சூரியனைக் கண்களால்
சுட்டுப் பொசுக்குவதும்
ஆர்க்கும் கடலலையை
அடக்குவதும் நமக்கியலும் !
நமது சிறகசைப்பில்
ஞால நரம்பதிரும் !
இமயப் பறவைகள் நாம் !
எரிமலையின் உள்மனம் நாம் !
அக்கினிக் காற்றிலே
இதழ் விரிக்கும் அரும்புகள் நாம் !
திக்குகளின் புதல்வர்கள் !
தேச வரம்பற்றவர்கள் !'

இப்படி ஆர்வத்தோடும் ஆற்றலுடனும், சமூக நோக்குடனும் புதுமை வேகத்தோடும், புதுக்கவிதைகள் படைக்க முன் வந்தார்கள் வானம்பாடிக் கவிஞர்கள்.

புவியரசு, மு. மேத்தா, அக்கினிபுத்திரன், சக்திக்கனல், ஞானி, சிற்பி, ப. கங்கைகொண்டான், முல்லை ஆதவன், தமிழன்பன், தமிழ்நாடன் முதலியவர்கள் வானம்பாடிக் கவிஞர்கள் என மதிக்கப்பட்டனர். இவர்களுடைய கவிதைகள் வானம்பாடி இதழ்களில் அதிகமாக வந்துள்ளன. மற்றும் மீரா, இன்குலாப், அப்துல் ரகுமான் முதலியோரது கவிதைகளும் பிரசுரம் பெற்றன.

இவர்களது உற்சாகத்தினால் உந்தப்பெற்ற இளைஞர்கள் பலரது படைப்புகளை வானம்பாடி வெளியிட்டிருக்கிறது. பாப்லோ நெருடா, ஆந்திரக் கவிஞர்கள், வேறு சில புரட்சிப் பாடகர்கள் கவிதைகளின் தமிழாக்கமும் வெளிவந்துள்ளது. சில கவிஞர்களின் தொகுப்புகள் பற்றிய விரிவான மதிப்புரைகளையும் வானம்பாடி பிரசுரித்தது.

4-ம் இதழில் வெளிவந்த சிற்பியின் 'சாக்கடைகளும் இன்னும் வற்றிவிடவில்லை', 5-ல் வந்த தமிழன்பனின் 'நயனதாரா’, 7-ல் புவியரசு எழுதிய 'ஏலி ஏலி லாமா சபக்தானி?', ஞானி எழுதிய 'கல்லிகை', 9-ல் வந்த புவியரசின் 'ஒரு கவிஞனின் சிலுவைப்பாடு', சிற்பியின் 'சர்ப்ப யாகம்' ஆகிய நீண்ட கவிதைகள் குறிப்பிடத்தகுந்த படைப்புகள்.

உணர்ச்சி வேகமும் புரட்சி எண்ணங்களும் கலந்த சிறு சிறு கவிதைகள் பலராலும் எழுதப்பட்டன. வானம்பாடிக் கவிஞர்களின் உத்வேகம் தமிழ்நாடு நெடுகிலும் உற்சாகத்தையும் கவிதை எழுதும் துடிப்பையும் பரப்பின. பலப்பல ஊர்களிலும், 'விலையில்லாத' - 'தனிச் சுற்றுக்கு மட்டும்' உரிய-சிற்றேடுகள் 'வானம்பாடி' யை முன்மாதிரியாகக் கொண்டு தோன்றின.

ஒரு 'இயக்க வேகம்' பெற்று வளர்ந்து கொண்டிருந்த 'வானம்பாடி'க்கு அதிக வரவேற்பு இருந்தது போலவே, தீவிரமான எதிர்ப்பும் ஏற்பட்டிருந்தது. புதுக் கவிதையில் சமூக- எதார்த்தப் பார்வைக்கு எதிரிடையான தனி மனித அனுபவ, அக உளைச்சல் வெளிப்பாடுகளை ஆதரித்த ‘கசடதபற’ க் கவிஞர்கள் இந்தப் போக்கைக் கண்டித்தார்கள்; குறை கூறினார்கள்; பரிகசித்தார்கள். வானம்பாடிகள் கம்யூனிஸ்டுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டும் பரவியது.

