தமிழில் சிறு பத்திரிகைகள்/பிரக்ஞை

விக்கிமூலம் இலிருந்து

17. பிரக்ஞை


“இலக்கியப் பத்திரிகை ஆரம்பிப்பதும் ஆரம்பித்த பத்திரிகையைச் சில மாதங்களில் அல்லது சில வருடங்களில் நிறுத்திவிடுவதும் தமிழ் இலக்கிய உலகத்திற்குப் புதியதல்ல. இந்தப் பத்திரிகை எழுத்துலகத்தில் ஒரு திருப்பத்தையோ, ஒரு செம்புரட்சியையோ ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை.

இது என்ன பத்திரிகையா, அது என்ன படமா, இது என்ன எழுத்தா, அது என்ன நடிப்பா என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறீர்களே ஒழிய நீங்கள் என்ன செய்துவிட்டீர்கள்? இது பலர் எங்கள் மேல் சுமத்திய குற்றச்சாட்டு.

எழுதத் தெரியாதவர்கள் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள். பத்திரிகை நடத்தத் தெரியாதவர்கள் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். படம் எடுக்கத் தெரியாதவர்கள் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

நாங்கள் இதுவரை ஒன்றும் செய்துவிடவில்லைதான். செய்து விட்டோம். 'பிரக்ஞை'யை ஆரம்பித்துவிட்டோம். இனி எங்களை யாரும் குற்றம் சொல்ல முடியாது.”

'நாங்களும்... என்ற தலைப்பில் இப்படி ஒரு புதுமையான அறிவிப்புடன் பிரக்ஞை ஆரம்பிக்கப்பட்டது, மாத ஏடு ஆக, 1974 அக்டோபரில்.

முதல் இதழில்- அட்டையில் கிருஷ்ணமூர்த்தியின் 'லினோகட்' ஓவியம். பாலகுமாரன் எழுதிய 'விளிம்பு', ராமச்சந்திர வைத்தியநாத்தின் பயணம் என்ற கதைகள். லா. ச. ரா. வுடன் பேட்டி-ஐராவதம் முத்து சாமியின் மூன்று நாடகங்கள்-தி. நா. ஜெயராமன், 'கர்ம் ஹவா' என்ற இந்திப் படம் பற்றிக் கட்டுரைகள். சில கவிதைகள். ஓவியக் கண்காட்சி, மாணவர் திரைப்படங்கள் பற்றிய குறிப்புகள்-இடம் பெற்றிருந்தன.

பத்திரிகையின் அளவும் அமைப்பும் விஷயங்களும், அப்போது வெளிவந்து கொண்டிருந்த க ச ட த ப ற வை நினைவுபடுத்துவதாக இருந்தன. அதனால் பிரக்ஞை இரண்டாவது இதழில் இது பற்றி ஆசிரியர் குறிப்பு எழுத நேரிட்டது :

“பிரக்ஞை முதல் இதழ் பெரும்பாலோரால் கசடதபற வுடன் ஒப்பிட்டுப் பேசப்பட்டது. இதழின் முகப்பு திரு. கிருஷ்ணமூர்த்தியின் லினோ, The general get up. புதுக் கவிதைகள் போன்றவை கசட தபற வைப் பலருக்கு நினைவூட்டியது என்று எண்ணுகிறேன். எழுத்தாள நண்பர், கசடதபற காரர்கள் வெளியிட்டிருக்கும் மற்றொரு பத்திரிகை என்றெண்ணிச் சந்தா அனுப்பினேன் என்று கேலியாகச் சொன்னார். பத்திரிக்கையில், modern art, modern poetry போன்றவற்றறிற்கு இடமளித்தாலே automatic ஆக கசடதபற ஆகிவிடுகிறது என்று அர்த்தமில்லை. 'நடை’, ‘கசடதபற’ பத்திரிகைகள் நவீன ஓவியத்தைப் பிரகடனப்படுத்தியது உண்மைதான். ஆனால் நவீன ஓவியம், கதைகள் இவற்றுடன் பரிச்சயம் எங்களுக்கு முன்பே உண்டு. பத்திரிகை ஆரம்பிக்க வேண்டுமென்ற எண்ணம் சற்று தாமதமாகத் தோன்றியது ஒரு குற்றமாகாது என்று எண்ணுகிறேன்.”

மேலும் இரண்டு பாராக்கள் வளர்ந்துள்ள அறிவிப்பில் இங்கிலீஷ் வார்த்தைகளும் வரிகளும் அதிகமாகவே கலக்கப்பட்டிருக்கின்றன.

‘சிறு பத்திரிகைக்காரர்கள்' சிலரது இயல்பாகவே இந்தப் போக்கு வளர்ந்து வந்திருக்கிறது. தங்களை அறிவுஜீவிகள் (இன்டெலக்சுவல்ஸ்) என்று காட்டிக்கொள்ள விரும்புகிறவர்களின் போக்காகவும் இது காணப்படுகிறது. இவர்கள் தமிழும் இங்கிலீஷூம் கலந்தேதான் தங்களது சிந்தனைகள், உரையாடல்கள், கடிதங்கள், கட்டுரைகள் மற்றும் பல்வேறு எழுத்துக்களையும் வெளியிடுகிறார்கள். விவாதங்கள் என்று வந்து விட்டால், இங்கிலீஷ் வார்த்தைகளும் வாக்கியங்களும் அளவுக்கு அதிகமாகவே கலந்து புரளும். தமிழில், தமிழ் வாசகர்களுக்காக எழுது கிறோம்-சிந்திக்கிறோம்-கருத்துக்களை வெளியிடுகிறோம் என்பதையே அவர்கள் மறந்துவிடுகிறார்கள். தங்கள் எண்ணங்களை இங்கிலீஷில் தான் நன்றாக வெளிப்படுத்த முடியும் என்பது அவர்களது கருத்தாக இருக்க வேண்டும் அல்லது தங்கள் கருத்துக்களைத் தமிழில் நன்றாக வெளியிடும் திறமை போதிய அளவு அவர்களுக்கு இல்லாதிருக்க வேண்டும். எப்படியோ தமிழையும் இங்கிலீஷையும் கலந்து கலந்தே எழுதுவதும் பேசுவதும் பெரும்பாலான அறிவுஜீவிகளின் பழக்கமாகி விட்டது.

இந்தப் போக்கு ஞானரதம், கசடதபற போன்ற சிறு பத்திரிகைகளில் காணப்பட்டதைவிட அதிகமாகவே பிரக்ஞை இதழ்களில் தடம் பதித்துள்ளது. பின்னர் ஆரம்பித்த பல சிறு பத்திரிகைகள் இதைப் பின்பற்ற வேண்டிய ஒரு ஃபாஷன் ஆக மதித்து-இப்படி தமிழும் இங்கிலீஷும் கலந்து கலந்து எழுதாவிட்டால் மற்றவர்கள் தங்களை அறிவு ஜீவிகள் என்று மதிக்கமாட்டார்கள் என்று எண்ணியும்- இதைக் கையாள்வதில் சந்தோஷமும் பெருமையும் கொண்டார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

பிரக்ஞை 'அறிவார்ந்த தன்மையோடு' கலை, ஓவியம், சினிமா பற்றிய கட்டுரைகளையும் கருத்துக்களையும் வெளியிட்டது. சினிமா விமர்சனங்கள், அரசியல் சமூகப் பார்வையோடு அழுத்தமாகவும் விரிவாகவும் எழுதப்பட்டன. சத்யஜித்ரே, பதல் சர்க்கார், ஷ்யாம் பெனகல், மிருணாள் ஸென் முதலியோரின் படங்கள் பற்றிய கட்டுரைகள் பிரசுரமாயின. ஓவியக் கலைஞர்கள், அவர்களுடைய படைப்புகள் சம்பந்தமான கட்டுரைகளையும் பிரக்ஞை வெளியிட்டது.