எனவே, பத்தாவது இதழில் வானம்பாடி ‘முத்திரைகளும் முகத்திரைகளும்' என மூன்று பக்கத் தலையங்கம் எழுதியது.

'பத்தே இதழ்களில் ஒரு சரித்திரம் சிருஷ்டி ஆகியது. அதன் பெயர் வானம்பாடி’ என்று தொடங்கி அத் தலையங்கத்தின் சில பகுதிகள் இவை-

“சமுதாய அவலங்களின் மீது எங்கள் தார்மீகக் கோபத்தின் அனல் படரும் காரணத்தால்- அண்மைக் காலத்தில், பல ஏடுகளில் அறிந்தோ அறியாமலோ அல்லது வேண்டுமென்றோ எங்கள் படைப்பாளிகளை கட்சிக்காரர்கள் என்று முத்திரை குத்தவும், முகத்திரை போடவும் சில சக்திகள் கங்கணம் கட்டியுள்ளன.

'வானம்பாடி இயக்கம்' பற்றி அரசியல் ரீதியான மதிப்பீடுகளும் பத்திரிகைகளில் இடம் பெற்று வந்துள்ளன. எங்களில் சிலரை இன்ன கட்சிக்காரர் என்று மீண்டும் மீண்டும் அழுத்தமாக முத்திரை குத்தி வருவதைப் பொறுத்துக் கொண்டிருப்பது சரியல்ல என்பதால் நாங்கள் மெளனம் கலைக்கிறோம்.

நேரடியாகவோ மறைமுகமாகவோ இயங்கி வருகிற எந்த அரசியல் கட்சிகளுடனும்-அந்தரங்கமாகவோ பகிரங்கமாகவோ அரசியல் ரீதியான தொடர்பு எங்களுக்குக் கிடையாது. இதனை மிக வன்மையாகவும் உறுதியாகவும் உரத்த குரலில் அறிவிக்க விழைகின்றோம்.

அப்படியானால் நாங்கள் யார் ?

மனித சமுதாயத்தின் துக்கங்கள்- துயரங்கள் இங்கேயானாலும் எங்கேயானாலும் உறவும் சொந்தமும் கொண்டாடி அவைகளில் பங்கு கொண்டு அவைகளை வேரோடு சாய்க்க எழும் வெண்கல நாதங்கள் நாங்கள்.

மனிதாபிமானம், முற்போக்கு, உழைப்பின் பெருமிதம், விஞ்ஞானம் இவற்றைக் கவிதைக் கலையில் உயிர் வனப்போடு அள்ளிப் பொழியும் வித்தக விரல்கள் எங்களுடையவை. மொழி, இனம், சாதி, சமய, நிறக் கொடுமைகள்- பிளவுகள்- பேதங்களைத் தரைப் புழுதியாய் மிதித்து நசுக்கும் ஆவேசம் எங்கள் மூலதனம்.

நவநவமான உத்திகளில் புதுப்புதிதான உருவ வார்ப்புக்களில் சமூகத்தில் நசுக்கப்பட்டவர்களின் நியாயங்களை உள்ளடக்கமாகப் புனையும் இலக்கியவாதிகள் நாங்கள்.”

மேலும் தங்களைப் பற்றியும், தங்களுடைய கவிதைக் கண்ணோட்டம், இலக்கிய நோக்கு பற்றியும் விளக்கமாக எழுதிவிட்டு, முடிவாக இப்படிக் குறிப்பிட்டிருந்தார்கள்:

“ஒரே சமயத்தில் சமுதாயக் கண்ணோட்டமும், புத்திலக்கிய நோக்கும் கொண்ட-ஒரு கவிதை இயக்கம் எங்களுடையது. இந்த இயக்கத்தில் ஆர்வமும் ஆவேசமும் கொண்ட எவரும் பங்கு பெறலாம். நாங்களும் இந்த இயக்கத்தை வரவேற்கிற-மதிக்கிற- அறிவுபூர்வமாய் எதிர்க்கிறவர்களாயினும்கூட-அவர்களுடன் ஆரோக்கியமான உறவு கொள்ளத் தயங்க மாட்டோம்.