புதுரகக் கதைகள், புதுக் கவிதைகள், கவிதைத் தொகுப்புகள் பற்றிய காரசாரமான விமர்சனங்கள் பிரக்ஞையில் அடிக்கடி பிரசுரமாயின. சில நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் பற்றிய விரிவான மதிப்புரைகளும் வந்துள்ளன. 4 வது இதழில் ஞானக்கூத்தன் கலந்துரையாடல்'-12 பக்கங்கள்-கவிதை பற்றிய அவருடைய கருத்துக்களை விளக்கியது.

7 வது இதழ் கவிதைச் சிறப்பிதழ் ஆக வெளிவந்தது. ஞானக் கூத்தன், ஹரி. ஸ்ரீனிவாசன், மாலன், பிரபஞ்சகவி, பகவய்யா, நா. விச்வநாதன், தேவதேவன், ஆத்மாநாம், தஞ்சாவூர் கவிராயர், மணிகண்டன் கவிதைகள் எழுதியுள்ளனர். மூன்று மலையாளக் கவிதைகளை நகுலன் தமிழாக்கினார். மற்றும் செக் மொழிக் கவிதை, டி. எஸ். எலியட் கவிதைகளும் தமிழில் தரப்பட்டன. 'மார்க்ஸியமும் பஜனைக் கவிஞர்களும்' என்ற தலைப்பில் முற்போக்குக் கவிஞர்களின் தன்மைகள் குறித்து விரிவான கட்டுரை ஒன்றும் பிரசுரமாயிற்று.

'மார்க்லிசமும் இலக்கிய விமர்சகனும்’- ஜ்யார்ஜ் ஸ்டைனர் எழுதியது. மொழிபெயர்க்கப்பட்டு தொடர் கட்டுரையாக வெளிவந்துள்ளது. ஆல்பர்ட் கேமு நாடகம் 'நியாயவாதிகள்' தொடர் அம்சமாக வந்தது.

இரண்டாம் ஆண்டின் ஆரம்பத்தில், தங்கள் ஓராண்டு சாதனை குறித்த பிரக்ஞையின் கணிப்பு சுவாரஸ்யமான சிந்தனையாக அமைந்துள்ளது:

“சென்ற ஓராண்டில் பிரக்ஞை சாதித்தது என்ன என்ற கேள்வி எங்கள் மனத்தில் மட்டுமல்லாமல், சற்று அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் இலக்கிய நண்பர்கள் மனத்திலும் எழுந்திருப்பதைக் காண்கிறோம். இக்கேள்விக்கான முழு பதிலையும் பிரக்ஞையைச் சார்ந்தவர்களே அளித்தல் என்பது அவ்வளவு உசிதமாகத் தோன்றவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம். பிரக்ஞை இலக்கிய ரீதியில் ஒன்றையும் சாதிக்கவில்லை என்ற எண்ணம் வாசகர்கள் மனத்தில் இருப்பின், அதற்குப் பிரக்ஞையைச் சார்ந்தவர்கள் மட்டும் பொறுப்பல்ல. தமிழிலக்கியத்தைப் பொறுத்தவரை இது ஒரு தேக்க காலம்.

சிறு பத்திரிகைகளின் போக்கு குறித்து சற்று மாறுபட்ட எண்ணம் பரவி இருப்பதைக் காண்கிறோம். அது பிரக்ஞையைச் சார்ந்தவர்களின் எண்ணத்துடன் ஒன்றிணைவதாகவும் இருக்கிறது. சுத்த இலக்கியம் மட்டுமே வெளியிடுவதுதான் சிறு பத்திரிகைகளின் லக்ஷணம் என்ற நிலை மாறவேண்டும். நம்மைப் பாதிக்கும் எந்த விஷயத்தைப் பற்றியும் அறிவுபூர்வமாக கலை நோக்குடனும் சமூக நோக்குடனும் பார்க்கப்பட்ட கட்டுரைகள் வெளிவர வேண்டும் என்பது நோக்கமாக இருக்க வேண்டும். வரும் இதழ்களில் பிரக்ஞை இதற்கான முயற்சிகள் செய்யும்.” (இதழ் 13, அக்டோபர் 1975)

இந்த 13 வது இதழ் வேறு வகைகளிலும் குறிப்பிடத்தகுந்ததாக அமைந்துள்ளது. சார்வாகன் எழுதிய 'மக்கள் இலக்கியமும் மனோதர்மமும்' என்ற நல்ல கட்டுரை ஒன்று இதில் வந்திருக்கிறது. நீண்ட சர்ச்சைக்கு வித்திட்ட கட்டுரை ஒன்றை ந. முத்துசாமி எழுதினார் வேற்றுமை என்ற தலைப்பில்

1975 மார்ச் ‘கசடதபற'வில் ஞானக்கூத்தன் சி. மணியின் எழுத்துக்கள் என்றொரு கட்டுரை எழுதி வரும் போகும் என்ற கவிதைத் தொகுப்புக்கு விமர்சனம் செய்திருந்தார். பதினைந்து ஆண்டுகளாகக் கவிதை எழுதி, புதுக் கவிதைத் துறையில் பெயர் பெற்றுவிட்ட சி. மணியின் எழுத்துக்கள் போலியானவை; உண்மையான கவிதைகள் ஆகமாட்டா என்று ஞானக்கூத்தன் கருத்து தெரிவித்திருந்தார்.

ஞானக்கூத்தனின் ‘கசடதபற’ கட்டுரைக்கு நீண்ட மறுப்பாகவும் எதிர்ப்பு ஆகவும் அமைந்துள்ள முத்துசாமியின் கட்டுரை 'பிரக்ஞை’ மூன்று இதழ்களில் வெளிவந்தது.

சி. மணியின் கவிதைகள் பற்றி ஞானக்கூத்தன் எழுதிய கட்டுரைக்குப் பதிலாக வெ. சாமிநாதன் பிரக்ஞையில் ஒரு நீண்ட கட்டுரை எழுதினார். அதற்கு அடுத்துத்தான் முத்துசாமி கட்டுரை வெளிவந்தது.

இவ்விரண்டு கட்டுரைகளுக்கும் பதிலாக ஞானக்கூத்தன் ஆறும் எழும் என்று எட்டுப் பக்கக் கட்டுரை ஒன்று எழுதினார்.

இந்த விவாதக் கட்டுரைகளில், கவிதை பற்றிய சிந்தனைகள், இலக்கிய விவகாரங்களைவிட சொந்தக் காழ்ப்புணர்ச்சிகளும், சதி வேலை-மறைமுகத் தாக்குதல் என்பன போன்ற குற்றச்சாட்டுகளும், அநாவசியமாகச் சிலரைப் பழித்துக் கூறலும் அதிகம் இடம் பெற்றன.

எனவே 'பிரக்ஞை' இவ்விஷயமாக நீண்ட தலையங்கம் ஒன்று எழுத நேரிட்டது.

“நிகழும் விவாதங்களிலும் சீரிய வளர்ச்சிக்கான சிந்தனையோ, சகிப்புத் தன்மையோ தெரிவதில்லை. அவை தெளிவு தராமல் பெருங் குழப்பத்திற்கே மறுபடி வித்திடுகின்றன. விவாதங்களில் அருவருப்பூட்டும் அளவு வெளிப்படுகிற காழ்ப்புணர்ச்சிகள் விவாதங்களில் இருக்கக் கூடிய ஆக்கபூர்வமான இயல்புகளை அழுத்திவிடுகின்றன.