நாங்கள் மானிட சுதந்திரத்தை மதிக்கின்ற சுதந்திர மணிப் பறவைகள்.

பிரகடனம் செய்து கூடுகள் திறந்து புறப்பட்ட எமது சுதந்திரப் பறவைகளை மீண்டும் கூடுகளில்- அரசியல் கூண்டுகளில் அடைக்கா தீர்கள் !

ஏனெனில், அந்தக் கூடுகளே உலகங்கள் அல்ல. அந்தக் கூடுகளில் அடைந்து கிடக்க நாங்கள் சிறகு முளைக்காத குஞ்சுகளும் அல்ல. அதற்கும் மேலாக, எந்தக் கூட்டுக்கும் எங்களைத் தாங்கி நிற்கிற வலிமை இல்லை.”

ஆனால் இவ்வளவு உறுதியாக அறிவிப்பு விடுத்த ‘சுதந்திரப் பறவைகள்' தங்களுக்குள்ளேயே பிணங்கிக் கொண்டன- சில பிரிந்தும் போயின.

'வானம்பாடி இயக்கத்தில் அண்மையில் ஏற்பட்ட சலனங்களால் அதன் மைய வீதியை விட்டுச் சிலர் விலகிப் போயினர். இலக்கியப் பாதையில் அதிதீவிர அரசியல் முட்களை விதைக்கும் போலி முயற்சிகள் முறியடிக்கப்பட்டன என்று விளக்க அறிக்கை கொடுத்து, வானம்பாடி’ தனது பாதையில் தொடர்ந்து முன்னேறியது.

'புத்தகச் சந்தை' யில் புதுக் கவிதைத் தொகுப்புகள் அதிகம் அதிகமாகவே வரலாயின. அவற்றில் சிலவற்றை வானம்பாடி (12-வது இதழிலிருந்து சுருக்கமாக-ஆனால், குத்தலும் கிண்டலும், சூடும் சுவையுமாகவிமர்சித்திருக்கிறது.

கால ஒட்டத்தில் 'வானம்பாடி' காலம் தவறி எவ்வெப்போதாவது வரலாயிற்று. வானம்பாடிக் கவிஞர்கள் தங்கள் கவிதைகளைத் தொகுப்புகளாக வெளியிடுவதில் ஆர்வம் கொண்டார்கள்.

'வானம்பாடி’ யிலிருந்து விலகிச் சென்றவர்கள் 'வேள்வி' என்றொரு இதழை வெளியிட்டார்கள். ஒன்றிரண்டு இதழ்களோடு அதுவும் ஒடுங்கி விட்டது. வெளிச்சங்கள் போன்ற சிறுசிறு கவிதைத் தொகுப்புக்களைத் தயாரித்தார்கள். இதுவும் குறுகிய கால ஆர்வமாகவே செயல்பட்டது.

'வானம்பாடி’ கவிதை இதழை 'சிற்பி' பொள்ளாச்சியிலிருந்து பிரசுரிக்க முற்பட்டார். மலையாளம், தெலுங்கு மற்றும் பிற மொழிக் கவிதைகள் அதில் தமிழாக்கமாக வெளியிடப் பெற்றன. சில இதழ்களே வெளிவந்தன.

1981 ஜனவரியில் 'உலகத் தமிழ் மாநாட்டுச் சிறப்பிதழ்' என்று 'வானம்பாடி' உருவாயிற்று. கவிதை சம்பந்தமான நல்ல கட்டுரைகளும் பல கவிதைகளும் இதில் வெளியாயின.

குறிப்பிடத்தகுந்த இந்த விசேஷத் தயாரிப்புக்குப் பிறகு 'வானம்பாடி' இதழ் எதுவும் வரவில்லை. இது வானம்பாடியின் 20-வது மடல் என்று கணக்கிடப்பட்டிருந்தது.

'வானம்பாடி' அதன் இயக்க காலத்தில், அதைப் பின்பற்றும் பலப் பல சிற்றேடுகளை நாடு நெடுகிலும் தோற்றுவித்தது. குறைந்த காலம் செயல்பட்ட அவை தோன்றிய வேகத்தில் மறைந்தும் போயின.