விவாதங்களில் வெளிவரக் கூடிய காழ்ப்புணர்ச்சிகளை மனதில் கொள்ளாது தன் படைப்பும், தன் இலக்கிய ஆகிருதியும் தான் விமர்சிக்கப்படுகின்றன, தானல்ல என்பதை மனதில் வாங்கிக் கொண்டு, சுய விமர்சனத்தில் உண்மையைத் தேட முயலும் பொறுப்பு படைப்பாளிகள் பக்கமிருக்கிறது.

குறைகளைச் சுட்டிக் காட்டுவதில் கடுமையைக் கையாள வேண்டிய விமர்சகர்கள் ஒரு சூழலை உருவாக்குவதில் தங்களுக்கு இருக்கும் ஜாக்கிரதை உணர்வுடன், அக்கறையுடன் சகிப்புணர்ச்சியையும் வளர்த்துக் கொள்ள வேண்டியதின் அவசியத்தை இங்கு வலியுறுத்த வேண்டியதாகிறது.

பிரக்ஞையில் வெளியாகும் விவாதங்கள் எல்லாம் மேலே சொன்ன லட்சிய அமைப்பைக் கொண்டன என்றும் சொல்ல முடியாது. எனினும் இவற்றிலிருந்தும் ஆக்க பூர்வமான விளைவுகள் எழலாம் என்ற ஒரு மெல்லிய நம்பிக்கையுடன்தான் இவை பிரசுரமாகின்றன. இவற்றில் வெளிப்படையாகத் தொனிக்கும் காழ்ப்புணர்ச்சிகளை விலக்கி விட்டு முக்கிய விஷயத்தை அணுகிப் புரிந்துகொள்ளுமளவு தீவிரம் தன் வாசகர்களிடையே இருக்கும் என்பது பிரக்ஞை'யின் எதிர்பார்ப்பு” (பிரக்ஞை ).

ஞானக்கூத்தனுக்கு ஆதரவாக சா. கந்தசாமி 'போலி விமர்சனமும் போலிக் கவிதையும்' என்ற கட்டுரையை எழுதினார். ஞானக்கூத்தன் கூறிய சில குற்றச்சாட்டுகளை மறுத்து சுந்தர ராமசாமி 'ஒன்றும் நாலும்' என்ற தலைப்பில் எழுதினார்.

'கவிப் பொருளும் சப்தவாதமும்' என்று தருமு ஔரூப் சிவராம் எழுதியதையும் 'பிரக்ஞை' பிரசுரித்தது. ஞானக்கூத்தனைத் தாக்கி வெ. சாமிநாதன் 'ஒரு தயாரிப்புக் கவிஞர்' என்றொரு கட்டுரை எழுதினார். அதில் 'தமிழவன்' எஸ். கார்லோஸ் பற்றிய பிரஸ்தாபம் கலக்கப்பட்டிருந்தது. அதனால் எஸ். கார்லோஸ் 'இன்னொரு பார்வை’ எனப்பதில் எழுதினார்.

இந்த விவகாரம், 'பிரக்ஞை'யே குறிப்பிட்டதுபோல, பழங்குப்பையைக் கிளறும் வேலையாகத்தான் அமைந்தது. பிரக்ஞை 19 வது ஏட்டில் மீண்டும் இவ்விவாதம் குறித்து ஒரு நீண்ட தலையங்கம் எழுதியது :

“இந்த விவாதங்களில், நேரில் விசாரித்துக் கொள்ளக் கூடியவைகளும் சந்தியில் விசாரிக்கப்படுகின்றன. ஆனால் ஒன்று முதல் ஆசாமி தன் ரஹஸ்ய சந்தேகத்தை துணிச்சலுடன் (?) சந்தியில் வைத்து விடுவதனால் எதிர் ஆசாமியும் களத்தில் சந்திக்க வேண்டியது நேர்கிறது. தவிர, இதில் பல விஷயங்களை நேருக்கு நேர் சம்பவங்கள் நடக்கும்போதே கேட்டு விளங்கிக் கொள்ளாத கூச்ச சுபாவம் படைத்தவர்கள், திராணியில்லாதவர்கள் நிறைய இருக்கிறாற் போல் தெரிகிறது

இப் பொதுமேடையில் நாம் யாவரும் உறுப்பினர்கள். நமக்குள் பல பேரை தனித்தனிக் கூடுகளாக இனம் காணப்போகிறோமா? இது கூடுகிற காரியந்தானா?

பல பேரை தனித் தனிக் கூடுகளாக இனம் காணும் வேலையை 'பிரக்ஞை' யும் தொடர்ந்து செய்துகொண்டிருக்க வேண்டுமா? இப்போது நடந்து வரும் விவாதம் இப்படியே இன்னமும் தொடரத்தான் வேண்டுமா?” என்று 'பிரக்ஞை' கேட்டது.

அதன் பிறகம் 'ஞானக்கூத்தனின் பதில்' (ஒரு பகுதி மட்டும்) 'ஒரு தயாரிப்புக் கவிஞர்-பிற்சேர்க்கை; இன்னும் சில எதிரொலிகள்' என்று வெங்கட்சாமிநாதன் எழுதியதையும் ( 8 பக்கங்கள் ) வெளியிட்டது.

1976 பிற்பகுதியிலிருந்து 'பிரக்ஞை' மாதம்தோறும் வெளிவர முடியாத நிலைமை ஏற்பட்டது. 21-22, 23-24 என்று இரண்டு இதழ்களை ஒன்றாகச் சேர்த்துப் பிரகரித்தது.

21-22 வது இதழில் 'கே. சி. எஸ் பணிக்கர்-ஒரு பார்வை’ என்ற கட்டுரையில் ஜெயராமன் அந்த ஓவியரைப் பற்றி விரிவாக எழுதினார். பணிக்கரின் ஓவியங்களும் அச்சாகியிருந்தன.

‘மொழி, கலாச்சாரம் பற்றி பிரக்ஞை தீவிர கவலை கொண்டுள்ளது; பிரக்ஞையின் எல்லை விஸ்தரிப்பில் வரும் விஷயங்களுக்கு முதலிடம் அளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது' என்று அறிவிக்கப்பட்டதற்கு ஏற்ப, இலக்கியம் தவிர்த்த இதர விஷயங்களிலும் பிரக்ஞை அக்கறை காட்டலாயிற்று.

‘மறக்கப்பட்ட ஒரு எழுச்சி' என்ற தலைப்பில் ஸந்தால் இன மக்களின் புரட்சி பற்றி பாணி பூஷண் கோஷ் எழுதிய கட்டுரை; மாவோ பற்றிய சிந்தனை, ஒரு ஜெர்மானியத் திரைப்படம் பற்றி அறிமுகம் ஆகியவற்றை பிரக்ஞை வெளியிட்டது.

ஞானபீடம் பரிசு ‘சித்திரப் பாவை' என்ற அகிலன் நாவலுக்கு அரிக்கப்பட்டதை வன்மையாகக் கண்டித்து வீராச்சாமி எழுதினார் (25 வது இதழ்). அதை ஒட்டி, சுந்தர ராமசாமி 'போலி முகங்கள்' என்றொரு கட்டுரை எழுதினார். அது வெளிவந்த இதழ் 26, 27, 28 என்ற எண்களைத் தாங்கிய ஒரே இதழாகும்.

அந்த இதழில் ‘தமிழ் நாடகச் சூழல்-சில பிரச்னைகள்' என்ற தலைப்பில் வெங்கட் சாமிநாதன் அவருடைய இயல்புப்படி 41 பக்கங்கள் எழுதியிருந்தார். ந. பிச்சமூர்த்தி பற்றி கி. அ. சச்சிதானந்தம் எழுதிய கட்டுரையும் பிரசுரமாயிற்று. ந. பி. யின் மரணத்தை ஒட்டி எழுதப்பெற்ற கட்டுரை அது.

1976 நவம்பர், டிசம்பர், 1977 ஜனவரி எனத் தேதியிடப் பெற்ற அந்த இதழுக்குப் பிறகு, பிரக்ஞை 1977 ஜூலை மாதம்தான் வெளி வந்தது. 29-34 என்று ஒரே இதழாக.

அந்த இதழின் தலையங்கம் குறிப்பிடப்பட வேண்டிய சீரிய சிந்தனை ஆகும்.

‘சில மாத இடைவெளிக்குப் பிறகு 'பிரக்ஞை' வெளிவருகிறது. இந்த இடைவெளி ஏற்பட்டதற்குக் காரணங்கள் பொருளாதார ரீதியானவை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 'பிரக்ஞை' வெளி வராதது பற்றி, மற்றுமொரு சிறு பத்திரிகையின் சிறு சிறகுகள் துண்டிக்கப்பட்டது குறித்து வருத்தப்பட்டோர் தொகை மிக மிகக் குறைவு. ஆனால் ஓரளவிற்கு இந்நிலை ஏற்படும் என்று முதலிலேயே நாங்கள் கணித்திருந்தோம். அதனால்தான் பிரக்ஞை பெரும் இலக்குகள் அற்ற, நம்பிக்கையைச் சில காலம் உயிருடன் வைத்திருக்கும் செயலாக மட்டுமே இயக்கம் கொண்டது. உங்களில் பெரும்பாலானோர்: எதிரொலி அற்ற மௌனத்தில் அமுங்கிக் கிடப்பதில் எங்களுக்குச் சிறு அதிர்ச்சி ஏற்பட்டது உண்மை. ஆனால் பெரும் வருத்தம் ஏதுமில்லை.

கருத்துலகில் தன் 'பிராண்ட்' சிந்தனையைத் தவிர வேறெதையும் பார்ப்பதில்லை, ஆதரிப்பதில்லை என்று உங்களில் பெரும்பாலானோர் முடிவு கொண்டிருக்கும் வரை ஆக்கபூர்வமான பெரும் மாற்றங்கள் தமிழில் ஏற்படப் போவதேயில்லை. எந்நாளும் கலைஞன் சமூகத்தின் சுவர்களுக்கு வெளியே புறக்கணிக்கப்பட்ட அடிபட்ட விலங்காகத் தான் உலவுவான். கருத்துலகம் க்ஷீணிப்பதற்குக் காரணம் இதுதான். Consumerism நம்மைப் பீடிக்க நாம் அனுமதித்திருக்கும் வரை, கருத்துலகத்தில் கூட அது செயல்படும் வரை, தமிழிற்கு எல்லை. விஸ்தரிப்பு நேரப்போவதில்லை சடுதியில்.

தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளக் கூடிய அடிப்படைப் பொறுப்புணர்ச்சிகூட இல்லாது இருக்கும் சில நூறு பேரான நாம் Mass Media வின் இரும்புச் சுவர்களில் ஒரு சிறு பள்ளம்கூட ஏற்படுத்தும் சக்தியற்ற முடவர்களாகத்தான் திரிவோம், இந்த நிலை நீடிக்கும் வரை.

Academicians, வியாபாரப் பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், தேடுமறிவற்ற மாணவர்கள், மந்தையாக்கப்பட்டுவிட்ட மக்கள் என்று ஏற்கெனவே சீரழிந்தவர்களை, குருடாக உலவுபவர்களை, நொந்து கொண்டு என்ன பயன்? சில நூறு பேரான நாம் ஒரு இயக்கமாகச் சேர்ந்து செயல்படத் தயாராக இல்லாதவரை தமிழ்க் கலாச்சாரம் செத்துத்தான் கிடக்கும்.

சிறு பத்திரிகை இயக்கம் என்று வலுவான அஸ்திவாரங்களில் நிற்கிறதோ, முரண்பாடுகளைக் கண்டு கூசி விலகாமல் எதிர் கொள்ளும் மன வலு நம்மிடம் என்று ஏற்படுகிறதோ, நம் வலு சிதறிக் கிடப்பதினால் பயனற்று இருப்பதை நாம் எப்போது உணருகிறோமோ, வெறும் இலக்கியமே நம் குறிக்கோள் என்பதை மீறி 'கருத்துலகம்' என்ற விரிவான பாதையில் என்று உலவுகிறோமோ, அன்றுதான் நம் விடிவு என்பது பிரக்ஞையின் கருத்து. இதில் கூட உடன்பாடில்லாமல் இருப்பவர் யாரும் உண்டா நம்மில்? அப்படிப்பட்டவர்கள் ஜீவனுள்ள அறிவுள்ள வர்களா?”

‘பிரக்ஞை' இலக்கியம் தவிர்த்த ஏனைய விஷயங்களில் அதிக அக்கறை கொண்டது. சமூக, கலை, பொருளாதாரச் சிந்தனைக் கட்டுரைகளை ( மொழிபெயர்ப்புகளை ) பிரசுரிப்பதில் ஆர்வம் காட்டியது. ‘சீனச் சிறப்பிதழ்' ஒன்றைத் தயாரித்தது.

‘பிரக்ஞை' அவ்வப்போது விரிவான ‘சுய விமர்சனம்' செய்து கொண்டது. இது சுவாரஸ்யமான ஒரு அம்சமாகவே காணப்பட்டது.

‘பிரக்ஞை' ஆர்வம் நிறைந்த ஒரு குழுவினரால் இயக்கப்பட்டது. பல வருட காலம் அதன் ஆசிரியராகப் பொறுப்பு வகித்தவர் ஆர். ரவீந்திரன்.

48 வது (மார்ச் 1978) இதழில் பிரக்ஞை இந்த அறிவிப்பை வெளியிட்டது :

“அக். 74-பிப். 78 கால இடைவெளியில் பல சுருக்கமான, தெளிவான தலையங்கங்கள் தனித்தன்மையும், பார்வைக் கூர்மையும், மொழி எளிமையும் கொண்ட திரைப்பட விமர்சனங்கள், பத்திரிகையின் மீதான விவாதங்களில் எழுப்பிய நுட்பமான கேள்விகள், வெளிப்படுத்திய கருத்துக்கள், மேலும் ஒரு சிறு பத்திரிகையின் அத்தியாவசியத் தேவையான, எதிர்பலனேதும் எதிர்பாராத உழைப்பு ஆகிய பல வழிகளில் ‘பிரக்ஞை' க்கு வலுவூட்டிய திரு. ஆர். ரவீந்திரன் சொந்தக் காரணங்களால் சென்னையை விட்டுச் செல்ல நேரிட்டதனால், ‘பிரக்ஞை' யிலிருந்து விலகிக் கொண்டார். ஜி. ரவீந்திரன் ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.

இந்திரா பார்த்தசாரதியின் 'குருதிப் புனல்' நாவலுக்கு அம்பை கடுமையான விமர்சனம் ஒன்றை எழுதினார். ரசமான பகுதிகள் கொண்ட அந்த விமர்சனம் ( ஒரு பரசுராமன் பிறந்த கதை : குருதிப் புனல்') 43-வது இதழில் வெளியாயிற்று.

அப்புறம், நாட்டு நடப்புகள், மாநிலங்களின் விவகாரங்கள், அரசியல், சமூகப் பிரச்னைகள் சம்பந்தமான கட்டுரைகளையே பிரக்ஞை வெளியிட முனைந்தது. அப்படி மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாக, 44-45 (மே, ஜூன், ஜூலை-78 ), 47-49 ( ஆகஸ்ட், செப். அக். 78) என்று இரண்டு இதழ்கள் வந்தன. இவற்றுடன் 'பிரக்ஞை’ யின் இயக்கம் ஒடுங்கிவிட்டது என்றே தோன்றுகிறது. இதழ் எதுவும் வெளிவந்ததாகத் தெரியவில்லை.